Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2007

தேசிய இயக்கம்

லெனின்

தேசம் என்பது வெறும் வரலாற்று ரீதியான வகையினம் மட்டுமல்ல; ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ரீதியிலான வகையினமாகும். அதாவது முதாளித்துவ உதய காலகட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ரீதியிலான வகையினம் ஆகும். நிலப்பிரபுதுவத்தை ஒழித்து முதலாளித்துவம் வளர்ந்து வந்த அதே நேரத்தில்தான் மக்கள் தேசங்களாக இணைந்து அமையப் பெற்றார்கள்.

உதாரணமாக இதற்கு மேற்கு ஐரோப்பாவைச் சொல்லலாம். நிலப் பிரபுதுவத்தில் ஏற்பட்ட பிளவை வெற்றி கொண்டு, முதலாளித்துவம் வெற்றிகரமாக முன்னேறிய போது தான் பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி போன்றவை தேசங்களாக உருவாயின.

அதே நேரத்தில், மேலே சொல்லப்பட்ட தேசங்கள் உருவான நிகழ்ச்சிகள், அவைகள் எவ்வாறு சுதந்திர தேசிய அரசுகளாக மாற்றப்பட்டன என்பதையும் குறிப்பாகச் சொல்கிறது. பிரிட்டன், பிரெஞ்சு மற்றும் இதர தேசங்கள் அதே நேரத்தில் பிரிட்டன், பிரெஞ்சு இதர அரசுகளாகவும் இருந்தன. அயர்லாந்து இந்த நிகழ்ச்சிப் போக்கில் பங்கு கொள்ளவில்லை. இருந்தாலும் பொதுவான நிலைமை என்பது மாறவில்லை.

கிழக்கு ஐரோப்பாவிலோ நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாக நிகழ்ந்துக் கொண்டிருந்தது. மேற்கிலுள்ள தேசங்கள், அரசுகளாக உருவானது. கிழக்கிலோ ‘பல்வேறு தேசிய’ அரசுகள் உருவாயின அதாவது பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட அரசுகள் உருவாயின.

உதாரணமாக ஆஸ்திரியா, ஹங்கேரி, ரஷ்யாவைச் சொல்லாம். ஆஸ்திரியாவில் ஜெர்மானியர்கள் அரசியல் ரீதியாக முன்னேற்றம் அடைந்தவர்கள் என்று நிரூபித்து, அவர்களே முன்னின்று, பல்வேறு தேசிய இனங்களை ஒன்றிணைத்து ஒரு அரசை உருவாக்கினர்கள். ஹங்கேரியில் மிகவும் வளர்ந்த அரசு ஸ்தாபனத்தை உடையவர்களாக மேக்யர்கள் இருந்தனர். இவர்கள் ஹங்கேரிய தேசிய இனங்களில் மிகவும் முக்கியமானவர்களாக இருந்தனர். இவர்கள்தான் ஒன்றுபட்ட ஹங்கேரியை உருவாக்கினர்.

ரஷ்யாவில் பல்வேறு தேசிய இனங்களை ஒன்றிக்கும் வேலையை மேற் கொண்டவர்கள் மாபெரும் ரஷ்யர்கள் ஆவர். இவர்கள் சரித்திர ரீதியாக மிகவும் வலிமைப் பெற்ற மற்றும் நன்கு ஸ்தாபனப்படுத்தப்பட்ட பிரபுத்துவ இராணுவ அதிகாரித்துவத்தால் தலைமைத் தாங்கப்பட்டனர்.

இப்படித்தான் கிழக்கிலே நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிலப்பிரபுத்துவம் இன்னமும் ஒழிக்கப்படாத இடங்களிலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி பலவீனமாக உள்ள இடங்களிலும் பொருளாதார அளவில் தங்களுக்குள் ஒருங்கிணந்து தேசங்களாக இன்னமும் உருவாகாது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட தேசீய இனங்கள் வாழ்கின்ற இடங்களிலும் அரசுகளின் உருவாக்க முறை இப்படித்தான் காணப்பட இயலும்.

