Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2008

தியாகையரை சற்குரு தியாகராஜ சுவாமிகள் என்பதும் தியாகராயர் பெயரிலான நகரைத் தி.நகர் என்பதும்!
சின்னக்குத்தூசி


‘ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை!' என்ற தலைப்பில் தினமணி (7-10-2008) ஏட்டில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. ‘‘சமீபத்தில் சென்னை தியாகராய நகரிலுள்ள பிட்டி தியாகராயர் அரங்கில் நீதிக் கட்சியின் முப்பெரும் தலைவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அந்த விழாவில் பேசும்போது முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருக்கும் ஓர் ஆதங்கத்தில், நியாயமிருந்தாலும் அர்த்தமில்லை என்பதுதான் உண்மை.

நீதிக் கட்சியின் தந்தை என்று போற்றப்படும் சர். பிட்டி தியாகராயரின் பெயரால் வழங்கப்படும் தியாகராயர் நகரை, அவரது பெயரால் அழைக்காமல் ‘தி.நகர்' என்று அழைக்கிறார்களே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் முதல்வர். அதே போல இப்போது ‘பாண்டி பஜார்' என்று அழைக்கப்படும் கடைத்தெரு சுயமரியாதை இயக்கத் தலைவர்களின் பெயரால் அமைந்தது என்றும், அந்தப் பெயரைச் சுருக்கி சம்பந்தமே இல்லாமல் பாண்டி பஜார் என்று அழைக்கிறார்களே என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.

சமுதாயம் சில விஷயங்களை ஏற்றுக் கொள்கிறது. சிலவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அது தனது பழக்க வழக்கங்களையும், ஊர்ப் பெயர்களையும் மாற்றிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாதது என்பதை முதல்வர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது'' என்கிறது தினமணி.

சமுதாயம் என்று அது எந்த சமுதாயத்தைக் குறிப்பிடுகிறது என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் தமிழகத்தில் இரண்டு விதமான சமுதாயங்கள் இருக்கின்றன. நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பகுதி மக்களைக் கொண்ட சமுதாயம் ஒன்று: மற்றொன்று - 3 சதவீத மக்களைக் கொண்ட சமுதாயம். ஒன்று அலுவலகம் சென்றால்; மற்றொன்று ஆபிசுக்குப் போகும். ஒன்று வீட்டுக்குப் போனால்; மற்றொன்று ‘ஆத்து'க்குப் போகும். ஒன்று தண்ணீர் குடிக்கும்; மற்றொன்று தூத்தம் குடிக்கும். ஒன்று அத்தான் என்று அழைத்தால்; மற்றொன்று அத்திம்பேர் என்று அழைக்கும். ஒன்று அம்மான் மகன் என்று அழைத்தால்; மற்றொன்று அம்மாஞ்சி என்று அழைக்கும்.

அத்திம்பேர்களும் அம்மாஞ்சிகளுமே அதிகமாக வாழும் தியாகராயர் நகரை அந்த மற்றொரு சமுதாயம் தி. நகர் என்றே எழுதும்; பேசும். அதே நேரத்தில், அவாள் அதிகம் வசிக்கும் திருவல்லிக்கேணியை - தி.கேணி என்று அழைக்காது; திருவல்லிக்கேணி என்றே அழைக்கும். அபிதாகுசாம்பாள் என்ற அம்மனை அவர்கள் அபி என்று சுருக்கி அழைப்பதில்லை. கர்ப்ப ரட்சகாம்பிகை என்ற அம்மனை கர்ப்பா என்று அவர்கள் சுருக்கி அழைக்க மாட்டார்கள். அபிராமி அம்மனை அபி அம்மன் என்றோ, நீலாயதாட்சி அம்மனை நீலா அம்மன் என்றோ அவர்கள் சுருக்கி அழைப்பதில்லை. நீளமான பெயர்களாக இருந்தாலும் அப்படியேதான் அழைப்பார்கள்.

