Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2008

சிங்கள இராணுவத்தின் இனவெறியாட்டத்தைக் கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் அறப்போர்


ஈழத் தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை முடிக்கும் தீர்வாக 52 நாடுகள் கொண்ட மாநாட்டை சென்னையில் நடத்துவோம்!
- தோழர் தா. பாண்டியன்


இலங்கை அரசை கொல்வதை நிறுத்து என்றும் பட்டினி கிடப்பவனுக்கு உணவை அனுப்பு, ராடார்கள் அனுப்ப அனுமதி தரவேண்டாம் எனக் கேட்பது மத்திய அரசின் காதுகளில் விழவில்லை. இந்திய நாடு மற்ற நாடுகளுக்கு வழிகாட்டிய நாடு. நேரு, இந்திராகாந்தி இவர்களின் கொள்கையில் பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இவர்கள் உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

இப்போது மன்மோகன்சிங்கிற்கு இந்தியாவின் கௌரவம் முக்கியமில்லை என்கிறார். இவருக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கிறோம். கொல்வதையாவது நிறுத்து என்பதுதான். இந்திய அரசு இராணுவ உதவி வழங்கியது பொறியாளர்கள் காயம்பட்டதால் அம்பலப்பட்டு விட்டது. இவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க அனுப்பப்பட்டவர்கள் இல்லை. கொல்வதற்கு ஆதரவாக அனுப்பப்பட்டவர்கள். அரியானா மாநிலத்தில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சியளிப்பதாக பத்திரிகைகளில் வந்த செய்தி இதை உண்மை என்று நிரூபித்துவிட்டது. இப்பயிற்சி நமது மீனவர்களை சுட்டுக்கொல்லவா? இங்கே சிலருக்கு தமிழ் என்றால் துடிக்கும். இவர்கள் நாட்டில் அடித்தால் கை நீளும். 16 கி.மீட்டரில் கொல்பவர்களைத் தடுக்க கை நீளவில்லை.

52 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். மற்றெந்த நாடுகளிலும் தமிழனுக்குப் பாதிப்பில்லை. இலங்கையில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருந்துகளும் உணவும் அடிப்படைத் தேவைகளை வழங்க மக்கள் தயாராக உள்ளனர். எவனோ எதையோ கடத்துகிறான். வேண்டுமானால் அன்பு கடத்தல் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். என் தாய், மகள் பசியால் வாடுகிறார்கள். சுடப்படுகிறார்கள் என்பதால் மட்டுமே ஏற்படும் மனவேதனை இங்கும் ஏற்பட வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களுக்குள் அழுகுரல் நிற்கவில்லை என்றால் டிசம்பர் மாதத்தில் 52 நாடுகள் கொண்ட மாநாட்டை சென்னையில் நடத்துவோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை திரட்டிய மாபெரும் மாநாடாக அது இருக்கும். இதுவே இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை முடிக்கும் தீர்வாக அமையும்.

- 2-10-2008 ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து...

இந்திய இராணுவம் இலங்கைக்கு ஒத்துப் போவதற்கு உள்ளதா?
இந்திய மக்களைப் பாதுகாக்க உள்ளதா?
- தோழர் நல்லக்கண்ணு

இலங்கை இராணுவம் பழிதீர்க்க இந்தியா அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் அது துரோகம். அதனை நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய இராணுவம் இலங்கைக்கு ஒத்துப் போவதற்கு உள்ளதா? இல்லை இந்திய மக்களைப் பாதுகாக்க உள்ளதா? ஒத்துப் போவது நியாயம்தானா? இராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது. 25 ஆண்டுகளாகத் தீர்வு காண முடியவில்லை. அங்கு அமைதித் தீர்வு காணப்பட வேண்டும். அதற்குரிய ஆலோசனைகளை மத்திய அரசு இலங்கைக்கு வழங்க வேண்டும்.

உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாக உள்ளவர்கள் மீது குண்டுகளைப் போடுகின்றனர். கடன் கொடுக்க உரிமை இருக்கும்போது அதனை கண்டிக்கவும் உரிமை உள்ளது. உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் கொடுத்திடும் பொருட்டு நெடுமாறன் உணவுப் பொருள், மற்றும் மருந்துகளை சேகரித்தார். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினோம். செஞ்சிலுவைச் சங்கம் மூலமாவது கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டோம். அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இராணுவத்தைக் கொண்டு மக்களை அழிக்க உதவக் கூடாது.

இந்திய இராணுவம் ஏன் இலங்கை இராணுவத்தைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது. காந்தி வழியில் அவர் பிறந்த நாளில் இந்தப் போராட்டம் நடக்கிறது. கடந்த 23.04.2008ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பிறகே 100க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அரசு என்ன சொல்கிறது. 6 மாத காலம் கடந்து விட்டதே அரசு என்ன செய்தது? மாறாக, இலங்கைக்கு இராணுவப் பயிற்சியை இந்தியாவில் அதுவும் தமிழக மண்ணில் தருகிறது. நம்மிடம் பயிற்சி பெற்று நம்மையே அழிக்க அனுமதிக்கலாமா? 6 மாத காலத்தில் ஏன் இந்திய அரசு தலையிடவில்லை. இது தமிழக மக்களின் நியாயமான கோரிக்கை.

- 2-10-2008ஆம் நாள் மதுரையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து...

இலங்கை குறித்த இந்தியாவின் பார்வையில் அடிப்படை மாறுதல் ஏற்பட வேண்டும்!
- தோழர் டி. ராஜா

1974 இல் இந்திரா காந்தி - சிறிமாவோ உடன்படிக்கைப்படி கச்சத்தீவு இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் தோழர் கல்யாணசுந்தரம் கேள்வியெழுப்பியபோது, கச்சத் தீவில் இந்தியர்களுக்குப் பாரம்பரிய உரிமைகள் உண்டு என சுவரண்சிங் பதிலளித்தார். ஆனால் 2006ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது, மீன்பிடி வலைகளை உலர்த்தலாம், மீன் பிடிக்கக் கூடாது என்கிறார். எனவே கச்சத்தீவு குறித்து மறுபரிசீலனையை மத்திய அரசு செய்ய வேண்டும். இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமெனில் இலங்கை குறித்த இந்தியாவின் பார்வையில் அடிப்படை மாறுதல் ஏற்பட வேண்டும். இந்தியா வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது.

இராணுவ ரீதியான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, அரசியல் தீர்வுக்கு இலங்கை முன்வரவேண்டும். மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை மருந்து, உணவுப் பொருட்களை தமிழ் மக்களுக்கு கிடைக்க முயற்சிக்க வேண்டும். அறிவிக்கப்படாத எந்த உதவியையும் இந்தியா செய்யக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

மத்திய, ஆசிய மற்றும் பசிபிக் பகுதியில் சில நாடுகளை அராஜக நாடுகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் ராஜபக்சே ஆளும் இலங்கையும் போக்கிரித்தனமான அராஜக நாடுதான். ஐ.நா.வின் தீர்மானங்களையும், பன்னாட்டு விதிகளையும் மதிக்காத இலங்கை அரசு, செஞ்சிலுவைச் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் யுத்தப் பகுதியில் அனுமதிக்கவில்லை. இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீது பெருத்த சந்தேகம் எழுகிறது. இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலின்போது 3 இந்தியர்கள் படுகாயமடைந்தார்கள். அவர்கள் யார்? இதனை மத்திய ஆட்சியிடம் நேரடியாக நான் கேட்டேன். ஆனால் பொறுப்பான பதில் வரவில்லை.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதில் ஒரு இந்திய ஜவான் உயிரிழந்தார். அதனை தேசிய சோகமாகக் கருதவேண்டும் என்றார்கள். ஒரு பெரிய இந்தியாவைச் சார்ந்தவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது ஏன் திட்டமிட்ட மௌனத்தை இந்திய அரசு கடைபிடிக்கிறது என்பதை பிரணாப் முகர்ஜி, சிவசங்கர்மேனன், எம்.கே. நாராயணன் ஆகியோர் தெளிவுபடுத்த வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி அறிவிக்கப்படாத இராணுவ உதவிகளை செய்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்காவின் ஆளுமை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வெளியுறக் கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

- 2-10-2008ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து...


