Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2007

பதச்சோறு

கவிஞர் பல்லவன்

பரந்து விரிந்து
படர்ந்து கிடந்த
அந்தப்
பிரமாண்டமான
அரசமரத்தடியில்
தாய்மடி சூழ்ந்த
சேய்களைப் போலச்
சீடர்கள் சிலர்
அமர்ந்து இருந்தனர்!

கருணை வழிந்து
ஒழுகும் கண்களோடும்
மௌனம் பூத்துச்
சிலிர்க்கும்
மலர்முகத்தோடும்
அங்கே
புத்ததேவன்
வீற்றிருந்தார்!

முத்து பவழம்
முழுவயிரம் மாணிக்கம்
தத்துவ மணிகளை
தம்ம பதங்களைத்
தாயினும் சாலப் பரித்து
சீடர்களுக்குச்
செவிவிருந்து வைத்தார்
சித்தார்த்த மாமுனி!

பலநாள் நடத்திய
பாடங்கள்
பயிற்சிகள் முடிய
சீடகோடிகள்
அவற்றை உள்வாங்கிப்
பக்குவப்பட்டு
உள்ளனரா என்பதைப்
பரிசோதித்து அறிய
விரும்பினார் கௌதமர்!

ஒருபானைச் சோற்றுக்கு
ஒருசோறு பதமாய்...

சித்திரம்போல்
அமர்ந்து
செவிகொடுத்திருந்த
சீடர் ஒருவரைத்
தமது கேள்வியால்
எழுப்பினார்
சாக்கியச் செம்மல்!

இருண்டு கிடக்கும்
மக்கள் மனங்களில்
சுடர் விளக்கேற்றப்
புறப்படும் சீடரே!

மூடத்தனத்தால்
முரட்டுக் குணத்தால்
அம்மக்கள் உம்மை
நடுத்தெரு நிறுத்தி
நாவினால் சுட்டுக்
கேவலப்படுத்தினால்
யாது செய்வாய்?
என்றார் புத்தர்.

திட்டியதோடு
விட்டார்களே
கட்டிவைத்துக்
கசையடி கொடுக்காமல்
என்று மகிழ்ந்து
என் பணி தொடர்வேன்
என்றார் சீடர்!

நாவால் உம்மை
வறுத்து எடுத்ததோடு
நையப்புடைத்தால்
அடுத்து என்ன
செய்வதாய் உத்தேசம்?

ரத்தம் வழிய வழிய
ரணப்படுத்தியதோடு
விட்டார்களே
கொலை வெறி கொண்டு
கொன்று போடாமல்
என்று எண்ணி
அம்மக்கள்
இதயம் துலக்க
மீண்டும் முயல்வேன்!

திருந்தா அம்மக்கள்
திரும்பவும் உம்மை
குத்திக் கொலை செய்து
குடலைப் பிடுங்கினால்
என்ன செய்வாய்?

மக்களைத் திருத்தும்
மாபெரும் பணியில்
மரணம்தான் கிடைக்கும்
என்றால்
மகிழ்வுடன் அந்த
மரணத்தை ஏற்பேன்
என்றார் சீடர்!

மக்களைத் திருத்த
முயலும்போது
சிக்கல்கள்
சிரமங்கள்
சிறுமைத்தனங்கள்
சித்ரவதைகள்
கொலைவெறித்
தாக்குதல்கள்
இருக்கத்தான் செய்யும்!

விதை அழியாமல்
விளைச்சல் ஏது?
விலைகொடுக்காமல்
எதைப் பெறமுடியும்?

புத்த பெருமானின்
புன்னகை முகத்தில்
ஆயிரம் நிலவுகள்
அமுதைப் பொழிந்தன!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com