Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2008

புகைக்கல்லில் ஓர் புகைச்சல்
ந. நஞ்சப்பன்


சினிபால்ஸ் எங்களுடையது என்று கோரினார்கள். சினி பால்ஸ் என்றால் என்னவென்று கூட அவர்களுக்குத் தெரியாது. பெயரைப் பார்த்தே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். சினிபால்ஸ் காவிரியில் வரும் நீர்வீழ்ச்சியில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட இல்லை. ஒரே இடத்தில் குளிப்பதற்குப் பதிலாக சிறுவர்கள் அச்சமின்றி ஆனந்தமாகக் குளிக்க ஒரு பகுதியை உருவாக்கினால் என்ன என்று ஒரு நல்ல வனத்துறை அதிகாரி பால்ராஜ் நினைத்தார். ஒரு பத்து குதிரை சக்தி மின் மோட்டாரில் நீர் இறைத்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது சினி பால்ஸ். (சிற்றருவி).

மாவட்ட வன அலுவலர் பால்ராஜ் அவர்கள் இந்த குளிக்கும் இடத்தை அமைத்த போதே ஒன்றிய நிர்வாகம் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்றனர். பரவாயில்லை இதை அமைத்தால் ஒன்றியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளத் தடையில்லை. நல்ல பணிதானே என்று அவருக்கே உரித்தான பண்பட்ட நிலையில் பேசியபோது தடைகள் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அதற்கு சற்று தூரத்தில்தான் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. (தற்போது ராசிமணலிலும் கோபுரம் அமைத்து கிருட்டிணகிரி மாவட்டத்திலேயே சிறந்த சுற்றுலா மையமாக்கும் முயற்சிகளை மாவட்ட வனத்துறை அலுவலர் பால்ராஜ் அவர்கள் எடுத்தது பாராட்டுக்குரியது).

சினிபால்ஸ் என்ற பெயரைக் கேட்டு கற்பனையில் அதை உரிமை கொண்டாடுகிறார்களே தவிர அதை நேரில் பார்த்தவர்களுக்குத்தான் உண்மை தெரியும். சரி... சினிபால்ஸ் அமைத்தது கர்னாடக அரசா? இல்லை. அது கர்னாடக எல்லையில் இருந்திருந்தால் கட்டி முடித்து இத்துணை ஆண்டுகளாகியும் உரிமை கொண்டாடியது இல்லையே ஏன்? அதற்காக பணம் செலவிடப்பட்டு துவங்கியபோதே ஏன் தடுக்கவில்லை. மக்கள் பார்வையிடும் கோபுரம் அமைக்கப்பட்டு எத்துணை ஆண்டுகள் ஆகின்றன? இலட்சக்கணக்கானோர் பார்த்துச் சென்று கொண்டிருக்கின்றனரே - இதுவரை எந்தப் பிரச்சனையும் தோன்றியது கிடையாது.

பெரியபாணி எங்களுடையது என்று கர்னாடக தரப்பிலிருந்து கூறுகிறார்கள். பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒகேனக்கல் பகுதியில் நின்று பார்த்தாலே அல்லது கோபுரத்தில் நின்று பார்த்தாலே காவிரி ஆறு ஓடும் போக்கும், அமைந்துள்ள நில அமைப்பும், அதை வைத்து எல்லை அமைக்கப்பட்டுள்ள முறையும் பளிச்செனத் தெரியும். பெரியபாணிக்குத் தெற்கேயும், மேற்கேயும் உள்ள ஆற்றுப் பகுதி தனியாகப் பிரிந்து செல்கிறது. அது கர்னாடகப் பகுதி மற்றது தமிழகப் பகுதி.

பெரியபாணியில் தமிழக நிலப்பரப்பிலிருந்து நீர்வீழ்ச்சிகளாய் விழும் தண்ணீர் விசையுடன் செல்கிறது. கர்னாடக நிலபரப்பிலிருந்து வரும் ஆற்று நீரின் ஒரு பகுதி தமிழகத்தின் உரிமையில் உள்ள பெரிய பாணியில் கலக்கிறது. கர்னாடக நிலப்பரப்பில் ஓடும் காவிரிநீர் கர்னாடக எல்லையில் உள்ள கொட்டக்கால் செலம்பு நீர்வீழ்ச்சியில் கலந்து கூடுதுறையின் அருகே கூடுகிறது. கொட்டக்கால் செலம்பிற்கு மேற்கேயும், பெரிய பாணிக்கு மேற்கேயும், தெற்காகவும் உள்ள பகுதி கர்னாடக எல்லையைச் சேர்ந்த பகுதியாகும். தமிழகத்தில் உள்ள பெரியபாணிக்கு பாறைகளால் அமைந்த கரை பாணிக்கு தெற்கேயும், மேற்கேயும் உள்ளது. அதுவே பெரியபாணிக்கு கரையாகும். ஆக, பெரியபாணி கரை வரை - பெரியபாணியில் உள்ள ஐவாளிபாணி, பச்சைபாணி, பெரியநீர்வீழ்ச்சிப் பகுதி, ஐந்தருவி அனைத்தும் தமிழகத்திற்கே உரிமையானது. பெரியபாணிக்கு அப்பால் உள்ள (தெற்கேயும், மேற்கேயும்) உள்ள பகுதி கர்னாடகப் பகுதியாகும்.

