Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

கவிதையும் கஜலும் வரமாய் வாய்த்த மந்திரக் கவிஞன்
ஜாவேத் அக்தர்

தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் கவிதைகள் உண்டு தலைமுறைகளைத் தாண்டி வாழும் கவிஞர்கள் உண்டு. ஆனால் ஒரே குடும்பத்தில் அடுக்கடுக்காக ஏழு தலைமுறைக்கும் எழுத்தாளர்களாகவோ அல்லது கவிஞர்களாகவோ இருப்பது வியப்பிலும் வியப்பு தானே!! அப்படியொரு கவிதைப் பரம்பரையில் பிறந்தவர்தான் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதைவசன எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஜாவேத் அக்தர்.

கவிஞர் ஜாவேத் அக்தர் ஜனவரி 17, 1945 ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கவிஞர் ஜன நிஷார் அக்தர் மற்றும் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஷாபியா அக்தர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

உருது கவிதையுலகில் மிகவும் போற்றப்பட்ட கவிஞர் மஜாஜ், ஜாவேத்தின் தாய்மாமன் ஆவார். மேலும் இவரின் தாத்தா முஜ்தர் கைராபாதி உருது இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக கருதப் பட்டு வருகிறார். ஜாவேத்தின் உடன்பிறந்த இளைய சகோதரர் சல்மான் அக்தர் சைக்கோ அனலிஸ்டாக இருக்கிறார்.

இளம் வயதிலேயே தாயை இழந்தார் ஜாவேத், அவரின் தந்தை மும்பைக்கும் லக்னவுக்கும் இடையில் இடையறாது ஓடிக்கொண்டிருந்தமையால் ஜாவேத் தனது உறவினர்கள் வீட்டில் வளர்ந்தார். அலிகாட் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் இயங்கிய கால்வின் தலுக்கார் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து போபாலின் கைஃபியா கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தையும் பெற்றார்.

படிப்பை முடித்த ஜாவேத் மும்பைக்கு வந்து சிறிய படக் கம்பெனிகளுக்கு நூறு ரூபாய் கூலிக்கு கதை வசனங்கள் எழுதிக் கொடுக்கத் துவங்கினார். இவர் பெரும்பாலும் துணை எழுத்தாளராகவே விளங்கி வந்தார். ஜாவேத் தனது எழுத்துப் பணிகளை உருது மொழியிலேயே செய்து வந்தார். அவை சில துணை எழுத்தாளார்களால் இந்தியில் எழுதப் பட்டது. பின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டது. துவக்க காலத்தில் ஜாவேத் தனது நண்பர் சலீம் கானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். இவர்கள் 1980 வரையில் இணைந்து பணியாற்றினார்கள். பின் ஜாவேத் திரைப்பட பாடலாசிரியர் பணியில் தீவிரமாகி விட்டார்.

ஜாவேத்திற்கு அவரது தந்தை ஜாது (மந்திரம்) என்றுதான் முதலில் பெயர் வைத்திருக்கிறார். இந்த வார்த்தை ஜாவேத்தின் தந்தையும் கவியுமான ஜன் நிஷார் அக்தர் எழுதிய லம்பா, லம்பா கிசி ஜாதூ கா பஹானா ஹோகா என்ற வரியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பின் பதிவு செய்யப்படுகையில் ஜாவேத் என்று ஆகி விட்டது.

கவிஞர் ஜாவேத் அக்தர் இந்தி திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதும் ஹூனி இரானியை மணந்தார். இவர்களுக்கு பர்ஹன் அக்தர் மற்றும் ஜோயா அக்தர் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தது. பர்ஹன் அக்தர் இன்று பிரபல இளம் திரைப்பட இயக்குனர் ஆவார்.

ஹூனி இரானியுடன் திருமணம் நடக்க நண்பர் சலீம் காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் இரானியின் தாயாரிடம் ஜாவேத் குறித்து தவறாக சலீம் சில தகவல்களைச் சொன்னதாக கூறப்பட்டு அது பெரும் பிரச்சனையாகி ஜாவேத் இரானி தம்பதி பிரிந்து விட்டனர்.

ஹனி இரானியை மணவிலக்கு செய்த ஜாவேத் உருதுமொழியின் பிரபலக் கவிஞர் கைஃபி ஆஜ்மியின் மகளும் பிரபல திரைப்பட நடிகையுமான சபானா ஆஜ்மியை மணந்தார். இன்று இந்திக் திரையுலகில் நல்ல தம்பதிகளாக மட்டுமின்றி நண்பர்களாக வலம் வருகின்றனர்.

ஜாவேத் அக்தருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஐந்து முறையும் பிலிம்பேர் விருது ஏழு முறையும் கிடைத்துள்ளது. 1999ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ பட்டமும் 2007ம் ஆண்டு பத்மபூஷன் பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தர்கஷ் என்ற இவரது கவிதைத் தொகுதி பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் சிறுகதைகளும் சினிமா குறிந்த கட்டுரைகளும் எழுதியுள்ளார். கவிதையும் கஜலும் இவருக்கு வாய்த்த வரம் எனலாம். உருது மொழியின் மென்மை இவரது உச்சரிப்பாலும் கவிதையில் பயன்பாட்டாலும் இன்னும் மென்மையாகி விடுகிறது.

எனது முற்றமும் எனது மரமும்

விரிந்து பரந்திருந்தது
முற்றம்

அதில்தான் அத்தனை
விளையாட்டுகளும்

முற்றத்தின் முன்னேயிருந்த
அந்த மரம்
என்னைவிட உயரமாயிருந்தது

நான் பெரியவனானதும்
அதன் உச்சியை தொடுவேன்
என்ற நம்பிக்கையிருந்தது

வருடங்கள் கழிந்து
வீடு திரும்பினேன்

முற்றம் சின்னதாயிருந்தது
மரம் முன்னைவிட உயரமாயிருந்தது

கஜல்

நம் விருப்பத்தின் சோதனை தானிது
அடி எடுத்தோம் இலக்கு பாதையானது

பிரிவின் அச்சில் சரசரவென சுழன்றவன்
மானுக்கு அதன் கஸ்தூரியே தண்டனையானது

ஆசையாயிருந்தது கை கூடியதுஆனால்
தொலைந்து போனதே அது என்னவாயிருந்தது

மழலையில் பொம்மைகளை உடைத்திருக்கிறேன்
துயர முடிவுகளுக்கு அது ஆரம்பமாயிருந்தது

காதல் செத்துவிட்டதால் கவலைதான் எனக்கும்
அதுவே நல்ல காலத்திற்கான மாற்றமாயிருந்தது

தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டுமென்றிருந்தேன்
உன்னைப் பார்த்தப்பின் அதை சாபமாக உணர்ந்தேன்

கனவெனும் நோய்க்கினி விடுதலை தான்
உலகமொரு கசப்பான மருந்தாய் இருந்தது.

தமிழில் : ஆனந்த செல்வி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com