Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2008

மதம் என்றால் என்ன
ராபர்ட் ஜி, இங்கர்சால்


எல்லாம் வல்ல - எங்கும் நிறைந்த ஒரு கடவுள் யாவற்றையும் படைத்து, அவற்றை ஆண்டு நடத்தி வருவதாயும், படைக்கும் பொருள்களெல்லாம் அக்கடவுளுக்கு அடங்கியும், வணங்கியுமிருக்க வேண்டுமென்றும், இன்னும் அக்கடவுளிடும் கடவுள்களைப் பணிவுடன் ஆற்றுபவனே சமயநெறி மீறாது இருப்பவனென்றும் சொல்லப்படும். இத்தகைய மதமே இவ்வுலகில் பொதுப்படையாகப் பெரும்பாலாராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக இக்கடவுள் பலிகளை விரும்புவதாகவும், தாய் தந்தையர் தம் குழந்தைகளது இரத்தத்தைச் சிந்துவதனால் இக்கடவுள் மனநிறைவும் மகிழ்ச்சியுமடைவதாகவும் அனைவராலும் நம்பப் பட்டு வந்தது. பின்னால், இவர்கள் ஆடு, மாடு, கோழி, சேவல் முதலியவற்றின் இரத்தப் பலிகளினால் திருப்தியடைவதாகவும், மெய்யடியார் செய்யும் இத்தகைய பலி, தியாகம், யாகம் ஆகியவைகளுக்குப் பதிலாக இவர் வான-மழையையும், வையகச் செழிப்பையும், தானிய விளைவுகளையும் மக்களுக்கு உதவுவதாகவும் கருதப்பட்டது. இத்தகைய யாகங்களையும், தியாகங்களையும் செய்யாவிட்டால் இக்கடவுள் பஞ்சத்தையும், பூமி அதிர்ச்சியையும், வெள்ளத்தையும் அனுப்புவாரென்றும் மக்கள் நம்பினர்.

கிறித்துவ மதத்தின் கருத்துப்படி இந்த நம்பிக்கை கடைசியாகக் கடவுள் தனது குமாரன் கொலையுண்டதின் காரணமாய் அவரது இரத்தப் பலியை ஏற்றுக்கொண்டு மன நிறைவடைந்து அதன் பின்னர் வேறு இரத்தப் பலிகளை விரும்புவதில்லை யென்ற கொள்கையில் வந்து முடிந்திருக்கிறது. (இந்துக்கள் இன்னும் பலவிதமான இரத்தப் பலிகளில் நம்பிக்கையுடன் உயிர்க் கொலைகள் செய்து வருவது பரவலாக இருக்கிறது.) இவ்வாறே, பல்லாயிரம் ஆண்டுகளாக இக்கடவுள் மக்களின் தியானங்களைக் கேட்டு வரமருளியதாகவும், பாவங்களை மன்னித்துத் தொண்டர்களது ஆத்மாக்களுக்கு வீடுபேறு அளிப்பதாகவும் நம்பிவந்தனர். பொதுவாக இப்படிப்பட்ட நம்பிக்கைகளையே மதமெனலாம்.

