Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2007

காவல்துறையும் குளிக்கலாம்

ஆனாரூனா

“சூத்திரன் ஆட்சி; கலைத்தேன் என்று சொல்லிவிட்டுப் போங்களேன்!’’

யோக்கியர் வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்து மனுநீதி வழங்கியபோது, கலைஞர் சொன்ன பதில் இது. மனுதர்மம் காப்பதில் ‘அவர்கள்’ எப்போதும், எல்லோரும் ஒரே மாதிரித்தான் சிந்திக்கிறார்கள்.

முற்போக்கு, பிற்போக்கு, புறம்போக்கு - எல்லோர்க்கும் ஒரே போக்குத்தான். கொலை வழக்கில் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டால் பிற்போக்கும் அழுகிறது; முற்போக்கும் அழுகிறது. அழுகை ஆவேசமாகும்போது கைது செய்ய உத்தரவிட்டவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒருவன் சோனியா காந்தி சதி என்கிறான். இன்னொருவன் போப் ஆண்டவர் பின்னணி என்கிறான்.

சங்கராச்சாரி தண்டத்தைப் போட்டு விட்டு ஓடிப் போகலாம்; அனுராதா ரமணன் சொன்னதுபோல் மதனோற்சவம் நடத்தலாம்; சங்கரராமன்போல் சிலரது கொலை வழக்கிலும் சம்பந்தப்படலாம்; அதற்காக அவரைக் கைது செய்யலாமா? சிறையில் அடைக்கலாமா?

‘ஜகத் குரு’வைக் கைது செய்து விட்டார் என்பதற்காக ஜெயலலிதாவைக் குற்றம் சொல்லாமா? ராஜகோபாலச்சாரியாருக்குப் பிறகு வாராது வந்த மாமணியாய் தமிழகத்துக்கு ஒரு அக்கிரகாரத்துப் பெண்மணி கிடைத்திருக்கும்போது பிராமணோத்தமர்களே அவர் மீது புகார் கூறலாமா?

மனுவாதிகள் ஒரே மாதிரித்தான் சிந்திக்கிறார்கள். பார்ப்புக்கொரு நீதிதான். சூத்திரர்க்கொரு நீதிதான். காமராசர் புகழ் பெறலாமா? இந்தியத் தலைவராக உயரலாமா? காவிக்கூட்டம் டெல்லியில் கலகம் செய்தது.

அறிஞர் அண்ணா இறந்த போதுகூட அக்கிரகாரத்து அறிவுஜீவிகள் கேலியும் கிண்டலுமாய் எழுதினார்கள். கலைஞர்? எப்போதுமே அவர்களுக்குப் ‘பாவாத்மாதான்’! சூத்திரனை ஆளவிடலாமா? லால்கிஷன் அத்வானி, ஆடிட்டர் குருமூர்த்தி, சோ, சங்கரன் (ஞாநி) விகடன், குமுதம், தினமணி, இந்து என்று சகலமும் ஓரணியில் நிற்கின்றன.

சென்னை நகரில் குப்பை அள்ளும் பணியில் கொஞ்சம் தேக்கம் ஏற்பட்டது. இது குறித்து ‘ஆவி’ (ஆனந்த விகடன்) எழுதுகிறது. ‘‘ஆளும் தி.மு.க.வைச் சேர்ந்த மாநகர மேயர் சுப்பிரமணியம் சொல்கிற காரணத்தைக் கேட்டால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட இந்த ஏரியாக்களில் குப்பை அள்ளிக் கொண்டிருந்த சிங்கப்பூர் நிறு வனத்தின் ஒப்பந்தம் முடிந்து விட்டதாம். தான் வைத்த குப்பைத் தொட்டிகளையெல்லாம் அந்நிறுவனம் கையோடு கொண்டு போய் விட்டதாம். அடுத்து ஒப்பந்தம் போட்டிக்கும் கொலம்பியா நிறுவனம் தன் தொட்டிகளை வைத்து வேலையைத் தொடங்க கொஞ்சம் அவகாசம் தேவையாம். ஐயா சாமிகளே குப்பை அள்ளுவதில் அப்படியென்ன மாறாத தொழில் நுட்பம்? இதை எதற்கு வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கவேண்டும். இந்தக் கேள்விக்குத் தான் இதுவரை பதில் இல்லை...’’

