Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம்
அன்பாதவன்

ஒரு சமூகப் பொறுப்புள்ள கவிதை வாழ்வின் அவலத்தை மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை சுரண்டப்படுவதை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அது, கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்க வேண்டும். இரவல் அனுபவங்களும் இரவல் கோஷங்களும் ஒரு நாளும் கவிதையாக முடியாது. என வலியுறுத்துவார் விமர்சகர் பேராசிரியர் க. பூரண சந்திரன் (புதுக்கவிதையும் புதுப் பிரக்ஞையும் பக்10)

இன்றையக் காலக்கட்டத்தில் பெண்ணியம் சார்ந்து அல்லது சாராது எழுதும் பெண் கவிஞர் பலரும் மேற்கண்ட மேற்கோளைத் தன்னளவில் உள்வாங்கி எழுதும் படைப்புகள் பலவும் வெளிவந்து வெற்றி கண்டுள்ளன; விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றன. ஊடறு வெளியீடாக வந்திருக்கும் “மை” என்றொரு கவிதைத் தொகுப்பு பெண் கவிஞர்களின் படைப்புகளை மட்டுமே முழுமையாக தாங்கி வெளிவந்துள்ளது.

“மை” தொகுதியின் கவிதைகள் பலவம் பெண்மை, மென்மை, உண்மை, கொடுமை, வழமை, வலிமை, திண்மை, மடமை என பல “மை”களின் நீட்சியாக எழுதப்பட்டுள்ளன. இங்கே வெறும் வார்த்தை விளையாட்டுக்காக இத்தனை “மை” கள் அடுக்கப்படவில்லை. பெண்ணிணத்தின் மீதான கொடுமைகள் அவற்றை எதிர்க்கும் வலிமை, உறவு மற்றும் பாலியல் சிக்கல், அதிகார ஆண்மை, எதிர்க்கவியலா மென்மைகளை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு கொள்ளும் பேரின வலிமை, தாய்மண் விட்டு புகலிடம் தேடி ஓடியும் வாழ்வுக்கு ஏங்கும் இருத்தலின் திண்மை என தொகுப்பு முழுவதும் வேறு வேறு வண்ணங்களால் தீட்டப்பட்ட கவியோவியங்கள் “மை”' தொகுதியில் நிறைந்து காணக் கிடைக்கின்றன.

பெண் நிலையில் நின்று சொல்லப்பட வேண்டிய சேதிகளை, போர்ச்சூழல் சுமத்தியுள்ள சுமைகளை, வேதனைகளை, அவர்தம் உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக்கவிஞைகள் பேசமுனைந்துள்ளனர். இவை வாசகர்களில் தொற்றிக் கொள்ளும் போது உயிர்ப்பு பெற முடியும் என்ற பெரு நம்பிக்கையோடு பல கவிதைகளும் எழுதபபட்டுள்ளன.

குண்டுகள் விழுந்த மண்ணில் நான் பிறந்தேன்

குண்டுகள் தகர்ந்த மண்ணில் நான் வளர்ந்தேன்

குண்டுகள் வெடித்த மண்ணில் நான் இறந்தேன்

குண்டுகள் புதைத்த மண்ணில் நான் புதைந்தேன்

என ஆத்மாவின் ஓலமாய் தன் கவிதையை எழுதும் தன் கவிதையை எழுதும் பாமதியின் படைப்பை உரத்த குரலென்று ஒதுக்கி விட இயலுமா...? அல்லது

குண்டு வானிலிருந்து கொட்டும் வெடித்துச் சிதறி

இரத்தம் வழியக் குழந்தைகளும்

பெற்றோர், உற்றார் பிணங்களாய் விழ

வழி தெரியாத மிரண்டு திகைத்து இவர்கள்

படுத்த பாயில் சுடப்படும் போது

கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்லப்படும் நேரம்

பயணிக்கும் வாகனம் திடீரென அதிர்ந்து சிதற

ஏனென்று அறியாத குழந்தைகள்

அச்சமும் வேதனையும் அவர்களை..

இட்டு நிரப்ப வார்த்தையில்லை

என்று தர்மினி தீட்டும் அவலம் சித்திரத்தை அடங்கிய தொனியில், மெல்லிய கிசுகிசுப்பான குரலில் சொல்லுதல் நியாயமாகுமா...? இந்தக் காட்சிகள் ஏதோ ஓர் சிறு தீவொன்றில் மட்டுமே நிகழ்வதல்ல. உலகின் வேறு வேறு மூலைகளை இதை வாசிக்கும் இந்த நிமிடத்திலும் நிகழ்பவை. இவற்றை எழுதாமல் வேறு அவற்றை எழுதுவது..? எனினும் பெண் படைப்பாளிகளுக்கு எழுத பல கருப் பொருட்கள் கிடைத்த வண்ண உள்ளதை மறுக்கவியலாது.

