Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo

வழியனுப்பிய மாலையில் குழந்தையோடொரு உரையாடல்
பாரதி இளவேனில்

அந்தக் கணத்தில் உன் விரல்களைப் பற்றி வருடியிருக்க வேண்டும். மென்னழுத்தத்தோடு அமைதியான ஒரு சிறகினைப் போல நழுவிப் பறந்து விட்ட தருணம் நினைத்து வருந்துகிறேனிப்போது. உன்வீட்டு வான்வழியில் பறக்குமென் விமானம் சன்னல் வழி கண் விரிக்க குளித்து முடித்த கூந்தல் உலர்ந்த துளித்துளியாய் உதிர்கிறதுன் சோகம். வடிவம் மட்டுமே உருவாய்த் தெரிய உடல்மொழியின் அசைவுகளிலிருந்து உறுதி செய்கிறேன் நீதானென - கவிந்த துயரம் கண்களில் வழிய கரங்குலுக்கி வேகமாய் விடைபெற்று செல்கிறாய். மனமும் தோளும் கனக்க தொடருமென் தூரப் பயணம் விசிறி உதறுமுன் கூந்தலிழைத் திவலைகளின் தெறிப்பில் மயங்கி வீழ்கிறேனுன் முற்றத்தில் தூரத்தில் விமான ஒளிப்புள்ளி. கண்களின் மொழியறிவாய். விரல்களின் வித்தகமும் புரியும் ஆனாலும் விழிகளை மூடி குறுக்குக் கரங்களிலிருந்து ஓர் விரலெடுத்து உதடடைத்து மவுனிக்கிறாய்.... எரிமலை மவுனம் ! வழியனுப்ப யாருமேயில்லாதனவயென் பயணங்கள். விரலழுத்தி விடைகொடுக்க கனக்கிறது தோள்பையுடன் மென்மனம், விழிகளில் கூடுகட்டியிருக்கும் சோகங்களை நனைக்கிறது துயரத் துளிகள்; துடைக்க அனுமதிப்பாயா ....? படிப்பு பதவி வயது வசதி என புறங்களின் துணையில் பெரியவனாய்க் கருதி இறுமாந்துக் கொள்ளுமென் பேதைமையைக் கண்டு புன்னகைக்கிறேன் என் செல்லக் குழந்தையே ! மிக நெருக்கத்தில் தரிசித்த சோகப்பனிப் புகை படர்ந்திருக்கிறது மலர்ந்த உன் குளிர் வதனத்தில்; துடைத்து எறிந்து விடக் கூடியது தான்; இயலவுங்கூடுமெனினும் தடுக்கிறது நீகட்டியிருக்கும் மாயச் சுவர். தனித்தனியேக் கட்டுமரங்களில் தத்தளிப்பவர்கள் ஒரே படகில் துடுப்பி பயணிக்க ஏலாதா...? விடைகள் யாவும் தெரிந்தவளே கேள்விகளின் சிறையில் கைதியாகிறாய்... நன்றியையும் நேசத்தையும் குழைத்து தீட்டிய உன் அபத்த ஓவியம் புரிகிறதா உனக்கேனும் ...? பெயர்களிலா வாழ்கிறது உறவும் தோழமையும் ; உற்றத்துணையாய் பகிரவும் பரிமாறவுமான உயிர்ப்பித்தலிலன்றோ! கூடுகளில் தான் மகிழ்வென்பது புரிந்து பறப்பதேன் ஏகாந்தமாய்.. இணைத்து சிறகடிப்போம் ; வானம் நமது !


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.