ஆனால் கிழக்கத்திய அரசுகளிலும் முதலாளித்துவம் வளரத் துவங்கியது. வணிகம் மற்றும் தொடர்பு சாதன வசதிகள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன. பெரிய நகரங்கள் பெருகத்துவங்கின. தேசங்கள் பொருளாதார ரீதியாக முழுமையடையத் துவங்கியது. தேசிய இனங்களின் அமைதியான வாழ்க்கையில் முதலாளித்துவம் ஆரவாரத்தோடு புகுந்தது. இதன் காரணமாக அவர்கள் எழுச்சியூட்டப்பட்டு, கிளர்ச்சி செய்யக் கூடிய ஒரு பின்னணிக்கு தள்ளப்பட்டார்கள். செய்தித்துறை மற்றும் நாடகத்தின் வளர்ச்சியும், ஆஸ்திரியாவில் ரியிச்ஸ் ராட்டும், ரஷ்யாவில் டூமாவும் “தேசிய உணர்வுகளுக்கு’’ மேலும் வலுவூட்டியது. புதிதாக உருவான அறிவுடைய மக்களும் “தேசியக் கருத்துடன்’’ ஒன்றிணைந்து அந்தத்திசையிலேயே செயல்பட ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு இந்தப் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு தற்போது சுதந்திரம் வாழ்க்கைக்கு விழிப்படைந்த சுதந்திர தேசிய அரசுகளாக உருவாவது என்பது பழங்கதையாயிற்று. நீண்டகாலத்திற்கு முந்தியே அரசின் கட்டுப்பாட்டில் மேலாதிக்கம் செலுத்தும் தேசங்களின் ஆளும் பிரிவுகளின் நீண்டகாலத்துக்கு முன்பே அரசின் கட்டுப்பாட்டைத் தம் கீழ்க் கொண்டு வந்துவிட்டது! அத்தகைய ஆளும் பிரிவுகளின் கடுமையான எதிர்ப்பைப் புதிய விழிப்படைந்த தேசங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. இவர்கள் மிகவும் தாமதமாக வந்தவர்கள்.

இந்த முறையில்தான் ஆஸ்திரியாவில், செக்கோஸ் லோவாகியர்கள், போலந்துக்காரர்கள் மற்றும் இவர் போன்றோர் தங்களைத் தாங்களே தேசங்களாக அமைத்துக் கொண்டனர். இதே போன்று ஹங்கேரியில் கிராட்டியர்களும் மற்றவர்களும் அமைத்துக் கொண்டனர்; ரஷ்யாவில் லெட்டியர், லிதுயானியர்கள், உக்ரெய்னியர்கள், ஜியார் ஜியர்கள், ஆர்மீனியர்கள் போன்றோரும் தங்களைத் தேசங்களாக்கிக் கொண்டனர். மேற்கு ஐரோப்பாவில் எது விதி விலக்காக இருந்ததோ (அயர்லாந்து) அதே விஷயம் கிழக்கு ஐரோப்பாவில் விதியாக இருந்தது.

மேற்கு ஐரோப்பாவில், அயர்லாந்து தன்னுடைய விதிவிலக்கான நிலைமைக்குத் தேசிய இயக்கமாக உருவெடுத்து பதிலடி கொடுத்தது. கிழக்கில், புதிதாக எழுச்சியடைந்த நாடுகளும் இதே பாதையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இவ்வாறு உருவான சூழ்நிலையின் காரணமாக, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள புதிய தேசங்கள் போராட்டப் பாதையை மேற்கொள்ள வேண்டி வந்தது.

இவ்வாறு துவங்கிய போராட்டம் பரவத் தொடங்கியது. உண்மையில் பார்க்கப் போனால் இந்தப் போராட்டம் தேசங்களுக்கிடையே நிகழவில்லை.

ஆனால் ஆதிக்கஞ் செலுத்தக் கூடிய தேசிய இனங்களின் ஆளும் வர்க்கத்திற்கும் அடக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் இடையே நிகழ்ந்தது. பொதுவாக இப்போராட்டம் ஆதிக்கஞ் செலுத்தும் தேசிய இனங்களைச் (செக் மற்றும் ஜெர்மன்) சேர்ந்த பெரு முதலாளிகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த நகர்ப்புறக்குட்டி முதலாளிகளால் நடத்தப்பட்டது; அல்லது ஆதிக்கஞ் செலுத்தும் தேசிய இனங்களைச் (போலந்தில் உள்ள உக்ரெய்னியர்கள்) சேர்ந்த நிலப்பிரபுக்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த நாட்டுப்புற முதலாளிகளால் நடத்தப்பட்டது; அல்லது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த எல்லா தேசிய முதலாளிகளும் ஒன்று சேர்ந்து ஆதிக்கஞ் செலுத்தும் தேசிய இனங்களைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்திற்கெதிராகத் (ரஷ்யாவில் போலந்து லிதுயானியா மற்றும் உக்ரெய்ன்) தொடுக்கப்பட்டது.

