Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2008

புகைக்கல்லில் ஓர் புகைச்சல்
ந.நஞ்சப்பன்


கர்னாடகாவிலிருந்து மாருகொட்டாய் வந்தவர்களுக்கு நூறு கர்னாடக போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர். கொல்லேகால் டி.எஸ்.பி. சிவமூர்த்தி உடன் வந்தார். வந்தவர்கள் கலகமூட்டும் பெரும் திட்டமுடனும் மஞ்சள், வெள்ளை நிறக் கொடியைத் தமிழகப் பகுதியில் ஏற்றும் நோக்குடனும் சிமெண்ட், செங்கல்லுடன் வந்தார்கள். கொடியுடன் ஆற்றில் குதிக்கிறார்கள். ஆற்றில் குதித்தவர்களைக் காவல் துறையினர் கரைக்கு இருந்து அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் மாருகொட்டாயில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகப் பத்திகையாளர்களுக்கும், தொலைக்காட்சி நிருபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

கர்னாடகப் பகுதியிலிருந்து ஆற்றைக் கடந்து தமிழகத்திற்குள் எந்தத் தகவலையும் அரசுக்கும் தராமல் யாரும் வரலாம். எப்போதும் வரலாம், போகலாம். ஆனால் தமிழகப் பத்திகையாளர்களுக்கும், தொலைக்காட்சி நிருபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. அவ்வளவு ரகசியம் என்ன அங்கே நடந்தது? மாருகொட்டாய் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம், தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டதாகத் தகவல். தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பெண்களும் பரபரப்புப் பேட்டி அளித்தனர். கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிரான சாடல் விடப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஒகேனக்கல் மீட்புக்குழு அமைக்கப்பட்டது. ஒகேனக்கல்லை மீட்போம். ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைப் பாதுகாப்போம் என்று முழங்கினார்கள். தலைவராக வீரபத்திர சாமியும், செயலாளராக டி.எஸ். துரைசாமியும், துணைச் செயலாளராக டி. செல்வாவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

பிறகு மாதேஸ்வரன் மலை காவல் ஆய்வாளர் பிரசன்ன வீ. ராஜø தமிழகக் காவல் துறையினரைச் சந்திக்கின்றார். தமிழகக் காவல்துறையிடம் அனுமதி பெற்று கர்னாடகாவிலிருந்து வந்தவர்களில் மூன்று பெண்கள் உட்பட 12 பேரை பிற்பகல் 3 மணிக்கு அழைத்து வந்தார். கர்னாடகப் போலீஸ் பாதுகாப்புடன் வந்தவர்கள் தமிழகப் பகுதியிலுள்ள தொங்கும்பாலம், பெரியபாணி, சினி பால்ஸ் ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர். சினிபால்ஸ் அருகே மண்ணை எடுத்து நெற்றியில் பூசி, மண்ணை மீட்போம் என்று சபதம் எடுத்தனர். ஒரு மணி நேரம் சுற்றிப் பார்த்து 4 மணிக்கு மாருகொட்டாயை அடைந்ததும், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். இந்த நடவடிக்கை ஒகேனக்கல் பகுதியிலுள்ள மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

கர்னாடகாவிலிருந்து வந்தவர்கள் அமைத்த ஒகேனக்கல் மீட்புக்குழு என்ற பெயரிலேயே ஒகேனக்கல் அவர்களிடம் இல்லை என்பதைப் பிரகடனப்படுத்தி விட்டது. மண்ணை மீட்போம் என்ற சபதமே இந்த மண் கர்னாடகப் பகுதிக்குள் இல்லை என்பதைப் பகிரங்கப்படுத்தி விட்டது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைக் காப்போம் என்றனர். நல்ல முழக்கம்தானே நண்பர்களே. காவிரி ஆற்றின் குறுக்கேயும் துணை ஆறுகளிலும், அணையைக் கட்டி நீரை மடக்கி, முடக்கி விட்டதால் நீர்வீழ்ச்சி பொலிவிழந்து போய் விடுகிறது. அது என்றைக்கும் இளமைப் பொலிவுடன் இருக்க வேண்டுமானால் காவிரியில் நீரை முடக்காமல் இருக்க வேண்டும். கர்னாடக நண்பர்களாகிய நீங்கள் கர்னாடக அரசிடம் சொல்லி அந்த நல்ல காரியத்தைச் செய்தால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி என்றைக்கும் பாதுகாப்புடன் இருக்கும். உங்கள் முழக்கம் நல்லது நண்பர்களே அது நடக்கட்டும்!

