Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2006

இழந்ததை நினைப்போம் இருப்பதைக் காப்போம்

ஆனாரூனா

இன்றைய தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,609 சதுர கிலோ மீட்டராகும்.

அதே நேரத்தில் ஒன்றுபட்ட சென்னை மாகாணமாக நம்முடன் இருந்து, மொழிவழி மாநிலப் பிரிவினைத் திட்டத்தின் கீழ் பிரிந்து சென்ற ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 2,76,754 சதுர கிலோ மீட்டராகவும், கருநாடக மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,91,773 சதுர கிலோ மீட்டராகவும், கேரளாவின் மொத்தப் பரப்பளவு 38,864 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளன.

அதாவது பழைய சென்னை மாகாணத்தின் பெரும்பகுதியாக இருந்த தமிழ்நாடு சுருங்கியிருக்க, அதன் அங்கங்களாக இருந்த ஆந்திரா, கருநாடகா, கேரளாவின் பகுதிகள் பெருகியிருக்கின்றன.

காரணம், முன்பு தமிழ்ப்பகுதிகளாக இருந்து இப்போது ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள சித்தூர் மாவட்டத்தின் 19,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெரும் பகுதியும், 13,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நெல்லூர் மாவட்டத்தின் கணிசமான பகுதியும் தமிழகத்துடன் சேர்ந்திருக்க வேண்டியதாகும். அவை தமிழகத் துடன் இணைக்கப்படாமல் போனதால் வடபெண்ணாறு, ஆரணியாறு, பொன் வாணியாறு முதலியவற்றின் வளமான பூமி தமிழகத்திற்கு இல்லையென்றாகி விட்டது. ஆரணியாற்றின் பாசனப்பகுதி தமிழ் நாட்டிலிருந்தாலும், அணைக்கட்டுப் பகுதி ஆந்திராவுக்குப் போய்விட்டது.

வட தமிழ்நாட்டின் குடிநீருக்கும் பாசனத்திற்கும் இன்றியமையாத பாலாற்றிலும் சித்தூர் மாவட்டத்தில் ஆந்திராவால் புதிய அணை கட்டப்படுவதால் வடதமிழ்நாடே வறண்டு போகும் அபாயம் தோன்றியுள்ளது. அதுபோல இன்றைய கருநாடகத்திலுள்ள கோலார், பெங்களூர், மைசூர் மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவாகிய 28,173 சதுர கிலோமீட்டரில் சரிபாதி தமிழ்ப் பகுதியாகும். மற்றும் கொள்ளேகால் மாவட்டத்தின் பெரும்பகுதியும், மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களின் சிலபகுதிகளும் தமிழ்ப் பகுதிகளாகும்.

காவேரி உற்பத்தியாகிற குடகு மாவட்டமும் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பு தனியாட்சிப் பகுதியாக இருந்து கருநாடகத்துடன் இணைக்கப்பட்டதே. அது கன்னடம் பேசுகிற பகுதியுமல்ல.

கோலார் தங்கவயலில் தமிழர்களே மிகுதி என்பதால், அவர்களின் வாழ்வாதாரம் தங்கச் சுரங்கமாக இருந்ததால், அதை மூடி விட்டால் அங்கிருந்து, தமிழர்கள் வெளியேறி விடுவார்கள் என்ற நோக்கில் கருநாடக அரசின் வற்புறுத்தலால் அது மூடப்பட்டது. நிபுணர் குழுக்களின் அறிக்கை, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ``சுரங்கத்தைத் திறக்கலாம்; இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை'' என்று சாதகமாக வெளியான நிலையிலும் தமிழர் விரோத மனப்பான்மையுடன் கருநாடக அரசு அதைத் தடுத்து வருகிறது.

