Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2006

ஈழமகள் கண்ணீர்

ஆனாரூனா

போர்களில் முதலில் கொல்லப்படுவது நேர்மைதான். அதை இலங்கை ராணுவம் மறுபடியும் நிரூபித்திருக்கிறது.

தமிழீழத்தில் தாய் தந்தையரை இழந்த அனாதைக் குழந்தைகள் தங்கிப் பயின்று வந்த விடுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டுவீசித் தாக்கியதில் 61 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமுற்றிருக்கிறார்கள்.

இந்த அநாதைக் குழந்தைகள் மீது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அளவற்ற அன்பு கொண்டிருந்ததால், இந்தக் குழந்தைகளைக் கொல்வதன் மூலம் பிரபாகரனை மனத்தளவில் நொறுங்கச் செய்ய முடியும் என்பது ராணுவத்தின் நம்பிக்கை.

ஆனால் அனாதைத் தமிழ்க் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் சிங்கள ராணுவத்தின் மீது வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சிங்கள ராணுவத்தின் இரக்கமற்ற இந்தப் படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சிகூட இம்முறை கலங்கிப் போய்விட்டது. விடுதலைப் புலிகளை ஆதரிக்காவிட்டாலும் தமிழ் மக்களின் கண்ணீரைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்கிற அளவுக்கு, குழந்தைகளைக் கொன்ற கொடூரம் காங்கிரசாரையும் உருக்கிவிட்டது.

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பல காங்கிரஸ் தலைவர்களை அழைத்தபோது ஒரே வீச்சில் மறுத்துவிடாமல், தங்கள் அனுதாப உணர்வைத் தெரிவித்திருக்கிறார்கள்.

வள்ளுவர் கோட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்துவின் உணர்ச்சி உரை பலரையும் உலுக்கிவிட்டது. ராஜீவ் காந்தி படுகொலை காங்கிரசாரின் இதயத்தில் ஏற்படுத்திய வேதனையின் வலி இன்னும் அவர்களுக்கு இருக்கலாம்.

ஆனால் இழப்பும் வேதனையும் மறக்கவோ மறையவோ முடியாத நிரந்தர உணர்வாக இருக்குமானால், தனிமனித வாழ்வும் வரலாற்று இயக்கமும் முடிந்தே போய்விடும்.

காந்தியடிகளை ஒரு வெறியன் கொன்றான் என்பதற்காக அவன் சார்ந்த இனத்தையே நாம் வெறுத்து ஒதுக்கிவிட்டோமா?

அன்னை இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற்காக அந்த மக்களுக்கு எதிரான கோபத்தீயை நெஞ்சில் வளர்த்துக் கொண்டே வாழ்ந்து விடுவது என்றா இந்தியா முடிவு செய்தது? தன் மாமியாரைக் கொன்றது ஒரு சீக்கியர் என்றாலும் ஒரு சீக்கியரையே பிரதமராக்கி அழகு பார்க்கிறார் அன்னை சோனியாகாந்தி. அவர் தேசபக்தி இல்லாதவரா? பதிபக்தி இல்லாதவரா? இதுதான் மனத்தின் வலிமை; மானுட அழகு.

தனது கணவரைக் கொன்றவர்களைக் கூட மன்னித்து விட்டேன் என்றாரே அந்தக் கருணையும் பண்பாடும் உள்ள இதயத்துக்கு முன் உலகமே சிலிர்த்துப் போய் விடவில்லையா? என்று கவிஞர் வைரமுத்து பேசியதை யாரும் அலட்சியப்படுத்தி விடமுடியாது.

ராஜீவ் காந்தியின் இழப்பையே எண்ணியெண்ணி, உருகுவது மாத்திரமே கட்சியை வளர்த்துவிடாது. தமிழர்களின் உணர்வுடனும் கலந்து நிற்கவேண்டும் என்ப தைப் பல காங்கிரஸ் தலைவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை ராணுவத்தின் வெறிச் செயல் இங்குள்ள தமிழர்களை ஒன்று படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியே சிங்கள இன வாதத்துக்கும், ராணுவ அராஜகத்துக்கும் எதிராகக் கிளர்ச்சி நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!

சிரம் அறுத்தல் வேந்தர்க்குப் பொழுது போக்காக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை. சோறு கேட்கும் மக்களுக்குப் போரைத் தருகிறவர்களை யாருமே ஆதரிக்க மாட்டார்கள். சிங்கள மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சிங்கள ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சிங்கள மக்களும் இப்போது ஆர்த்தெழத் தொடங்கிவிட்டார்கள்.