இந்த அமைப்பினர் சொன்னது மட்டுமல்ல கர்னாடக அமைச்சர்களும் ஒகேனக்கல் கர்னாடகாவுக்குச் சொந்தமானது என்று கூறத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பிரச்சனையின் சாராம்சத்தை உண்மையைத் தெளிவாக அறிந்து பேசுவதற்குப் பதிலாக கர்னாடக அமைச்சர் பெருமக்களே அவசரக் கோலத்தில் கருத்துக்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்பிரச்சினையின் மூலவேர் - மூலவிசை எது என்பதை நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும்.

இப்பிரச்சனையை உருவாக்கியது யார்? என்பதை மீண்டும் நினைவுகூற விரும்புகிறோம். இப்பிரச்சனை 1993ஆம் ஆண்டிலேயே தோன்றியது. அன்றே அதற்குத் தீர்வும் காணப்பட்டது. ஆனால், இத்துனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய வேடம் தரித்து வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் உள்ள பரிசல் துறையை 1993ஆம் ஆண்டில் ஏலம் விடப்பட்டபோது 3,25,000 ரூபாய் போனது. ஏலம் எடுக்க இயலாத ஆறுமுகம் என்பவரும், அவருடன் சில பேரும் குறுக்கு வழியில் ஏதேனும் சம்பாதிக்க வழி உண்டா? என வழிதேடினர். பரிசல்துறை நம்மிடம் இருந்தால் இலட்சக்கணக்கான ரூபாயை அடையலாம் என்ற ஆசை மேலோங்கியது. தமிழ்நாட்டு எல்லைக்குள் ஏலம் எடுக்க முடியவில்லை. கர்னாடகாவில் எடுத்தால் வசதியாக இருக்கும் என்று அவர்கள் சிந்தனை சென்றது. கர்னாடக மாநிலம் கோபிநத்தம் மண்டல் பஞ்சாயத்துத் தலைவரை அணுகினார்கள். நானூறு ரூபாயைச் செலுத்தி ஏலம் விட்டதாக இரசீது பெற்றார்கள்.

இரசீது பெற்ற மகிழ்ச்சியில் பரிசல்களைத் தயார் செய்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்குச் சொந்தமான பகுதிகளில் பரிசல்களை ஓட்டினார்கள். படகோட்டிகளும் பரிசல்துறை ஏலதாரர்களும் எதிர்ப்புத் தெவித்தனர். எனவே கர்னாடக மாநிலம் கொல்லேகால் முன்சீப் கோர்ட்டில் வழக்கைத் தொடுத்து இடைக்கால மனு எண். (ஐஅ சர்.) 142/93 அசல் வழக்கு எண். (ஞ.ந. சர்.) 165/93இல் 24.4.93ஆம் தேதி இடைக்காலத் தடை உத்தரவு ஆறுமுகத்திற்குச் சாதகமாக வழங்கப்பட்டது.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், பரிசல்துறை ஏலதாரர் களுக்கும் கர்னாடக மாநிலம் கொல்லேகால் நீதிமன்றத்திலிருந்து தகவல் வந்த பின்னர்தான் வழக்கின் விவரமே தெரிய வந்தது. கொல்லேகால் நீதிமன்றத்திலிருந்து ஆவணங்களை எடுத்துப் பார்த்த பின்னால்தான் இந்த ஆசாமிகளின் திருவிளையாடல் என்னவென்று வெளிச்சத்திற்கு வந்தது.

தமிழகப் பகுதிகளைக் கர்னாடகப் பகுதி என போலியான வரைபடத்தைத் தயாத்துத் தாக்கல் செய்தார்கள். உண்மையான வரைபடத்துடன் தக்க ஆவணங்களை கொல்லேகால் முன்சீப் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. உண்மையை ஆய்ந்து இந்தப் பகுதி தமிழ்நாட்டிற்குச் சொந்தமானப் பகுதி தான் என்பதை உறுதி செய்து ஆறுமுகத் திற்கு ஆறுதலாக வழங்கிய இடைக்கால உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழகத்து உமையை நீதிமன்றம் நிலை நாட்டியது.