மேலும், நம் சென்னை மாகாணத்திலிருந்து தென் கன்னடம், பெல்லாரி என இரு மாவட்டங்களும், கொள்ளேகால் வட்டமும் அப்படியே கருநாடகாவுக்கு வழங்கப்பட்டும், அங்கிருந்து ஒரே ஒரு சிற்றூர் கூடத் தமிழகத்தில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தைப் பொறுத்த வரை அதன் மூலவேர்களான இரு சமஸ்தானங்களாகிய திருவாங்கூரும், கொச்சியும் 1949 ஜூலை 1ஆம் தேதி இணைந்து ஐக்கிய கேரளாவுக்குக் குரல் கொடுக்க, நம் சென்னை மாகாணத்திலிருந்து, மலபார் அதனுடனிருந்த தமிழ்ப் பகுதிகளையும் சேர்த்து இணைக்கப்பட்டு, 1956 நவம்பர் முதல் தேதி இன்றைய கேரளா உருவானது.

அது திருவாங்கூர் - கொச்சி இராச்சியமாக இருந்தபோதே அதன் தமிழ்ப்பகுதிகள் 2000 சதுர மைல்கள் என வரையுறுத்தி, அவற்றைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று, திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ், (அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய மாகாணக் கமிட்டிகள் மொழி வழியாகத் திருத்தியமைக்கப்பட்டு சென்னை மாகாண காங்கிரஸ் `தமிழ்நாடு காங்கிரஸ்' என்றும், `ஆந்திரப் பிரதேச காங்கிரஸ்', `கருநாடகப் பிரதேச காங்கிரஸ்', `கேரளப் பிரதேச காங்கிரஸ்', என்றெல்லாம் மாற்றியமைக்கப் பட்டபோது, திருவாங்கூர் - கொச்சிப் பகுதியிலிருந்த தமிழ்க் காங்கிரஸ் காரர்கள் தங்களைத் தமிழ் நாடு காங்கிரசில் சேர்த்துக் கொள்ளக் கோரி, அது மறுக்கப்பட்டதால், அவர்கள் ``திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ்'' என்ற பெயரால் தனிக்கட்சியாகவே இயங்கி வந்தனர்.) போராட்டமே நடத்தியது. அவர்கள் நடத்திய போராட்டத்தினால்தான் கன்னியாகுமரி மாவட்டம் நமக்குக் கிடைத்தது.

ஆனால், நம்மிடமிருந்த மலபார் மாவட்டத்தையும், காசர்கோடு வட்டத்தையும் முனை முறியாமல் அப்படியே கேரளாவுக்குக் கொடுத்தும் கூட அந்த 2000 சதுர மைல் பரப்பளவுள்ள தமிழ்ப் பகுதியை அப்படியே தமிழ கத்திற்குப் பெற அன்றைக் கிருந்த தமிழக ஆட்சியாளர்கள் முயலவில்லை.

அதனால் 1) தேவிகுளம், 2) பீர்மேடு, 3) கொச்சின் சித்தூர், 4) நெய்யாற்றின் கரை, 5) நெடுமங்காடு, 6) உடும்பன்சோலை, 7) செங் கோட்டை, 8) தோவாளை, 9) அகஸ்தீஸ்வரம், 10) கல் குளம், 11) விளவன்கோடு ஆகிய தமிழ்த் தாலுகாக்களில் கடைசியாக உள்ள 5 வட்டங்கள் (அதிலேகூட செங்கோட்டையின் பாதியளவே) மட்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. மீதி 1400 சதுரக்கல் பரப்பளவு தமிழ்ப் பகுதி இன்னும் கேரளாவுடனேயே உள்ளது.

சர்ச்சைக்குரிய முல்லைப் பெரியாறு அணைக்கட்டுப் பகுதி உள்பட மேற்குத் தொடர்ச்சி மலையில் உற் பத்தியாகும் பெரும்பாலான ஆறுகளின் தோற்றுவாய்கள் இங்குதான் உள்ளன.

இதில் இன்னும் கொடுமை தமிழகத்திற்கும் கேரளாவுக்குமிடையிலான எல்லையில் 60 விழுக்காடு இன்னும் வரையறை செய்யப்படாமலே உள்ளது. அப்படி வரையறை செய்யப்படாமல் இருக்கிற இடங்கள் பெரும்பாலும் மலைப்பகுதியாக இருப்பதால் கேரளா ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிரப்பின் மூலம் தன் பகுதியை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் பகுதியை விழுங்கிக் கொண்டும் வருகிறது.