இவற்றினின்று இவைபற்றிய பின்வரும் கேள்விகள் எழுகின்றன. நமக்குத் தெரிந்த அல்லது நாமறிந்த எந்த நிகழ்ச்சியையாவது அல்லது உண்மையை யாவது மதம் அடிப்படையாகவுடையதா? கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? அவர் உங்களையும் என்னையும் படைத்தவரா? எப்பொழுதாவது வரங்கள் கொடுத்த துண்டா? எந்த நரபலியாவது அல்லது மிருக பலிகளாவது செய்யாமல் இக்கடவுளது உதவியைப் பெற்றதுண்டா? முதலாவதாக எல்லாம் வல்ல இறைவன் மக்களையும், அவர்தம் மரபினரையும் படைத்தாரா? அறிவில்லாது இன்னலுறும் மாந்தரை ஏன் படைத்தார்? கடவுள் குருடர்களையும், திக்கற்றவர்களையும் ஏன் படைத்தார்? பாவிகளையும் பைத்தியக்காரர்களையும் படைத்ததேனோ? சர்வ ஞானியும் சர்வாதிகாயுமான ஒரு கடவுள் இத்தகைய சிறுமைகளையும், குறைகளையும், படைத்ததற்கு ஏதேனும் காரணம் காட்ட முடியுமோ? பிறப்பினால் இத்தகைய சிறுமையடைந்தவர்கள்கூட தம்மை இங்ஙனம் படைத்தவனிடம் கடமைப் பட்டுள்ளரோ? இரண்டாவதாக, ஒரு பேராற்றல் படைத்த கடவுள் இந்த உலகத்தை ஆண்டு அதை நடத்துகிறாரா?

எல்லாத் தலைவர்களுக்கும் அரசர்களுக்கும் மாமன்னர்களுக்கும் இன்னும் அரசிகளுக்கும் அவர்தான் காரணமா? நடந்த யுத்தங்களுக்கெல்லாம் அதில் ஆறாகப் பெருகியோடிய ரத்தத்திற்கெல்லாம் அவர்தான் பொறுப்பாளியா? பல நூற்றாண்டுகளாயிருந்த அடிமை வாணிகத்திற்கும்; ஓயாத சவுக்கடியினால் தீராத துன்பமுறும் முதியோர்களுக்கும், பால் மணம் மாறாக் குழந்தைகளைப் பிரித்துக் கொடிய மாந்தர் விற்பனை செய்ததற்கும்; குடும்பங்களைப் பிரித்துச் சின்னாபின்னப்படுத்தியதற்கும் அவர்தான் பொறுப்பா? மதத்தின் பெயரால் செய்த கொடுமைகள் அத்தனைக்கும், மக்களை கழுவேற்றியதற்கும், தீயிலிட்டெத்தற்கும், வெஞ்சிறையில் குட்டையிலிட்டுத் துன்புறுத்தியதற்கும் அவர்தான் பொறுப்பா? கொடியவர்களும் தீயோர்களும், வீரர்களையும் சன்மார்க்கர்களையும் அழித்திடுதல் கண்டும் சோம்பியிருந்தாரா? கொடுங்கோலரக்கர் குணமிகு நல்லவர்களைக் கொலை செய்திடுதல் கண்டும் சும்மா கிடந்தாரா?

வெஞ்செயல் அரக்கர் பக்தர்களைத் துன்புறுத்தி உடல் கருக எத்திடும் வரை அஞ்சிக்கிடந்தாரா? இத்தகைய கடவுளை மதிப்பதெப்படி? தனது நண்பர்களைப் பகைவர்கள் துன்புறுத்தி எத்திடுங்கால் அதைத் தடுத்திடும் ஆற்றலுடைய ஒரு சாதாரண மனிதனும் அதைப் பார்த்து வாளா இருப்பானா? நண்பரைவிட, பகைவரைப் பேணும் இழிதன்மை பேயிடமும் காண முடியாதே!