இதற்குப் பிறகு அடங்கி அமைதியாக இருந்தார்கள். காவியின் மறுகரையில் கர்னாடக எல்லையில் மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி பரிசல்கள் மூலம் தமிழகப் பகுதியில் கொண்டுவந்து விற்றதாகக் கூறப்படுகிறது.

1993இல் நடந்த முயற்சிக்குப் பிறகு தற்போது மீண்டும் சில முயற்சிகளை அதே நபர்கள் உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். ஒகேனக்கல் சுற்றுலா மையத் தில் போதை ஏறிய நிலையில் உற்சாகப் பெருங்குடிகளால் பல பிரச்சனை உரு வானது. திறந்த மேனியாய் அம்மணமாகி அலைந்து திந்த சில பிண்டங்களும் உண்டு. அடிதடி பல பிரச்சனைகளும் நடந்தவண்ணம் இருந்தன. எனவே, கொடிகட்டிப் பறக்கும் கள்ளச் சாராயத் திற்கும், விபச்சாரத்திற்கும் முடிவுகட்ட வேண்டுமென பல ஆண்டுகளாக முயற்சி களை காவல்துறை மேற்கொண்டது. ஒகேனக்கல்லில் இருந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக் கட்டுப்படுத்தினார்கள்.

ஆனால், கடமை உணர்வும், அக்கரையும் மக்களின் நலனில் நாட்டம் கொண்ட அதிகாரிகள் இருக்கும்போது நடக்கும் நல்ல நடவடிக்கைகள், குறுகிய சுயநலம் கொண்டவர்கள் பணியில் இருக்கும்போது முந்தைய நல்ல நடவடிக்கைகளை எல்லாம் உடைத்துப் பணம் சம்பாதிக்கக் கள்ளச் சாராயத்தை நடத்தச் செய்வார்கள். இது நமது நாட்டில் நடக்கும் தொடர்கதை.

தருமபுரி மாவட்டத்தில் தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டம் முழுவதும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க எடுத்துள்ள முயற்சி குறிப்பிடத்தக்கதாகும். இதன் பின்னணியில் ஒகேனக்கல் கள்ளச் சாராயத்தை முற்றாக ஒழித்து சுற்றுலா மையத்தின் மேன்மை காக்க காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. பென்னாகரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அவர்களும் ஒகேனக்கல் காவல் நிலையத்தாரும் முனைப்புடன் செயல்படத் தொடங்கினார்கள். கள்ளச் சாராயத்தை பெருமளவு கட்டுப்படுத்தினார்கள். அரசு மதுக்கடைகள்கூட மூடப்பட்டு விட்டன. போதைப் பொருள்களை வெறுப்போர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மொடாக்குடிகளின் தலைவெடித்துவிடும் போல் தோன்றியது. ஓகேனக்கல்லுக்கு வருவதே குடிப்பதற்கும், (கறியை) கடிப்பதற்கும், கூத்தடிப்பதற்கும் என்ற மோசமான நிலையிலேயே பலர் வருகிறார்கள். அக்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார்கள்.

வருவாய் கூடியது. பரிசல்துறையும் இருந்தால் சாராயத் தொழிலும் கொழிக்கும். இதனால் இரு வகைகளிலும் வருவாய் கிடைக்கும். எனவே, 1993இல் நடத்திய சதியைப்போல் செய்யலாம் என ஆறுமுகமும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டனர். கர்னாடக வனத்துறை அதிகாரிகளுக்கு தூபம் போட்டனர். அதற்காகப் பணம் தண்ணீராக செலவிடப்பட்டது.

சாதாரண பிரச்சனை என எண்ணி வைத்த நெருப்பு இரு மாநில மக்களின் வாழ்க்கைக்கு வைக்கப்பட்ட நெருப்பாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது என்ற கவலை அவர்களுக்கு இல்லை. சுத்த சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட தனிநபர்கள் உருவாக்கிய பிரச்சனையை உண்மையென நம்பி பொறுப்புள்ள கர்னாடக அமைச்சர்களும்கூட ஒரு அங்குல மண்ணைக்கூட விடமாட்டோம் என்று வீரவசனம் பேசுகிறார்கள்.

