சூர்யோதயா கவிதைகள்
தீப மரத்திலிருந்து
கண்கவர் வண்ணம்காட்டி
அழைக்கிறது ...
உண்பதற்கான தூண்டலோடு
விலக்கப்பட்ட கனி.
உரசுதலின் பங்கின்றியும்
தீப்பற்றி எரிகிறது
நீராதாரங்களின்றிக்
காய்ந்து கிடக்கும் காடு.
வலையெடுத்து வந்த
விசைப்படகில் பயணிக்கிறது
தூண்டில் புழுக்களைப்
புறக்கணித்த மீன்.
கையகப்படுத்துகையில்
காட்டிய தீவிரம் தணிகிறது
நிதானமாய்ப் பெறும்
நிவாரண நிதிகளால் ..
கடந்து ஆக்கிரமிக்கவே
ஆரவாரிக்கின்றன
கரைகளை நிர்மாணிக்கும்
அலைகள்.
அமைதி காத்தே அடக்கிவிடுகின்றன
இலாவகமாய்த் தீவுகள்.
***
அதட்டிப் படுக்கவைத்து அமைதி காத்தால்
துயில் கொள்ள மறுக்கிறது குழந்தை.
சோறூட்டி வயிறு நிறைத்து
ஓடி விளையாட விட்டு உடல் வருத்தி...
நாவசைத்துத் தாலாட்டி
தொடைதட்டித் தூளியாட்டி...
தூங்கச் செய்கிறாள் தாய்.
உடல் அசைவோ இனிய ஓசையோ
வேண்டப்படுகிறது துயிலுக்கு..
அலைப்புறுத்தும் உணர்ச்சிகள்தான்
வாயில்களாகின்றன அமைதிக்கு.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|