துக்க மொழி மஞ்சுளா
என் ஈரமனத்தில்
இரத்தம் கசிய
தேம்பும் விசும்பல்கள்
அழுத்தி அழுத்தி
எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும்
நகரெங்கும் விற்பனை செய்யப்படுகிறது
என் விரல்கள்
கண்ணீரை மட்டும்
சுவைத்துப் பார்க்கிறது
பச்சைமரத்தின் அடியில்
பதிந்திருக்கும்
சுவாசிக்க மறந்த வேர்கள்
கிளையில் அமர்ந்து
பறந்து விடுவதைப் போல்
இருக்கின்றன
துக்கம் விசாரிக்க வந்த
பறவைகள்
வேற்றுமொழிபோல்
புரிபடாமல்
தன் முகம் மாற்றி
எல்லாவற்றையும் கடந்து செல்கின்றன
நீல மேகங்கள்
இன்னும் ஓரடி கூட
நகர வில்லை
என்னிடம் உள்ள
எந்த ஆறுதலும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|