மகசூல் இரா.ஜானகி
கைக்கு அகப்பட்டதை
சுருட்டிக் கொண்டு சாமார்த்தியமாய்
கரை ஒதுங்குகிறான் கட்டுமரக்காரன்
ரகசியமாய் புதைக்கப்பட்ட
என் மூதாதையர்களின் காதல்
மொத்தமாய் குவிய
அநாமத்தாய் பரப்பிக் கிடந்த மணலில்
சுவாரஸ்யமான கனவுகளை
முகம் புதைத்துத் தேடும் அவர்களை
பார்த்த சங்கோஜத்தில்
தலைகுனிந்தபடி
என் உடன் வந்தோர்
‘கடைசியாய் ஒரு முத்தம் மட்டும்'
எழும்பிய அலைகளால் நிராகரிக்கப்பட்ட
சில மாலைகளும் முழுத் தேங்காயும்
அவனுக்கானதில் என் பலவீனம்
உடல் எங்கும் உப்பி பெருத்து
மூச்சாய் வெளியேற தூரத்தில் மிதந்துப் போன
புகையோடு கரைந்து போனது.
மறுப்பேதும் பேசாமல் போன என்னை
அவசரமாய் தன்னை ஒளித்துக் கொண்ட
அந்த நண்டிடம் கேட்டிருக்கலாம்
வம்புல மாட்டாம கடந்து போகிறான்
கிளி ஜோசியக்காரனும்
பொழுதுபோயி ரொம்ப நேரமாக
தங்கையாய் மனைவியாய் அம்மாவாய்
ஆளுக்கொரு திசையில்...
வந்து போனதற்கு சங்குமாலையும்
கருவாட்டு வாசனையும்
ஆளுக்கு கொஞ்சம் ஈரமும்
அவரவர் பைகளில்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|