Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2007

உலகப் படைப்புக் கதை மூலங்கள் ஓர் ஆய்வு


உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி வரலாற்று முற்கால மக்கள் பல கதைகளைப் படைத்திருக்கிறார்கள். அவற்றுள் இருவிதமானவற்றை வேறுபடுத்திக் காணலாம்.

உலகைப் படைத்தது தாய் தான். அவளை உலக மாதாவாகக் கருதி படைக்கப்பட்ட கதைகள் ஒரு விதம். உலகைப் படைத்தது தந்தை தான். அவர் உலகப் பிதா என்று கருதிப் படைக்கப்பட்ட கதைகள் இன்னொருவிதம். சில கதைகளில் தாய் கடலையும், வானையும் படைத்தாள் என்றும், பூமியையும், ஜீவராசியையும் அவளுடைய வழித் தோன்றலான ஒரு ஆண்மகன் படைத்தா னென்றும் கூறப்படுகிறது.

இவையாவும் நாகரிக முற்கால மக்களின் வாய்வழிக் கதைகள். இவற்றை எழுத்துத் தோன்றிய பின்னர் தனிக் கதைகளாகவும், காப்பியங்களின் பகுதிகளாகவும், சமய நூல்களின் பகுதிகளாகவும் ஆக்கிவிட்டார்கள். இவற்றுள் பழமையானவை பாபிலோனிய சுமேரியக் கதைகள், கிரேக்கக் கதைகள், யூதர்களது கதைகள், ஆரியர்களது வேதப் புராணக் கதைகள் முதலியன.

இக்கதைகள் தோன்றிய சமுதாயச் சூழல்களை அகழ்வா ராய்சி, மானிடவியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து இக்கதைகளை உருவாக்கிய மக்களின் பண்பாட்டு நிலைகளிலிருந்து அக்கதைகள் எவ்வாறு உருவாயின என்பதை நாம் காண வேண்டும்.
உலகைப் படைத்தது யார்? இக்கேள்வியை வரலாற்று முற்காலத்திலும் நாகரிகத் துவக்ககாலத்திலும் வாழ்ந்த மக்கள் கேட்டனர். ஆதாரங்களோடு விடையளிக்க முடியாத வினாக்களுக்குக் கதைகளைப் புனைந்து அவற்றையே விடையாக அளித்தனர்.

விஞ்ஞான ஆய்வுகளும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டிராத காலத்தில் பண்டைய மக்கள் இயற் கையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், இத்தகைய விடை களையே கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதைப் பண்பாட்டு மானிடவியல் விளக்குகிறது.

படைப்புக் கதைகளின் தோற்றம்

இப்புனை கதைகளின் தோற்றம் பற்றி ஆண்ட்ரூ லாங் கூறுவதாவது: ‘பண்டைய மக்களின் சடங்காச் சாரங்களினின்றும் இக்கதைகள் எழுகின்றன. மனிதனது இயல்பு பற்றியும், பிரபஞ்சத்தின் மூலாதாரம் பற்றியும் தத்துவ பூர்வமான சிந்தனைகளாக இப்புனை கதைகளைக் கருத முடியாது.

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்ற வினாவிற்கு இவை கற்பனையான விடை என்று கொள்ளுவதற்கில்லை.’’ ஈ.ஓ. ஜேம்ஸ் கூறு கிறார்: ``படைப்புக் கதைகளும் சாவின் துவக்கமும் மனித இனத்தின் அழிவும் பல புனை கதைகளின் கருப் பொருள்களாக இருப்பினும் அவை தத்துவ விளக்கங்களாக இல்லை என்பது ஆண்ட்ரூ லாங் கூறுவது போல உண்மையே.’’
பண்டைய மக்கள் சடங் காச்சாரங்களை வாழ்க்கையில் நலன்களைப் பெற மிக அவசிமெனக் கருதினர். மழை பெய்யவும், பயிர் வளரவும், காய், கிழங்குகள் கிடைக்கவும், நோய் நொடிகள் வராமல் இருக்கவும், வேட்டையில் விலங்குகள் கிடைக்கவும், புயல் போன்ற இயற்கை விபத்துகள் நேராமல் இருக்கவும் பலவகைச் சடங்குகளை நிகழ்த்தினர்.

