Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2006

போக்கிரி எஜமானர்களும் புதிய அடிமைகளும்

இளவேனில்

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் விண்வெளியில் குடியிருப்புகள் அமைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது - என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் பெங்களூர் கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அவர் பெருமைப்பட்டிருக்கிறார். இந்த ஐம்பது ஆண்டுகளில் விண்வெளியில் மாத்திரமல்ல, நிலத்தில், நீரில், காற்றில் விஞ்ஞானிகள் நடத்தியுள்ள சாதனைகள் பிரமிப்புக்கும் பெருமைக்கும் உரியவைதாம். ஆனால், விஞ்ஞான வளர்ச்சியும், அதன் வெற்றிகளும் ஏற்படுத்தியுள்ள இருண்ட பக்கங்கள் அதிர்ச்சிக்கும் அழுகைக்கும் உரியவை என்பதை மறந்து விடவோ மறுத்துவிடவோ முடியாது.

இன்றைய விஞ்ஞானிகள் உலகைச் சூறையாடுகிற கொள்ளையர்களின் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் ஒரே நோக்கம் லாபம் மாத்திரமே! லாப வேட்டைக்காரர்களுக்கு பொதுநலம், உலக வளம் பற்றித் துளியும் அக்கறை கிடையாது. அவர்களுக்குத் தேவை எல்லாம் மூலதன வளர்ச்சிதான்.

அந்தநாள் கிரேக்கம் அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்தது. ஆதிக்க சக்திகளின் ஆனந்த வாழ்வுக்காக ஒவ்வொரு அடிமையும் கடுமையாக உழைத்தான். இன்றைய முதலாளித்துவ - ஏகாதிபத்திய உலகில் பழைய அடிமைகளின் பாத்திரத்தை விஞ்ஞானிகள் வகிக்கிறார்கள்.

அந்த அடிமைகள் தங்கள் எஜமானர்களின் மகிழ்ச்சிக்காக கண்ணீரும் ரத்தமும் சிந்தினார்கள். சமயங்களில் சோம்பல் மிகுந்த எஜமானர்களின் உற்சாகத்துக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று மடிந்தார்கள். அந்தோ, அந்த அடிமைகளின் வாழ்வும் முடிவும் நேர்மையுணர்ச்சியுள்ள இதயங்களையெல்லாம் உலுக்கியது; உருக்கியது.

இன்றோ, விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படும் புதிய அடிமைகளோ, தாங்கள் செய்வது என்ன வென்றே அறியாமல் எஜமானர்களின் மகிழ்ச்சிக்காக உலகையே அழிக்கவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.

பகுத்தறிவிலிருந்தும், பண்பாட்டிலிருந்தும், பரிவுணர்ச்சியிலிருந்தும் விஞ்ஞானம் வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. பகுத்தறிவுக்கும், பண்பாட்டுக்கும், பரிவுணர்ச்சிக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞானம் ஆபத்தானது. மருத்துவம், உரங்கள், உணவுப் பொருள்கள், கல்வி, கலை, இலக்கியம், இசை எல்லாமே கொள்ளையர்களின் வசமாகிவிட்டன.

நவீன உரங்கள், நச்சுக் கழிவுகளால் பூமித்தாய் விஷமாக்கப்படுகிறாள். இயற்கையைச் சூறையாடுவது குறித்து விஞ்ஞானிகளின் எஜமானர்கள் தீவிரமாய்ச் சிந்திக்கிறார்கள். அடிமைப்பட்ட விஞ்ஞானிகளாலும், ஆசை வயப்பட்ட விஞ்ஞானப் படைப்புகளாலும் பூமியே வாழத் தகுதியற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது.

தேச பக்தி என்கிற பெயரால் ஒவ்வொரு நாடும் பக்கத்து நாட்டின் மீது போர் தொடுத்து நெருப்பு மழை பொழியத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அழிவுக் கருவிகளை புதிய அடிமைகள் ஆயிரக் கணக்கில் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு என்பது என்ன? அதுவும் விற்பனைச் சரக்குதான். அதிகப் பணம் உள்ளவன் நாட்டின் அதிகப் பகுதியை வாங்கிக் கொள்கிறான்.

தேசபக்தி என்பது செல்வந்தர்களின் சொத்தைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும்தான். விஞ்ஞானிகளும் `தேசபக்தியுடன்' பாதுகாப்புக் கருவிகளை - அதாவது கொலைக் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய உலகின் எஜமானர்களுக்குத் தேவை பணமும், சில விஞ்ஞானிகளும்தான். மனித சக்தி கூட இப்போது அவர்களுக்குத் தேவையற்ற சுமையாகிக் கொண்டிருக்கிறது. குளோனிங் முறையில் தேவைப்படும் அளவுக்கு செயற்கை மனிதர்களை உருவாக்கிக் கொள்ளவும் `மூலதனம்' தயங்காது.

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் விண்வெளியில் குடியிருப்புகள் அமைக்கப்படும் என்று கஸ்தூரி ரங்கன் கூறுவது `எஜமானர்களின்' அகம் பாவத்துக்கும் பூமியின் அழிவுக்குமான முன்னறிவிப்புத்தான்.

பூமி எக்கேடு கெட்டால் என்ன? பணம் இருக்கிறவன் விண்வெளியில் வாழ்ந்து கொள்வான்.

ஏழைகள்? உழைக்கும் மக்களின் எதிர்காலம்?

இவர்கள் என்றைக்குத்தான் வாழ்ந்தார்கள்?

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் `மனிதன்' அதாவது - பணவெறி கொண்ட ஒரு சோம்பேறி விண்வெளிக்கு மாறிவிடுவான்.

வாழத் தகுதியற்ற பூமியில் ஏழை எளியவர்கள் இருக்க மாட்டார்கள்.

தேசங்கள் இரா. தேச பக்தி இரா. உயிரினங்கள் இரா. அப்பாடா... “மானுடம் வென்றதம்மா!”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com