இதற்குச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு சேரன் செங்குட்டுவனால் எடுக்கப்பட்டு, இன்று ``மங்கலாதேவி கோயில்'' என வழங்கப்படும் ``கண்ணகி கோட்டம்'' நம் தமிழக எல்லையில்தான் இருக்கிறது. ஆனால், அது தனது எல்லைக்குள் இருப்பதாகக் கூறிக் கொண்டு கேரள அரசு தமிழர்கள் அங்கு வழிபடச் செல்வதைக் கூடத் தடுத்துக் கெடுபிடி செய்கிறது. ஒருமுறை தமிழக அமைச்சரையே தடுத்துத் திருப்பி அனுப்பியது.

எனவே, நடுவணரசுடன் பேசி தமிழகத்திற்கும் கேரளாவுக்குமிடையே இன்று வரையறுக்கப்படாதுள்ள 60 விழுக்காட்டு எல்லைகளை வரையறை செய்ய தமிழக அரசு உடனடியாக முயல வேண்டும். தமிழக எல்லைகளை மீட்க வேண்டும்.

இந்த அளவுக்குத் தமிழகம் வஞ்சிக்கப்பட மாநிலங்களை மொழி வழியில் திருத்தியமைப்பதற்காக நடுவணரசு அமைத்த மூன்று எல்லை நிர்ணயக் குழுக்களும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

ஆம்; இந்தியா விடுதலை பெற்ற மறுவருடம் 1948-ல் மொழிவழி மாநில அமைப்புப் பற்றி ஆராய்ந்து பரிந்துரைக்க நடுவணரசு, `நீதிபதி தார்' என்பவர் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அக்குழுவில் தமிழரான T.A. இராமலிங்கம் செட்டியாரும், ஆந்திரரான இராமகிருஷ்ணராஜூவும் உறுப்பினர்களாக இருந்தனர்.

`யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதன்றோ தமிழன் கொள்கை! எனவே, தமிழர் உறுப்பினராக இருந்த அந்தக் குழு ``இப்போதைக்கு மொழிவழி மாநிலம் அமைப்புத் தேவையில்லை'' என்று அறிவித்தது. இருந்தாலும் ``மாநிலங்களை மொழிவழியில் பிரிப்பதாயின் அவற்றுக்கிடையே மலை அல்லது ஆறு இருந்தால், அதையே எல்லையாகக் கொள்ள வேண்டும். மொழி வரம்பு வேறுபட்டால் அதைப் பொருட்படுத்தக்கூடாது'' என்று பரிந்துரைத்தது. அப்பரிந்துரைப் படி பார்த்தால், தமிழ்நாட்டுக்கு வேங்கடமலையும், குடகுமலையும் கிடைத்திருக்க வேண்டும். காவிரி உள்பட தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளின் உற்பத்திப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டுக்குப் பாதகமான அம்சங்கள் மட்டுமே மைய அரசால் ஏற்கப்பட்டு, சாதகமான அம்சங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளன. கச்சத் தீவுப் பிரச்சினை உள்பட அனைத்திலும் அப்படித்தான் நடக்கிறது, நடந்திருக்கிறது.

1954-ல் கேரளத்திற்கும் தமிழகத்திற்குமான எல்லைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக நடுவணரசு இரண்டாவது எல்லை நிர்ணயக்குழுவை நியமித்தது. 1954-ல் நியமிக்கப்பட்ட அந்த மூன்று உறுப்பினர் எல்லை நிர்ணயக் குழுவுக்கு பசல்அலி எனும் பீகார் முஸ்லீம் தலைவராக இருக்க, கே.எம்.பணிக்கர் என்ற மலையாளியும், எஸ்.என். குன்ஸ்ரு என்ற இந்திக்காரரும் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். தமிழர் யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இது என்ன பாரபட்சம் என்றும் புரியவில்லை.

அந்தக்குழு 10.10.1955-ல் தான் அளித்த பரிந்துரையில்-

1) சென்னை மாகாணத்திலுள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னடம் மாவட்டத்தைக் கருநாடகத்தோடும் சேர்த்து விட வேண்டும்.

