Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

உலக கவிஞர் வரிசை
ஓங்கி ஒலிக்கும் விடுதலைக் குரல்: தஸ்லீமா நஸ்ரின்

"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய மக்களை அவமதிக்கிறதோ, எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ, எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ, அப்படியானால் அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.' தஸ்லிமா நஸ்ரின் தஸ்லீமா நஸ்ரின் கிழக்கு பாகிஸ்தானின் மைகேன்சிங்கில் ஆகஸ்டு மாதம் 1962 ல் பிறந்தார். 1971 க்கும் பின் அவர் பிறந்த இடம் பங்களாதேஷ் என தனி நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது.

அறிவியல் பாடத்தில் கல்வியைத் தொடர்ந்தாலும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் வளர்ந்த சூழல் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாகும். தனது பதினைந்தாவது வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். செஞ்சுதி (19781983) என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார். தனது மருத்துவக் கல்லூரியின் இலக்கிய அமைப்புக்கு தலைவராக இருந்து பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். 1984ல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற அவர் எட்டு ஆண்டுகள் பொது மருத்துவமனையில் பணியாற்றினார்.

1986 கவிதை முதல் கவிதை நூல் வெளியானது. 1989 ல் வெளியான அவரது இரண்டாவது கவிதை நூல் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கைகள் மற்றும் இதழ்கள் அவரை தொடர் எழுதும்படி அழைத்தன. ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து எழுதத் துவங்கினார். மதம், பாரம்பரியம், கட்டுபாடான பண்பாடு, என அனைத்து குறித்தும் எந்த தயக்கமும் இல்லாமல் எழுதினார். தஸ்லீமாவின் எழுத்துகளில் உண்மையின் கடுமையும் கூர்மையும் ஆணாதிக்கத்தை கொஞ்சமும் தயங்காமல் தனது எழுத்துகளில் அம்பலப் படுத்திய தைரியமும் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரும்பினார்கள் பலர் வெறுத்தவர் பலர்.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஆனந்த் என்ற இலக்கியத்திற்கான விருது 1992ல் வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் பங்களாதேஷ் பெண் இவராவார். எழுத்தாளர்களிடையே இயல்பாகவே எழும் பொறாமை மறந்து அனைவரும் இவருக்கு ஆதரவு கொடுத்தனர்.

இஸ்லாமியராக பிறந்தாலும் தனது இனம் தன்னையும் தன் போன்ற பெண்களையும் முடக்கி வைத்திருப்பதற்கு எதிராக அவர் தனது படைப்புகளை படைத்து வந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளை எதிர் கொண்டார். 1990ல் தஸ்லீமாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப் பட்டது. தஸ்லீமாவின் எழுத்துகளை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதும் அவரது புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.

இவர் பலமுறை பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். தஸ்லீமாவால் பொது இடங்களுக்கு போக முடிவதில்லை மேலும் புத்தக கண்காட்சிகளைக் கூட அவர் தவிர்த்து விடுகிறார். “இஸ்லாமிய வீரர்கள் “ என்ற அமைப்பு தஸ்லீமாவின் தலைக்கு சன்மானம் வைத்திருந்தது. தஸ்லீமா தனது வீட்டிலேயே சிறை பட்டார்.

தாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் பணியைத் தொடர வேண்டுமானால் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. தஸ்லீமா எழுதுவதைத் தொடர்ந்தார் வேலையை விட்டுவிட்டார். இவர் எழுதிய “லஜ்ஜா” (வெட்கம்) என்ற நாவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனிதம் என்பது மதத்தின் மறுபெயராகட்டும் என்ற கருத்தை வலியுறுத்தி லஜ்ஜா நாவலை எழுதியதாக தெரிவித்து உள்ளார்.

கவிதை, நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை என இருபத்தெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அமர் மெய்பேலா (எனது பெண்ணியம்), உதோல் ஹவா (கடுங்காற்று) மற்றும் செய் சோப் ஒந்தோகர் (அந்த இருட்டு நாட்கள்) ஆகிய மூன்று புத்தகங்களை தடை பங்களாதேஷ் அரசு செய்துள்ளது.

தஸ்லீமாவின் "கோ' (பேசுங்கள்) மற்றும் திவிகாந்திதோ (இரண்டாக பிரிந்த) ஆகிய சுயசரிதை நூல்களை தடை செய்ய வேண்டி பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்காளத்தில் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நீதி மன்றத்தில் முறையிட்டு உள்ளனர். அதே நேரத்தில் கொல்கத்தாவின் மனித உரிமை கழகத்தினர் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் இவ்வாறான தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பின் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தஸ்லீமாவின் விடுதலை உணர்வுடன் கூடிய கருத்துகள் உலகம் முழுவதும் வரவேற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இவரை அழைத்து பாராட்டுகளையும் விருதுகளையும் கொடுத்துள்ளது.

தனது கருத்துகளை வெளிப்படையாக வெளியிட்ட ஒரு மனுஷிக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை கண்கூடு. தஸ்லீமா தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார். என்னை யாராலும் மவுனமாக்கி விட முடியாது என்று கர்ஜிக்கும் தஸ்லீமாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.


எல்லை

பிரக்ஞைக்கு திரும்பியது உலகை பார்க்க, நுகர,
உணர, கேட்க வேண்டி வாசலைக் கடக்கையில்
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்
இந்தச் சுவர்களே உனது வெளி
இந்த மேற்கூரை உனது வானம்
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்
இந்த தலையணைகள் இந்த வாசமிகு சோப்
இந்த டால்கம் பவுடர் இந்த வெங்காயங்கள்
இந்த ஜாடி, இந்த ஊசி
மற்றும் பூ வேலைப்பாடு
தலையணை உறைகள்
இவைகள்தான் உனது வாழ்க்கை
அடுத்தப் பக்கத்தில்
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை
எங்ஙனம் பார்ப்பது?
பின்கேட்டை திறந்து கொண்டு
போகும் அவள்
போகாதே என தடுக்கப்படுகிறாள்.
தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்
இந்த கீரையை, இந்த கொடியை
அடிக்கடி கவனித்துக் கொள்
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை
இந்த தூய்மையான பசுமை பரப்பை
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை
இந்த மணம் வீசும் மண்ணை
இவையனைத்தும் தான்
உனது உலகம்.

மலிவாய் கிடைப்பன

சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்
அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்
மயிர்களில் பூச வாசனை எண்ணெயும்
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்
அவர்கள் மாமிசதிட்டுகளை அள்ளி
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்
அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்
ஒரு சுற்றுச் சேலை என்றால்
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்
கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட
எப்பொழுதாவது குரைத்து விடும்
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின்
வாயில் பூட்டு
தங்கப் பூட்டு

தமிழில் : ஆனந்த செல்வி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com