எத்தனை நாட்டு இராணுவம் இலங்கைக்குத் துணையாக நின்றாலும் பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது!
- வைகோ

செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சிங்கள இராணுவ கேந்திரத்தின் மீது புலிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்கள். கரும்புலிகள் பிரிவு இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிய மறுநாள், தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து ஒரு செய்தி வெளியாகிறது. அதில் இந்திய அதிகாரிகளான ஏ.கே தாகூர் மற்றும் ரவுட் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் இடத்தில் இந்திய அதிகாரிகளுக்கு என்ன வேலை? இதற்கும் மறுநாள் இலங்கை செய்தி நிறுவனம் ஒன்று, மற்றொரு செய்தியை வெளியிடுகிறது. அதில் ‘265 இந்திய இராணுவ வல்லுநர்கள் இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பெயர் சொல்ல விரும்பாத இந்திய செய்தித் தொடர்பாளர் ஒருவர் சொன்னதாக அதே செய்திக் குறிப்பு சொல்கிறது. இந்த இரண்டு செய்திகளையும் இந்த நிமிடம் வரை இந்திய அரசு மறுக்கவில்லையே.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு மூத்த செய்தியாளர் என்னிடம் பேசினார். இராணுவ அதிகாரிகளுக்கான ஒரு கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா, ‘இந்திய சர்க்கார் நம் பக்கம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ் நாட்டில் ‘தமிழ்... தமிழ்' என்று முழங்கும் சில கைக்கூலிகள் தான் நம்மை எதிர்க்கிறார்கள். அவர்கள் பேச்சு எடுபடாது. இந்தியாவின் துணையோடு நம் இலக்கை அடைந்து விடுவோம்' என்று பேசியதாக அவர் சொன்னார். இந்திய அதிகாரிகளான எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன் ஆகியோர் கொழும்புக்குச் சென்று திரும்புகிறார்கள். இலங்கைக்கு இரண்டு சதவிகித வட்டியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது இந்தியா! இந்தக் கடன் தொகையைக் கொண்டு பொன்சேகா பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்கும் முயற்சிகளில் இருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. தமிழனை அழிக்க இந்திய அரசு பணம் கொடுக்கிறது.

அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள்தான் இலங்கை விவகாரத்தில் இந்திய அரசைக் குழப்புகிறார்கள். முதலில் இப்படிக் குழப்பப்பட்டவர் ராஜீவ் காந்தி! போஃபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கிய சமயத்தில் அதை மறைக்க எதையாவது செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ராஜீவ். அந்த நேரத்தில் அவரை தன்னுடைய தந்திர வலையில் சிக்க வைத்து இலங்கை-இந்திய ஒப்பந்தம் போட்டார் ஜெயவர்த்தனே. அநதத் தவறை நியாயப்படுத்த இப்போதும் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசிகளாகவும் தமிழர்களுக்கு வில்லன்களாகவும் இந்திய அதிகாரிகளில் ஒரு கூட்டமே செயல்படுகிறது.

அப்போது போட்ட ஒப்பந்த ஷரத்துக்களை மீண்டும் ஒப்பந்த வடிவில் கொண்டுவர இந்தியா முயன்றபோது நான் எதிர்த்தேன். உடனே, அது கைவிடப்பட்டதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால், ஒப்பந்தம் போடாமலேயே ஷரத்துகளை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்தத் துணிச்சலில் ‘பிரபாகரன் பிடிபடுவார், ரொம்ப நாள் அவர் உயிரோடு இருக்க முடியாது!' என்று இலங்கையின் இராணுவத் தளபதி பொன்சேகா சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது. அவருடைய போர்த் தந்திரங்களை எதிர்கொள்ள எத்தனை நாட்டு இராணுவம் இலங்கைக்குத் துணையாக நின்றாலும் ஜெயிக்க முடியாது!