(இதில் தென் கன்னட மாவட்டம் பற்றிய பரிந் துரை இக்குழுவின் வரம்புக்கு அப்பாற்பட்டது).

2) திருவாங்கூர் - கொச்சி இராச்சியத்திலுள்ள கல் குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையின் பாதி ஆகிய தமிழ்த் தாலுக்காக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்துத் தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் `சென்னை ராஜ்யம்' என்றே இருக்க வேண்டும்.

(தமிழ்நாடு மாநிலத்தின் பெயர் `சென்னை ராஜ்யம்' என்றே இருக்க வேண்டும் என்ற பரிந்துரையும் வரம்பு மீறியதாகும்).

3) தேவிகுளம், பீர்மேடு போன்றவை விடயத்தில் மொழி அடிப்படையை இக் கமிஷன் முக்கியமானதாகக் கருத முடியாது. பல்வேறு பொருளாதாரக் காரணங்களையும் உத்தேசித்து அவை திருவாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்திலேயே இருந்து வரவேண்டும்.

(மொழி வழியில் மாநிலங்களைத் திருத்தியமைப்பது பற்றிப் பரிந்துரைக்கத்தான் இந்தக் குழுவே நியமிக்கப் பட்டது. ஆனால், அது ``மொழியடிப்படையை முக்கியமானதாகக் கருத முடியாது'' என்று சொன்னது அதன் மலையாளச் சார்பை மெய்ப்பிப்பதாகும். இக்கமிஷன் ஒரு சார்பாகப் பரிந்துரைத்திருக்கிறது. என்பதற்கு பின்வரும் அதன் வாசகமே சான்றாகும்).

4) சென்னை மாகாண - ஆந்திர ராஜ்ஜிய எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் எல்லைக் கமிஷன் கிராம அடிப்படையில் திருத்தியமைப்பதை இக் கமிஷன் ஒப்புக் கொள்கிறது.

(அதாவது இக் கமிஷன் மொழியடிப்படையையோ, கிராம அடிப்படையையோ ஒப்புக் கொள்ளாதாம். ஒப்புக் கொண்டிருந்தால் திருவனந்தபுரத்தையே தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் நிலை தோன்றியிருக்கும். ஏனென்றால் அக்கால கட்டத்தில் திருவனந்தபுரமே தமிழ் ஊராகத்தான் இருந்தது).

இது தமிழகத்திற்கும் ஆந்திரத்திற்குமிடையேயான எல்லைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காகப் பின்னர் அமைக்கப்பட்ட பாட்டஸ்கர் கமிஷனுக்கு முன்புள்ள பரிந்துரை என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆம்; 1957ஆம் ஆண்டு இறுதியில் தன் பரிந்துரையை வெளியிட்ட, எச்.சி. பாட்டஸ்கர் ஆணைக் குழு தமிழ் பேசுவோரையும் தெலுங்கு பேசுவோரையும் கிராமவாரியாகக் கணக்கெடுத்து, ஒரு கிராமத்தில் ஒரேயொரு தெலுங்கு பேசுபவர் அதிகமிருந்தாலும் அக் கிராமத்தை ஆந்திராவில் சேர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் தனது பரிந்துரையை வெளியிட்டது.

பொதுவாக பழைய வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் கணிசமான மக்கள் தமிழ், தெலுங்கு இரு மொழியும் பேசுபவராகவே இருந்தனர். இதைக் கருத்தில் கொள்ளாமல், தெலுங்கு பேசுவோரெல்லாம் ஆந்திரர் என்று முடிவு செய்யப்பட்டதாலேயே திருப்பதி போன்ற தொன்மை வாய்ந்த தமிழ்ப் பகுதிகள் ஆந்திராவுக்குப் போய்விட்டன. சென்னை கூடப் பெரும் போராட்டங்களுக்குப் பிறகுதான் தமிழகத் தலைநகராகத் தக்க வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழரே தெலுங்கும் பேசி வந்தனர் என்பதற்கு திராவிட இயக்கத்தின் முது பெரும் தலைவர், 1912ஆம் ஆண்டே திராவிடர் சங்கத்தைத் தொடங்கி, இன்றைய திராவிடக் கட்சிகளுக்கெல்லாம் மூலவித்தாக விளங்கிய வரும் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரோடும், இலண்டன் பிரிவு கவுன்சில் வரை சென்று திராவிட சித்தாந்தத்தை எழுதி வைத்த டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோருடன் இணைந்து, நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை அமைத்தவருமான டாக்டர் நடேசனார் அவர்களே உதாரணமாவார். அவர் பேரறிஞர் அண்ணா தோன்றிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அனைவரும் அறிவர்.

