Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2007

வித்தகர்

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்

பொன்:

பொன்னின் சிறப்பு, “சுடச்சுடர்தல்!” எவ்வளவு சுட்டாலும் சுடச்சுடரும் பொன் ஆதலால், “சுடச்சுடரும் பொன்” என்ற திருவள்ளுவர், அதற்கு இணையாக இருப்பார் உளரோ என எண்ணினார். அவர் எண்ணியவாறு நின்றாரும் இருந்தனர்.

துன்பமும் துன்பத்தின்மேல் துன்பமும் எனத் தமக்கு வந்தாலும் அவற்றைத் தாங்கித் தாங்கி மேலும் மேலும் பொலிவோடு விளங்குபவர் உள்ளமையைக் கண்டார்.

அதனால்,

“சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”
என்றார்.

சங்கு:

பொன் சூடுபடப்படப் பொலிவுறுதல் போல வேறு பொருள் பொலிவுறுவது உண்டா என அவர் எண்ணினார். பால்நிறச் சங்கு தோற்றம் தந்தது. நத்தை என்பதும் நத்தம் என்பதும் அது. எவ்வளவு சுட்டாலும் நிறம் கருக்காமல் வெண்ணிறப் பொலிவே விளங்கித் தோன்றுதல் தெளிவாயிற்று. அந்த நத்தை அல்லது நத்தம் போல் வாட்டும் துயரிலும் வளமாகத் தோற்றம் தருவார் உளரா என எண்ணினார்.

வாட்டும் வறுமைத் துயரையும் வாட்டவல்ல வாடாப் பிறவியரைக் கண்டார்.

வறுமை:

வறுமை என்பது என்ன? இதை நுகர வேண்டும்; அதை நுகர வேணடும்; இல்லையே! என் செய்வது? என ஏங்கும் ஏக்கமே வறுமையாம்! அவ்வேக்கம் இல்லார்க்கு வறுமையுண்டா? அவரே செல்வர்! செல்வம் நிரம்ப இருந்தாலும் போதாது என எண்ணினால், அதுவறுமை! செல்வமாவது சிந்தையின் நிறைவேயாம்!

வாட்ட வந்த வறுமையை வென்று ஓட்ட மெடுக்கச் செய்ய வல்லவர், சுட்டெரிக்கச் சுட்டெரிக்கச் சுடர் விடும் நத்தம் போன்றவர் எனத் தீர்மானித்தார்! எவ்வளவு சுட்டாலும் நிறமாறாமல் சுடர்விடும் தன்மை எல்லார்க்கும் பொதுவானதன்று; மிகமிகச் சிலர்க்கே கூடுவது என்றும் முடிவு செய்தார்.

இறப்பு:

உறங்குவது போலச் சாவும் வருவதைக் காண்கிறார். உயிர்போகிய உடல் இடுகாட்டில் இடப்படுதலையும் சுடுகாட்டில் சுடப்படுதலையும் காண்கிறார். “நேற்று இருந்தவர் இன்று இல்லை” என்னும் நிலையாமையையும் தெளி கிறார். அதே பொழுதில் என்றும் அழியாத ஒன்றாகிய புகழுக்கு வீற்றிருக்கையாக உலகவரால் கொள்ளப்படுபவரையும் காண்கிறார்.

இறந்துபோன எல்லாருமோ, இப்படிப் பெருமைக்கு உரியவராக இருக்கின்றனர்? இல் லையே! மிக மிகச் சிலர்தாமே சாவாதவர்போல உலகவரால் போற்றப்படுகின்றனர்! இவர்க்கு ஒப்பானது ஒன்று உண்டோ? என எண்ணுகிறார்.

விந்து:

அவர் கண்ணின் முன்னும் கருத்தின் உள்ளும் வித்து (விதை) என்பது தோன்றுகின்றது. இது நெல்லின் வித்து! இது மாவின் வித்து! நெல், புல் இனம்! மா, மரஇனம்! ஆயினும் இரண்டிற்கும் வித்து உண்டு!

நெல் ஒரோ ஒன்று; அது முளைக்கும்போது எத்தகுபொலிவு! அதன் வித்து புதையுண்டு போயது! அதில் இருந்து கிளம்பிய முளை ஒன்றுதான்! பின் அது பக்கம் பக்கம் கிளைத்து, பண்ணை பிடித்து, ஐம்பது அறுபது பயிராய், பயிருக்கு நூறு இருநூறு நெல்லாய் விளைகிறதே! சிலர் இறந்தாலும், இறவாப் புகழோடு மட்டு மன்று, உலகெலாம் பாராட்டிப் போற்றும் பேற்றை அடைகின்றனரே அதுபோல் அல்லவோ உள்ளது!