எங்கும் நிறைந்து, பேராற்றலும் நற்குணமும் படைத்த ஒரு கடவுள் இவ்வுலகை ஆள்வது உண்மையாயின் பெரும் சண்டமாருதப் புயற்காற்றுகளுக்கும், பூமி திடுக்கிடக்கலக்கும் அதிர்ச்சிகளுக்கும், பஞ்சங்களுக்கும், நோய்களுக்கும் நாமென்ன காரணம் சொல்லக்கூடும்? சிசுக்களை வருத்தும் பலவகைப்பட்ட புண்களுக்கும், சிறிய கிருமிகளுக்கும், பெயரோகங்களுக்கும், ஆயிரக் கணக்கான நோய்களுக்கும் வழி சொல்வதெங்கனம்? கூற்றுவனெனத் தியும் கொடிய மிருகங்களுக்கும், நச்சுப் பாம்புகளுக்கும் வகையிடுவதெவ்வாறு? உயிரே உயிரைத் தின்றழிக்கும் உலகினை என்னுரைப்பது? அளவிலா அருட்சோதிக் கடவுள் படைத்தருளுவது நொடிய மூக்குகளும், கொடிய நகங்களும், கூரிய பற்களும், தேறிய நஞ்சும்தானா? அச்சத்துடன் பறந்தோடும் புள்ளினங்களைப் பிடித்து உண்பதற்காகவோ, பரந்த இறங்குகளைப் பருந்துகளுக்கருளியது? எண்ணிறந்த உபயோகமில்லாத உயிர்களைத் தின்னுவதற்காகவா படைத்தருளினான்? நுணுகிய கண்ணின் நரம்புகளை அரிப்பதற்காகவா அணு போன்ற பூச்சிகளை ஆக்கினான்?

அணுவினுஞ் சிறிய ஒரு பூச்சியின் பசியைத் தணிப்பதற்கு ஒரு மனிதனை குருடாக்குதல், உயிர்கள் உயிர்களைத் தின்று வாழுதல், கொடுமையென்னும் குன்றின் சிகரத்தினின்று சிதறும் குருதி வீழ்ச்சியின் பெருக்கு முதலியவற்றைச் சிறிது சிந்தியுங்கள். மடிபவர் எண்மதிக்கற்பாலதோ? என்னே இவர்தம் தயையும், அருளும் இருந்தவாறு? இவ்வுண்மை நிகழ்ச்சிகளினின்று நோக்குழி மதமென்பதுதான் என்னவாயிருத்தல் கூடும்? மதமே உன் பெயர் பயமே!

பயமே தலைதூக்கி நிற்கிறது. பலியும் கொடுக்கிறது. பயமே ஆலயம் நிறுவி, மனிதர்தம் தலைவணங்கச் செய்கிறது. பயமே அன்புபோல் பாசாங்கு செய்கிறது. மதம் அடிமை நலங்களான கீழ்ப்படிதல், அடக்கம், தன்னை வெறுத்தல், துன்பங்களை மறத்தல், எதிர்க்காமை ஆன இவற்றை போதிக்கின்றது.

மதமும் பயமும் தூண்டுகின்ற உதடுகள், அவன் என்னைக் கொன்றாலும் நான் அவனை நம்புவேன் என்னும் வாக்கியத்தை உதடுகள் உச்சரிக்கின்றன. இதனினும் கீழாய பாதாளம் வேறு உண்டா? மதம் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், மனிதத் தன்மையையும், வீரத்தையும், பாதுகாப்பையும் போதிப்ப தில்லை. மதம் கடவுளைத் தலைவனாக்கி, மனிதனை ஏவலாள் ஆக்குகின்றது. ஆனால், அடிமைத்தனத்தை இன்பமாக்குவதற்குப் போதிய ஆற்றலும், வன்மையும் படைத்தவராக எஜமானன் (கடவுள்) இருக்க முடியாது.