பெரியபாணி மிக ஆழமானது. நீர்விசையுடன் செல்லும் பகுதி. இந்தப் பகுதியில் எத்தனையோ திரைப்படங்களை எடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., செல்வி ஜெயலலிதா ஆகியோர் முதல் பல நடிகர்கள் நடித்த படம் இப்பகுதியில் எடுக்கப்பட்டன. இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் இப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன. திரைப்படம் எடுக்கத் தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் அனுமதி பெற்று எடுத்துள்ளார்களே தவிர இதுவரை ஒரு படத்திற்கும் கர்னாடக அரசு அனுமதியைக் கேட்டதும் இல்லை, வழங்கியதும் இல்லை. ஏன்? கன்னடப் படம் எடுத்தவர்களெல்லாம் தமிழக அரசு நிர்வாகத்தின் அனுமதி பெற்றே எடுத்து வந்துள்ளனர். கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்படங்களை எடுக்க தமிழக அரசு நிர்வாகத்தின் அனுமதி பெற்று படமாக்கப்பட்டது. அதற்கான கட்டணத்தைத் திரைப்படம் எடுப்போர் செலுத்தி வந்துள்ளார்கள். இவைகளெல்லாம் நடந்ததற்குக் காரணம் ஒகேனக்கல் தமிழகத்தைச் சேர்ந்ததால் தமிழக நிர்வாகத்தின் அனுமதி பெறவேண்டியது அவசியமாகிறது. அதே முறை தான் தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. திரைப்படம் எடுக்க தமிழக பரிசல்களையே பயன்படுத்தினர். தமிழக மீனவர்களே பரிசல்களை இயக்கி திரைப்படம் எடுக்க உதவினர்.

அதுமட்டுமல்ல பெரிய பாணி, சின்னபாணி (மாமரத்துக்கடவு, கோத்திக் கல்) கூடுதுறையில் படகுப் போக்குவரத்து தமிழகத் தாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்து மீனவர் கள் தொன்றுதொட்டு பெரிய பாணி, சின்னபாணி மற்றும் ஒகேனக்கல் பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். மேட்டூர் அணை கட்டப் பட்ட பிறகும் மேட்டூர் அணை மீன்வளத்துறை நிர்வாகம்தான் மீன்பிடிக்கும் உரிமம் வழங்கி வருகிறது. பெரியபாணி பகுதி யில் மீன்குஞ்சுகளை வளர்ப்பதும் மேட்டூர் அணை மீன்வளத்துறைதான். மீன் முட்டையிடும் காலங் களில் பெரியபாணிக்கு பெரிய பெரிய மீன்கள் வருகின்றன. அப்போது மீன்பிடிக்கத் தடை விதிப்பதும், பெரியபாணியில் சில இடங்களை மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி யாக அறிவித்து பாதுகாப்பதும், பராமரிப்பதும் தமிழக அரசுக்குச் சொந்தமான மேட்டூர் மீன்வளத்துறைதான். இத்தகைய முறையில் பெரிய பாணி தமிழகத்தின் பாரம்பரிய அனுபவ உரிமையில் உள்ள பகுதியாக இருந்து வருகிறது.