மாவின் ஒருவித்து, ஒருமரமாய், பருவந் தோறும் ஆயிரம் ஆயிரம் கனிதரும் பெருமைய தாய் விளங்கவில்லையா?

ஓர் ஆலமரவித்து! அதன் சிறிய அமைப்புக்கள் கவடு, கிளை, கொப்பு எனப் பிரிந்து வீழ்துகளால் பக்கம் விரிந்து ஓர் ஊரே அடங்கிவிட இருக் கிறதே!

வித்தகர்:

இவ்விதத்தின் தன்மை அமைந்தவர் இறந்தும் இறவார்; இவர் இறப்பு இறப்பு இல்லை; என்றும் இறவாத இறப்பாளர்! ஆதலால் இவர் சாவு (சாக்காடு) “உளதாகும் சாக்காடு!” வித்துகள் செத்தாலும், சாவாமல் முளைத்து, கிளைத்து, தழைத்துப் பாரெலாம் பரவிவாழும் வாழ்வினைப் போன்ற வாழ்வினர் ஆகிய இவர், `உளதாகும் சாக்காட்டாளர்' என உறுதி செய்கிறார்.

இவ்வுறுதியால் கிளர்ந்த குறளே,

`நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது”
என்பது.

இதில் வரும் கேடு, வறுமை! அது வளமைக்கு எதிரிடை”கேடும் பெருக்கமும்” என்பார் வள்ளுவர். மற்றைக் கேடு, துயர்களைக் குறிக்குமாயினும், துய்பபுக் கேடு உயிர்க்கேடு ஆதலால், அதன் கடுமை புலப்படும்! “நேற்றுக்கொன்று சென்ற வறுமை, இன்றும் வருமோ” என வருமுன்னரே ஏங்க வைப்பது அது என்பதும் வள்ளுவமே! சாக்காடு = சாவு. வித்தகர் = வித்தின் தன்மை அமைந்தவர்.

வித்தகர் கேடு (வறுமை) நந்தம் போல் ஒளிமிகுவது.

வித்தகர் சாவு (உளதாகும் சாவு) வித்து முளைத்துப் பெருக்கமுறுவது போல்வது!

வித்தகர் அல்லார் இவற்றை அடைய மாட்டார்.

பலர் உரை:

“ஆக்கம் போலக் கேடும் உளதாளாற் போலச் சாதலும்
வல்லவற் கல்லது அரிது”
என்பது மணக்குடவர் உரை.

பரிதியார், நத்தம் என்பதற்குச் சங்கு எனப் பொருள் கொண்டு “சங்கு ஆயிரம் சூழ்ந்த வலம்புரி போலே கிளையானது தன்னைச் சூழ வாழ்வது, கீர்த்திமானுக்குக் கைவரும்” என்றார்.

“வலம்புரிச் சங்கானது தன்னிலை குலைந்து பிறர் கைப்படினும் தன் பெருமை குன்றாதது போல இல்லறம் இயற்றும் நல்லறிவாளர் தாம் வாழுமிடத்தும் கெடுமிடத்தும் தம்புகழ் விளங்கக் கெடுவதோர் கேடும், அதுவே அன்றி மற்றிறந்து படினும் விரிபுகழ் விளைக்கும் அல்லது, மற்று ளோர்க்கு என்றும் அரிது” என்றார் காளிங்கர்.

“புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும், புகழுடம் புளதாகும்
சாக்காடும் சதுரப்பாடு உடையார்க்கல்லது இல்லை”
என்று உரை வரைந்த பரிமேலழகர்,

“நந்து என்னும் தொழிற்பெயர் விகாரத்தால் நத்து என்றாய், பின் அம் என்னும் பகுதிப் பொருள் விகுதி பெற்று நத்தம் என்றாயிற்று. போல் என்பது ஈண்டு உரையசை. ஆகும் என்பதனை முன்னும் கூட்டி, அரிது என்பதனைத் தனித்தனி கூட்டியுரைக்க. ஆக்கமாகும் கேடாவது புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறத்தல். நிலையாதனவற்றால் நிலையின எய்துவார் வித்தகராதலின், `வித்தகர்க் கல்லால் அரிது' என்றார்” என்கிறார்.

சிந்தாமணி 547 ஆம் பாடலில் வரும்,
“சங்குடைந் தனைய வெண்டா
மரைமலர்த் தடங்கள் போலும்
நங்குடி”

என்பதற்கு நச்சினார்க்கினியர்,

“சங்கு சுட்டாலும் நிறம் கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம்”

“நத்தம் போற்கேடும் என்ப” என்கிறார்.

