Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

உலகக் கவிஞர் வரிசை

பச்சயம் சுரக்கும் கவிதாயினி - பினவுலா டவுளிங்

எல்லா உயிரினங்களிலும் வயதுக்கு ஏற்ப உடலிலும் மனதிலும் மாற்றங்கள் இயற்கையாக நிகழ்வது வியப்பிலும் வியப்பு. இதில் கலையுணர்வு மரபில் வருவதா அல்லது வளர்ப்பில் வருவதா என்ற கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும். கவிதை என்பது ஓர் உணர்வு. அனுபவங்களும் உணர்வுகளும் மனதுள் பதிவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றை கலை இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யும் திறமை உள்ளவர்கள் அனைவரும் தான். ஆனால் பயிற்சியாலும் இடையறாத சிந்தனையாலும் சிறப்பு எய்துபவர்கள் சிலரே.

தோல்விகள், துரோகங்கள், பிரிவுகள் என ஒருவரது வாழ்வில் தவிர்க்க இயலாத விஷயங்கள் தான் ஒரு மனிதனை ஆக்கவும் அழிக்கவும் செய்கின்றன. தென் ஆப்ரிக்காவின் பிரபலக் கவிஞர் எழுத்தாளர் பினவுலா டவுளிங் கவிதை உணர்வுகள் தன்னுள் இருப்பதை மிக தாமதமாகவே தெரிந்து கொண்டுள்ளார். தன்னையும் மீறி அவர் எழுதி வைத்த சிலவைகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் வாசிக்கையில் அவை கவிதை என்பதை அடையாளம் கண்டுள்ளார். அதன்பின் அவரது அனைத்துக் கவிதைக்கணமும் அவ்வாறே அமைந்துள்ளது. கவிதை எழுத அவர் இதுவரை உட்கார்ந்தது இல்லையாம். கவிதைகள் அவைகளின் சவுகரியத்திற்கு ஏற்ற சமயத்தில் வந்து அவரை உட்கார வைத்து விடுமாம்.

பினவுலா கவிதைகள் எழுதத் துவங்கியது ஒரு விபத்து போன்றதுதான். புண்ணான தனது மனதுக்கு ஆறுதல் மருந்தாய் கவிதையை தேர்ந்துள்ளார். கல்கா விரிகுடா பேக்கரி ஒன்றில் பினவுலா வாசித்த "ஐ ஃபிளையிங்' (நான் பறக்கிறேன்) என்ற கவிதை பிடித்துப் போக எழுத்தாளர் கஸ் பெர்குஷன் பினவுலாவின் கவிதைகளை வாங்கி காராபேச் மூலம் வெளியிட்டார். பினவுலாவின் முதல் கவிதைத் தொகுதிக்கு ‘இன்கிரிட் ஜான்கர்' பரிசு வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டில் பினவுலாயின் அச்சில் வெளிவராத ‘தூ வாஹ கர்ள் ஆப் தி யுனிவர்ஸ்' என்ற கவிதைத் தொகுதிக்கு சன்லாம் விருது வழங்கப்பட்டது. அவரது ‘வாட் போயட் நீட்ஸ்' என்ற முதல் நாவல் பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுனில் 1962ல் பினவுலா டவ்ளிங் பிறந்தார். ஈவ் வான் டெர் பைல் மற்றும் பேடி டவ்ளிங் தம்பதியினரின் எட்டுக் குழந்தைகளில் ஏழாவது குழந்தையாவார். பினவுலா தனது ஆரம்கால படிப்பை யுசிடியில் முடித்தார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தப் பின் பிரெடோரியா சென்றார். அங்கு எட்டு ஆண்டுகள் யுனிஷியாவில் ஆங்கிலம் கற்பித்து வந்தார்.

1993ல் பீட்ரைஸ் என்ற பெண் குழந்தைக்கு தாயானார். அத்தோடு ஃபேய் வெல்டனின் படைப்புகளை ஆய்வு செய்து அதற்கான டாக்டரேட் பட்டம் பெற்றார். விகாகரத்து பெற்றப் பின் தனது சொந்த நகரமான கல்க் விரிகுடா வந்து சேர்ந்தார். அங்கிருந்தபடி கல்வி ஆவணச் செயலர், எழுத்து மற்றும் விரிவுரை போன்ற பணிகளை செய்து வருகிறார்.