இந்தக் கேள்விக்கு எப்போதோ ராஜ கோபாலாச்சாரியார் பதில் சொல்லி விட்டார். அதுதான் குலக் கல்வித் திட்டம். நம் ஊர் ‘தோட்டிகள்’ இல்லையா? மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் தரும விதியை மாற்றலாமா? இதிலே தொழில் நுட்பம் எதற்கு? வெளிநாட்டு ஒப்பந்தம் எதற்கு? நகரம் நாற்றமடிப்பதற்கு மனுதர்மம் மீறப்பட்டதுதான் காரணம் என்று நையாண்டி செய்கிறது ‘ஆவி’.

அடுத்த வாரமும் ‘ஆவி’க்கு அதே அரிப்பு! ‘‘தங்கள் கார் கதவைத் திறந்துவிடுவது. தாங்கள் போகிற பாதையில் விறைப்பாக நின்று சல்யூட் அடிப்பது ஆகிய ‘சேவை’களில் மட்டுமே போலீஸாரிடம் அரசியல்வாதிகள் திருப்திப் பட்டுவிட்டால் எப்படி? அதனால்தான் புதிய வேலைகளை அவர்களுக்கு அளிக்க ஆரம்பித் திருக்கிறார்கள் போலும்! ஹைதாரபாத்தைத் தொடர்ந்து சென்னைக்கும் வெடிகுண்டு ஆபத்து என்று மத்திய அரசு அலறிக்கொண்டு இருக்க... இந்த பூச்சாண்டிக் கெல்லாம் நம்மவர்கள் துளியும் பயப்பட்டதாகத் தெரியவில்லை! வெடிகுண்டுகளைத் தேடி நேரத்தை ‘வீணாக்குவதை’விட, குப்பை அள்ளுவதை மேற்பார்வையிடுவதும், விளம்பரப் பலகைகளை அகற்றுவதும் தான் சென்னை போலீஸாரின் தலையாய கடமை என்று அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள்.

அடுப்பு ஊத புல்லாங்குழலா... பல் குத்தப் போர்வாளா என்று யாராவது கேலி செய்தாலும் சோர்ந்து போய்விடக் கூடாது. இதற்குப் பயந்தால், பின் எப்போதுதான் ‘மாநகரக் காவல் படை’யை மாநகராட்சியின் ஏவல் படையாக முழுசாக மாற்று வதாம்!தீவிரவாதிகள் நுழைய முடியாத இடத்தில்கூடப் புகுந்து வெறியாட்டம் போடும் கொசு அரக்கர்களை மாநகராட்சியில் பாவம், எப்படி வேட்டையாட முடியும்! வீடு வீடாக வந்து போலீஸார் வலை வீசினால், சிங்கிள் கொசுவாவது தப்பிக்குமா என்ன?

ராத்திரி வேளையில் எந்தச் சட்டம்-ஒழுங்குக்கும் கட்டுப்படாமல் திரியும் தெரு நாய்களின் கொட்டத்தை அடக்குவது அத்தனை சாதாரண வேலையா...? ஆயுதப் பயிற்சி பெற்ற போலீஸார் வேறு எதற்குதான் இருக்கிறார்கள்! தண்ணியடித்துவிட்டு அலம்பல் செய்பவர்களை விரட்டுவதெல்லாம் போலீஸின் வேலையா என்ன? தண்ணீர் லாரிகளை ஓட்டிக்கொண்டு போய் தெருத் தெருவாக சப்ளை செய்வதல்லவா அவர்களின் வேலையாக இருக்க வேண்டும்?

