Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2006

ஜீவாவின் பெயரால் ‘ஆவி’யின் சேட்டை

இளவேனில்

பத்திரிகையாளர் ஞாநியை வைத்து ஜீவானந்தம் பற்றிய ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

பெரியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு அரசு நிதி உதவி கிடைத்ததைத் போல இந்தப் படத்துக்கும் அரசின் நிதி உதவியைத் தமிழக முதல்வரிடம் கேட்கக் கோரிக்கையைத் தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள் தோழர்கள்.

அந்தப் படத்தில் தோழர் ஜீவானந்தமாக நடிக்க இருப்பவர் அவரைப் போலவே உருவ அமைப்புடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன்.
``ஜீவாவின் வாழ்க்கையைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு செல்லும் இந்த முயற்சியில் முதல்வரின் ஒத்துழைப்பும் உதவியும் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறோம்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தா.பாண்டியன்.

ஆனந்த விகடன் 27.8.06 இதழில் இப்படியொரு செய்தி வெளியிடப் பட்டிருந்தது. படித்ததும் முதலில் பரவசம் ஏற்பட்டது. தோழர் ஜீவாவைத் திரையில் காண யாருக்குத்தான் ஆசை வராது?
ஆனால் `ஆ.வி'யில் வந்த செய்தி குறித்து கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, பத்திரிகையாளர் `ஞாநி' யின் விஷமம் இது என்று தெரிய வந்தது.

பெரியார் படத்துக்கு, பெரியார் வாழ்ந்த ஆண்டுகளைக் குறிக்கும் விதத்தில் 95 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார் முதல்வர் கலைஞர்.

இது அறிவிக்கப்பட்டதுமே சட்டமன்றத்தில் `அவாள் திமுக' உறுப்பினர் நடிகர் எஸ்.வி.சேகருக்குக் கோபம் வந்துவிட்டது. ``பெரியார் பற்றி சினிமா எடுப்பதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்யலாமா? இது சரியா?

அப்படியானால் ராஜாஜியின் வரலாற்றைப் படமாக்கினால் அதற்கு இந்த அரசு நிதி உதவி தருமா?'' என்று கேட்டார்.

பெரியார் மீதுள்ள எரிச்சலைச் சட்டமன்றத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார் நடிகர் எஸ்.வி.சேகர். இன்னொரு நமைச்சல்காரர் வழக்கே தொடர்ந்தார்.

பெரியார் திரைப்படத்துக்கு நிதி அளித்ததைத் தொடர்ந்து கலைஞருக்குச் சில சிக்கல்களை ஏற்படுத்துவது மாத்திரமல்லாது, உள்ளார்ந்த அரசியல் சூழ்ச்சியும், ஞாநியின் அறிவிப்பிலே அடங்கியிருக்கிறது.

``பெரியார் என்றால் கலைஞர் நிதி உதவி செய்வார். ஜீவா என்றால் அவருக்கு மனம் வருமா? கூடுதலாக அந்தப் படத்தின் இயக்குநரே தான் தான் (ஞாநி) என்றால் நிச்சயம் தரமாட்டார்..

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையாகச் சித்திரித்துக் கேலி செய்ததும், அதனால் காயம் பட்ட இதயத்துடன் கலைஞர் பொதுமேடையிலேயே கண்டனம் தெரிவித்ததும், பிறகு தனது எழுத்துக்குத் தெளிவுரையாக நான் கண்ணகி சிலையைச் சொல்லவில்லை.

வயதால் வளர்ந்தாலும் மனத்தால் வளராது கரடி பொம்மையுடன் உறங்கும் மனவளர்ச்சியற்ற குழந்தையைத்தான் சொன்னேன். (யார் அந்தக் குழந்தை?) என்று சேட்டை செய்ததும் கலைஞரால் மறந்துவிடக் கூடிய நினைவுகளா?

இதனால் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை கலைஞருக்கு நமைச்சலை ஏற்படுத்தும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தரும்.

அது கூட்டணிக் கட்சிகளுக்குள் உரசலை உண்டாக்கும். தி.மு.க. கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும் விலகும்... என்பது ஞாநியின் சாணக்கியக் கனவு.