“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேசங்கு

சுட்டாலும் வெண்மை தரும்” என்பது மூதுரை.

ஆகவே விகாரம், உரையசை என்னும் சிக்கல் எதுவும் இல்லாமல் பாடல் இருந்தது இருந்தவாறே பொருள் கொள்ளப்படுதலும், அரிய உவமைப் பொலிவுடைய பாடலை அவ்வுவமையை வெளிப்படச் செய்வதும் நச்சினார்க் கினியர் உரையாலும் மூதுரையாலும் விளங்கும்.

வித்தகர் என்பதோ வித்தின் தன்மை அமைந்தவர் என்பதை வெளிப்பட விளங்கச் செய்யும் சொல்லாட்சியாக இருத்தல் தெளிவாம்.

“சங்கைச் சுடச்சுட வெண்மை பளிச்சிடல் போல் புகழ் வளர வரும் வறுமையும், புகழ்நிலை பெற உண்டாகும் இறப்பும் வித்தின் தன்மை அமைந்தார்க்கு அல்லாமல் பிறர் அடைதற்கு அரிதாம்” என்பது இதன் பொருளாம்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

ஒருவர், கால் பின்னலிட நடக்க முடியாமல் நடந்து வந்தார். அவர் கட்டான உடலர்; படைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று ஓர் ஆலையில் காவல் பணியாற்றுகிறார்.

“என்ன இந்த நடை” என்றேன். “ஆறுநாள் தொடர்ந்து வேலை!” என்றார். “மாற்றுக்கு வரவேண்டிய இருவருக்கும் வரமுடியா நிலை! என்ன செய்வது? நானே பார்த்தேன்” என்று முடித்தார்.

அவர் கணக்கில் ஒருநாள் என்பது `எட்டுமணி' நேரம்! ஆறுநாள் என்பது இரவும் பகலுமாய் இரண்டு நாள்!

ஆசிரியப் பணி என்றால், ஒருநாள் என்பது ஐந்துமணி; அலுவலர் என்றால் அவரவர் நிலைக்குத்தக!

கையெழுத்துப் போடுவதற்கு ஆகும் நேரமே, `நாள் கணக்'காகும் ஆசிரியர், அலுவலர், தொழிலர் உண்டு!

வாயிலிலே வைத்துள்ள வருகையேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அப்படியே போய்விடும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர் உள்ளமை நாடறி செய்தி! `வருகை ஏடு', `வருகையேடு' ஆவதும் உண்டு!

ஆதலால் நாள் என்பதற்கு 24 மணி என ஒரு வரம்பு இருந்தாலும், அவரவர் நாட்கணக்கு வேறு வேறாம்!

ஒரு நிலத்தில் நூறு வண்டி மண் கொட்டப்பட்டுள்ளது. அதனை நிலத்தில் பரப்ப ஐந்தாறு ஆள்களாவது வேண்டும். ஆனால், ஒருவர் விடிகாலையில் போகிறார். பொழுது உச்சிக்குப் போகுமுன் முடித்து விட்டுப் போய் விடுகிறார்! அவர் வேலை எத்தனை நாள் வேலை! அல்லது எத்தனை ஆள் வேலை!

சில பொழுதுகளில் நாமே வியப்படைகிறோம்; “இதற்குகளாகவா பணி முடிந்து விட்டது” என்று!

சில பொழுதுகளில் நாமே அலுத்துக் கொள்கிறோம்! “என்ன பொழுது நகரவே மாட்டேன் என்கிறது” என்கிறோம்.

“உம்மைப் பார்த்து ஆறுமாதம் ஆனது போல் இருக்கிறது” என்று ஐந்தாறு நாள்களுக்கு முன் னாகப் பார்த்தவரை நினைக்கிறோம்.

“என்ன இப்படி வந்த கால் மாறாமல் புறப்படுகிறீர்களே! அப்படி என்ன வந்தது” என்று வீட்டுக்கு வந்து பலநாள் தங்கிப் போவாரை நிறுத்தப் பார்க்கிறோம்.

“இவர் எப்பொழுதுதான் போகப் போகிறாரோ! கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டார்” என இரண்டு நாள்கள் இருந்தவரையும் நினைக்கிறோம்!

“இவ்வளவு நேரமா பேசினோம்” என நமக்கே ஐயம்!

“என்ன முடித்து விட்டார்” என்று திகைப்பு அளவுக்கு!

