Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

பெண் உடலரசியல்
முனைவர். அரங்க மல்லிகா

"நான் ஒரு புதுப்பெண்
நான் விரும்புகிறேன்
ஒரு புலர்பொழுது பெண்ணாக
இருக்க
என்றும் அழியாச் சூரியனைப் போல,
நான் ஒரு சூரியன்...
இப்பொழுதெல்லாம் பெண்கள்
அழகுக்காகவும், ஒழுக்கத்திற்காகவும்
அழுவதில்லை என்னும்
பலம் வேண்டிய தேடல்
இருத்தலின் அழுத்தம் பிதுக்கி
புதிய அரசைக் கட்டுவிக்கும்
கட்டுவிச்சியாய்
இருக்க விரும்புகிறேன் நான் ''.

Hirat suka Raicho (1911)
sievers 1983 : 176

மேற்குறிப்பிட்டுள்ள கவிதையின் சொல்லாடல் பெண்மீதான புனைவுகளின் மீட்டுருவாக்கமாக அமைந்திருக்கிறது. புதியபெண் பிம்பத்தைக் கட்ட எழும் குரலாக ஒலிக்கிறது அன்னி ஹட்சின்சன் (Anne Hutchinson) என்ற பெண்ணியச் சிந்தனையாளர் ""கொள்கையாளர்களாகப் பெண்ணியம் பேசுபவர்கள் தேவையில்லை; செயல்பாடுள்ளவர்களாக இருக்கவேண்டும்'' என்று கூறுகின்றார்.

அதில் ஆண்களின் அதிகாரம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார். அண்மைக் காலங்களில் பெண்கள் இந்த அரசியலைப் பதிவுசெய்வதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றார். பெண்ணின் உடல்மீதான ஆணின் புனைவுகள் தகர்த்தெறியப்படுகின்றன. கற்பும் காமமும் நற்பாலொழுக்கமும் பெண்ணிற்கு அணிகலனா? ஆபரணமா? என்ற கேள்வி செல்லரிக்க, பெண்ணின் அழகும், உடல் உறுப்பு வருணனைக் காட்சிகளும் மாற்றுப்பரிணாமமாகி உடல்வலி, உடல் உறுப்பின் வளம் கவிதை அரசியலாகி வருகிறது. இது காலந்தோறும் மாறுப்பட்டு கையாளப்பட்டிருகிறது என்பதைச் சங்கப்பாடல்களில் ஓளவையார் தொடங்கியிருக்கிறார்.

"கண்ணும் உண்ணாது
கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக்கா அங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதலவாது
பசலை உணீஇயர் வேணடும்
திதலை அல்குல் என் மாமைக்கவினே'' (குறுந் : 27)

நல்ல பசுவின் சுவைநிறைந்த இனிய பால் கன்றுக்கும் பயன்படவில்லை. கலத்திலும் சேகரித்தும் பயன்படுத்த முடியவில்லை. அப்படியே என் தலைவனுக்கு எனக்கும் என்னுடல் பயன்படாது பசலையால் உடல் அழகு குறைந்துள்ளது. உடலும் மனமும் பது சோர்ந்தது என்பது. மேற்சொன்ன பாடலின் பொருளாகும்.

"விடுநில மருங்கின் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட்கெல்லாம்
பிறந்த நாட் டொட்டுஞ் சிறந்ததன் நிம்பால்
அறந்தரு நெஞ்சோ டருள்சுரந்தூட்டும்.'' (மணி : 13)

என்று மணிமேகலை கூறுகிறது.

பெண்ணின் தாய்ப்பால் / பெண்ணின் பால் அருள் சுரந்து ஊட்டி அறம் காக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்மொழிகிறது. என்னும் பாலைத் தீம்பால் என்றே குறிப்பிடுகின்றனர். வளமானது பால். வளம் நிறைந்த உறுப்பு பெண்ணின் முலை. நன்மை செய்வதும் இந்த உறுப்பின் செயல்பாடு, தீமைக்கும் இது பயன்பட்டிருக்கின்றது என்பதை கண்ணகி கொண்டு உணரலாம்.