இத்தகைய ஒரு தெய்வம் உளதேல் அது நன்மை பயப்பது எனத் தெளிதல் கூடுமா? அது அருட்கண்ணுடையது என்றும், மனித வர்க்கத்தைப் பேணுவதென்றும் எப்படிக் காண்பிக்கக்கூடும்? இக்கடவுள் இருப்பாரேயாகில் கோடிக் கணக்கான மக்கள் நிலத்தைப் பயன்படுத்தி உழுது விதைத்துப் பயிரிடுவதையும்; தமது வாழ்க்கைக்கு எதிர்பார்க்கும் விளை வினையே ஆதாரமாக நம்பியிருப்பதையும் அறிந்தேயிருக்கிறார். எனினும் தேய தெய்வம் - இவ்வருட் கடவுள் வானத்தினின்று மழை இல்லையென்றால் மக்கள் பாழான நிலங்களைப் பார்த்து கருத்தழிவைக் கண்டும் வான மழை இல்லை யென்றால்! அவர்கள் மீதமாக வைத்திருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாக உண்பதையும், பசிப் பிணியால் மெலிந்து போகும் நாள்கள் கிட்டியதையும், அவர்கள் சிறிது சிறிதாக நலிந்து போவதையும், அவர்களின் ஆளை விழுங்கும் குழிவிழுந்த கண்களையும் பார்க்கிறார். அவர்கள் தன்னைக் கூவி அழைத்துத் துதிப்பதையும் கேட்கிறார்! தங்களிடமிருந்த ஆடு, மாடு, கோழிகளை வதைத்துத் தின்றும் பின்னும் பசியின் கொடுமை தாக்க பைத்தியமுற்று, எலும்பும் தோலுமாயிருக்கும் குழந்தைகளைக்கூடக் கொன்று தின்னுவதையும் பார்க்கிறார். வானம் கொடிய வேலினைப் பிடித்த மாரனையொக்கும். வையகம் நெஞ்சு துடிக்கும் காமுகனையொக்கும். எனினும் வெதுப்பினை ஒழித்தும் தண்ணிய காதலையொக்கும் மழையை ஒளிந்து கொள்ளச் செய்தார். இத்தகைய தெய்வத் தின்பால் அருளென்னும் கனிவுறு நெஞ்சக மலர் பூக்குமோ? அவர் மனித வர்க்கத்தைக் காப்பதாகவும், அவரது அருள் அழியாது மிளிருவதாகவும் சொல்லுதற்கு இயலுமோ?

அவர் கிராமங்களை அழித்திடும் பெரும் கழற்காற்றுகளை அனுப்பி நிலப்பரப்புகளைத் தாய் தந்தையர் குழந்தைகளுடைய நைந்த தேகங்களால் நிரப்புவதைக் கொண்டோ அவரது நற்குணத்தை நாம் நிலைநாட்டுவது? எமலையின் நெருப்புக் குழம்புகள் ஆற்றுப் பெருக்கெடுத்துச் சுற்றியிருக்கும் நாட்டு நகரங்களை அழித்திடுதல் கண்டு நாம் அவரது மேன்மையைப் புகழ்வதா? இவ்வாறு நாமறிந்த காட்சிகளைக் கொண்டு நாம் அவரது நன்மையைத் தேர்ந்து தெளிவதா? இத்தகைய கொடுமைகள் நிகழாதிருப்பின் அவர் மக்களைக் காப்பதில்லை என்று நாம் சந்தேகப்படுவோமா? பஞ்சமும் நோயும் புயற்காற்றும் பூகம்பங்களும் இல்லையாயின் கடவுளின் அன்பைப் பற்றிய சந்தேகம் எழுமா? மதாச்சாரியர்கள், கடவுள் மக்களை எல்லாம் ஒன்றுபோல் படைக்கவில்லை என்பர். அவர் பல வகுப்புகளையும் உருவத்தாலும், நிறத்தாலும், அறிவாலும் வேறுவேறு வகைப்படப் படைத்தார். இதில் அவரது அன்பையும் ஞானத்தையும் காண முடியுமா?