சிறுகதைகள் முலம் எழுத்துலகில் காலடி வைத்த பினவுலா அவர் வசித்தப் பகுதியில் இருக்கும் பிரபல சைவ உணவு விடுதியில் சிறு நகைச்சுவை நாடகங்களை நடத்தி புகழ் பெற்றார். இதன் மூலம் கிடைத்த புகழாலும் அனுபவத்தாலும் பல இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

திடீரென அவர் கவிதைகள் எழுதத் துவங்கியது அவருக்கும் ஆச்சரியமான விஷயம்தான். அவரது கவிதைகள் மென்மையாகவும் வாசிக்க மிக எளிமையாகம், உற்சாகப் படுத்துபவையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை மேலோட்டமான கருத்துதான். அவரது கவிதைகளின் பின்னால் நெல்லிக்கனியில் மறைந்திருக்கும் தித்திப்பு போல மனதைத் தொடும் விஷயங்கள் இருப்பது மறுக்க இயலாதது.

இவரது கவிதைகளில் உள்ள அழகும் உள்ளர்த்தமும் எளிமையும் பத்திரிக்கை மற்றும் எழுத்தாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. பினவுலாவின் கவிதைகளில் அவர் வாழும் சமூகம், அச்சமூக மக்கள், அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது நடவடிக்கைகளும் அன்புடனும் நகைச்சுவை உணர்வுடனும் அவரது கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான கவிதை மொழிக்கும் தனித்த மொழிப்புலமையும் திறமையும் அவசியமாகிறது. அது அவரிடம் உள்ளது.

தான் ஒரு சமூக ஜீவி, தனது பிரச்சனைகள், அனுபவங்கள், துன்பங்கள், மகிழ்ச்சிகள் அனைத்தும் சமூகம் சார்ந்தது. அதனால் அவைகளை சமூகப் படைப்பாக கொள்ளலாம் என்று ஒரு சமன்பாட்டை சொல்லுகிறார். ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.

பச்சைவீடு

மகளோடு மூன்று நாய்களுடனும்
பெரிய பச்சைவீட்டில் வசிக்கிறேன்.
இங்கு சகோதரியை காணலாம்
கண்டிப்பாய் சகோதரனையும்
மற்றும் தாயாரையும்
(பாட்டியையும் கூட)

கணவனை இல்லை
பூனையை இல்லை
சிலவேளைகளில் மக்கள்
பூனை பற்றி விசாரிக்கின்றனர்.

விழுகின்ற உணர்வுகள்

விழுகின்ற உணர்வுகளுடன்
முதல் சந்திப்பிற்கு வந்தேன்
விழுகின்ற உணர்வுகளால் பறந்தேன்
வழியில் உன்னை
சந்திக்கும் வேளையில்

“உன் மீது காதலில்
விழுகிறேன் என்பதை சொல்ல
விரும்பவில்லை என்றாய்.

நான் “ஓ! செய். தயவு செய்து செய் !” என்றேன்
ஆழமாகவும் உண்மையாகவும்
சொல்லி விட்டாய்
“உன் மீது காதலில் விழுகிறேன்”

ஆழ்ந்து விழுகின்ற உணர்வுகளுடன்
முதல் சந்திப்பிற்கு வந்தேன்
நான் சுழல்ன்று கொண்டிருப்பதை
கண்டுகொண்டாய் நீ
என்னுள் சுழல்ன்று கொண்டிருந்தாய்.

காக்கும் முறைகள்

காதலை உனக்காக வைத்திருந்தேன்
முற்றத்தில் சங்கிலியால்
கட்டப் பட்டிருக்கும்
நேசிக்கப் படாத நாய் போல

காதலை எனக்காக வைத்திருந்தாய்
பிடித்தான புத்தகப்
பக்கங்களில் அழுத்தி மூடி

வைரத்தால் ரகசியமாக
வெட்டினாய் கண்ணாடி
போல் என்னை
கைகளைக் குப்பியபடியென்
பதுங்கிடம் காட்டியபடி

பணிவிடை குறித்து
கற்றுத்தர இயலுமென்னால்
ஆனால் உன்போல் செய்ய
கற்றுத் தாயேன்.

தமிழில் : ஆனந்த செல்வி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com