சுயநலம் நோக்கம் கொண்ட பல்வேறு நபர்கள், சில அமைப்புகள் கர்னாடகாவில் கொக்கரிக்கத் தொடங்கியுள்ளன. அவர்களுக்குக் கர்னாடகம் மீதோ கர்னாடக மக்கள் மீதோ பற்றுக் கொண்டு பேசவில்லை என்பதை அவர்கள் பேச்சே காட்டுகிறது. காவிரி ஆற்றின் பிரச்சனையை வைத்து அரசியல் நடத்த இவ்வாண்டில் வழி இல்லாமல் போய்விட்டது. இவ்வாண்டு குடகுமலைப் பகுதியிலும் கர்னாடகாவில் மேற்குமலைத் தொடர்ச்சிப் பகுதியிலும் பெய்த நல்ல மழையால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, தண்ணீரை வைத்து இவ்வாண்டு அரசியல் நடத்த முடியாது. புதிய பிரச்சனையைத் தேடி அலைந்தவர்களுக்கும், புதியதாக அரசியல் பிரவேசம் செய்யத் துடிக்கும் சக்திகளுக்கும் ஒகேனக்கல் பிரச்சனை கிடைத்துள்ளது.

இதை வைத்துக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவர்களது ஆசை. சில தீய சக்திகள் இதை உசுப்பி விட்டு தீமூட்டி எரியவிட்டு இரு மாநில மோதல்களாக வடிவமெடுக்க வேண்டும் என்றும், அமைதியாக இருக்கும் கர்னாடகாவில் புதியதொரு நெருக்கடியை உருவாக்க வேண்டும் என்றும் செயல்படுகின்றன. இவர்களுக்கு அரசியல் பண்ண இந்த வழிதான் உண்டா? இது விபரீதம் என்று அவர்கள் உணர வேண்டாமா? இல்லை - விபரீதம் என்பதை தெரிந்தே செய்கிறார்கள். அத்தகைய செயலைச் செய்தால்தான் தங்கள் நோக்கம் நிறைவேறும் என்ற தீய நோக்குடனே செய்கிறாரக்ள்.

தனிநபர்களின் பிரச்சனையைக் கர்னாடக வனத்துறையினர் கையிலெடுத்தனர். சில நபர்களின் காதில் விழுந்த இந்தப் பிரச்சனை கைமாறியது. விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் இதற்கு வடிவம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு அமைப்பாக வடிவமெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் அவதாரங்கள் இதை எடுத்து ஆட ஆரம்பித்தன. சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்குப் பின்பலத்தைத் தந்தார்கள். இதன்மூலம் பிரச்சனையைப் பெரிதாக்கத் திட்டமிடப்பட்டது.

எங்கோ கிளம்பியப் பிரச்சனை உரமூட்டப்பட்டு படிப்படியாக வளர்க்கப்பட்டது. பிரச்சனை இவர்ளோடு மட்டும் நின்றிருந்தால் நமது பார்வை, நடவடிக்கைகள் வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், கர்னாடக அமைச்சர் பெருமக்களே அவசர கோலத்தில் கருத்துக்களை அள்ளி வீசத் தொடங்கினார்கள். கர்னாடக அமைச்சர் மகாதேவபிரசாத் சினிபால்ஸ் கர்னாடக எல்லையில் இருப்பதாகக் கூறினார். இந்தப் பகுதியில் தமிழக அரசு எந்தப் பணியையும் செய்யக் கூடாது என்கிறார். இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழகத்திற்குச் சொந்தமான ஒகேனக்கல் பகுதியைப் பாதுகாக்க ஒன்று கூடுவது என்று அனைத்துக் கட்சிகளும் கூடி கலந்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 27.10.2005ஆம் தேதி பென்னாகரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூடியது.