ஆகையினாலேதான் வடஎல்லைப் போராட்டத் தியாகியும் தமிழ் மாமுனி வருமான மங்கலங்கிழார் அவர்கள் தெலுங்கு பேசத் தொடங்கிய சித்தூர் மாவட்டத் தமிழர்களிடம் சென்று, ஊர் ஊராக, வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று ``தமிழர்களே உங்களை உணருங்கள். நீங்கள் இன்று தெலுங்கு பேசினாலும் உங்கள் உடல்களில் ஓடுவது தமிழ்க் குருதி. உங்கள் பாட்டனும் பூட்டனும் ஊட்டி வளர்த்தது தமிழ். அதனால் தமிழுக்குத் திரும்புங்கள். தாய்த் தமிழ் நாட்டுடன் இணைந்திருக்கக் குரல் கொடுங்கள்'' என்று முழங்கினார். அவர் பேச்சைக் கேட்டுத்தான் தெலுங்கு பேசி வந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.விநாயகம் அவர்கள் தமிழுக்குத் திரும்பினார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன் இணைந்து வடவெல்லைப் போராட்டத் தளபதியாக இருந்து பணியாற்றினார். அதனால்தான் ஆந்திராவுக்குப் போன திருத்தணி வட்டம் மீண்டும் நமக்குக் கிடைத்தது. மாலவன் குன்றம் போனாலும் வேலவன் குன்றம் நம்முடன் இருக்கிறது.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பசல் அலி கமிஷனும், பாட்டஸ்கர் கமிஷனும் செயல் பட்டதால், தங்கள் சிபாரிசுகளை மத்திய அரசுக்கு வழங்கியதால், நாம் இன்று எல்லைகளில் இழப்புக்கு ஆளாகி நிற்கிறோம். குடி நீருக்கும் பாசனத்திற்கும் உத்திரவாதமில்லாமல் தொல்லைகளில் தவிக்கிறோம்.

ஆகவே, கூடுமானவரை இழந்த நம் எல்லைகளை மீட்க, இனிமேலும் தமிழ்ப் பகுதிகள் பறிபோகாமல் காக்க, மத்திய அரசுடனும் அண்டை மாநிலங்களுடனும் பேசி ஆவண செய்வது இன்றியமையாததாகும்.

``நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்''

என்பார் திருவள்ளுவர். அதாவது ``எவருக்கும் நல்ல ஆளுந்தன்மை என்று சொல்லப்படுவது, தான் பிறந்தகத்தைத் தான் ஆளும் தன்மையுள்ளதாக ஆக்கிக் கொள்ளுதலாகும்'' என்றார். இங்கே பிறந்தகம் என்பதை நாம் வாழும் மண்ணை, மாநிலத்தை, நாட்டையும் குறிக்கும் என்று எடுத்துக் கொள்வது தவறல்லவே.

ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் இழந்த பகுதிகள் என்று எடுத்துக் கொண்டால்- வடக்கில் திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், புத்தூர், புங்கனூர், பலமனேரி, காகுந்தி, வாயல்பாடி எனப் பொன் கொழிக்கும் பூமிகள். குறிப்பாக வீராணம் ஏரிக்கு நிகரான பல்லவன் ஏரி.

வடமேற்கில் பெங்களூர், கோலார் தங்கவயல், கொள்ளேகாலம், குடகு போன்ற நீர்வளமும் கனி வளமும் ஒருங்கே அமைந்த பகுதிகள்.

