Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2008

மனித தர்மமும் மனுதர்மமும்
ஆனாரூனா


தீவிரப் பகுத்தறிவாளர்களாக அறியப்பட்ட பலர் திடும் என ஒரு நாள் தீவிர இறையியலாளராக - மதவாதியாக - மாறியதுண்டு. ஆனால்- ‘நாத்திகம்' வார இதழைத் தீவிர தி.மு.க. வார இதழ் என்கிற வேகத்துடன் தொடங்கிய போதும் சரி, பின்னர் தந்தை பெரியாரின் காமராசர் ஆதரவு நிலையைத் தொடர்ந்து தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக - தீவிர தி.மு.க. எதிர்ப்பாளராக - புயல்வேகப் பேச்சாளராக முழங்கியபோதும் சரி, காமராசர் மறைவுக்குப் பிறகு அரசியல் மேடைகளைத் தவிர்த்து தனித்து நின்ற போதிலும் சரி, நாத்திகம் ராமசாமி அவர்களின் பகுத்தறிவுக் கருத்தியலில் எந்தத் தொய்வும் நேர்ந்ததில்லை. நாத்திகம் இதழில் அரசியல் பார்வைக்கு அப்பால் அவரது கனல் மணக்கும் பகுத்தறிவுக் கருத்துகள் மலர்ந்துகொண்டே இருந்தன. நாத்திகம் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது.

அந்த விழா மேடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் பேசும்போது, தமிழனின் நிகழ்காலத் தோற்றம் ஒன்றைப் படம்பிடித்துக் காட்டினார். இன்றைக்குத் தமிழர்களையெல்லாம் கூட்டிவைத்துக் கொண்டு, தமிழன் மானங்கெட்டவன், சொரணையற்றவன், அறிவுகெட்ட அற்பன்... என்று எவ்வளவு கடுமையான சொற்களால் தாக்கிப் பேசினாலும் சிரித்து ரசித்துக் கொண்டிருப்பான். ஆனால் - ஒரு சாதியைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டால்போதும் "சுயமயாதை' முறுக்கிக் கொண்டு எழுகிறது. ஆவேசம் ஆட்டிப் படைக்கிறது. ஊரே பற்றி எகிறது. இன்றையத் தமிழன் மானுடம் மறந்த சாதிக்காரனாய் வந்து நிற்கிறான். யார் என்ன சாதி என்று அறிந்துகொள்வதில் ஆர்வங்கொண்டவனாய் இருக்கிறான். இந்த அவலம் மாறவேண்டும். தமிழன் என்பதேகூட மொழி வகைப்பட்ட ஒரு தேசிய அடையாளமே தவிர மானுட எல்லையைத் தொடும் வலிமை அவனுக்கு வரவேண்டும்...'' என்று தோழர் நல்லகண்ணு பேசினார்.

ஆனால் தோழர் நல்ல கண்ணுவின் இதயத்தையோ, எண்ணங்களையோ, அந்த விரிந்த உரையின் ஆழத்தையோ அர்த்தத்தையோ புரிந்துகொள்ள இயலாத துக்ளக் ராமசாமி தனது இயல்பான பார்ப்பனியக் குதர்க்கத்தைத் தனது பத்திகையில் ஒழுகவிட்டிருக்கிறார்.

‘துக்ளக்' இதழில் ஒரு கேள்வி:

“தமிழர்கள் எப்படியாவது அடுத்தவர் ஜாதி என்ன என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்''- என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர் நல்லகண்ணுவின் கருத்து குறித்து...?

இந்தக் கேள்விக்கு "சோ' ராமசாமியின் பதில்: “பள்ளி, காலேஜ், வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு எல்லாம் ஜாதியைக் கேட்கலாம் என்று ஒப்புக்கொள்கிற கம்யூனிஸ்ட்கள் இப்படிப் பேசுவது வியப்பாகத்தான் இருக்கிறது''

தோழர் நல்லகண்ணுவின் பேச்சிலே முரண்பாடு இருக்கிற தாம். பள்ளி, காலேஜ், வேலை வாய்ப்பு போன்றவற்றில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒத்துக்கொள்ளும் நல்லகண்ணு தமிழனின் சாதிய உணர்வு குறித்துப் பேசலாமா? இது சாதிய உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட - மனிதன் என்பதற்கு மேலாக வேறு எந்த அலங்காரத்தையோ, அசிங்கத்தையோ பூசிக் கொள்ளாத பரிசுத்த சோவானவருக்கு வியப்பாக இருக்கிறதாம்.

சாதிப் பிவினை கூடாது. சாதியால் ஒரு மனிதனை உயர்ந்தவனாகவும், மற்றொரு மனிதனைச் சாதியின் பெயரால் தீண்டத் தகாதவனாகவும் கருதும் கேவலம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிடையாது. சாதிக்கொரு நீதி வகுத்தோர் சமூகத்தின் முன்னே குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டும் - என்கிற உயர்ந்த குறிக்கோளுடன் உருவானதுதான் சமூக நீதிக் கோட்பாடு. இதிலே ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்புக்காகப் போராடும் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் மாறுபாடு கொண்டவை அல்ல. தோழர் நல்லகண்ணு அந்தக் குறிக்கோளுடன்தான் நாத்திகம் விழாவில் - சாதிய உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தமிழன் குறித்துத் தமது வேதனையை வெளிப்படுத்தினார்.

