Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2008

மதம் என்றால் என்ன?
- ராபர்ட் ஜி. இங்கர்சால்


கிறித்தவர்கள் பிற மதங்களெல்லாம் பொய்யெனக் கூறிக் கொள்ளுகிறார்கள். எனவே இங்கு கிறித்துவ மதத்தை மட்டும் விவரமாகப் பேசுவோம். அப்படிப் பேசினால் மதம் என்ன செய்திருக்கிறது என்பது நன்கு விளங்கும். கிறிஸ்தவ மதம் நன்மை விளைவித்துள்ளதா? மனிதர்களை உயரிய குணமுடையவர்களாக, தயாள சிந்தனையுடையவர்களாக மேலும் மேலும் உண்மையானவர்களாகச் செய்திருக்கிறதா? கிறிஸ்தவ திருச்சபைகள் ஆதிக்கமுடைய காலங்களில் மனிதர் சுகமாகவும், மேன்மையாகவுமிருந்தார்களா?

இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கீசு, அயர்லாந்து முதலிய தேசங்களில் கிறித்து மதத்தால் விளைந்ததென்ன? இன்னும் இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் செய்த நலங்களென்ன? யதார்த்தத்தை விரும்புவோர், நெஞ்சின் மேல் கையை வைத்துக் கேட்போம். இம்மதமில்லாவிட்டால் இந்நாடுகள் கேடடைந்திருக்குமோ? கிறிஸ்து மதமின்றி வேறுமதம் பரவியிருந்தால் இந்நாடுகளுக்கு ஏதேனும் கேடு சூழ்ந்திருக்குமா? இன்னும் பியூரிட்டன்ஸ் என்று சொல்லப்படும் வீர, வைதீகக் கிறித்துவப் பகுதியாரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கிறிஸ்து மதம் செய்ததென்ன? அவர்கள் இன்பத்தை வெறுத்தனர். அவர்கள் வாழ்க்கையின் வாசலில் இறப்பெனும் கருந்திரையைத் தொங்க விடுகிறார்கள். சந்தோஷ முழக்கங்கள் எழாதவாறு வாயைப் பொத்தி மூடி விடுகிறார்கள். அவர்களுக்கு ஆண்டு முழுவதும் துக்கம்தான். பாலியமும், இளமையும், குழந்தைகளின் மழலையும், காலைச் சங்கீதமும், உலகினின்று ஒழியும்படியாக அவர்கள் உழைத்தார்கள். இத்தகைய வீர வைதீகக் கிறிஸ்தவர்களின் மதம் ஓர் கலப்பற்ற துன்பக் களஞ்சியமாகும். அவர்கள் தங்கள் வேதாகமத்தை வேத வாக்காகக் கொண்டனர். இக்கொள்கை அவர்களைக் கொடியவர்களாகவும், இழிதன்மையாளர்களாகவுமே மாற்றியது. அவர்கள் வட அமெரிக்க இந்தியர்களது மதத்தைத் தழுவி இருப்பினும் கூட இதனினும் கேடான நிலைமையிலிருக்க மாட்டார்கள்.

உங்களின் வேதத்தைப் பற்றிய கொள்கை மக்களிடத்து எத்தகைய பலனைத் தந்தது என்பதற்கு ஓர் சான்று தருகிறேன். எலிசபெத் என்ற ராணிக்கு முடிசூட்டிய திருநாளில் காலம் என்பதற்குப் பிரதிநிதியாகத் தோன்றிய ஒரு கிழவன் சத்தியமென்ற ஒரு குழந்தை தன் பக்கம் நிற்க ஒரு வேதப் புத்தகத்தை அம் மகாராணிக்குப் பரிசாகக் கொடுத்தான். அம்மகாராணியும் உடனே அதைப் பணிவோடு வாங்கித் தனது கண்களில் ஒற்றி அதைக் கவனமாக வாசிப்பதாக வாக்களித்தாள். அவ்வேதத்தை உரிமையாக்கும் பாகத்தில் போப் கட்சியைச் சேர்ந்தவர்களையெல்லாம் தலையை வாங்கிவிடும்படியாக அம்மகாராணி வேண்டிக் கொள்ளப்பட்டாள். இந்தச் சம்பவத்திலிருந்து போப் கட்சிக்கு எதிராக வேதத்தை மதிக்கும் புனிதர்களுடைய உண்மையான மனப்பாங்கை அறிந்து கொள்ளலாம். அது தங்களுக்கு எதிர்க் கட்சி யாருடைய மனப்போக்கைப் போலவே அவ்வளவு கேவலமானதாயும், கொடூரமானதாயுமிருந்திருக்கிறது.