"உறங்கிக் கொண்டிருந்த ஓர் இரவு
புழுக்கத்தில் கசகசத்து எனது முலைக்காம்புகளில்
துளிர்த்த திரவம் சுரந்து ஓடி
காய்ந்த மண்ணை நனைத்து ஈரமாக்கிய கனவு
கலைந்த அதிகாலையில் எழுந்து
வயல் தாண்டி ஓடிச் சென்று பார்த்தேன்
புதிய உடலுடன் ஓடிக்கொண்டிருந்தது
எனது ஆறு பால் மணத்துடன்''

மாலதி மைத்ரியின் இக்கவிதையில் கருத்தியல் தளம் மாறுபடுகிறது. உடல் ஓர் ஆண் ஒரு பெண் சார்ந்ததாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இயங்கு தளத்தில் புதிய கட்டவிழ்ப்பு நடைபெறுகிறது. ஓர் ஆண் மனைவியோடு மட்டுமல்லாமல் புதிய உடலைத் தேடுதல் முறையே மாற்றுப் பார்வைக்கும் இடமளிக்கிறது. இந்துமதப் பொதுப் புத்தியின் சட்ட வளைவுகள் ஆண் பெண்ணுடலை நுகர்வதற்கு அங்கீகாரமளித்திருக்கிறது. பெண் பெண்ணின் உடலையும் புணர்ந்ததலையும் பேச அனுமதித்ததில்லை. இந்த மௌனம் அரசியலாகிறது. குட்டி ரேவதியின் முலைகள் தொகுதி இந்த அரசியலைப் பெண்ணியத்தைத் தமிழகத்தில் வேர்விடவும் இயக்கமாக வளர்த் தெடுப்பதற்கும் புள்ளிகளை வைத்திருகிறது. "இறுக்கிக் கட்ட வேண்டிய பணிக்குப் பெண்கள் தயாராக வேண்டும். பெண்ணின் வலியைப் பதிவு செய்யும் பெண் கவிஞர்கள் வலிமையைப் பதிவு செய்யவில்லை என்று எழுத்தாளர் சிவகாமி கேள்வி எழுப்பியுள்ளர். இதற்கு பெண்ணின் உடலின் வலியைப் பதிவுசெய்வது வலிமையான அரசியலாகிறது என்பதையே பதிலாக கொள்ளலாம்

காத்ரின் மில்லட் (Catherine Millet Paris) என்ற பெண் தன் உடல் அனுபவங்களை மிகவும நேர்மையோடும் மிகக்கவனமாகவும் பதிவுசெய்திருக்கிறார். இந்தியச் சூழலின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக் காரணம் காட்டி பெண் அனுபவங்கள் திரைக்குப் பின்னே மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த மூடு திரை அண்மைக் காலங்களில் கவிதையின் விலக்கப்பட்டு, பெண் உடல் புதிய அரசியலைக் கட்டமைக்கப் பயன்படுகின்றது.

பெண் உடல் அதிகாரம் சார்ந்தது அதிகாரம் என்பது பொருளல்ல, சொத்தல்ல. தன்மை X குணம் சார்ந்தல்ல. வணிகமானதுமல்ல. நுகர்வுக்குமட்டும் உரியதல்ல. தனிமனித /குழு, வர்க்கம் சார்ந்ததாகக் கற்பிக்கப்பட்டு அதல்லாதவர்மீது பிரயோகிக்கப் பயன்படுவது ஆண் X பெண்ணிடையே ஆணுக்கு இருக்கும் அதிகாரம் பெண்ணுக்கில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆண் X பெண்ணிடையே அதிகாரம் சமமாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிகாரம். இது உடல் பலத்துடனும், முடிவுகளைத் தீர்மானிப்பதிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

அதிகாரத்தை சுவீகரித்துக் கொள்ளமுடியாது (Possessed); கொடுக்கவும் முடியாது. பறித்துக் கொள்ளவும் முடியாது; பிடித்துக் கொள்ளவும் முடியாது. இது பயிற்றுவிக்கப்படுகிறது. நடைமுறைப்படுத்தப்படுவது. இது ஆண் பெண்ணுக்குப் பொதுவானது என்ற புரிதல் வரும் பெண் உடல் அரசியலாவது சாத்தியப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com