பெரிய பாணியில் பல நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும், தமிழகப் பகுதியிலிருந்து ஒரு இடத்தில் விழும் ஐந்து நீர் வீழ்ச்சிகளை ஐந்தருவிப்பகுதி என அழைக்கப்படுகிறது. ஐந்து நீர்வீழ்ச்சிகளும் ஒரே இடத்தில் விழும் இப்பகுதி ஆழமான நீர்விசை அதிகமான பகுதியாகும். எனவே, இதில் குளிக்க முடியாது. இதற்கு அருகில்தான் தொம்பச்சிக்கல் என்று ஒரு கற்பாறை உள்ளது. குளிக்க முடியாத பகுதியாக இருந்தாலும் ஐந்து நீர்வீழ்ச்சிகளையும் மிகப் புனிதமான, உன்னதமான பகுதியாக மக்கள் பக்திப்பரவசத்துடன் கை கூப்பித் தொழுவார்கள். காரணம்? இவைகள் ஐந்து புனித குண்டம் என்று அழைக்கிறார்கள். யாகம் வளர்த்தலை குண்டம் என்று வழங்குவது உண்டு. தீமிதிக்க (பூமிதிக்க) நெருப்பை வளர்த்து அதில் இறங்கிச் செல்வதையும் குண்டம் என்று அழைக்கப்படுகிறது. யாககுண்டத்தின் நினைவாக நீர்வீழ்ச்சிகளை குண்டம் என்றே அழைக்கப்படுகிறது. சிவகுண்டம், சக்திகுண்டம், ஓமகுண்டம், நெருப்பு (அக்கினி) குண்டம், பிரம்ம குண்டம் என்று ஐந்து நீர்வீழ்ச்சிகளையும் அழைக்கிறார்கள். ஐந்து அருவிகளும் ஐந்து பூதங்களாகக் கூறுவோரும் உள்ளனர். இவைகள் சங்கமிக்கும் இடம் மிக உன்னத நீர், புனித தீர்த்தம் கலப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் தவறி வீழ்ந்தும், மூழ்கியும், ஆற்றுச் சுழலில் சிக்குண்டு இறப்பதும், தற்கொலை செய்து கொள்வதும், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. கர்னாடக மக்களே பலர் இறந்திருக்கிறார்கள். பெரியபாணி, சின்ன பாணி, கூடுதுறையில் இத்தகைய சடலங்களைத் தமிழக காவல் துறையினர்தான் மீட்டு வழக்குத் தொடுத்திருக்கின்றார்கள். சில சடலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நெடுந்தொலைவில் ஒதுங்கிய நிலையும் உண்டு. பல சடலங்கள் மேட்டூர் அணைக்குப் போய்விட்டாலும் வழிநெடுகத் தேடி சடலத்தை மீட்டு வருபவர்கள் தமிழகக் காவல் துறையினர்தான். அதற்குப் பெரும் துணைபுரிபவர்கள் தமிழகப் பகுதியில் வாழும் மீனவர்களே. இந்த சடலங்களுக்கெல்லாம் தமிழக அரசு மருத்துவர்களே மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள். அடையாளம் தெரியாத சடலங்களையும் தமிழகக் காவல் துறையே அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர்.

இத்தகைய வழக்குகள் ஆயிரக்கணக்கில் நடந்துள்ளது. ஒரு வழக்கையாவது கர்னாடக காவல்துறையோ, வனத்துறையோ வழக்குகளை, விபத்துக்களை, பதிவு செய்தது உண்டா? இல்லை. காரணம்? இந்தப் பகுதி அனைத்தும் தமிழக நிர்வாகத்திலேயே இருந்து வருகின்றன. தமிழக அரசு நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை எடுப்பது கடமையாக இருந்து வருகிறது. எனவே, பெரியபாணி தமிழகத்தின் பாரம்பரிய அனுபவப் பகுதியாகும். தீவுத் திடல் (இடைத்திட்டு) தங்களுக்கு என புதியதாக உரிமை கொண்டாடிக் கிளம்பி இருக்கும் கர்னாடகத் தரப்பினர் எந்த அளவுக்கு இதைப்பற்றி அறிந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. பெரிய பாணியில் செல்லும் ஆற்று நீரும், சின்னபாணியில் செல்லும் ஆற்றுநீரும் கூடும் இடம் கூடுதுறையாகும். சின்னபாணி, பெரியபாணி, கூடுதுறை இந்தப் பகுதிகளுக்கு இடையே உள்ளது இடைத் திட்டு. இதைத்தான் தீவு என அழைக்கிறார்கள்.

இப்பகுதி தமிழக எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ளது. பென்னாகரம் வனச்சரகமும், ஒகேனக்கல் வனச்சரகமும் இரு வனச்சரகப் பகுதியும் தீவுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. வன எல்லைக்குள் வந்தாலும் இது வனமல்ல, ஆற்றின் ஒரு பகுதியாகும். பேவனூர்பீட், ஒட்டப்பட்டி வனபீட் எல்லைகளைப் பார்த்துவிட்டு மீதி கர்னாடகாவுக்குச் சொந்தமானது என்பாரும் உளர். ஆனால், தீவின் ஒரு பகுதியும் ஆற்றுப்படுகையும், மேட்டூர் அணை நீர்தேக்க நிலப்பரப்பும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நிலப்பரப்பாகும். இவர்களின் புதிய பார்வை பட்டுள்ள இப்பகுதி தமிழகப் பகுதி என்பதில் இரண்டு கருத்துக்கே இடமில்லை. இடைத் திட்டை ஒட்டி கூடுதுறையில் தென்வடலாக மணல்திட்டு ஒன்று உள்ளது. அணையில் நீர் அதிகமாக வரும்போது மூழ்கிவிடும். மற்ற காலங்களில் இடைத்திட்டை ஒட்டி தெற்கே நோக்கி நீண்டிருக்கும் மணல்திட்டும், தமிழகப் பகுதியில் உள்ளதாகும்.

