Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

ஆழ்ந்த மவுனத்திலிருந்து ஒலிக்கும் வலியின் குரல்
அன்பாதவன்

"ஒருமலர் மலர்வது போல, ஒரு செடி வளர்வது போல கவிதை என்பது இயல்பாக நிகழ வேண்டும். கவிதைகளை உங்களிடமிருந்து பிதுக்கி எடுக்க முயலாதீர்கள். நீங்கள் நிரம்பி இருந்தால் கவிதை தானாக வழியும்' கள்ளழகரின் மனம் தனிமையும் சோகமும் வாழ்வின் வலிகளாலும் நிரம்பி வழிந்து அவை கவிதைகளாய்ப் பொங்கி இருப்பதை "தனிமைப்பறவை' உறுதி செய்கிறது.

"தனிமைப் பறவை' என்கிற இந்த கனமானக் கவிதை தொகுப்பில் கவிஞரின் முந்தைய கவிதை நூல்களான "மனசோட நிறம்' "நதிநீர்த்தேக்கத்தின் முகங்கள்' ஆகியவற்றில் பலவீனமானவை என்று உணரப்பட்டவற்றை நீக்கவிட்டு மீந்தவையும், புதிதாய் எழுதப்பட்ட கவிதைகளும் தொகுக்கப்ட்டிருக்கின்றன.

தனிமைப் பறவை தனிமனிதன் ஒருவனின் உணர்வுகளின் வெளிப்பாடாக இருப்பினும் சமூக மனத்தை பிரதிபலிப்பதாகவே இருப்பதை நுட்பமான கவிதை வாசகன் உணரமுடியும்.

மஞ்சள் நிலவொளியில்
வெண்பனிச் சாரலில்
இரவின் நிசப்தத்தில்
நனைகின்றேன்

உடலைச் சுடுகிறது
உள்ளுக்குள் தணல்

விருப்பங்களைக் கொன்று புதைத்த தொட்டியிலிருந்து வளரும் தாவரங்கள் எதை நோக்கி வளரும்? திருமணமென்பது இரு வேறு மனங்களின் ஒட்டுச் செடி... அங்கு புதிய உறவொன்று மலரத் தேவையாயிருக்கிறது சில உரசல்கள். சில உணர்வலைகள்... சில மோதல்கள்... காதல்கள் கள்ளழகரின் இக்கவிதையும் சொல்வது இவைத்தான்.

"செதுக்குகிறோம் / நான் அவனை / அவள் என்னை / இரத்தம் சொட்டுகிறது இதயம் / விட்டபாடில்லை இன்னும்/ செதுக்கிக் கொண்டிருக்கிறோம் / அவளுக்குப் பிடித்தவாறு என்னை / எனக்குப் பிடித்தவாறு அவளை'' உறவு வளர்த்தல் ஒரு தொடரோட்ட முயற்சியன்றோ !

இளையத் தலைமுறைகளின் மனஉணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் குடும்ப அமைப்பை கட்டிக்காக்க மரபு வழிச் சிந்தனையோடு நிர்ப்பந்திக்கும் ""பெரிசு'' களிடம் இறைஞ்சுகிறார் கவிஞர் வளரும் தலைமுறையின் குரலாக

"முதிர்ந்த கரங்களே / உங்களைப் போல் உருவாக்க / எங்களைப் பிசையாதீர்கள் / நாங்கள் களிமண் அல்ல / நீங்கள் விரும்பும் / பாத்திரம் செய்வதற்கு / கல் அல்ல / உளி கொண்டு செதுக்கி / உங்கள் கனவுகளைச் சிலையாக்க / விடுங்கள் / எங்கள் போக்கில் / நாங்கள் உருவாக''

எத்தனை உறவுகள், நட்புகள், சமூகத் தொடர்பில் மனிதர் பலரிருப்பினும் உள் மன அலை ஒத்துப்போக இயலாவிடில் அன்றி யதார்த்தத்தோடு கைகுலுக்க முடியாமல் தோற்கும் போது தனிமையே துணையாவதை தடுக்க வியலாது.