குறிப்பாக முதலாளிகள் இதில் பிராதன பங்கு வகித்தனர்.

சந்தைப் பிரச்சினை என்பது, புதிதாகத் தோன்றிய முதலாளிகளுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. அவர்களுக்குத் தங்கள் பொருள்களை விற்க வேண்டும் என்றும் மற்ற தேசீய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுடன் நடக்கும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதே நோக்கமாயிருந்தது. எனவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு ‘சொந்த’ சந்தையும், ‘உள் நாட்டுச்’ சந்தையும் வைத்துக் கொள்ள விரும்பினர். சந்தை என்கின்ற இந்த ஆரம்ப பள்ளியில்தான் முதன் முதலில் முதலாளிகள் தேசிய வாதத்தைக் கற்றறிந்தனர்.

ஆனால், பிரச்சினை என்பது பொதுவாக, சந்தையோடு மட்டும் நிற்கவில்லை. ஆதிக்கஞ்செலுத்தும் தேசிய இனங்களைச் சேர்ந்த அரை நிலப்பிரபுத்துவ மற்றும், அரை முதலாளித்துவ, அதிகார வர்க்கத்தினர், இதைத் “தடையிட்டுத் தடுத்து நிறுத்த’’ தம் சொந்த முறைகளைக் கையாண்டு போராட்டத்தில் தலையிட்டனர்.

ஆதிக்கஞ்செலுத்தும் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் மிக அதிகமானவர்கள் அல்லது குறைவானவர்கள் ஆயினும், மிகவும் “வேகமாகவும்’’ “தீர்க்கமாகவும்’’ தங்களின் போட்டியாளர்களை எதிர்த்துச் செயல்பட்டனர். “தனித்து விடப்பட்ட’’ முதலாளிகளுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரட்டப்பட்டு தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; அவை, ஒடுக்கும் செயல்களாக உருமாறின.

இவ்வாறு நடந்த இந்தப் போராட்டம் பொருளாதாரத் தளத்திலிருந்து அரசியல் தளத்திற்குப் பரவியது அதாவது இடம் விட்டு இடம் பெயரும் உரிமை கட்டுப்பாடு, மொழி ஒடுக்குதல், வாக்குரிமைக் கட்டுப்பாடு நடை முறைப்பட்டன; பள்ளிகள் மூடப்பட்டன, மத உணர்வுகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இவை போன்று இன்மை பல நடவடிக்கைகளால் போட்டியாளர்களின் தலைக்கு மேலே குவிந்து கொண்டே போயிற்று.

இது போன்ற நடவடிக்கைகள், ஆதிக்கஞ்செலுத்தும் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகளின் நலனுக்காக மட்டும் நடத்தப்படவில்லை; இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக ஆளும் அதிகார வர்க்கத்தின் ஜாதியக் குறிக்கோள்களை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்பட்டன. ஆனால் இந்த காரியங்களினால் ஏற்பட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது இந்தக் குறிக்கோள்கள் நிறைவேறியதாகத் தெரியவில்லை. ரஷ்யா, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய எல்லா இடங்களிலும் முதலாளி வர்க்கமும் அதிகாரத்துவமும் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்தே செயல்பட்டன.

ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் ஒவ்வொரு முறையும் அடக்கி ஒடுக்கப்பட்டனர்; இதன் காரணமாக இயற்கையாகவே அவர்கள் ஒரு இயக்கமாகக் கிளர்ந்தனர். அவர்கள் தங்கள் “சொந்த மக்களுக்கு’’ வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தனர்; தங்கள் “தாய் நாட்டின்’’ நலனுக்காக கூக்குரல் இட்டனர்; தம் நலனே தேசத்தின் மொத்த நலன் என்றும் உரிமை கொண்டாடினர். தங்கள் “தாய் நாட்டின்’’ நலனுக்காகக் “கிராமப்புற மக்களிடம்’’ இருந்து ஒரு படையைத் திரட்டினர்.

“மக்களும்’’ இந்த வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காமல் இல்லை. இவர்களின் பதாகையின் கீழ் மக்களும் அணி திரண்டனர். மக்களும் அது காறும் அனுபவித்து வந்த அடக்குமுறையின் காரணமாக அவர்களும் தங்களுடைய மனக்குமுறலை வெளிக்காட்டினார்கள்.