அமெரிக்காவில் ஜியார்ஜியா பகுதியில் உள்ள மக்களை அன்பும், தயாளமும் உடைவர்களாகச் செய்திருக்கிறதா? மனிதர்களை உயிரோடு தோலையுரித்து வதை செய்பவர்கள் கல்லாலும், மரத்தாலுமாகிய தெய்வங்களைக் கும்பிட்டாலும்கூட இதனினும் கொடூரமானவர்களாகி விடுவார்களா? மதமின்றி மக்கள் முன்னேற்றமடைய முடியாதா? மதத்தைக் கட்டி அழுதாய் விட்டது. மதத்தைப் பரிசோதனை செய்தாகிவிட்டது. எந்த தேசத்திலும், எந்தக் காலத்திலும் அது தவறு செய்து விட்டது. அதனால் எவ்வித உபயோகமுமில்லை. மதம் ஒருபொழுதும் மக்களை தயாள சிந்தையராக்கியதில்லை. மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டதையும், கழுவேற்றப்பட்டதையும் மறந்துவிடாதீர்கள். மதம் எப்பொழுதும் கலைகளுக்கும், விஷயப் பரிசீலனைகளுக்கும், அறிவிற்கும் விரோதியாகவே இருந்து வந்தது - வருகிறது.

மதம் மனிதனை எப்பொழுதும் விடுதலை செய்யவில்லை. அது ஒரு பொழுதும் மனிதனை ஒழுக்கமும், பரிபக்குவமும், சுறுசுறுப்பும், சக்தியும் உடையவனாகச் செய்வதில்லை. கிறித்துவர்கள் - நாகரிகமற்று நாட்டு மனிதர்களைப் பார்க்கிலும் பரிபக்குவமுடையவர்களென்றாவது தூய சிந்தையரென்றாவது, உண்மையானவரென்றாவது சொல்ல முடியுமா? காட்டு மக்களிடத்துக் காணப்படும் தீய குணங்களுக்கும், மனிதர்களிடத்துக் காணப்படும் தீய குணங்களுக்கும், கொடுமைகளுக்கும் அவர்களது மூட நம்பிக்கைகளே காரணமல்லவா? இயற்கையில் முழு அய்க்கிய ஒழுங்கில் நம்பிக்கையுடையவர்களுக்கு மதம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். உலகப் பொருள்களின் இயற்கையையும், குணங்களையும் நமது வழிபாடு மூலம் மாற்ற முடியுமா? நமது வேண்டுகோளின் பிரகாரம் கடலில் வெள்ளிய அலைகளைக் கூட்டவேனும் குறைக்கவேனும் முடியுமா? தியாகத்தால் காற்றுகளை மாற்ற முடியுமா? மண்டியிட்டு வணங்கினால் செல்வம் கிட்டுமா? தெய்வத்தினிடம் முறையிடுவதால் வியாதி குறையுமா? சடங்குகள் செய்வதால் நமது அறிவு வளருமா? ஒழுக்கமும் விழுப்பமும் பிச்சையாகப் பெற முடியுமா? மானசீக உலகத்தில் தோன்றும் உண்மைகள்கூட உலகத்தில் தோன்றும் உண்மைகளைப் போல இணங்காதவைகளாகவும் கட்டாயமானதாகவும் இருக்கவில்லையா? இயற்கையை ஆளும் ஒரு கர்த்தா இருக்க வேண்டுமென்றும், இக்கர்த்தா வழிபாடுகளுக்கு மனிமிரங்குகிறாரென்றும், வெகுமதியும் தண்டனையும் செய்கிறாரென்றும், இவர் வாழ்த்துதலையும், புகழ்ச்சியையும் விரும்புகிறாரென்றும், வீரமுள்ளவர்களையும் சுதந்திரமுள்ளவர்களையும் புறக்கணிக்கிறாரென்றும் எண்ணுகிறார்கள். இவ்வெண்ணத்தின் பேரிலேயே மதம் அமைந்திருக்கிறது.

மனிதனுக்குத் தெய்வலோகத்திலிருந்து கிடைத்த உதவி என்ன?

நாம் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றித் துணிவு செய்யுமுன் அதற்கு அடிப்படையாக உண்மைகளிருக்கின்றனவா என்று தெளிதல் வேண்டும். கட்டடத்திற்கு ஆதாரம் வேண்டுமா? நமது நிதானங்களைக் கொண்டும், பிரமைகளைக் கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் ஒரு கொள்கையை நிலை நாட்ட முடியுமா? கட்டடம் கட்டுவதாயின் அடியிலிருந்தல்லவா கட்ட வேண்டும்.