“இவர் ஓயமாட்டாரே” என்று அவைக்கு வெறுப்பு! கூட்டம் கூட்டியவர் நிறுத்துமாறு சொல்லிப் பார்க்கிறார்; சொல்லியும் கேட்க வில்லை! தம் தலையில் அடித்துக் கொள்கிறார்! பக்கத்தில் இருப்பவர், “உங்கள் தலையில் அடித்துக் கொண்டு என்ன பயன்? அவர் தலையிலே அடித்தாவது நிறுத்தும்” என்கிறார்!

காலம் நகராமலும் கிடக்கிறது! மூட ஆமையைப் போல்! ஓட்டம் ஓட்டமாகத் தாவி ஓடவும் செய்கிறது! முயலைப்போல் நிலம் பொழுது என்பவை முதற்பொருள்! இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. காலம் இடத்தையும் இடம் காலத்தையும் தீர்மானிக்கும் என்பது உலகியக்கப் பார்வையில் முடிவு! ஆனால், காலம் உளவியக்கப் பார்வையாய் இருப்பது, வாழ்வியல் பார்வையாகி விடுகின்றது!

ஒரு நாளை ஒன்பது நாளாய், ஓராண்டாய், ஒரு நூறு ஆண்டாய் - அதற்கும் மேலாய் ஆக்கவும் ஆக்கலாம்!

ஒரு வாழ்வை ஓராண்டாய், ஒருநாளாய், அரை நாளாய், ஒரு நொடியாய்ச் சுருக்கிக் கொள்ளவும் கொள்ளலாம்.

“தோலா நாவின் மேலோர் பேரவையில் ஒரோ ஒரு நாள் கூடியிருக்க வாய்த்தால் எத்தனை பிறப்பு வேண்டுமானாலும் பிறக்கலாம்” என்பது ஆசிரியமாலைச் செய்தி!

“என் உள்ளம் தோய்ந்த உயிராட்டியொடு அரை நாள் வாழ்ந்தாலும் போதும்” (அறைநாள் வாழ்க்கையும் நட்ருமன்) என்பது அகப்பாட்டு!

“ஒரு நொடி எங்களை வாழவிடுங்கள்; பிறகு எதுவும் செய்யுங்கள்” என்பார் இல்லாமல் இல்லையே!

நாம் இவ்வளவும் எண்ணுவதென்ன?

ஒருவர் தம் வாழ்வைத் தம் அறிவால், ஆற்ற லால், உழைப்பால், உயர்நோக்கால் ஆயிரம் ஆயிரம் ஆண்டாக ஆக்கிக் கொள்ளவும் கூடும். அதேபோல், நூற்றாண்டு வாழ்வையும், “ஒரு பொழுதும் வாழ்வது அறியார்” என்று வள்ளுவர் கூறுவதுபோல வாளா வாழ்ந்து விட்டுப் போகவும் போகலாம்!

“ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு” (1269) என,

ஒருநாள் செல்வது ஏழுநாள்கள் போகாது போவது போலவும் போகும்! அன்றி,

`நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து” (1278) என,

ஏழு நாள்கள் ஒரே நாளில் ஓடித்தாகவும் ஆகலாம்!

இன்ப துன்ப உளப்பாட்டில் காலச் சுருக்கத் தோற்றமும் காலப் பெருக்கத் தோற்றமும். `பொய்க் கோலம் காட்டி' மயக்குகின்றன! ஆனால், காலம், கால அளவீடு தவறா இயற்கை இயக்க ஊழின்படியே நிகழ்கின்றது.

இறுதிக் குறளுக்கு முன் குறள்: அவன் கூறுகிறான். `ஊடல் உவகை' அது:

ஊடுக மன்னோ ஒளியிழை; யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா!
நாம் செய்ய வேண்டுவது என்ன?

நமக்குத் தெள்ளத் தெளிந்தது இப்பிறப்பு ஒன்றே! இப்பிறப்பில் பத்துப் பிறப்புக் கடனைச் செய்துவிட நம்மால் இயலும்! நூற்றுக்கு ஒன்று தானும் குன்றாமல் குறையாமல், சிந்தாமல் சிதறாமல் கடனாற்றி, நூற்றாண்டு வாழ்வை, ஆயிரம் ஆயிரம் ஆண்டாக உயர்த்திவிடலாம் அல்லவா! ஏழ்பிறப்பு ஏழெழுபிறப்பு என்பவற்றை ஒரு பிறப்புப் பணியால் முடித்தவர்கள் உளரா? இலரா? எண்ணிப் பாருங்கள்!

எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் (666)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com