இந்தத் தீவுக்கு சின்னபாணி மேல்தான் தொங்கும்பாலம் அமைக்கப்பட்டது. தொங்கும் பாலத்திற்கு அருகில் கிழக்குப் புறத்தில் சிறிய கல்லறை ஒன்று உள்ளது. அது கர்னாடகம் போட்ட எல்லைக்கல் என்ற புளுகு மூட்டையை சில கர்னாடக அலுவலர்கள் அவிழ்த்து விட்டுள்ளனர். ஏதேனும் தங்களுக்கு ஆதரவாக தடையங்களை உருவாக்க முடியுமா என்பதே அவர்களின் முயற்சி என்று தெளிவாகத் தெரிகிறது. அது தமிழகத்துச் சாமியார் தங்க அமைத்துக் கொண்ட சிறு குகை என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். இயற்கையாக இருந்த பாறையை ஒட்டி கற்களால் சுவர் எழுப்பு உள்ளே செல்ல சிறிய வழியை அமைத்து அதில் சாமியார் தங்கி இருந்தார். இதை அவர்களின் எல்லைக் கல்லாகக் கூறிய வினோதமும் நடந்தது! குளிக்கும் நீர்வீழ்ச்சி ஆற்றுநீர் சின்னபாணியில் சென்று சின்னாற்றுடன் கலந்து கூடுதுறைக்குச் செல்லுகிறது. சின்னபாணியில் ஆடுதாண்டிக் கல் ஒன்றும் உள்ளது. காவிரி ஆற்றில் அதிகமான அளவில் தண்ணீர் வரும்போது இந்தக் கல் மூழ்கிவிடும். வெள்ளம் சற்று குறைந்தால் வெளியில் தெரிகிறது.

கர்னாடகாவில் ஒரு ஆடு தாண்டிக்கல் உள்ள. கன்னடத்தில் ‘மேக்கதாத்' என்று அழைக்கப்படுகிறது. ‘மேக்க' என்றால் ஆடு என்று கன்னடத்தில் பெயர். ஆற்றுநீர் குறுகலான பாறை வழியாகப் பாய்ந்தோடும் நிலையில் இந்தக் கல் மீது ஆடு ஆற்றைத் தாண்டிச் சென்றதாம். எனவே, ‘ஆடு தாண்டிக் கல்' என்று பெயர் வந்தது. மேக்கதாத் மேக்தாத் என்று குறுகியும் வழங்கப்படுகிறது. கர்னாடக மாநிலத்தில் உள்ள சங்கமத்திற்கும் (கனகபுரா ஆறும், காவிரி ஆறும் சங்கமித்திருக்கும் இடம் சங்கமம்) 12 சக்கரபாணிக்கும் தமிழகத்தில் காவிரி நுழையும் இடத்திற்கும் (பாட்டிப்பாறை - அஜ்ஜிப்பாறை) இடையில் மேக்கதாத் உள்ளது. எனவே, கர்னாடகாவில் உள்ள ஆடுதாண்டிக்கல் வேறு தமிழகத்தில் காவிரியில் உள்ள சின்னபாணியில் அமைந்தள்ள ஆடுதாண்டிக்கல் வேறு. இரண்டில் தங்கள் பகுதியில் உள்ளது எதுவென்று கர்னாடகத் தரப்பில் குழப்பம் வந்துவிடக் கூடாது.

தீவுக்கு சின்னபாணியின் மீது தொங்கும்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அது அமைந்த பின்னர்தான் பல சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க முடிந்தது. பலர் குளிக்கும் இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சி மட்டுமே காவிரி என நினைத்துக் கொண்டிருப்பவர்களே அதிகம். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில் தொங்குபாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முடிவடையும் தருவாயில் தமிழகத்து வனத்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் பிரச்சனை ஏற்பட்டு இடையில் பணி தடைப்பட்டது. இது தமிழகத்தின் அவலநிலை!