இலையுதிர் காலம் முடிந்து வசந்த காலம் துவங்குகிற போது பருவ மாறுதலை வரவேற்றும் வசந்த காலத்தில் பயிர்கள் செழித்து வளரவும் பண்டைய மக்கள் சடங்குகளை நடத்தினர் காலங்களை மனித உருவங்களாகக் கற்பனை செய்து ஒரே தெய்வம் இறந்து மறுபடி உயிர் பெறுவதாக நம்பி, இவற்றை நடத்தினர்.

எகிப்திய பிரமிட் கோபுரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலிருந்து `ஆஸிரிஸ்’ என்ற பருவங்களின் தெய்வம் இறந்து மறுபடி உயிர்த்தெழும் கதையையும், சடங்குகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. தாலமி அரசனின் கல்வெட்டுக்கள், இச் சடங்கு விழா நடைபெற்ற விதத்தைக் கூறுகிறது.

இவ்விரண்டு சான்றுகளிலும் கதாநாயகர்களின் பெயர்கள் வேறுபட்ட போதிலும் அவர்களின் இயல்பும், கதையின் நிகழ்ச்சிகளும் ஒன்றாகவே இருக்கின்றன. இத் தெய்வங்களின் உருவத்தை மண்ணாலும், பார்லி வைக்கோலாலும், மணலாலும் செய்து தங்கநிற வர்ணம் பூசுவார்கள். எகிப்திய மாதமான கோயாக் மாதம் 12-ம் தேதி விழாத் தொடங்கும்.

24-ம் தேதி வரை அவ்வுருவத்தைப் புனித முழுக் காட்டுவார்கள். பின்பு அவ்வுருவத்தை ஒரு படகில் வைத்து பாபைரஸ் என்ற நாணலால் செய்யப்பட்ட 24 படகுகள் புடை சூழ நீரினுள் செலுத்துவார்கள்.

படகுகளில் மொத்தம் 364 விளக்குகளை (இது ஓர் ஆண்டைக் குறிக்கும்.) ஏற்று வார்கள். 24-ம் தேதி ஆஸிரிஸின் உருவத்தை, பிணத் தைப் பதனிட்டு மம்மி ஆக்கி அதனை அலங்கரிப்பார்கள். அதன் பின்னர் ஒரு சவப் பெட்டியில் அதனைக் கிடத்துவார்கள்.

உருவத்தின் கீழ் விதைகளைப் பரப்பி வைப்பார்கள். 30-ம் தேதி சவப் பெட்டியை ஓர் அறையில் வைத்துப் பூட்டுவார்கள் இப்பொழுது ஆஸிரிஸின் இறந்து போன நிகழ்ச்சி சடங்காக நடிக்கப்பட்டு விட்டது.

இனி உயிர்த்தெழும் நிகழ்ச்சியையும் ஆஸிரிஸின் கோவிலிலுள்ள சிற்பங்கள் காட்டுகின்றன. வட எகிப்தில் காணப்படும் பாழடைந்த ஆஸிரில் கோவில் சுவர்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலிருந்து உயிர்த்தெழும் கதையை அறிய முடிகிறது. ‘மம்மியாகக் கிடக்கும் ஆஸிரிஸைச் சூழ்ந்து பல தெய்வங்கள் பசுத் தெய்வமான ஹாதோரும், அவளுடைய சகோதரன் ஹெகட்டும் ஆஸிரிஸின் உடலருகில் நிற்கிறார்கள். உயிர்த் தெய்வமான தவளைத் தெய்வம் உடலருகில் உட்கார்ந்திருக்கிறது.

ஒரு கழுகு ஆஸிரிஸின் தலைப்பக்கமும், மற்றொன்று காலினருகில் பறப்பது போலச் சித் திரங்கள், இருக்கின்றன. அடுத்த சித்திரங்களில் ஆஸிரிஸ் தலையில் மகுடத்தோடு தலையைத் தூக்குவது போலவும், பின் எழுந்து நிற்பது போலவும் காணப் படுகிறான்.

கடைசிச் சித்திரத்தில் ஆஸிரிஸ் செங்கோலைக் கையிலேந்தி நிற்கிறான். ஒரு தாடி தரித்த ஆண்தெய்வம் கையில் கிரக்ஸ் அனஸ்தா என்ற உயிரின் அடையாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறது.’’

இச்சிற்பங்கள் பருவ மாற்றத்தின் போது பண்டைய எகிப்திய மக்கள் நிகழ்த்திய சடங்குகளுக்கு அடிப்படையான நம்பிக்கைகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. இச் சடங்குகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் தான் ஆஸிரிஸ், ஐஸிஸ் புனைகதை உருவாகியது.

