Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2008

கன்னடர்களின் பொருந்தாக் கோரிக்கை


உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவை அனைத்தும் எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் கொண்ட மொழிகளல்ல. இவற்றுள்ளும் ஒரு சில மொழிகள் மட்டுமே மிகப் பழமையான மொழிகளாகும். ச. அகத்தியலிங்கம், கி.மு. முதல் நூற்றாண்டில் இலக்கியம் கண்டிருந்த மொழிகளாக சுமேயன், எகிப்தியன், அக்கேடியன், பொனிசியன், ஆரமெயக், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், அரேபியம், சீனம், தமிழ் முதலியவற்றைக் குறிப்பிடுவார். இவற்றில் பெரும்பாலான மொழிகள் வாழும் மொழிகளாக இல்லை. அன்று முதல் இன்று வரை நின்று நிலைத்து வாழ்ந்து வரும் மொழி தமிழ்மொழியாகும். நம் மொழியில் படைக்கப்பெற்ற சங்க இலக்கியங்கள் செம்மொழிக்குரிய பண்புகளை மொழியியல் வல்லுநர்கள் வரையறுத்துள்ளனர். தமிழ்மொழி, செம்மொழியாக இருப்பதற்குய பண்புகளை முன்பே பலர் எழுதியும் பேசியும் வந்துள்ளனர். எனினும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற பொருந்தாக் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தமிழ்மொழிக்குய தரத்தை எடுத்துரைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஒரு மொழி, செம்மொழியாக இருக்க வேண்டும் என்றால் அந்தமொழி மிகப் பழைமையானதாக இருக்க வேண்டும். தொன்மையான இலக்கிய வளத்தைப் பெற்றிருக்க வேண்டும். பிறமொழிகள் தோன்றுவதற்குத் தாய்மொழியாக இருந்திருக்க வேண்டும். தோன்றிய மண்ணில் இன்றும் உயிருடன் வாழ வேண்டும். அம்மொழி இலக்கியங்கள் குறிக்கோளுடைய வாழ்க்கையைச் சுட்டுவனவாக இருக்க வேண்டும். உலகப்பொதுமையைப் பேசுவதாக இருக்க வேண்டும் என மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்பண்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற மொழி தமிழ்மொழியாகும்.

தமிழ்மொழியின் தொன்மை மிகப் பழமையானது தொல்காப்பியம். தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூலாகும். தொல்காப்பியம் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. எந்த ஒரு மொழியிலும் இலக்கியம் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பது அனைவரும் அறிந்ததாகும். அவ்வாறானால் கிடைக்கப்பெற்ற முதல் நூலான தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால், அதற்கும் முன்பே தமிழ்மொழியில் வளமான இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அதற்கும் முன்பே பேச்சு வழக்குமொழியாகப் பல்லாயிரம் ஆண்டுகள் தமிழ்மொழி இருந்திருக்க வேண்டும். உலகத்திலேயே பழமையான மொழியாகக் கருதப்பெறும் கிரேக்கத்தோடு ஒப்ப வைத்துப் பார்க்கப் பெறும் பழமை வாய்ந்தது தமிழ்மொழியாகும்.

சங்க இலக்கியங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் படைக்கப் பெற்றவைகள் என்பர் அறிஞர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி, கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான கிரேக்க இலக்கியங்களே செவ்வியல் இலக்கியங்கள் எனப்பெறுகின்றன. கி.மு. ஐந்நூறுக்கும் கி.பி. ஆயிரத்திற்கும் இடைப்பட்ட காலச்சமற்கிருத இலக்கியங்களே செவ்வியல் இலக்கியங்கள் எனப்பெறுகின்றன. இவற்றோடு ஒப்ப வைத்துப் பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

பல்லாயிரம் ஆண்டுகள் மொழித் தொன்மையையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய வளத்தையும் பெற்றிருக்கும் தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய திராவிட மொழிகள் தோற்றம் கொண்டுள்ளன. இதனை அயர்லாந்து நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து சமயப் பணியோடு தமிழ்ப் பணியாற்றிய கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வலியுறுத்துகிறது. மனோன்மணியம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, “கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன், சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே'' எனக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். மொழியியல் ஆராய்ச்சியில் வல்லமை பெற்றோரும் இக்கருத்தை மொழிந்துள்ளனர். திராவிட மொழிக் குடும்பத்திற்குத் தலைமை தாங்கிய மொழி தாய்மொழியாகும். கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் இக்கருத்தை ஒத்துக்கொள்ள மறுத்தாலும் அந்த மொழிகள் தமிழ்மொழியிலிருந்து தான் பிறந்தன, பிந்தன என்பதுதான் உண்மை.