விசாரணையின்பேரில் எனக்கு ஒரு துணிவேற்பட்டிருக்கிறது. அதற்கும் நான்கு விஷயங்கள் அடிப்படை துலாவதாக பொருள், அல்லது பதார்த்தம். இது அழியாத வஸ்து. இரண்டாவது ஆற்றல், இதுவும் அழியாதது. மூன்றாவதாக, பொருளும் சக்தியும் இது இதென்று பிரிக்க முடியாதன சக்தியற்ற பொருளும் - பொருளற்ற சக்தியும் கிடையாது; நாலாவதாக, அழியாத தன்மையுடையனவற்றை ஒருவரால் ஆக்கப்பட்டனவாகக் கூறுதல் பொருந்தா வழக்காம்; அழிக்க முடியாததை ஆக்கவும் முடியாது.

இம்மூலக் கருத்துக்கள் உண்மையானால் பொருளும், சக்தியும் ஆதிமுதல் அந்தம் வரை இருக்குமென்பதும், அவற்றைக் கூட்டவோ குறைக்கவோ முடியாதென்பதும் தெளிவாய் நமக்குக் கிடைக்கின்றது. இதனின்று ஒன்றும் உண்டாக்கப்படவில்லை; ஒன்றையும் உண்டாக்கவும் முடியாது. ஆக்கியோன் ஒருவனுமில்லை; இருக்கவும் முடியாது என்பன விளங்கும். இவ்வடிப்படைக் கொள்கைகள் உண்மையானால் இயற்கைக்கு ஒரு எஜமானும் கிடையாது. பிறப்பு, இறப்பு அற்றதும், என்றும் பிரிக்கொணாததுமாக, பொருள், சக்தி என்பவைகள் இருக்குமாகில், ஒரு கடவுளுமிருக்க முடியாதென்பதும், ஒரு கடவுளும் இப்பிரபஞ்சத்தைப் படைத்து ஆளவில்லையென்பதும், பிரார்த்தனைகளுக்கு வரங்கொடுக்கும் கடவுள் கிடையாதென்பதும், ஒடுக்கப்பட்டவர்க்கு உதவும் ஒரு தெய்வமில்லையென்பதும், மாசற்றார் மனக்குறைகளுக்கும், வருத்தங்களுக்கும் இரங்கும் ஒரு கடவுளில்லையென்பதும், அடிபட்டுச் சாகும் அடிமைகள் விடுதலையையும், குழந்தையைப் பறி கொடுத்த தாயையும், சித்திரவதைப்படுவோர் துயரைத் தீர்ப்பதையும், தீச்சுடரில் எரிக்கப்படும் வைராக்கிய வீரனது விடுதலையையும், கவனிக்கக்கூடிய ஒரு கடவுள் இல்லையென்பதும் தானாகவே விளங்கும். அதாவது மனிதனுக்குத் தெய்வ சகாயமொன்றுமில்லை.

பெரும் பெரும் வேள்விகளும், யாகங்களும், தியாகங்களும் விழலுக்கிறைத்த நீரேயாகும். பிரார்த்தனைகளெல்லாம் கேட்பாரற்ற பாலைவனக் காற்றினிடையே செத்தொழிந்தன. நான் எல்லாம் தெரிந்ததாகப் பாவனை பேசவில்லை. எனக்குத் தெரிந்ததையே பேசுகிறேன். பொருளும் சக்தியும் என்றுமழியாது நிலவுவதனால் நடக்கக் கூடியனவெல்லாம் நடந்தன - இன்னும் நடக்கின்றன. பின்னாலும் நடந்தே தீரும் என்று எளிதில் உணரலாம். இப்பிரபஞ்சத்தில் தலைவிதியென்ற வீண் சாபல்யமொன்றும் கிடையாது. ஒவ்வொரு காரியத்திற்கும், நிகழ்ச்சிக்கும் காரணமுண்டு. நிகழாதன நிகழ்ந்திருக்க முடியாது. நிகழ்காலம் சென்ற காலத்தின் கர்மவிளைவாயும் வருங்காலத்தின் காரணமாகவும் இருக்கிறது. இத்தகைய முடிவற்ற நெடிய காலச் சக்கரமென்னும் சங்கிலித் தொடர்ச்சியில் காணாமற் போன, அல்லது ஒடிந்துபோன ஒரு வளையமாவது கிடையாது.

ஒவ்வொரு விண்மீனின் உருவமும் அசைவும் ஒவ்வொரு உலகத்தின் தட்பவெப்பமும், அசைவும் ஒவ்வொரு உலகத்தின் சீதோஷ்ணமும், கந்த மூலாதிகள் முதற்கொண்டு சகலவிதமான உயிர்களின் தோற்றமும், உருவமும் எல்லாப் பிறவிக் குணங்களும், புத்தியும், மனச்சாட்சி உண்டெனக் கூறுவதும், மறுப்பதுவும், சகல தூயக் குணங்களும், தீய குணங்களும் எல்லாவிதமான கனவுகளும், நினைவுகளும் நம்பிக்கைத் துரோகங்களும் காரணங் கொண்டு அவசியமாக ஏற்பட்டவையேயாகும். இப் பிரபஞ்சத்தில் ஏற்பட்டுள்ள எண்ண முடியாத பொருள்களிலேனும் அவற்றின் சம்பந்தங்களிலேனும் எதுவும் வேறுவிதமாக இருந்திருக்க முடியாது.