``இது - கலைஞர் அரசு - மைனாரிட்டி அரசாங்கம். விரைவில் கவிழ்ந்துவிடும்'' என்று யாகம் வளர்த்து `தேவப் பிரஸ்னம்' பார்த்து, அம்மனே அருள்வாக்கு சொல்லி விட்ட பிறகு பக்தர்படை அமைதியாக இருக்கலாமா?

நாட்டின் கேந்திரமான இடங்களிலெல்லாம் நமது ஆட்கள் இருக்கிறார்கள். கருத்துக்களை உருவாக்கும் பத்திரிகைகள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றன.

கடவுள் கூட்டமும் காவடிக் கூட்டமும் நமது கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இனியும் சூத்திரன் ஆட்சியை விட்டுவைக்கலாமா? அருள் தரும் தேவியின் மனம் குளிர வேண்டாமா?

`ஞாநி'களும் `ஆவி'களும் இதற்காகவே `தூய' தொண்டாற்றுகிறார்கள். நேர்மை தவறாது குழப்புவதிலும் குழிபறிப்பதிலும் தீவிரமாக இருக்கிறார்கள்.

இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? `ஞாநி'களின் தோழர் வேடமும் அதன் பின்னணியிலுள்ள அரசியல் சூதாட்டமும் நாங்கள் அறியாதவையா?

நாங்கள் கரடிப் பொம்மைகளுடன் உறங்கும் குழந்தைகள் அல்ல. பிரளய காலத்தில் புரட்சியின் வயிற்றில் பிறந்தவர்கள்''- என்று `பாலன் இல்லத்' தகவல்கள் பளிச்சிடுகின்றன.

ஜீவா வரலாற்றைத் திரைப்படம் எடுப்பதென்றால் கம்யூனிஸ்ட் கட்சி `ஞாநி'யையா தேர்ந்தெடுக்கும்? ஞாநிக்கு ஜீவாவைத் தெரியுமா? சினிமாதான் தெரியுமா?

ஜீவாவையும், சினிமாவையும் நன்றே அறிந்த இடதுசாரிக் கலைஞர்கள் இயக்குநர்கள் எத்தனையோ பேர் எங்களிடம் உண்டு. பிழைப்புவாதிகள் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்கிறார் கவிஞரும் இயக்குநருமான ஜீவபாரதி.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தனது வலைக்குள் விழாது என்று புரிந்து விட்ட ஞாநி குழப்பம் ஏற்படுத்தும் அடுத்த கட்டத்துக்குத் தாவி விட்டார்.

`ஆவி' 3.9.06 இதழில் அதன் பதிப்பாளர் வணக்கத்துடன் எழுதும் பகுதியில் வாசகர் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்:

`ஆவி'யின் முந்திய இதழில் அத்தனைபேரையும் கவர்ந்த கட்டுரை தோழர் ஜீவா பற்றி ஞாநி எடுக்கப் போகும் திரைப்பட விளம்பரக் கட்டுரைதானாம்.

``திருச்சியிலிருந்து ஒரு வாசகர் - தேசத் தந்தையே பார்த்துப் பேச விரும்பிய அந்தத் தோழரின் வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க யாரிடமும் நிதி கேட்டுப் போய் நிற்க வேண்டியதில்லை.

என்னைப் போன்ற ஜீவா நேசர்கள் தமிழ்நாட்டில் எத்தனையோ லட்சம் பேர் இருக்கிறோம். எங்களிடம் கேட்டாலே கொட்டுவோம் நிதியை என்று புதிய எண்ணத்துக்கு வித்தூன்றியிருக்கிறார்''
என்று பதிப்பாளர் சீனிவாசன் பரவச நிலையில் திகம்பரக் கோலத்தில் நிற்கிறார். ஆகவே தோழர்களே, ஜீவா அன்பர்களே, ஞாநி வருகிறார்.

காடுகரைகளை விற்று, மனைவி மக்களின் காது கழுத்திலுள்ள நகைகளை விற்று நிதியைக் கொட்டிக் குவியுங்கள். ஜீவா வரலாறு திரைப்படமாக வேண்டாமா? ஞாநியின் நோயும் வயிறும் பெருக்க வேண்டாமா?நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com