எனவே மாந்திரீகச் சடங்குகளைக் கையாண்டு, அதனைத் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கேற்ப மாற்றுகிறபோது தோன்றுகிற நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அடுத்த பரம்பரைக்கு அவற்றை வழிச் செலுத்தவும் இப் புனைகதைகள் தோன்றின. இக்கதைகள் குறிப்பிட்ட சமுதாய நிலைமை களில் குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் எழுந்தன. இவை சமூக மாறுபாட்டுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஏற்றார் போல் மாறின. வெவ்வேறு சமூக அமைப்புகளும் பண்பாட்டு வளர்ச்சியும் உடையவர்கள் கலப்புறும் பொழுது இணைந்தும், அவை முரண்பட்டும் வேறுபட்டும், வளர்ச்சியும், சிதையும் அடைந்தன.

எகிப்தில் நடைபெற்ற இச்சடங்கு மிகப் பழமையானது. எகிப்தின் பாராவோக்கள், புரோகிதர்களா கவும், ஆடுபவர்களாகவும் செயல் புரிந்தனர். மன்னர் களானபின், அவர்கள் ஆஸிரிஸ் சடங்குகளின் கதாநாயகர்களாகின்றனர் பாராவோ சாவதாகவும், உயிர்த்தெழுவதாகவும் இச் சடங்கு நடைபெற்றது.

அதன் பின்னர் மன்னனது தெய்வீகத் தன்மையை நிலைநாட்டுவதற்காகவே கதைகள் புனையப்பட்டு, இச்சடங்கிற்குப் பொருளை அளித்தனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவினை விளக்க எழுந்த கதை சமூகப் பொருளாதார அமைப்பை நிலை நிறுத்தப் பயன்படுத்தப்பட்டது.

ஆடுமாடுகள் பல்கிப் பெருகவும், பயிர்கள் செழித்து வளரவும், மனித இனம் பெருகவும் இச் சடங்கு அவசியமென எண்ணிய புராதன எகிப்தியர்கள், தங்கள் பண்பாட்டுக் கதாநாயகனைச் சிந்தனையில் தோற்றுவித்து, ஆண்டு தோறும் அவனது சாவையும் உயிர்த்தெழுதலையும் கொண்டாட அவனைச் சுற்றி ஒரு புனை கதையையும் படைத்தார்கள்; இது தனி மனிதச் சடங்கல்ல; சமு தாயச் சடங்கு. இது சமூக நலனை நோக்கமாகக் கொண்டது.

தனிமனித மோட்சத்தை நோக்கமாகக் கொண்ட தல்ல. அரசனுடைய தெய்வத்தன்மை, விவசாயப் பருவங்களின் மாறுதலைக் குறிக்கும். ``ஹோரஸ் ஆஸிரிஸ் குறியீடு மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கும் புனை கதைகளும் எழுந்தன. இதனைப் போலவே புராதன மக்கள் பாபிலோனியாவில் ``தம்மூஸ் - இஷ்டார்’’ கதையையும் புனைந்தனர்.’’

நாகரிகத் துவக்க காலத்துப் புனைகதையொன்றின் தன்மையை மேலே கண்டோம். இக் கதை நாகரிக முற்காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். சமுதாய மாற்றங்களால் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களால் கதை மாறியிருக்க வேண்டும்.

நாகரிக காலத்துக்கு முன்னர் எகிப்தை அரசிகள் ஆண்டனர். அவர்கள் மணம் செய்து கொள்வதில்லை. விரும்பிய ஆண் மகனோடு ஓராண்டு வாழ்ந்து பின்னர் அவனைப் பலியிட்டுவிடுவார்கள். இது பெண்ணாதிக்க விவசாய சமுதாயத்தில் நடை பெற்றது.
கலப்பை விவசாயம் தோன்றிய பின்னர் ஆணாதிக்க சமுதாயம் படிப்படியாக எழுந்தது. அப்போது அரசி காதலனைக் கொல்லுவது நின்றது. ஆனால் ஒரு நாள் அவள் அரச பதவியை இழந்து, வேறொருவனுக்கு அதனை அளித்து அவனைப் பலியிடும் வழக்கம் தோன்றியது. (Substituted sacrifice) பின்னர், அதுவும் நின்று ஆஸிரிஸ் இறந்து உயிர்ப்பித் தலை பொம்மை இறந்து உயிர் பெறும் சடங்காக மக்கள் கொண்டாடி இருத்தல் வேண்டும். இம்மாறுதல்கள் நடந்த கால எல்லையில் தான் ஹோரஸ் ஆஸிரிஸ் கதை புனையப்பட்டிருத்தல் வேண்டும்.