- 12-10-2008 ஜூ,வி, இதழுக்கு அளித்த நேர்காணலிலிருந்து...


தனித் தமிழீழத்தை ஆதரித்து தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
- மருத்துவர் ச. இராமதாசு

தமிழ் ஈழத்தில் தமிழன் கொல்லப்படுகிறான். தாய்த் தமிழகத்தில் தமிழன் தூங்குகிறான். தாய்த் தமிழகத்திற்குத் தலைமையேற்கிற முதலமைச்சர் கலைஞர் அமைதி காக்கிறார். ஈழத்தில் குண்டுகள் வெடிப்பது கலைஞரின் காதுகளுக்குக் கேட்கவில்லையா? ஈழத்தில் உள்ள தாய்மார்கள் கண்ணீர் வடிப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இன்னும் ஏன் அமைதி காக்கிறீர்கள்? ஆட்சியைக் கலைத்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகத்தான் அமைதி காக்கிறீர்களா? உங்களுக்கு ஆட்சி பெரிதா? நீங்கள் பார்க்காத ஆட்சியா? இப்போது 5ஆம் முறையாக ஆள்கிறீர்கள். 6வது முûயாகக் கூட நீங்கள் ஆட்சிக்கு வர ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இலங்கை இனச் சிக்கலில் உறுதியான முடிவெடுங்கள். உங்களை வாழ்த்த 8 கோடித் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் முதலில் வந்து உங்களை வாழ்த்துவேன். இந்திய அரசையே நீங்கள்தான் வழி நடத்துகிறீர்கள். அவர்கள் எப்படி உங்கள் ஆட்சியைக் கலைப்பார்கள் அப்படியே கலைத்தாலும் நாங்கள் சும்மா விட்டுவிடுவோமா? இலங்கைச் சிக்கலை ஆராய தி.மு.க., பா.ம.க., காங்கிரசு, பாரதிய சனதா என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைக்கலாம். குழு அனுப்பப்படும் நாளிலிருந்து சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அக்குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கட்டும்.

தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி ஈழத் தமிழர்களை இராசபக்சே அரசு படுகொலை செய்வதைக் கண்டித்தும், தனித் தமிழீழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை நடுவண் அரசு ஏற்றுக்கொள்ளும். இலங்கை இனச்சிக்கலில் 10 நாட்களுக்குள் கலைஞர் முடிவெடுக்காவிட்டால் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை வீரர்கள் தீவுத் திடலில் கூடி ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் தர தயாராக இருக்கிறோம் என்று அறிவிப்பார்கள். பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப் பேரவையிலேயே உண்ணாநிலை மேற்கொள்வார்கள். அவர்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வார்கள்.

முதல்வர் கலைஞர் வெளியிட்ட ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழீழ நாடு' என்ற நூலில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது உள்ளிட்ட 54 உறுதிமொழிகளை முதல்வர் கலைஞர் அறிவித்திருக்கிறார். இவை எதுவுமே இதுவரை நிறைவேறவில்லை. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதம் வாங்குவதாலும், புது வகை காந்த அலைத் தொலை அளவி (அதிநவீன இராடார்) கருவிகள் பொருத்தப் பட்டிருப்பதாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படு கின்றன. ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படுகின்றன. தமிழர்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்படுகிறார்கள். இனியும் முதல்வர் கலைஞர் அமைதி காக்கக் கூடாது. இங்குள்ள தமிழர்கள் கலைஞர் தலைமையில் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் பகைவர்கள் என்ற செய்தி வரவேண்டும். அவ்வாறு வந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும்.

- 30-09-2008ஆம் நாள் சென்னை இலங்கைத் தூதரகம் முன் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து...