இப்படித்தான் தேசிய இயக்கம் தொடங்கியது.

எந்த அளவுக்குப் பாட்டாளிகளும், விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானிக்கப்படும்.
வர்க்கப் பகைமைகளின் வளர்ச்சி வீதங்களைப் பொறுத்தும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வையும் அவர்கள் அமைப்பு ரீதியாகத் திரளும் ஆற்றல் வீதத்தைப் பொறுத்தும்; முதலாளித்துவ தேசியவாதக் கொடியின் கீழே பாட்டாளி வர்க்கம் அணி திரண்டது. வர்க்க உணர்வும் பெற்ற பாட்டாளிகள் தங்களுக் கென்று சொந்த பதாகைகளைத் தூக்கிப்பிடித்து இயக்கம் ஆரம்பித்தனர்; முதலாளித்துவப் பதாகையின் கீழ் அணி வகுக்க அவர்களுக்கு எந்தவித அவசியமும் ஏற்படவில்லை.

தேசிய இயக்கத்தில் விவசாயிகளின் பங்கு அவர் கள்மீது செலுத்தப்படும் அடக்குமுறையின் தன்மை களையே பிரதானமாகப் பொறுத்துள்ளது. அயர் லாந்தைப்போல் அடக்கு முறை என்பது அவர்களுடைய “நிலத்தை’’ப் பாதிக்கக் கூடிய விஷயமாக இருந்தால், உடனே அவர்கள் பெருந்திரளாகத்தேசிய இயக்கத்தின்கீழ் அணி திரண்டனர்.

இன்னொரு புறத்திலோ நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உதாரணமாக ஜியார்ஜியாவில் ரஷ்யர்களுக்கு எதிரான தேசிய வாதம் என்பது முனைப்புடன் இல்லை. இத்தகைய தேசியவாத கருத்துக்களை மக்களிடையே விதைப்பதற்கு ரஷ்யர்கள் மத்தியில் பெரும் நிலப்பிரபுக்களோ அல்லது பெரு முதலாளிகளோ இல்லை என்பதே காரணமாகும்.

ஆனால் ஜியார்ஜியாவில் ஆர்மீனியர்க்கெதிரான தேசிய வாதம் இருந்தது; காரணம் இன்னமும் சிறிய அளவில், ஒன்று திரட்டப்படாத நிலையில் உள்ள ஜியார்ஜிய முதலாளிகளிடமிருந்து, ஜியார்ஜியாவிலுள்ள ஆர்மீனிய முதலாளிகள் கணிசமான லாபமடைந்தனர். இதன் காரணமாகப் பின்னர், ஜியார்ஜிய முதலாளிகள் ஆர்மீனிய எதிர்ப்புத் தேசியவாதத்தில் இறங்கினர்.

இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டே தேசிய இயக்கம் வெகு ஜனத்தன்மை அடைந்து நிதானமாக வளரத் துவங்கியது. (உதாரணம் - அயர்லாந்து மற்றும் கலிஸியா) அல்லது சிறு மோதல்களாகவும் அற்ப சண்டைகளாகவும், பெயர்ப் பலகைக்கான “சண்டையாகவும்’’ உருவெடுத்தது. (உதாரணம் - பொஹிமியாவில் உள்ள சிறு நகரங்கள்).

இந்தத் தேசிய இயக்கத்தின் தன்மை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; இந்த இயக்கம் எழுப்பும் பல்வேறு கோரிக்கைகளைப் பொறுத்தே இந்த இயக்கத்தின் தன்மை முழுவதும் தீர்மானிக்கப்படும். அயர்லாந்தில் இவ்வியக்கம் ஒரு விவசாயத் தன்மையைக் கொண்டிருந்தது. பொஹி மியாவில் இது, “மொழியை’’ அடிப்படையாக கொண்டிருந்தது. இன்னும் ஒரு இடத்தில் குடியுரிமைச் சமத்துவத் திற்கும் மற்றும் மத சுதந்திரத்துக்காகவும் இருந்தது; மற்றொரு இடத்தில் அந்தத் தேசிய இனத்தின் “சொந்த’’ அதிகாரிகளின் நலன்களுக்காகவும் இருந்தது. இது போன்ற பல்வேறு கோரிக்கைகள், பெரும்பாலும் தேசியத்தின் பல்வேறு அம்சங்களை (மொழி, எல்லைப் பிரதேசம் போன்றவை) வெளிப்படுத்துபவையாகவே இருந்தன. ‘பேர்’ அவர்கள் சொல்லியதுபோல எல்லாம் கலந்த ஒரு “தேசியத் தன்மை’’ கோரிக்கையாக எங்கும் தென்படவில்லை என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும். மேலும் இது இயற்கையான ஒன்றாகும்; “தேசியத் தன்மை’’ என்பதை நாம் அதனளவிலேயே உணர முடியாத ஒன்றாகும். “ஒரு அரசியல்வாதி இதை வைத்து எதையும் செய்து விட முடியாது என்று ஜே.ஸ்டிரஸர் மிகச் சரியாகச் சொல்லியுள்ளார்.