தென்மேற்கில் தேவி குளம், பீர்மேடு, நொய்யாற்றின் கரை, நெடுமங்காடு, உடும்பன் சோலை, கொச்சின் சித்தூர், பழைமையான தமிழ்க் கல்வெட்டுகள் நிறைந்து கிடக்கும் அட்டபாடி உள்பட பாலக்காட்டின் தமிழ்ப் பகுதிகள். மேற்கண்ட பகுதிகள் தமிழ்நாட்டுடன் இருந்திருக்கு மானால் அண்டை மாநிலங்கள் குடிநீருக்கும், பாசனத்திற்கும் நம்மிடம் கெஞ்சும் நிலை ஏற்பட்டிருக்கும். இன்றோ நாம் அவர்களைக் கெஞ்சும் அவல நிலை உள்ளது.

எல்லைகளைக் காப்பீர்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம் 8.8.2006 அன்று சட்டமன்றத்தில் பேசியது வருமாறு:

பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, காலத்தின் அருமை கருதி விரைவாக முடிக்கிறேன். குறுக்கீடுகளை நான் செய்ய மாட்டேன். செய்யாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நமது வருவாய்த்துறை அமைச்சர் கொள்கைக் குறிப்புகளிலே பல்வேறு சிறப்புச் செய்திகளை அறிவித்திருக்கிறார்.

குறிப்பாக மாநிலப் பொது எல்லை என்பதன் பெயராலே ஒரு செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது - ஒரு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது அதற்கான நமது எல்லைகளும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதிலே முன் குறிப்பாகச் சொல்ல விரும்புவது இந்த எல்லைகள் வரையறை என்பதிலே சில பிரச்சினைகள் அவ்வப்பொழுது எழுந்து கொண்டேயிருக்கிறது.

அதிலே குறிப்பாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் சார்பில் நமது பகுதியிலே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற - காலங்காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிற அந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப் பகுதியை கர்நாடக அரசுக்குச் சொந்தம் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவதற்கான முயற்சி எடுத்தார்கள். அதைப் பற்றி இந்தச் சட்டமன்றத்திலே நான் பேசுகிறபொழுது முன்னாள் முதலமைச்சர் கூட அப்படி அதை அனுபவிக்கவில்லை என்று மறுத்தார். ஆனால் அவர்கள் ஆர்ஜிதம் செய்வதற்கும், அதை அளவீடு செய்வதற்கான முயற்சிகளை எடுத்து காரியங்களிலே அவர்கள் ஈடுபடுகிற பொழுது திரும்ப இந்த அவையிலே எழுப்பப்பட்டு அது ஒரு பிரச்சினை யாக மாறியதற்குப் பின்னாலே தடை செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது அது என்ன நிலையிலே இருக் கிறது என்பதை இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டு மென்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல நமது குற்றாலம் பகுதியிலேயும் அப்படி கேரள மாநிலத்திற்கும் நமக்கும் உள்ள அந்தப் பிரச்சினை இருக்கிறது. அங்கேயும் அப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பதாகத் தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதையும் சரிசெய்வதற்கான முயற்சி எடுக்க வேண்டும். இதை நான் சொல்லுவதற்குக் காரணம் ஒரு மாநிலத்திற்கும், இன்னொரு மாநிலத்திற்கும் எல்லை என்று சொல்லுகிறபொழுது, வரையறை என்று சொல்லுகிற பொழுது இப்படி சில ஆக்கிரமிப்புகளும், அத்துமீறல்களும் நடைபெறுவதற்கான காரணங்கள் அப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கி நமக்குத் தெரியாமலே நடைபெற்று வருகிறது.

அதன் காரணத்தினாலே நம்முடைய மாநில உரிமைகள் பாதிக்கப்படுகிறது. அது ஒரு பெரிய பிரச்சினையாக, சர்ச்சையாக எழுப்புவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிற காரணத்தினாலே, இதிலே நம்முடைய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதே போலத்தான் பாலாற்றில் அணை கட்டுகிற பிரச்சினையும் வந்திருக்கிறது. இப்படி இந்தப் பிரச்சினைகளை யெல்லாம் கவனத்திலே கொண்டு நம்முடைய மாநில எல்லையை நிர்ணயம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கிறபொழுது அதிலே தனி கவனம் செலுத்த வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே நான் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வை.சிவபுண்ணியம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com