"ஆயிரமாயிரம் நட்சத்திரங்களுக்கூடாய் / எதிலும் ஒட்டாது / வளர்ந்து தேய்ந்தும் / தேய்ந்து வளர்ந்தும் / காய்ந்து கொண்டிருக்கிறது / தனிமை நிலவு'' தொகுப்பின் சிறப்பான கவிதைகளுள் ஒன்றாக தனிமையும் ஒரு பறவையும் செறிவான மொழியில் சோகம் படரச் சொல்லப்பட்டிருக்கும் கவிதை இது.

"நவீனக் கவிதை நிகழ்வாழ்வை, சமகால நெருக்கடிகளை, நம்மைச் சுற்றியுள்ள உலகின் போக்கை எடுத்துப் பேசவேண்டும்'' என்பார். கவிஞர் விக்கிரமாதித்யன். புறப்பாடல்களுக்கு மட்டுமல்ல அக உணர்வுகளுக்கும் இது பொருந்துமன்றோ!

"மூன்றாம் நபர்' கவிதையில் புதிய சிந்தனை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் / நமக்குள் நாம் / ஒரு மூன்றாம் நபராக என்பவை மிகப் புதிய யதார்த்த வரிகள்.

அலுவலக அதிகாரங்கள், சூழல்கள் குறித்த நிறுவனம் சார்ந்த கவிதைகள் தமிழில் அதிகமாக எழுதப்படாதச் சூழலில் கள்ளழகரின் கவிதைகளில் வெளிப்படும் அதிகாரத்தின் கட்டளைக் குரல் வாசகனுக்கு புதிய உலகை காட்டுவது.

குடும்ப உறவுகள், வார்த்தை வன்முறை குறித்து பல கவிதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை படைப்பாளியின் அனுபவமாக இருக்க வேண்டியதில்லை. மாறி வரும் இன்றைய சமூகச் சூழலில் உறவுகளுக்கு இடையில் கண்ணுக்குத் தெரியாத கத்தி இருந்து கொண்டே இருக்கிறது. ஒருவரின் சுயத்தை இன்னொருவர் அப்படியே ஏற்க இல்லாததும் இன்னொருவருக்காக மாற முடியாததுமே அரூப வன்முறையின் காரணங்கள். அந்த வகையில் கள்ளழகர் மிக தைரியத்தோடு இவைகளை வெளியிட்டு முறைகளை பூட்டியுள்ளார்.

ஆழ்ந்த மவுனத்திலிருந்து ஒலிக்கும் வலியின் குரலை தேர்ந்த வாசகன் உணர்வான் என்ற நம்பிக்கையில் ஒரே ஒரு கவிதையேனும் எழுதிவிட வேண்டும் வாழ்நாளில் எனத் தவமிருக்கும் கவிஞரின் முயற்சிகள் வெற்றியின் திசை நோக்கி பயணிக்கின்றன. வாசகனையும் உடன் அழைத்துக் கொண்டு.

சிரமங்கள் பல மேற்கொண்டு செதுக்கப்பட்டு தொகுத்திருக்கும் நூலில், பல கவிதை வரிகளை கரிசனமின்றி வெட்டி எறிந்து (அ) செறிவாக்கி யிருப்பின் தொகுப்பின் பலம் இன்னூல் கூடியிருக்கும் மேலும் சில உள்ளடங்கள் மீண்டும் மீண்டும் வேறு வார்த்தைகளில் வெளிப்படுவது (வேறு வேறு சூழல் / உணர்வுகள் / அனுபவங்கள் என்றபோதிலும் வாசகனுக்கு சலிப்பூட்டுவது. இவை போன்ற சிற்சிலக்குறைகள் எதிர்வரும் தொகுப்பில் தவிர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தும் விமர்சனத்துக்குப் பதிலாக கள்ளழகரின் ஒரு கவிதை.

"அது அது / அதனதன் சிறப்பு
அருவியில் குளிக்கும் போது
ஆற்றை ஏன் நினைக்கிறாய்'

தனிமைப் பறவை கள்ளழகர்,
தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை.
விலை ரூ. 70/


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com