தமிழ்மொழி அன்று முதல் இன்று வரை பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் பெற்ற மொழியாக நிலைத்து நிற்கிறது. ஆதலால் தான் பகுத்தறிவுக் கவிஞர் பாவேந்தரும் தமிழை உயிராகவே மதித்துப் போற்றியுள்ளார். உலகத்திலேயே மொழியை உயிராக மதிக்கும் ஒரே இனம் தமிழினம் மட்டுந்தான். தோன்றிய காலம் தொட்டுத் தன் சீரிளமை குன்றாமல் இருந்துவரும் மொழி தமிழ்மொழியாகும்.

தமிழில் எழுதப்பெற்ற செவ்விலக்கியங்களான சங்க இலக்கியங்கள் செம்மாந்த வாழ்க்கையைக் கூறும் இலக்கியங்களாகும். மாந்த மதிப்பை மிகச் சிறப்பாக அவை வெளிக்காட்டுகின்றன. ஒருவருக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் அல்லது செய்ய வேண்டாம் என்றும், தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றும், ஒருவடம் சென்று எனக்கு ஏதாவது கொடு என்று இரந்து நிற்பது இழிவானது என்றும், சங்க இலக்கியப் பாடல் சுட்டியுள்ளது. வினையே ஆடவர்க்கு உயிர் என்றும் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்றும் ஒரு பாடல் குறிப்பிடுகின்றது. "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனி நாகரிகம்' என்கிற நற்றிணைப் பாடல். "பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' என்றும் "அன்பெனப் படுவது தன்கிளை செறாமை' என்றும் கலித்தொகைப் பாடல் சுட்டியுள்ளது. "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்கிறது மற்றொரு பாடல். "உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்கிறது புறநானூற்றுப் பாடல். இவை யாவும் மனித மதிப்பீட்டை வெளிக்காட்டுவன வாக உள்ளன. ஓர் இலக்கை நோக்கி மனிதர்களை நகர்த்துவதே இலக்கியம்
என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றாக விளங்குகின்றன.

செம்மாந்த வாழ்க்கையை எடுத்துக் காட்டுவன போன்றே சங்க இலக்கியங்கள் உலகப்பொதுமை பேசுவனவாகவும் உள்ளன. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பரந்துபட்ட சிந்தனை கொண்ட தொடரை வேறு இலக்கியங்களில் காண்பது அரிது. இந்தத் தொடர், மொழி கடந்து, நாடு கடந்து, இனம் கடந்து பொதுத் தன்மையைச் சுட்டுவனவாக உள்ளது. இது மட்டுமின்றித் தொல்காப்பியம் முக்கியமான விதி ஒன்றைக் குறிப்பிட்டுள்ளது. அதாவது அக உணர்வுப் பாடல்களை எழுதும்போது குறிப்பிட்டு யார் பெயரையும் சுட்டக் கூடாது என்பதே அவ்விதியாகும். ஏனெனில் இலக்கியத்தைப் படிப்போர் ஒவ்வொருவரும் அவ்விலக்கியம் தமது உணர்வைப் பேசுவதாகக் கருத வேண்டும் என்பதற்காகவே ஆகும். எந்தமொழி பேசுவோராக இருந்தாலும் சங்க இலக்கியத்தைப் படிக்கும்போது தமது உணர்வைப் பேசுவதாகத்தான் உணர்வர். மொழி என்ற இடைவெளியோ இனம் என்ற இடைவெளியோ அவர்களுக்கு ஏற்படாது. மொழி கடந்து, இனம் கடந்து இலக்கியத்தைப் பரவச் செய்யும் முயற்சியும் இதனுள்ளே இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஆக, பழமை, தொன்மையான இலக்கிய வளம், பிற மொழிகள் பிறப்பதற்குத் தாயாக இருத்தல், பிறந்த மண்ணில் இன்றும் உயிரோடு இருத்தல், செம்மாந்த வாழ்க்கையைப் பேசுதல், உலகப் பொதுமையைப் பேசுதல் என்ற அனைத்துத் தகுதிகளையும் தமிழ் பெற்றுள்ளது என்பதால்தான் செம்மொழி யாக அது அறிவிக்கப்பெற்றுள்ளது என்பதைத் தமிழர் மட்டுமின்றிப் பிறரும் அறிய வேண்டும்.

இப்பண்புகளைக் கன்னட மொழி பெற்றிருக்கவில்லை. கன்னட மொழிக் குரிய இலக்கணம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் எழுதப்பெற்றுள்ளது. கவிராச மார்க்கம் என்பதே கன்னட மொழியில் முதலில் எழுதப்பெற்ற இலக்கணநூலாகும். அதுமட்டுமின்றிப் பிறமொழித் துணையின்றிக் கன்னட மொழி இயங்காது. இது தமிழ்மொழியின் வழிவந்த மொழியே தவிர, தனிமொழி அன்று. இந்த உண்மையெல்லாம் மறைக்கப் பெற்றுக் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்புவதற்குக் காரணம் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் கன்னடர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com