விமர்சக விகடங்கள் சு. வில்வரத்தினம்
நூல் வெளியீடு ஒன்று நிகழ்ந்தது
நால் வகைக் கிரியைகளும் நடந்தேறியபின்
நூலை இவர் விமர்சிப்பார் எனவும்
எழுந்தார் ஒருவர் எழுத்தாளர்.
வந்தார் அரங்கில் சபையை
வடிவாக நோட்டம் விட்டே
எங்கோ ஒரு மூலையில் இருப்போனை
இலக்கியத்தில் எளியோனாகச்
சிந்தையில் ‘பாவம்' கொண்டு
சின்னச் செருமலோடு ஆரம்பித்தார்
"....எளிமையாய் விளக்கப் போனால்
இதற்கொரு கதை சொல்வேன்'' என்று
கதை சொல்லத் தொடங்கிய மனுஷன் ஓர்
கழுதையின் மேலே தொற்றி
கழுதையை விட்டிறங்கிப் பின்னொரு
குதிரையின் பிடரி மயிர் பிடித்தேறியப்
பெருவெளிச் சவாரி செய்து பின்
குதிரை விட்டிறங்கி உடனே
குரங்கொன்றின் வாலைப் பற்றி...
இப்படியே
கதை கதையாம் காரணமாம்
காரணத்துக்கோர் கதையாம் என்று
பலகுட்டி ஈன்றபன்றியை போல
குட்டிக்கைகளை ஈன்ற களைப்பில்
குலைத்தள்ளி நின்றவேளை
குட்டிக் கதைகளின் கும்பலின் இடைநழுவி
விமர்சனம் மெல்ல எங்கோ விடை யூர்ந்தேகிற்று.
விடை பெறுகிறேன் என்று இவரும்
விமர்சனம் அன்று தமது
‘விகடனம்' முடித்துக் கொண்டே,
கதிரையில் அமர்ந்தார் அல்லர்
தமது
கை வாகனம் இவர் தந்தாரன்றே !
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|