வேலையால் வந்து கோலுக்குள் இருந்து

ரிவி (T.V) பார்த்தபடி அதிகாரம் செய்யும் கணவனே

சற்று நேரம் நீமிதிக்கும் மனைவியாய் மாறு

புரியும் வேதனை

என்று வலியுணர்த்தும் நளாயினி. பெண்களின் மீதான விதவிதமான தாக்குதல்களை கரப்பான்களாக உருவகப்படுத்தி குறியீடாக தன் கவிதையைச் சொல்லும் புதிய மாதவி

பறத்தலையும் மறந்து பாடலையும் இழந்து

வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின் அடிக்கட்டை மீது

அமர்ந்துள்ள பறவை

என தனது தேசம், மண், உறவு இவற்றிலிருந்து வெட்டி தூக்கி எறியப்பட்டு தனிமைச் சோத்தில் தவிக்கும் வாழ்வின் சோகவரிகளை தீட்டும் பஹீமா ஜகான்

இயந்திரத் துப்பாக்கியுள் செலுத்தி

அதை அழுத்தி ஒரு குண்டை

உமிழச்செய்யும் வீரனின் உணர்வை விட

மலினப்பட்டுப் போன பிரசவ வலி

போர்களை நிறுத்தியபின்

கருக்களைப் பற்றி பேசுவோமாக

எனத் திட்டவட்டமாக தெளிந்த முடிவெடுத்து புதிய சிந்தனையை புலம்பெயர்ந்தவர்களின் கவிதை மொழி, தேசம் துறந்து, (துரத்தப்பட்டு) வேற்றிடத்தில் வேர் பாவாது வாழ்வியல் சிக்கல்களை பதிவு செய்கிற வேளையில், தாய்த் தமிழக படைப்பாளிகளில் சுகிர்தராணியின் படைப்பு பாலியல் கூறுகளாலான படிமங்களை கவிதையாக்குகிறது. குட்டி ரேவதியோ உறவுச் சிக்கல்களை தனது கவிதைகளில் பதிவு செய்துள்ளார். பெண்ணியத்தின் மற்றுமொருக் கூரான தலித் பெண்ணியப் பார்வையில் புனையபபட்ட அரங்க மல்லிகாவின் ‘உழைப்பு’ கவிதை தலித் பெண்களின் உழைப்பு குறித்து கம்பீரத்தோடு பேசுகிறது.

மாதுமையின் ‘அப்பா’ பேசவேண்டியதொரு கவிதை அப்பா மகள் என்ற உறவின் உள்ளிருக்கும் Electra Complex -ம் அப்பா என்கிற அதிகாரமய்யத்தையும் தனது வினாக்களால் விமர்சனத்துள்ளாக்கப்படுவது புதிய பார்வை. கற்பகம் யசோதரவின் ‘கவிஞர்களின் குசு’ தொகுப்பும் மிக வித்யாசமான தொனியோடு கூடியது. பெண் என்பவள் உளவியல் பகுப்பாய்வைப் பொறுத்தவரை இல்லாதவளாக இருக்கிறாள். “Women does not exist” " என்கிற வாதத்தை நையாண்டியோடு அடித்து நொறுக்கப்பட்டு வெளிப்பாடும் மொழியும் மற்ற கவிதைகளிலிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுமிந்த கவிதை.

சமூக அவலங்கள் மட்டுமின்றி மென்மை தூவிய காதலின் வருடல்களும் காணக்கிடைக்கின்றன. மலராவும், பெண்ணியாவும் இப்பணியினை சிறப்புடன் செய்கிறார்கள். பெண்ணியம் சார்ந்த கவிதை, இன்று தனக்கென விசாலமான ஒரு வெளியை உருவாக்கிக் கொண்டு வருகிறது. குடும்பமும் கூட்டமுமாக வாழ்கிற இந்த சமூக வாழ்நிலைகளில் யாருக்கும், எப்போதும் இந்த சமூக வாழ்நிலைகளில் யாருக்கும், எப்போதும் வேண்டுவது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை, ஒரு இருப்பு பெண்ணுக்கோ, சமூகத்தின் அடித்தளத்திலுள்ள மக்களுக்கோ நடைமுறையில் இது மறுதலிக்கப்படுகிறது. அடிப்படையான இந்த பிரச்சனை, பெண்ணிய கவிதை மொழியின் மைய உணர்வாக வெளிப்படுகிறது' எனக்குறிப்பிடும் விமர்சகர் தி.சு.நடராசனின் சொற்களை உள்வாங்கி ஒட்டுமொத்த படைப்பாளிகளின் ஒருமித்த குரலாய் வெளிப்படும் உதயச் செல்வியின் கவிதை.

"புரிந்து கொண்டு பகிர்ந்து கொண்டால்

ஒன்றாய் ஓடுவதில்

எமக்கென்றும் ஆட்சேபணையில்லை

உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவம்

உமக்கில்லையெனில்

முந்திக் கொண்டோட வேண்டியிருக்கும்

இது எச்சரிக்கையில்லை

உம்மீத கொண்ட அன்பின் மிகுதியால்

வெறும் அறிவிப்பு மட்டுமே!

‘மை’யின் படைப்பாளுமைகள் வேண்டுவதெல்லாம் உணர்தல்.. புரிதல்... பகிர்தல்...! இவை இரு பாலுக்கும் சாத்தியமுங்கூட...!

.மை - பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு

ஊடறு வெளியீடு, விடியல் பதிப்பகம், கோவை.

விலை ரூ. 100/


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com