Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

மிதவாதம் பேசும் மெல்லிய போர்க்குரல்
பாரதி இளவேனில்

ஒளிச்சிறை கவிதைகள்
இரா. தமிழரசி
விலை : ரூ.40
ஆர்த்தி வெளியீடு,
6 அ, மூவேந்தர் நகர்,
விழுப்புரம் - 605602


பல்வேறு பழைய வழக்கமானச் சிந்தனைகளை புரட்டிப் போட்டது, இந்த நூற்றாண்டு. இதுகாறும் வழக்கத்திலிருந்த சடங்குகள் நிகழ்வுகள், சொல்லாடல்கள் புனைவுகள் மீது தலித்திய பெண்ணியச் சிந்தனைகளின் புதிய வெளிச்சம் விழுந்த போதினில் சமூகம், மொழி, கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் தெரிய வந்தவை புதிய மாற்றங்கள் நவீன சிந்தனைகள்.

இரா. மீனாட்சி ரோகிணி, சுகந்தி சுப்ரமணியன், கனிமொழி எனச் சிலர் எழுதத் தொடங்கினாலும் தொண்ணூறுகளுக்கு பிறகு பெண் படைப்புகளில் புதிய வேகமும் நவீன சிந்தனை மாற்றங்களும் முளைத்ததை மறுக்கவியலாது.

சமூகக் கொடுமைகள் ஒரு புறமிருக்க, குடும்ப வன்முறை குடும்பம் எனும் அமைப்புக்குள் சிறைப்பட்டு சிக்கித் தவிக்கும். பெண்களின் மன அவஸ்தைகள் பொருந்தா உறவுகளினால் ஏற்பட்ட சிக்கல்கள், பிறரோடு ஒப்புமை செய்துப்பார்க்க நேர்ந்த வாய்ப்புகள் போன்றவை பெண்களின் படைப்புகளை வீர்யத்துடனும், புதிய வேகத்துடனும் உருவாக வழி வகுத்தன.

இரா. தமிழரசியின் முதல் கவிதைத் தொகுப்பாக ஒளிச்சிறையும் இயல்பில் நிகழ்வில் ஏற்பட்ட சின்னச் சின்ன வலிகளை குமுறல்களை மையமாய்க் கொண்டு வெளிவந்திருக்கிறது.

"பெண் எழுத்து அவளை0ச் சுற்றியே இயங்குகிறது. என்பதும் அவளைச் சார்ந்த புலம்பல்களாகவே உள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ஏனெனில் வாழ்க்கைப் பரப்பில் அவனுக்கான இயங்கு தளம் மிகச் சிறியதாகவும், அவளுக்கேயான வலிகள் மிகப் பெரியதாகவும் இருப்பதே ஆகும்'. எனக் குறிப்பிடும் இரா. தமிழரசியின் கவிதை மொழி வாசகர்களை மிக இலகுவாய் கவிதையுலகுக்குள் இழுத்து விடுகிறது. புரிந்து கொள்ளத் தோதான படிமங்களும் குறியீடுகளும் தொகுப்பின் மிகப் பெரிய பலமெனலாம்.

"குடும்பமும் கூட்டமுமாக வாழ்கிற இந்த சமூக வாழ்நிலைகளில் யாருக்கும் எப்போதும் வேண்டுவது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை. ஒரு இருப்பு பெண்ணுக்கோ சமூகத்தின் அடித்தளத்திலுள்ள மக்களுக்கோ நடைமுறையில் இது மறுதலிக்கப்படுகிறது. அடிப்படையான இந்த பிரச்னை பெண்ணிய கவிதை மொழியின் மைய உணர்வாக வெளிப்படுகிறது'' எனக்குறிப்பிடும் திறனாய்வாளர் தி.சு. நடராசனின் வார்த்தைகளுக்கேற்ப உருவாகியிருப்பவை இரா.தமிழரசியின் கவிதைகள்

என் ஒவியத் தீட்டலுக்காய் /ஒவ்வொரு முறையும் /
உதவிக் குழைகிற வண்ணம் நீ,/ அடர்ந்த
உன் அன்பைச் சுவைக்கிறேன் /அன்றாடம் மேற்கொள்ளும்
அத்தனைப் பயணங்களிலும்,

என உறவின் வலிமைக் குறித்து பெருமிதம் படுகிறவரே உறவு தன்னை நிராகரிக்கும் போது கடுமையான கவிதை வரிகளால் விமர்சிக்கவும் தவறவில்லை.

உன் சுகதுக்கங்களில் /சரிபாதியாக சங்கமித்திருக்கிறேன்
நான் இடறி விழும் போதெல்லாம் / எள்ளி நகைக்கும் நீ
எழுந்திருக்கையில் /ஒரே ஒருமுறை /கடைக் கண்களாலேனும்
கௌரவித்திருக்கிறாயா என்னை

பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பதாக பீற்றிக் கொள்ளும் ஆண்மையச் சமூகம் தன் அடி மனசிலிருக்கும் ஆணாதிக்க சிந்னைகளை அடியோடு வழித்து எறிந்து விடவில்லை என்பதை இன்னமும் பெண்களுக்கான இட ஓதுக்கீடு (33%) பிரச்னையிலேயே எவரும் புரிந்து கொள்ள இயலும்.