காக்கிச் சட்டைகளே முகாம் அமைத்து காலரா ஊசி, போலியோ சொட்டு மருந்து என்று மீசையை முறுக்கியபடி மருத்துவ சேவையும் செய்ய ஆரம்பித்தால், யாராவது ‘டேக்கா’ கொடுத்துத் தப்பிக்க முடியுமா என்ன? துப்பாக்கி சுடும் போட்டி வைத்துத் தங்கப் பதக்கம் தருவதைவிட துப்புரவுப் போட்டி வைத்து ‘தங்கத் துடைப்பம்’ விருது தந்தால்... தமிழ்நாடு போலீஸின் பெருமைக்கு முன் னால் ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீஸெல்லாம் ஜுஜுபி ஆகி விடுமே...! சென்னை மாநகரைத் தூய்மைப் பஞ்சம் பணியில் காவல் துறையில் ஈடுபடுத்தலாமா? ‘சாமி வந்து’ ஆடுகிறது ஆவி. காவல்துறை என்பதும், ராணுவம் என்பதும் தேச பக்தி மிகுந்த, தேசப் பாதுகாப்புக்காக உயிரையும் தியாகம் செய்யும் உன்னத நோக்கம் கொண்ட அணிகள். இவற்றைக் குப்பை அள்ளுவதற்குப் பயன்படுத்தலாமா? உண்மையில் போலீஸ், ராணுவம் குறித்து தீவிர சிந்தனையாளர்களின் கருத்து வேறு விதமானது.

‘‘போலீஸ் என்றால் உள்நாட்டுக் கொள்ளை; ராணுவம் என்றால் வெளிநாட்டுக் கொள்ளை!’ என்று பெர்னார்ட்ஷா குறிப்பிடுவது சிரிப்பதற்காக அல்ல. ரஸ்ஸல், மார்க்ஸ் போன்றவர்களும் ‘சீருடை அணிந்த ரௌடிகளாகவே’ காவல் துறையினரையும் பட்டாளத்துச் சிப்பாய்களையும் சித்திரிக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவத் திமிர் குறித்து அமெரிக்க மக்களே நாளும் நாளும் எரிச்சலுற்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய், போலீஸ் - ராணுவத்தின் புனிதமான சேவைகள் குறித்து ‘ஆவி’ போதனை செய்யுமானால் பின் பொறியால் சிரிப்பார்கள். ஒருவர் போதிய சொத்தும், வசதியான வாழ்க்கையும் பெற்றிருப்பாரானால், போலீஸ் இல்லாத, ராணுவம் இல்லாத நாளையும் நாட்டையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதுதான்!

‘அனைவரும் சமம்’ என்று அரசியல் சாசனம் ஆசி வழங்குகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று இசை சுமந்து கவிதைகள் மணக்கின்றன. ஆனால் மாளிகையில் சிலர்; வீடற்றோராய் வீதியிலே சிலர் வீசப்படுவது ஏன்? தனிச் சொத்துரிமையின் குரூத்தால் மானுடமே வதைபடுகிறது. பசித்தவன் திருடுவான். பணம் இல்லாதவன் கொள்ளையடிப்பான். பாவம் செல் வந்தர்களும் சுகவாசிகளும் என்ன செய்வார்கள்! இல்லாதோர் விடும் பெருமூச்சு எரிமலையாக மாறுமோ? சுகவாசிகளால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

ஆகவே சொத்துடையவர்கள் தவிர்க்க முடியாமல் தேசபக்தர்களாக இருந்தே தீரவேண்டும். தேச பக்தி என்பது என்ன? தன் சொத்து மீது ஒருவன் கொள்ளும் தீவிரப் பற்றுதான். எந்த அளவுக்கு ஒருவன் சொத்துவைத்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் தேச பக்தனாக இருக்கிறான். அவன் தன் தேசத்தை சொத்தை உயிரினும் மேலாக மதிக்கிறான். ஆகவே கடவுளும் காவலர்களும் இல்லாமல் அவன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

மதகுருமார்கள் நல்லொழுக்கத்தை உபதேசிக்க வேண்டும். போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனாய் இந்த ஜென்மத்தில் ஒருவன் வறுமையும் துன்பமுமாய் வாழநேர்கிறது. இந்த ஜென்மத்தில் பாவம் செய்யாமல் இருந்தால் - அதாவது தானும் சுகமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படாமல், ஆசைகளை, ஒழித்து துன்பங்களைச் சகித்து ‘நல்ல விதமாய்’ வாழ்ந்தால் அடுத்த ஜென்மத்தில் ஆனந்தமாய் இருக்கலாம். துன்பப்படுவோர் பாக்கியவான்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது என்று ஏழைகளுக்கு உபதேசம் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

