Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

இந்தியக் கவிஞர் வரிசை

பனிமலைப் பிரதேசத்தில் ஒரு கவிஞன் - ரஹமான் ரஹி

மலைமுகடுகளில் பனி துஞ்சும் காட்சி கவிதை சுனையை இன்னும் ஆழப் படுத்தலாம். இந்த காட்சியை கண்டு உணர்ந்து மனதிலும் தனது மொழியின் வனப்பான வார்த்தைகளிலும் பதிவு செய்ய வேண்டி கவிஞர்கள் காஷ்மீர் என்னும் அழகு கொஞ்சும் மாநிலத்திற்கு பயணப் படுகையில் அங்கேயே அந்த காட்சியின் மடியில் பிறந்து தவழ்ந்த ஒருவன் கவிஞனாகவும் இருந்து விட்டால் அவனது கற்பனைக்கும் கவிதைக்கும் முட்டு போட முடியுமா? அப்படி ரசித்து வாழ்ந்த கவிஞர் தான் ரஹமான் ரஹி. இவர் தனது கவிதைகளிலும் விமர்சனங்களிலும் புதுமையையும் புரட்சியையும் விரவி எழுதியவர். இவர் தனது படைப்புகளை எழுத தேர்ந்த சொற்கள் காஷ்மீரி மொழிக்கு புதுமையையும் வளமையையும் கூட்டியது.

Rehman Rahi ரஹமான் ரஹி 1925ம் ஆண்டு மே திங்கள் 6 ம் நாள் பிறந்தார். அப்துல் ரஹமான் என்பது இவரது இயற்பெயர் இவர் எழுத்துலகில் ரஹமான் ரஹி என்ற புனை பெயரில் எழுதி வந்தார். தனது இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவரை அவரது தாய்மாமன் வளர்த்து ஆளாக்கி உள்ளார். இளமையிலேயே கவிதை ஆர்வமும் நிகழ்வுகளை பகுத்துணரும் நுண்ணறிவும் பெற்றிருந்தார். 1984ம் ஆண்டு மக்கள் சேவைத் துறையில் சிறிது காலம் பணியாற்றினார் “கித்மத்”என்ற உருது மொழி நாளிதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தார். பத்திரிக்கை பணி இவரை இன்னும் வளர்த்தது. உலக நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனித்து உள்ளார். இந்த கால கட்டத்தில்தான் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் சார்பாக வெளிவந்த 'குவாங் போஷ்' என்னும் இலக்கிய இதழில் ஆசிரியர் பணியை திறம்பட செய்தார். தனது கருத்துகளில் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் இடம் தராமல் வெளிப் படுத்தி வந்தார். மக்கள் பிரச்சனைகளை மக்கள் மொழியில் பதிவு செய்தார். பலப் பிரச்சனைகளுக்கு ஆக்கமான பலத் தீர்வுகளையும் கொடுத்தார். காஷ்மீர் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் அதன் கலைக்குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டார். ரஹமான் பெர்ஷியா மற்றும் ஆங்கில மொழிகளில் தனது முதுகலைப் பட்டத்தை (1952) ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்திலிருந்து கற்றுத் தேர்ந்த இவர் மொழியாளுமை கொண்டு விளங்கினார். தனது கருத்துகள் தூய்மையான இலக்கியமாகி இலக்கியவாதிகளால் சிலாகித்துப் பேசும் படி மட்டும் இருந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இவர் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதினார். 1953 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் டெல்லியிலிருந்து உருது மொழியில் வெளியான “ஆஜ்கல்” நாளிதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தார். இதழ்களில் ரஹமான் ரஹி பணியாற்றிய கால கட்டங்களில் இருந்த ஒரு தகிப்பு அதன் பின் இல்லை எனலாம்.