இவர் தம்முன், உயரிய வர்க்கத்தினர் தம் நிலை கண்டு அகமகிழ்ந்து கடவுளை வாழ்த்துவதா? அப்படியாயின் ஏனையோர் தமது நிலை கண்டு இரங்கிக் கடவுளைப் பழிப்பதா? அன்றி விலங்கினும் தாம் உயர்ந்தவர் எனக் கண்டு தேறுவதா? கடவுள் இத்தகைய உயர்ச்சி தாழ்ச்சிகளை விளைவிக்குங் காலத்தில் அவருக்கு, வலியவர் மற்றவர்களை வருந்தச் செய்து அடிமைகளாக்கி இறுதியில் அழியச் செய்வர் என்பதை அறிவார். அப்படி அவர் செய்திருந்தால், சிந்தப் போகும் இரத்த வெள்ளத்தையும், பிணக்குவியல் நிறையப் போகும் நிலபரப்புகளையும், தம் பெயரால் மக்கள் எய்தவிருக்கும் இன்னல்கள் ஆயிரக் கணக்கானவற்றையும், இன்னும் எல்லையில்லாத தொல்லைகள் ஏராளமாக நிகழப்போவதையும் அறிந்திருந்தால் அவனும் கொடியதொரு பேயுமுளதோ? என்றாலும், ஏன் நாம் கடவுளை நல்லவரென்கிறோம்?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து மடிந்ததும் நூலோர்கள் செக்கடியில் நொந்ததும், எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கக் கழுவேற்றப்பட்டதும், ஓயாத சவுக்கடியினால் தீராத துன்புறும் உடலோடு நம்பிக்கையிழந்த அடிமைகளின் கதறுதல்களும், தியாகிகளைப் பெருகுதீயின் புகையிலும், வெய்யிலிலுமிட்டு மாய்த்ததும், சான்றோர்களைக் குட்டையிலிட்டுத் துன்புறுத்தியதும் எண்ணற்ற வீரர் சுதந்திரம் நாடி கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும் அதனைப் பெறாததும், அடிபட்டுக் குடும்பச் சுமை தாங்கும் அடிமை மனைவியர் அல்லலுறுவதும் தாய் முகங்காணாது தவித்திடும் இளங் குழந்தைகள் துக்கப்படுவதும், காற்றினும், மழையினும், கடலினும், ஆற்றினும், வெள்ளத்தினும், விடத்தினும், ஊற்றினும், பள்ளத்தினும், திடலினும், கூற்றுவன் கொள்ளையிடுலானும், மாற்றலர், கள்வர், இடி இவற்றானும் மக்கள் மடிந்ததும் ஆகிய இன்னோரன் பழமையிற்கண்ட பழிகளென்ன! இன்னும் வருகிற இன்னல்கள் எத்தனை! கொடிய காட்சிகளென்ன! இத்தனையும் நோக்கின் மனித வர்க்கத்தைக் காத்து அருளுகின்ற குணமும் திறனும் படைத்த ஒரு கடவுள் இல்லை என்பதையே காட்டுகின்றன வல்லவா?

பொதுவாக மக்கள் இயற்கைக்கு மாறான, அற்புதமான விஷயங்களையே விடாது பிடித்துக் கொள்ளுகிறார்கள். ஒரு கடவுளை ஒழித்தால் மற்றொரு தெய்வத்தை மனதில் கொள்ளுகிறார்கள். காளியும் மாரியுமில்லாதொழியின் பிள்ளையாரும், முருகனும் முன் வந்து நிற்கிறார்கள். இவர்களையும் தாண்டினால் சிவனையும், விஷ்ணுவையும் பிடித்துக் கொள்ளு கிறார்கள். இவற்றையும் விட்டால் அறங் காக்கும் ஒரு சக்தியைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இத்தகையதான் என்ன?