அதே நேரத்தில் காவல் துறையும் ராணுவமும் ‘தேசத்தை’ப் பாதுகாக்கும் பணியில், அதாவது தனிச் சொத்துரிமைக்குத் தீங்கு நேராது பாதுகாக்கும் பணியில் விழிப்போடு இருக்க வேண்டும். மறுக்கப்பட்டோரையும் ஒதுக்கப்பட்டோரையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ‘தேவையற்ற’ மனிதர்களின் ‘நியாயமற்ற’ காரியங்களை ஈவிரக்கமில்லாமல் ஒடுக்க வேண்டும். கும்பி எரியுது; குடல் கருகுது என்று கூச்சலிடுவோரைக் கண்டதும் சுட்டுப் பொசுக்க வேண்டும். எத்தனை உயிர்களைக் கொல்கிறானோ அந்த அளவுக்கு போலீஸ்காரனும், பட்டாளத்து வீரனும் கௌரவிக்கப்படுவான்.

தனிச் சொத்துரிமையை - சுகவாசிகளின் ‘பொது நலனை’ப் பாதுகாக்கும் பணியில் அரசாங்க ரௌடிகளாகவே பயிற்றுவிக்கப்பட்ட காவல் துறையை - ராணுவத்தை - குப்பை அள்ளுவதற்குப் பயன்படுத்தலாமா? ‘ஆவி’க்கு ஆத்திரம் அடங்கவில்லை. சூத்திரன் கருணாநிதிக்கு ஏன்தான் இந்தப் புத்தி? மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷா முறையை ஒழித்தார். மலம் அள்ளும் மனிதர்களை அந்த இழிவிலிருந்து விடுவித்து, நகரசுத்திக்கு மாற்றுவழி காண்கிறார்.

பொதுவில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் தாழ்ந்தோரே என்கிற மனுதர்ம விதியை மாற்றத் துடிக்கிறார். ஆம்; ராமகோபாலன் சொல்வதுபோல் ‘‘கருணாநிதியைத் திருத்தவே முடியாது!’’ தான் என்று ‘ஆவி’ அங்கலாய்க்கிறது. ‘காவல்துறை குப்பை அள்ளலாமா?’ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே பதில்: ‘‘சென்னை நகரத்தில் குப்பை அள்ளியதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை ‘குளித்திருக்கிறது!’’


சங்கர மடம் புனித இடமா?

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் நடந்ததா என்பது குறித்து, தேசிய மனித உரிமை கமிஷனுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 6 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சிறையில் போலீசார் முன்னிலையில் சங்கராச்சாரியார் வாக்கு மூலம் அளித்தது பற்றியும், விஜயேந்திரர் கைது செய்யப் படும்போது மனித உரிமை மீறப்பட்டது குறித்தும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து, அதை ஒரு வழக்காக தேசிய மனித உரிமை கமிஷன் எடுத்து விசாரித்தது.

மனித உரிமை மீறல் மற்றும் ரகசிய விசாரணை விவரம் பத்திரிகையில் வெளியானது குறித்து தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அப்போதைய தலைமைச் செயலாளர் சார்பில் கூடுதல் எஸ்.பி. சக்திவேல், தேசிய மனித உரிமை கமிஷன் மீது ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘சங்கர மடம் புனிதமான இடம் இல்லை. மனித உரிமை இதில் மீறப்படவில்லை. எனவே தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, தலைமைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந் நிலையில் இந்தத் தடையை நீக்கக் கோரி புலவர் மகாதேவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சங்கர மடம் ஒரு புனிதமான இடம், விஜயேந்திரர் கைது செய்யப்படும் போது போலீசார் பூட்ஸ் காலினால் மடத்துக்குள் புகுந்து கைது செய்தனர். இதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுதாகர் முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது நடந்த மனித உரிமை மீறல் குறித்து, தேசிய மனித உரிமை கமிஷன் கேட்கும் விளக்கத்தை தர அரசு தயாராக உள்ளது. இதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கலாம்’ என்றார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com