இப்புனை கதைபோலவே, பல இயற்கை நிகழ்ச்சி களைப் பற்றிய சடங்குகளும் அவற்றிலிருந்து தோன்றிய புனை கதைகளும் பண்டைய மக்களிடையே வழங்கி வந்தன. சூரியனைப் பற்றிய சடங்குகளும் கதைகளும், சந்திரனைப் பற்றிய சடங்குகளும் கதைகளும் பண்டைய நாத்திக நாடுகளில் வழங்கி வந்தன.

மூலக்கதை சமுதாய மாற்றத்திற்கேற்ப அவ்வச் சமுதாய மாற்ற கட்டத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது. எனவே புனைகதைகள் தற் காலப்படைப்புக் கதைகளைப் போன்றவையல்ல. அது ஒரு கால வாழ்க்கை யேயாகும். அதாவது வாழ்க்கையை இயக்கும் நம்பிக்கைகளை அவை அடிப் படையாகக் கொண்டவை.

இதனால்தான் போரா சிரியர் மாலினாவ்ஸ்கி பின் வருமாறு கூறுகிறார்:
“காட்டுமிராண்டி சமுதாயத்தில் வழங்கிய புனை கதை அதாவது மூலநிலைப் புனைகதை சொல்லப்படுகின்ற ஒருகதையன்று. அது வாழ்க்கையின் உண்மையாகும். இன்று நாம் படிக்கும் ஒரு நாவலின் தன்மையைப் பெற்றதன்று நாகரிக முற்காலப் புனை கதை. அக்கதையின் நிகழ்ச்சிகள் உண்மையில் புராதன காலத்தில் நடைபெற்றதாக அக்கதையைச் சொல்லு பவர்கள் நம்புகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அக்கதையின் சம்பவங்கள், நிகழ்ந்த காலத்திலிருந்து தம் காலம் வரை உலகையும், மனித விதியையும் இயக்கி வருவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
ஒரு கிருஸ்தவன் பைபிள் கதையான சிருஷ்டி, மனிதன் தாழ்வு, சிலுவையில் மரித்த கிருஸ்துவினால் மனிதன் மேன்மை பெறுவது ஆகிய சம்பவங்கள் தான் கூறும் கதைகள் உண்மையெனப் பண்டை மனிதன் நம்பினான்.’’

பண்டைய பண்பாட்டு வளர்ச்சி நிலையில் இருக்கும் தற்கால இனக்குழு மக்களும் அவ்வாறே நம்புவதை மானிட வியலாளர் கண்டுள்ளார்கள்.

புனைகதைகள் இத்தன் மையன என்பதை அறிந்து கொண்டபின், நாம் உலகப் படைப்புக்கதைகளில் மிகப் பண்டைக்காலக் கதைகளை ஆராய்ந்து அவற்றின் தோற்றத்திற்கு அடிப்படையான சமுதாய அடித்தளத்தைக் கண்டுபிடித்து இரண்டையும் தொடர்புபடுத்திக் காண முயலுவோம்.

படைப்புக் கதைகளில் மிகப் பழமையானவை பாபிலோனிய-சுமேரியக் கதை, கிரேக்கக் கதைகள் ஆகிய வையாகும். அதற்கடுத்த பண்பாட்டுக் கட்டத்தில் யூதர்களது யெஹோவா-படைப்புக்கதையைக் கூறலாம். இதைப் பின்பற்றியே பைபிள் உலகப்படைப்பின் வரலாற்றைக் கூறுகிறது.

ஏறக்குறைய அதே பண்பாட்டு வளர்ச்சி நிலையில் ரிக்வேதத்தில் காணப்படும் புருஷ சூக்தக் கதைகளைக் கூறலாம். பின்னர் விஷ்ணு புராணத்தில் கூறப்படும் நாராயணன் - உலகப் படைப்புக் கதையைக் குறிப்பிடலாம்.

கால நிர்ணயம் செய்ய முடியாத தந்திரீக நூல்களில் காணப்படும் படைப்புக் கருத்துக்கள் மிகப்பழமையானவை என்பதில் சந்தேகமில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com