மனிதன் முன்னேற்றமடையவே செய்கிறான். ஆனால், எப்படி? தன்னுடைய அனுபவ முதிர்ச்சியினாலல்லவா? ஓரிடத்திற்குப் போக வேண்டிய ஒருவன், தெருவானது இரு கிளைகளாகப் பிரிகிற இடத்திற்கு வருகிறான்; சரியான பாதையென்ற நம்பிக்கையோடு இடதுபக்கம் போகின்றான். பின்னால் தப்பிதமென்று தெரிந்தவுடன் திரும்பவும் வந்து வலது பக்கமாய்ப் போய் குறித்த இடத்தைச் சேருகின்றான். அடுத்த தடவை போகும்பொழுது ஞாபகமாய் இடது பக்கப் பாதையில் போகாமல் வலது பக்கமாகவே போகின்றான்; ஏனெனில், தனது அனுபவத்தால் இடது பக்கம் சரியான பாதையல்லவென்று அவனுக்குத் தெரியும். ஆனால், இதையுணராச் சமயப் பித்தர்கள் உடனே மக்களைச் சரியான வழியிற் செலுத்தும் ஒரு பேராற்றல் இருப்பதாக அறைகூவுகின்றார்கள்.

சுடர் வீசி எரியும் நெருப்பின் அழகைக் காணும் ஒரு குழந்தை அதைப் பிடிக்கத் தனது கையை நீட்டுகின்றது. நெருப்பு கையைச் சுட்டுவிடவே வேதனைப்படுகின்றது. அதன் பிறகு தீயை அணுகுவதில்லை. உடனே சரியான வழியிற் செலுத்தும் ஒரு சக்தி அக்குழந்தைக்கு ஒரு பாடம் கற்பித்ததாகக் கருதப்படுகிறது. இவ்வுலக அனுபவத்தையெல்லாம் திரட்டினால் அது நம்மைச் சரியான வழியிற் செலுத்துவிக்கும் ஒரு சக்தியென்றே சொல்லலாம். இச்சக்திக்குத் தன் உணர்வேனும், புத்தியேனும், அறிவேனும் கிடையாது. இன்னும் அதற்கு என்று ஒரு நோக்கமேனும், தீர்மானிக்கும் புத்தி யேனும் கிடையாது. அது நமக்குக் கிடைக்கும் ஒருவிதப் பயன். ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் நமக்கு ஒழுக்க உணர்ச்சியிருக்கும் ஒரு தன்மையின் மூலம் கடவுள் இருக்கிறாரென்பதை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள்.

மதாச்சாரியார்களும், இன்னும் தத்துவ சாஸ்திரிகள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் இந்த ஒழுக்க உணர்ச்சியென்பது - அறம் அல்லது கடமையை உணரும் மனப்பாங்கானது நமக்கு எங்கேயோ இருந்துகொணர்ந்து கொடுக்கப்பட்ட ஒரு சக்தியென்றும், நமது மனச்சாட்சி நமக்குப் புறம்பான அல்லது அன்னியமான ஒரு பொருளென்றும் வற்புறுத்துகின்றனர். அது தானாக இங்கே ஏற்படவில்லையாம். மனிதனால் உண்டாக்கப்படாமையால், அதை அமைத்திருக்கும் ஒரு கடவுள் உண்டெனக் கொள்கிறார்கள்.

மனிதன் சமூக உணர்ச்சியுடையவன். அவன் குடும்பங்களிலும் இனத்தாருள்ளும் சமூகத்திலும்தான் வாழ்கிறான். ஒரு குடும்பத்தை அல்லது இனத்தை அல்லது தேசத்தைச் சேர்ந்தவன் எவனாவது அக்குடும்பத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது தேசத்திற்கு சந்தோஷத்தை அல்லது சுகத்தை அதிகப்பானாயின், அவன் நல்லவனாகக் கருதப்படுகிறான். அவனைக் கண்டு மற்றவர்கள் அதிசயிக்கிறார்கள். அவனை வாழ்த்துகிறார்கள். அவனை கவுரவம் செய்கிறார்கள். அவனை நல்லவனாக - அதாவது ஒழுக்கமுடையவனாகக் கருதுகிறார்கள். நமது குடும்பத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது தேசத்திற்கு துயரமிழைப்பவர்கள் கெட்டவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களைக் குற்றஞ்சாட்டி அவமதித்து தண்டனை செய்கிறார்கள். அவர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக இகழப்படுகிறார்கள்.