தேசிய இயக்கத்தின் வடிவமும், தன்மையும் பொதுவாக இப்படித்தான் இருந்தன. முதலாளித்துவம் வளர்ந்து வந்த சூழ்நிலையில், தேசியப் போராட்டம் என்பது முதலாளித்துவ வர்க்கங்களிடையே நடந்த போராட்டமாகத்தான் இருந்தது என்பதை மேலே சொன்னவற்றிலிருந்து தெளிவாகத் தெரிந்துக் கொள்ளலாம். இந்த தேசீயப் போராட்டத்தில் பாட்டாளிகளையும் இணையச் செய்வதில் சில நேரம் முதலாளிகள் வெற்றிபெற்று, அத்தகைய நேரத்தில் இந்தப் போராட்டம் “தேசிய அளவிலான தன்மையை’’ வெளிப்புற அளவில் கொண்டதாக விளங்கும். ஆனால் இது வெளிப்புற அளவில் மட்டுமே சாராம்சத்தில் பார்க்கப்போனால் முதலாளித்துவ நலனுக்காகவும், முதலாளித்துவ லாபத்திற்காகவும் நடைபெறும் முதலாளித்துவப் போராட்டமாகவே இருக்கும்.

அதே நேரத்தில் இங்கனம் சொல்வதிலிருந்து, தேசீய அடக்குமுறைக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் எந்தப் போராட்டமும் தொடுக்கக் கூடாது என்பது அர்த்தமல்ல. இடம் விட்டு இடம் பெயரும் உரிமையைக் கட்டுப்படுத்தப்படுதல், வாக்குரிமைப் பறிக்கப்படுதல், எழுத்துரிமை அடக்கப்படுதல், பள்ளிகள் மூடல் மற்றும் பல்வேறு விதமான அடக்குமுறைகள் இவையாவும் முதலாளிகளைவிடத் தொழிலாளிகளையே அதிகம் பாதித்தன.

இந்த நிலையானது அடக்கி ஒடுக்கப்படும் தேசங்களின் பாட்டாளி வர்க்கத்தின் அறிவாளிகளின் முழு வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாகவே இருந்தது. உதாரணமாக, தாத்தர் மற்றும் யூத இனத் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மொழியைக் கூட்டங்களிலும் கருத்தரங்கிலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாவிட்டாலோ மற்றும் அவர்கள் பள்ளிகள் மூடப்பட்டாலோ, அவர்களிடையே அறிவாளிகளின் முழுவளர்ச்சி என்பது சாத்தியமில்லாததாகும்.

அதே நேரத்தில், தேசிய அடக்குமுறை என்பது பாட்டாளி வர்க்க நலனுக்கு இன்னொரு விதத்திலும் கேடு பயக்கப்படுவதாகும். அதாவது பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதியினரைச் சமூகப் பிரச்சினைகள், வர்க்கப் போராட்டப் பிரச்சினைகள் ஆகியவற்றிலிருந்து திசைதிருப்பி, தேசியப் பிரச்சினைகள், முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் “பொதுவான’’ பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வைக்கிறது.

பாட்டாளிகளின் வர்க்க நலன்களைத் திரித்துக் குறைத்து மதிப்பிடுவதற்கும், தொழிலாளர்களின் அறிவார்ந்த வளர்ச்சியைக் கட்டுப்டுத்துவதற்கும் உவந்த வகையில் “பொதுவான நலன்கள் ஒருமைப்பாடு’’ என்பது குறித்துப் பிரச்சாரம் செய்ய தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com