சிங்கள மக்களுக்குத் தேவை போரல்ல; சமாதானம் என்கிற முழக்கங்களுடன் அமைதியை விரும்பும் சிங்கள மக்கள் கொழும்பில் ஆயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால் மதவெறி கொண்ட சில புத்த பிக்குகளால் இந்த அமைதி வேண்டலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அமைதி வேண்டுவோர்க்கு எதிராக மேடையில் ஏறி ரகளை செய்தார்கள்.

மதகுருமார்களுக்கு மண்டியிட்டுப் பழகிய சிங்கள மக்கள் முதல் முறையாகப் போர் வெறியைத் தூண்டிய புத்தபிக்குகளை அடித்து மிதித்து மேடையிலிருந்து வெளியேற்றினார்கள்.

“புத்தரின் வழி போர் வெறியல்ல; இரத்த வெறியர்கள் பிக்குகள் அல்ல'' என்று சிங்கள மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.

மதத்தின் பெயரால் மக்களை வெகுகாலம் ஏமாற்ற முடியாதுதான்.

இலங்கையில் அமைதி திரும்பவும், சிங்களர் தமிழரிடையே தோழமை நிலவவும் ஒரே வழி இரு தேசிய இனமக்களும் தங்களைப் பிணைத்துள்ள மத உணர்விலிருந்து விடுபடுவதுதான்.

சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இலங்கையிலே பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் அடிமைகளாய்ச் சுரண்டப் பட்டவர்கள்தாம்.

சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மத அடிப்படையில் பிரிந்து நின்று தமக்குள் மோதிக் கொள்வதையே ஆதிக்க சக்திகள் விரும்பும்.

மதமோ கடவுளோ உண்மையில் உலகில் எந்த மக்களையும் காப்பாற்றவில்லை.

‘கடவுள் இல்லை' என்று உலகில் முதற்குரல் எழுப்பிய பகுத்தறிவாளன் புத்தன் தான். அந்தப் புத்தனின் பெயரால் மதம் எப்படி வரமுடிந்தது?

உலகில் கடவுள் - மத நம்பிக்கையில்லாத மூத்த இனம் தமிழினம்தான். தொன்மைத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் கடவுளைப் பரிந்துரைத்ததில்லை. இந்த அற்புத இனத்துள் கடவுள் கூட்டம் பெருகியது எப்படி?

எதிரெதிர் நிற்கும் இரு தேசிய இனங்களும் மதமயக்கங்களிலிருந்து விடுபடும் போது, தமக்குப் பகைவர் எதிர்முகாமில் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

அந்தப் புரிதல் வரும் போது, அமைதிப் பேச்சு வார்த்தைக்கு மூன்றாம் நாடொன்றின் மத்தியத்துவமும் தேவைப்படாது.

போர் முனையில் நிற்கும் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய அரசு தடிமனான ‘சர்க்காரியா அறிக்கை'யை அனுப்பியிருக்கிறது.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு ‘சர்க்காரியா அறிக்கை' ஒளிமயமான தீர்வைத் தந்து விட்டதாகவும், அதன் அடிப்படையில் இந்தியாவில் தேசிய இனப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதாகவும் இந்தியாவால் எப்படி சிந்திக்க முடிந்தது?

‘சர்க்காரியா தீர்வு' இந்தியாவில் காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்ததா? காவிரிப் பிரச்னையைத் தீர்த்ததா? எல்லைப் பிரச்னைகளைத் தீர்த்ததா?

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியவில்லை. போரின் அச்சுறுத்தல். இழப்புகளின் வேதனை. ஒவ்வொரு விடியலிலும் அதிர்ச்சிகள். சிங்கள மக்களே ராணுவத்துக்கும் போருக்கும் எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏதிலியராய் கடல் தாண்டுகிறார்கள் மக்கள்.

அமைதியற்ற மக்கள் கொதிப்புற்றிருக்கும் நிலையில் அங்கே கிரிக்கெட் போட்டிகளும், விளையாட்டுக் கேளிக்கைகளும் நடத்திக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

ரோம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்கிறது வரலாறு. நீரோ மன்னனுக்கு நிகராகவே சிங்கள அரசும், இலங்கை எரியும்போது உல்லாசம் கொண்டாடுகிறது.

கொடுமை நிறைந்த அரசு எரியும் நெருப்பில் குளிர் காய நினைக்கலாம். விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு ஆடப் போகலாமா? இவர்களுக்கு இதயமே இல்லையா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com