ஆனால் சாதிப் பிவினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தோழர் நல்லகண்ணு போன்ற முற்போக்காளர்கள், கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை ஏன் ஆதக்கிறார்கள்.

உண்மையில் இதுவும், பிறப்பால் தாழ்த்தப்பட்டோர், ஒதுக்கப் பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்று சாதியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை மேலே ஏறு, முன்னேறு என்று கைதூக்கி விடும் முயற்சிகளில் ஒன்றுதான். சரியாகச் சொல்வதானால், மனுதர்ம ஏற்பாட்டை, மனுதர்ம வாளைக்கொண்டே வீழ்த்தும் முயற்சிதான் - இடஒதுக்கீட்டுக் கொள்கை.

கல்வியில் வேலைவாய்ப்பில் சாதி முறையை ஒப்புக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் சாதிய உணர்வை விமர்சிக்கலாமா? - என்று கேட்கும் "சோ'க்கள், இப்படிக் கேட்பதன் மூலம் சாதி பேதங்களைக் கடந்த முற்போக்காளர்களாகக் காட்டிக் கொள்வதுதான் வியப்புக்குரியது. இன்றைக்கு சோ மாதிரி, பார்ப்பனர்கள் பலரும் சாதி மறுப்பாளர்களாகவே வேஷங்கட்டித் திரிகிறார்கள். சாதிய உணர்வும், சாதிய அமைப்பும் மாற வேண்டுமானால் பள்ளியில் சேர்க்கும் போதே நுழைவுப் படிவத்தில் சாதியைக் குறிப்பிடும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்றே பார்ப்பனர்களும், பார்ப்பன மயக்கத்திலுள்ள சூத்திரர் களும் உரத்த குரலில் பேசுகிறார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பள்ளிச் சான்றிதழ்களிலேயே சாதியைப் புறந்தள்ளுவது நல்ல யோசனைதான் என்றே தோன்றும். ஆனால் இவ்வாறு பேசுவோர் யார்? அவர்கள் உள்நோக்கம் என்ன? யோசிக்கும் வேளையில் சூட்சுமம் புரியும்; சூழ்ச்சி வெளிப்படும். தமிழர்களின் வாழ்வில், இலக்கியத்தில் எங்கேயும் சாதியும் இருந்ததில்லை சனாதனக் கோட்பாடுகளும் இருந்ததில்லை.

ஆய வேதங்களும், அவர்தம் புராணங்களும், மனுதர்மச் சூதுகளும்தான் வர்ணாஸ்ரமதர்மத்தை - சாதியக் கோட்பாட்டை வகுத்தன; வளர்த்தன; வலியுறுத்தின. பிரம்மாவின் தலையிலே பிறந்தவன் பார்ப்பனன்; தோளிலே பிறந்தவன் சத்திரியன்; வயிற்றிலே பிறந்தவன் வைசியன்; காலிலே பிறந்தவன் சூத்திரன். தலைப்பிறவியான பார்ப்பனனுக்குப் பணிவிடை செய்வதற்கென்றே மற்ற சாதியார் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேவலமான முறையில் ஆணவம் பேசும் "தர்மங்களை' - சமூகக் கோட்பாடுகளை இன்றுவரையிலும் பாதுகாப்போர் யார்? பார்பப்னர்கள் அல்லவா?

கல்வியில், வேலைவாய்ப்பில் சாதிப் பாகுபாடு கூடாது; இடஒதுக்கீடு கூடாது என்று "முற்போக்கு வசனம்' பேசும் எந்தப் பார்ப்பனனாவது வேதங்களை ஒழிப்போம்; மனுதர்மத்தைக் கொளுத்துவோம் என்று சொன்னதுண்டா? சூத்திரன் (மெதுவாகப் பார்ப்பனரல்லாத தமிழர்கள்) கல்வி கற்கலாமா? உயர்பதவிகளில் அமரலாமா? இடஒதுக்கீட்டுக் கொள்கை சூத்திரர் பஞ்சமர்க்குச் சில சலுகைகள் வழங்குவதால், இந்தப் பிரிவினரில் சிலராவது உயர முடிகிறது. அப்படி நடக்கலாமா? மேலேறத் துடிக்கும் சூத்திரனை, பஞ்சமனை, தமிழனை ஓரடி உயர முடியாமல் படுகுழியில் தள்ளுவது எப்படி? குதர்க்கமாய்ச் சிந்தித்த பார்ப்பன மூளையில் விஷமத்தனமான பிரச்சாரம்தான் "சாதியில் என்ன இருக்கிறது?' என்கிற சமத்காரமான பேச்சு.

சாதிய உணர்வு கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசுவதற்கும் - "சோ' ராமசாமி பேசுவதற்கும் நெருங்கவே முடியாத முரண்பாடு உண்டு. ஒன்று மனிததர்மம் இங்கே மலர வேண்டும் என்கிற இலட்சியத் தவிப்பு. மற்றொன்று, மனுதர்மம் மீறப்படுகிறதே என்கிற பார்ப்பனப் பதைப்பு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com