காரணம் என்ன? அந்த அம்மன்களையெல்லாம் உருவாக்கியவர்களே ‘அவாள்'தான்! ஆனால் - தியாகராயர் நகரை தி.நகர் என்று சுருக்கி அழைப்பது சரிதான். கலைஞர் கருணாநிதி நகரை கே.கே. நகர் என்று அழைப்பது சரிதான் என்று வாதிப்பார்கள். ஆனால் அதே சமயம், உயர்நீதிமன்றத்திலிருந்து புறப்படும் நகரப் பேருந்தில், உயர் நீதிமன்றம் - மகாகவி பாரதி நகர் - என்று எழுதப்பட்டிருப்பதை அவர்கள், ‘‘எம்.கே.பி. நகர் என்று சுருக்கமாக எழுதித் தொலையுங்களேன். இவ்வளவு நீளமான பெயர் எதற்கு?'' என்று ஒருபோதும் கூறமாட்டார்கள்.
கலைஞர் கருணாநிதி என்று எழுதினால் அது நீளமான பெயர். தட்சிணாத்ய கலாநிதி மகா மகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமினாதய்யர் என்று எழுதினால் அது அவாளைப் பொறுத்தவரையில் சுருக்கமான - சுருக்கமோ சுருக்கமான பெயர்.

சத்தியமூர்த்தியைப் பற்றி எழுதும் போது தீரர் சத்தியமூர்த்தி என்று தவறாமல் எழுதுவார்கள். அப்போது அவர்களது கை வலிக்காது. சீனிவாச சாஸ்திரிகளை மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் என்று அழைப்பார்கள்; அப்போது அவர்களது வாய் வலிக்காது. ஆனால், தியாகராயர் நகர் - கலைஞர் கருணாநிதி நகர் என்றெல்லாம் பெயர் வைத்தால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது என்று வாதிடும் தினமணி, தியாகராயர் நகரைத் தி.நகர் என்று அழைக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டால் - அந்த ஆதங்கத்தில், நியாயமிருந்தாலும் அர்த்தமில்லை என்பதுதான் உண்மை என்று நீட்டி முழக்கும்.

சமுதாயம் சில விஷயங்களை ஏற்றுக் கொள்கிறது; சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அது தனது வசதிக்கும் சௌகரியத்துக்கும் ஏற்பத் தனது பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாதது என்பதை முதல்வர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. என்று தினமணி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமுதாயம் என்பது ஒட்டுமொத்தச் சமுதாயத்தைக் குறிப்பதாகாது! முன்று சதவீத பேரான அவாள் சமூகத்தையே அது நூற்றுக்கு நூறு பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஒட்டு மொத்தச் சமுதாயம் அக்கிராசனாதிபதியை தலைவர் என்றும், பிரசங்கியை பேச்சாளராகவும், பிரசங்கத்தை சொற்பொழிவாகவும், அபேட்சா பத்திரத்தை வேட்பு மனுவாகவும் அபேட்சகரை வேட்பாளராகவும், விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகையை திருமண அழைப்பிதழாகவும், ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகத்தை குடமுழுக்காகவும், கம்ப்யூட்டரை கணினியாகவும், டெலிபோனை தொலைபேசியாகவும், ஏரோபிளேனை விமானம் என்றும் மாற்றி அழைப்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறதே தவிர புறக்கணித்து விடவில்லை.

ஆனால் மூன்று சதவீத பேரான சமுதாயத்தினர் மட்டும்தான் - தியாகராய நகரை தி.நகர் என்று அழைப்பதா? சௌந்தர பாண்டியன் அங்காடியை பாண்டி பஜார் என்று அழைப்பதா? என்று கேட்டால் அந்த ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது. ஆனால் அர்த்தமில்லை என்று அரட்டைக் கச்சேரி நடத்துகிறார்கள். தெலுங்கிசை மூவர்களில் ஒருவரான தியாகையரை, சற்குரு தியாகப் பிரம்மர் என்றும் சற்குரு தியாகராஜ சுவாமிகள் என்றும் மறவாமல் நீட்டி முழக்குவார்கள். அப்படி எழுதுவதில் பேசுவதில் அவாளுக்கேயுரிய ‘நியாய'மும் உண்டு; அர்த்தமும் உண்டு! ஆனால், தியாகராயர் நகரை - தி.நகர் என்றுதான் அழைப்போம். அது பற்றிக் கேட்பதில் அர்த்தமில்லை என்பார்கள்! காரணம் என்ன?
அதுதான் அவாள் சுபாவம்!