ரஹமான் ரஹி “லல்லா” என்று செல்லாமாக அழைக்கப் பட்ட லால் டெட் அவர்களின் படைப்புகளால் பெரிதும் கவரப்பட்டார். லால் டெட் என்ற பெண்மணி புனிதரும் கவிஞருமாக கருதப் படுகிறார். காஷ்மீரி மொழியில் ல்லலாவின் சொற்றொடர்கள் இல்லாமல் பேசமுடியாத அளவுக்கு அவர் பிரபலமானவர் மேலும் காஷ்மீரின் பக்தி மற்றும் பழைய இலக்கியங்களின் பால் அதிக ஆர்வமும் மரியாதையும் கொண்டிருந்தார். ரஹமானுக்கு மூத்தவரும் அவரது சமகாலத்து கவிஞருமான தினாநாத் நாதிம் படைப்புகளின் தாக்கம் ரஹமான் படைப்புகளிலும் இருந்தது. ரஹமானின் ‘காக்கஹ-எ-ஜெஹர்பிஷ்மான்’ என்ற கவிதையும் (விடப் புன்னகை) ‘பைசலா’ (தீர்வு) என்ற தலைப்பிட்ட கவிதையும் முற்போக்கு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இவரது படைப்புகளில் “நவ்ரோஜ்எசபா”, “சேனாவேனி சாஜ்” மற்றும் “ சியாத்ரோடாஜரேன்மான்ஜ்” ஆகியன குறிப்பிடத் தக்கவை. இவரது விமர்சனங்கள் அடங்கிய “கஹவத்” என்ற நூலும் காஷ்மேரி மொழியில் ஆகச் சிறந்த நூல்களில் ஒன்றாக கருத்தப்படுகிறது.

ரஹமான் ரஹி ஆங்கிலத்திலிருந்து பல நல்ல படைப்புகளை காஷ்மீரி மொழியில் மொழி பெயர்த்து இருக்கிறார். ‘டாக்டர் பாவ்டச் மற்றும் பாபா பாரித் ஆகியன அவரது மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்து உள்ளது. இன்னும் பல விருதுகளையும் வாங்கி உள்ளார். குறிப்பாக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பிலும் இந்திய அரசு சார்பிலும் 1989ல் பெல்லோசிப் வாங்கி உள்ளார். சமீபமாக 2004ம் ஆண்டிற்கான ‘ஞானபீட” விருதையும் பெற்று அந்த விருதுக்கு பெருமை சேர்த்து உள்ளார். ஞானபீட விருது பெற்ற முதல் காஷ்மீரி கவிஞர் இவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

ரஹமானின் கவிதைகளில் உள்மன குழப்பங்கள், மனித வாழ்க்கை, சுய மற்றும் சமூக பிரச்சனைகள் ஆகியன உலகப்பொதுவான கருத்துகளாக கருவாகி ஏற்றம் பெற்றுள்ளது.

நான்கடிகள்

எனது வார்த்தைகளுக்கு மதிப்பிருக்குமா
நாளைய விமர்சகர்கள் தீர்வு செய்யட்டும்
ஆனால் பிரவாகமெடுக்கும் நீர்ச்சுனையை தேடுவேன்
அவை உங்கள் நிகழ்கால வேதனை போக்குமென்றால்

நகல்கள்

விதியை வினவுவதை விட்டு நம்பிக்கை வளருங்கள்
கிட்டும் சிறிய பொழுதையம் கொண்டாடுங்கள்
நம்பிக்கை வலையில் நுழையும் ஐயங்களைப் போல்
மிகுதியாய் மிதிபட்ட நகரச்சாலை ஊடுறுவுகிறது
வனத்தில் கனவுகளை தீமையிடம் காட்டிய கண்களை
திறக்கிறேன் விம்மியெழுந்த இளமை சிதைகிறது
வன்மையால் சுழற்றுங்கள் பார்வையை கொஞ்சும்
அழகை காணலாம். ஒற்றைச் சிந்தனை மற்றும்
வெளியில் ஓற்றைக் காகம் விண்மீன்கள்
படைக்குமென் நாட்கள் கடந்து போனது மூளையை
கசக்குகிறேன் எனக்கொரு பெயர் வேண்டி
நம்பிக்கைகள் அனைத்தும் மலைச்சரிவு
பசுமையானது சுய உணர்வுகள் படம் விரிக்காத
பாம்பானது தெய்வங்கள் சகலமுமென் நிழல்களாயின
அசுரங்கள் அனைத்துமென் சலனச் சித்திரமாயின
அவைகள் முழுமையும் பொருள் நிறைந்த
சேஷ்ட்டை குரங்குகளாயின
புனிதர்களை களவாட மரங்களுக்கு தலைவாறுங்கள்
எவ்வகை வழிகாட்டலிது மற்றும் எத்தகு கரையிது
திசைக்காட்ட இயலாது, இருளில் நீரிலலையும் படகு
ஓ! நடனக்காரியே, நிர்வாணத்தை வட்டமிட்டாடு.

தமிழில் : ஆனந்த செல்வி



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com