Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2007

மார்க்சியம் துறந்த மார்க்சியர்கள்

சாவித்ரி கண்ணன்

ஐம்பத்தைந்து ஆண்டுக் கனவு! ஆம், சேலம் கோட்டம் என்ற ஒரு சாதாரண ரயில்வே கோட்டத்தைச் சாத்தியப்படுத்திக் கொள்ள, தமிழகம் ஐம்பத்தைந்து ஆண்டுகள் தவம் கிடந்தது என்பது மிகவும் அதிகப் படியானதுதான். தமிழகத்தின் போத்தனூரிலிருந்த ரயில்வே கோட்டத்தை பாலக்காடு பறித்துக் கொண்ட ஆண்டு 1952. அன்றைய தினம் டில்லியில் பலமாக ‘லாபி’ செய்து கொண்டிருந்த கேரள அதிகாரிகள் பலவந்தமாக உருவாக்கிக் கொண்டதே பாலக்காடு ரயில்வே கோட்டம்.

பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் பத்திரப்படுத்திக் கொள்ள 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் மேற்கு மண்டல மக்கள், தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தது தான் சேலம் கோட்டம். இதற்காக தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் பல முறை பேசியும் பிரதமர்களிடம் மனு கொடுத்தும் பிரயோஜனமற்ற நிலையே தொடர்ந்தது.

இந்தியாவிலேயே ரயில்வேக்கு அதிக லாபத்தைச் சம்பாதித்துத் தரும் மாநிலமாக இருந்த போதிலும், வளர்ச்சி தடுக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழகம்தான் இருக்கிறது. ரயில்வேயைப் பொறுத்தவரை வட இந்தியா வளர்பிறையாகவும், தென்னிந்தியா தேய்பிறையாகவுமே உள்ளது. இந்த ஆண்டு போடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் மொத்தமுள்ள 31,000 கோடியில் 1000கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டது தென்னிந்திய ரயில்வேக்கு! இதனால்தான் இன்னும் மீட்டர்கேஜிலிருந்து மீளமுடியாத நீளமான ரயில்பாதைகள் தமிழகத்தில் மட்டுமே தாராளமாக உள்ளன.

ரயில்வே அமைச்சகத்தில் தமிழர்கள் ஓரிருவர் காலடி வைக்கத் தொடங்கியதிலிருந்து இந்த நிலைமைகளில் இலேசான முன்னேற்றம்! அந்த வகையில் 2005-ல் அறிவிக்கப்பட்டதுதான் சேலம் கோட்டம். இப்போதும் இதை, ‘கோட்டை விட்டு விடுவோமோ...’ என்பதே தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வாட்டம்.

பாலக்காடு நம்மை பாராமுகமாகவே அலட்சியப்படுத்தி வந்தது. இதனால் தொழில் நகரங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் போன்றவற்றின் தொழில், வியாபார வளர்ச்சிகள் தடைபட்டன. குறிப்பாக, ஆண்டுக்குச் சுமார் 100கோடி வருமானத்தை பாலக்காடு கோட்டத்திற்கு ஈட்டித்தரும் கோவை ரயில்வே ஸ்டேஷனில் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காமலேயே பாலக்காட்டிற்குப் பறந்து விடும். அவ்வளவு ஏன்? இங்கே ஓர் கழிவறை கட்டவேண்டுமென்றால் கூட காத்திருக்க வேண்டும் பாலக்காட்டின் பதிலுக்கு. மேட்டுப்பாளையத்திலிருந்து மேல் நோக்கி ஊட்டிமலையை ஊடுருவிச் செல்லும் அந்த அழகான ரயில்வே தடத்தை அமைப்பதில் அந்தக் கால அடிமை இந்தியாவில் எத்தனையெத்தனை தமிழர்கள் ரத்தம் சிந்தி உழைத்தனர். பலர் உடல் நலம் குன்றினர். சிலர் உயிரையும் இழந்தனர். இன்று அதைச் சொந்தம் கொண்டாட நமக்கு உரிமையில்லை என்கிறது கேரளம் சேலம் கோட்டம். அறிவிக்கப்பட்டதிலிருந்து சீற்றமும், சினமுமாக கர்ஜித்துக் கொண்டிருக்கிறது ‘சிகப்பு’ கேரளம்.

சமதர்மக் கட்சியாகத் தங்களைக் காட்டி வந்த கம்யூனிஸ்ட்டுகள் சராசரிக்கும் கீழே வந்து சர்ச்சை செய்கின்றனர். ‘‘பாலக்காடு கோட்டத்திலிருந்த தமிழக நகரங்கள் தருவதென்றால், தென்னிந்திய ரயில்வே மண்டலத்தைப் பிளந்து கேரளாவிற்குத் தரவேண்டும்’’ என்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். சபாஷ் இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வ தேசிய சித்தாந்தத்திற்குச் சிறந்த உதாரணம்.

நீண்ட நெடுங்காலமாக சென்னைதான் தென்னிந்திய ரயில்வே மண்டலத்தின் தலைமையகமாக உள்ளது. ஆயினும் 1996-ஆம் ஆண்டு சென்னையிலிருந்த தென்னக ரயில்வே மண்டலத்திலிருந்து பெங்களூரு பிரிந்து நிர்வாக வசதி கருதி தென்மேற்கு ரயில்வே மண்டலம் உருவானது. இது சென்னையின் செல்வாதாரத்தைக் கணிசமாகப் பாதித்த போதிலும், தமிழர்கள் யாருமே இதைத் தடைகோரி தடுக்கவில்லை. மண்டலத்தை ஒப்பிடும் போது கோட்டம் என்பது சிறியதுதான்! இந்த சிறிய இழப்பிற்கே கேரளா இப்படி சீறிப் பாயுமென்றால் மண்டலத்தைப் பிளந்தால் மௌவுனமாக இருப்பார்களா தமிழர்கள்? இருந்தாலும் இருக்கலாம்; யார் கேட்பது?

நன்றி: குமுதம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com