மீண்டும் 30.10.2005ஆம் தேதி ஒகேனக்கல்லில் அனைத்து அரசியல் கட்சியினரும் சங்கமித்தார்கள். ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் முழக்கமே ஒகேனக்கல் உரிமையைப் பாதுகாப்போம். கன்னடர், தமிழர் ஒற்றுமை ஓங்குக. பிரச்சனையை உருவாக்கிய சமூக விரோதிகள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு. திசைத் திருப்பாதீர், திசைத் திருப்பாதீர் இரு மாநிலப் பிரச்சனையாக திசை திருப்பாதீர் என்ற முழக்கங்களே மேலோங்கின. நீர்வீழ்ச்சி ஓசைகளுக்கிடையேயும் இவர்களின் உரிமை முழக்கம் மலைமுகடுகளிலும், விண்ணிலும் எதிரொலித்தன. இந்த முழக்கம் பிற்போக்குத்தனமான சதியாளர்களை அதிரச் செய்தது.

ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகித்துள்ளார்கள். ஊர்த் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள் என விரிவுபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஒகேனக்கல் பகுதியில் வாழும் மக்கள் உணர்வுபூர்வமாக பங்கு கொண்டிருக்கிறார்கள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் உறுப்பினர்களாகியுள்ளார்கள். இது ஒரு இந்தியாவாகவே காட்சி அளிக்கிறது. கன்னடர், தமிழர் ஒற்றுமையைப் பாதுகாத்துத் தமிழகத்து உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று கூடியவர்கள், இந்தியாவின் ஒன்றுபட்ட மக்கள் இயக்கம் போன்ற உணர்வுடன் தேசிய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உதாரணம் கொண்டவர்கள் போல் திரண்டுள்ளனர்.

கர்னாடக அமைச்சர்களும் தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதியைத் தங்களுடைய பகுதி என உரிமைக் கொண்டாடுகிறார்களே - அவர்கள் கூறும் பகுதியின் விவரத்தை அறிந்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களிடம் அவசர உணர்வு இருக்கிறதே தவிர தாங்கள் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் என்பதை இன்னும் உணர வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

அது இருக்கட்டும் - ஒகேனக்கல் பகுதியில் அவர்கள் உரிமை கொண்டாடும் பகுதி சினிபால்ஸ் எங்களுடையது என்றார்கள். தொங்கும் பாலம் அருகில் கம்பிவேலி அமைத்ததைத் தடுத்து தீவுப்பகுதி எங்களுடையது என்கிறார்கள். மக்கள் நீர்வீழ்ச்சிப் பகுதிகளைக் கண்டுகளிக்க அமைக்கப்பட்ட கோபுரப்பகுதி எங்களுடையது என்றார்கள். பிறகு, 400 ஏக்கர் எங்களுடையது என்றார்கள். இறுதியில் ஒகேனக்கல் பகுதியே கர்னாடக மாநில எல்லையில் இருப்பதாகக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

1993இல் உரிமை கொண்டாடியது. தற்போது அவர்கள் உரிமை கொண்டாடும் பகுதிகளை அல்ல. பெரியபாணியில் உள்ள தொம்பச்சிக்கல் (ஆற்றில் உள்ள ஒரு சிறு பாறைக்கு மட்டுமே) எங்களுடையது என்று தொடங்கினார்கள். தொடங்கி வைத்தவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களே. இந்த வழக்கே கொல்லேகால் நீதிமன்றத்திற்குச் சென்று இறுதித் தீர்ப்பு தமிழக எல்லையில் இருக்கிறது என நீதி நிலைநாட்டப்பட்டது. ஆக, தொம்பச் சிக்கல் என்ற ஒரு சிறிய கற்பாறைக்காக மட்டுமே 1993இல் புதிய உரிமை கோரித் தொடங்கினார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த வாதம் ஒவ்வொவ்வொன்றாக வைத்து, வளர்த்து அடுத்தடுத்து என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய கோரிக்கைகளை - உரிமைகளை எழுப்புகிறார்கள். இதில் ஒன்று மட்டும் உண்மை. இவை அனைத்தும் இந்தியாவிற்குள் - நமது நாட்டிற்குள்தான் இருக்கிறது என்பது மட்டும் உண்மை. இதை உணர்ந்தால் பேதம் ஏது? மோதல் ஏது?
(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com