சமகாலப் பெண்டிருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஓப்பீடு. வீடு என்ற அமைப்பு தாண்டி வெளி உலகதோடு தொடர்ப்பு கொள்ளும் எந்தப் பெண்ணுக்கும் தன் தந்தை, சகோதரன், கணவன், மகன் என எவரையும் ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது. ஊடகங்களில் பங்கு பதில் மிக முக்கிமானது.

உறவுகளைத் தாண்டி, ஓர் நட்புலகம் உருவாவது இன்றையச் சூழலில் தவிர்க்க இயலாது.

காம முலாம் மட்டுமே /பூசிப்பார்க்கும் சமூகத்தில் /
கத்தி முனையில் நடக்கும் / கடினப் பயணம்
ஆண் பெண் நட்பு /கவனமாய் அடைந்துள்ளோம்
இருவரும் எல்லையை

என எல்லைகளை நிர்ணயிக்கும் கவிஞருக்கு ஒரு குழப்பம் ஏற்படுகிறது. இந்த உறவை நட்பை எந்தப் பெயர் அழைப்பது? சமகாலப் பெண் கவிஞர்கள் பலரது படைப்பிலும் வெளிப்படும் உணர்வு இது மிக யோசித்து படைப்பாளியே முடிவுக்கும் வந்து விடுகிறார்.

குறியீடுகள் எதற்கு / உறுதியான உறவுக்கு ?
உணரலாம் உணர்த்தலாம் / நிறமற்றதாகவே இருக்கட்டும்
முகவரியற்ற காற்றாய் .... / நேசம் ,

கணவனின் தோழியரை துணைவிகள் ஏற்பது போலவே மனைவியின் சிநேகிதர்களையும் துணைவர்கள் ஏற்கவேண்டியது மாறும் காலத்தின் கட்டாயமாகிறது.

குருவிகளின் உலகம் என்ற கவிதையில் குக்கூ குக்கூ என்ற சொற்களால் மிகச் சிறப்பான கவிதையை நெய்திருக்கிறார்
இரா. தமிழரசி. கோடி அர்த்தங்கள் பொதிந்த கூ...கூ...வுக்கு முன் தோற்றுப் போகின்றன சொற்கள்.

இனிய புறப்பாடுகளுக்கு முந்தைய
அதிகாலை ஆயத்தங்களின் போதும்
கோபமின்றி குழைவோடு பரிமாறிக்கொள்ள
எண்ணற்ற வார்த்தைகள் இருக்கத் தான் செய்கின்றது
குருவிகளின் உலகத்தில்

என நெகிழும் கவிஞரிடம் ஒரு கேள்வி குருவிகளுக்கு கடிகாரம் துரத்தும் காலை நேரமும் சபிக்கப்பட்ட இரயில் / பேருந்து பயணங்களும் உண்டா ...?

தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் ஒன்று, நீரும் நானும். நீச்சல் பற்றிய குறியீடுகளோடு செறிவான மொழியில் அமைந்த கவிதை,

மூழ்கும் சுகத்தில் பயம் / பய மூழ்கலில் சுகம் என்ற வரிகள் காட்டும் உணர்வுகள் சபாஷ் போட வைக்கின்றது.
நீச்சல் பழக எந்த வயதிலும் /குதிக்கத் தான் வேண்டும் நீரில்

என்பவை பெண்ணியம் பேசும் வரிகள்.

சென்ற தலைமுறையோடு சேர்ந்து வாழ நடைமுறைகள் இடம் கொடுப்பதில்லை. வாழ்வின் வேகங்களில் உறவுகளை விட்டு வெகுதூரம் பயணித்து விட்டு இழப்புகளுக்குப்பின் மனம் வருந்தும் சமகால மனிதர்களின் மனநிலையை பதிவு செய்திருப்பவை இவ்வரிகள்

பேச ஆளில்லாமல் கழியும் / இன்றையப் பகல்களில்
நீள்கின்றன காதுகள் /உனது வார்த்தைகளுக்காக

தமிழரசியின் கவிதைவெளிப்பாடு விண்ணப்பிக்கும் மனோபாவத்தோடு மேலோங்கி இருப்பதை உணர முடிந்தாலும் தனக்கு வேண்டியது கிடைப்பதில் உறுதியோடு இருப்பதையும் கவிதை வரிகள் மூலம் புரிந்து கொள்ள இயலுகிறது.

"ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் இப்பெண்ணியக் கவிதைகள் பெண்களுக்கான நியாயத்தை ஒரு போராளியின் உக்கிரத்தோடு உரசி வெளிப்படுத்தாமல் காந்தி வழியில் ஆக்கிரமிப்பாளரின் மனம் நெகிழ எடுத்துரைத்து வாதிடுகின்றன''. என தராசு முள் வார்த்தைகளால் முன்னுரைத்திருக்கும் வே. சபாநாயகம் அவர்களின் வரிகள் முக்கியமானவை.

முனைவர் மா. சற்குணம் அவர்களின் முயற்சியில் மிகச் சிறந்த அர்த்தம் பொதிந்த முகப்புடனும் தரமான தயாரிப்புடனும் வெளிவந்துள்ள ஒளிச்சிறையை வாசிக்கும் கவிதைபிரியர்களுக்கு காத்திருகிறது இரா. தமிழரசியின் கவிச்சிறை.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com