குடும்பத்தாரும், இனத்தாரும், சமூகத்தாரும் ஒருவிதமான செயலை அல்லது ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்க வேண்டிய முறைகளை விதிக்கிறார்கள். இதில் ஒரு விதமான அற்புதமுமில்லை. மனிதர்களுள் மேம்பட்டவரான ஒருவர் அன்பினின்று அற உணர்ச்சி (மனச்சான்று) பிறக்கிறது என்றார். கடமையைப் பற்றிய அல்லது அறத்தைப் பற்றிய உணர்ச்சி இயற்கையாக ஏற்பட்டதாகும்.

நாகரிகமில்லாதவர்களும், அரக்கர்களும் (Savages) தங்கள் செயல்களினால் உடனே விளையும் பயன்களை மட்டுமே கவனிக்கிறார்கள். மக்கள் முன்னேற்றமடையுங்காலத்தில் பின் வரப்போகும் பலாபலன்களையும் சிந்திக்கிறார்கள். ஒழுக்கத் திட்டங்களும் உயருகின்றன. மனிதன் தன்னுடைய மனோரதத்தை (Imagination) வளர்க்கிறான். தன்னுடைய சவுகரியங்களைப் போலவே பிறருடைய சவுகரியங்களையும் கருதுகிறான். அற உணர்ச்சி அதிகப்பலமடைகிறது. மனிதன் தன்னைத்தானே பரிசோதித்துத் தனது செயல்களைப் பற்றி தீர்மானிக்கிறான்.

அவன் அன்புடையவனாகிறான் - அன்பே முக்கியமானதும், தலைமையானது மாகும். ஒழுக்கங்களுக்கு எல்லாம் ஆரம்ப மாகவும், அடிப்படையாகவும் இருக்கிறது. தனது அன்பிற்குப் பாத்திரமான ஒருவருக்குத் தீங்கு செய்கிறான். இதன் மூலம் அவனுக்கு மனக்கஷ்டமும் பச்சாதாபமும் துக்கமும் தோன்றுகின்றன. இவற்றிலெல்லாம் அற்புதம் என்ன இருக்கிறது?

மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுகிறான். இயற்கையானது மனிதனுடைய சாயலையே திரும்பவும் காட்டும் ஒரு நிலைக் கண்ணாடியாக இருக்கிறது. இந்த நிலைக் கண்ணாடியினுள்ளே தெகிற ஒரு தோற்றத்தைப் பிடித்து விட்டதாகக் கொள்ளுகிற ஒரு போலிக் கொள்கையிலேயே இந்த அற்புதமான மதங்களெல்லாம் தொங்குகின்றன. சமய வழிப்படும் பிளோட்டோ (Plato) முதலான எல்லா வேதாந்திகளும் தங்களுக்கு வேண்டிய விஷயங்களைத் தாங்களே உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். எல்லா மதஸ்தாபகர்களும் இவ்விதமே செய்திருக்கிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் ஒருவனிருக்கிறான் என வைத்துக்கொள்வோம். அவனுக்கு நாம் என்ன செய்யக்கூடும்?

அவர் யாவற்றையும் கடந்தவராதலின் அவர் எதினின்றும் பிறந்தவரென்றாவது, எவ்விதக் கட்டுப்பாடுகள் உடையவரென்றாவது சொல்வதற்கில்லை. எனவே, அவருக்கு நன்மையேனும், தீமையேனும் செய்ய முடியாது. அவருக்கு வேண்டுவதொன்றில்லை; அவர் எங்கும் நிறைந்தவர்; எல்லாமறிந்தவர். எனவே யாவற்றையும் கடந்து ஒரு கடவுள், தன்னுடைய புகழ்ச்சியை விரும்புகிறார் என்று நம்புகிற ஒரு மனிதன் அகங்காரத்தை என்னென்றுரைப்பது?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com