பெரும் சக்தி பிறப்பற்று என்றும் நிலைத்திருக்குமானால், மனிதன் ஒரு தனித்த விசேஷமான படைக்கப்பட்டப் பொருளில்லையென்றும், அவனை ஒரு கூரிய அறிவு படைத்த கடவுள் படைக்கவில்லையென்றும், நாம் சொல்லலாம். கடவுள் களிமண்ணைக் கலந்து ஆண் - பெண் உருவாக்கி உயிர் மூச்சினை அதனுள் ஊதிவிடவில்லை என்று நமக்கு இப்போது தெரியும். நமது முற்பிதாக்கள் வேறு உலகத்தாரல்லவென்று இப்பொழுது அறிவோம். அவர் இவ்வுலகிலேயே தோன்றி வளர்ந்தவரென அறிகிறோம். நமக்கு ஏதாவது தெரியுமானால் இந்தப் பிரபஞ்சம் இயற்கையானதென்றும், அதிலுள்ள ஆண்களும் - பெண்களும் இயற்கையாகவே பிறந்திருக்கிறார்களென்றும் தெரியும். நமது முன்னோர்களைத் தெரியும். அவர்களது சந்ததி வரலாறுகளையுமறிவோம். இவ்வுலக வளர்ச்சியில் ஆதிமுதற்தொட்டு மனிதன் வரையுண்டான சங்கிலியின் தொடுப்புகள் முழுமையும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. கடவுள் ஆவேசத்தினால் எழுதப்பட்ட வேத புத்தகங்கள் மூலம் நமக்கு இவ்விஷயங்கள் கிடைக்கவில்லை. உலகத்தில் கிடைக்கும் உண்மைகளைக் கண்டும், உயிர்களின் உருவங்களைக் கொண்டுமே இச்செய்திகள் உறுதி செய்யப்படுகின்றன.

மிகச் சாதாரணமான பிராணிகளிலிருந்து இன்னதெனக் குறிக்கமுடியாத ஒரு தேவையிலிருந்து குருட்டுத்தனமான உணர்ச்சியிலிருந்து இவ்விதமாகப் பெருகி வளர்ந்து கொண்டே வந்து உருவங்களிலும் வகைகளிலுமிருந்தே கடைசியாக மனிதன் தோன்றுகிறான். வாழ்க்கையென்னும் தேர் ஓடிய தெருக்களெல்லாம் நமக்குத் தெரியும். முன்னேறுமாறு எடுத்து வைத்த காலடிகள் நமக்குத் தெரியும். அவைகளைத் தேடி எடுத்து விட்டோம். இதற்கு நாம் எர்னஸ்ட்டு ஹெக்கல் என்ற சிறந்த உயிர் நூல் புலவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்பொழுது நாம் இப் பிரபஞ்சத்தின் இயற்கையை நம்பி அதில் ஒரு விளக்க முடியாத அற்புதத் தெய்வீகத் தன்மை இருப்பதை மறுக்கிறோம்.

சீர்திருத்தம்

உலகத்தைச் சீர்திருத்தும்படியாக ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்கள் முயன்று வருகிறார்கள். மக்கள் தெய்வங்களையும், தேவதைகளையும், பிசாசுகளையும், பூதங்களையும், சுவர்க்கங்களையும், நரகங்களையும் உண்டு பண்ணினார்கள். வேத சாத்திரங்களை எழுதினார்கள். அற்புதங்களைச் செய்தார்கள். தேவாலயங்களையும் காலக் கிரகங்களையும் நிறுவினார்கள். அரசர்களுக்கும் அரசிகளுக்கும் முடிசூட்டினார்கள். மகுடங்களைப் பிடுங்கினார்கள். சிறைகளிலடைக்கவும் சித்திரவதை செய்யவும் தோலையுரிக்கவும், உயிருடனெரிக்கவும் தலைப்பட்டார்கள். பிரார்த்தனைகளும், பிரசங்கங்களும் செய்தார்கள். பலவிதமாக வாக்களித்தும் பயமுறுத்தியும் பார்த்தார்கள். ஏமாற்றத்தாலும் இன்சொல்லாலும் வெல்ல நினைத்தார்கள். அறிவுரையும் போதனையும் செய்தார்கள். இம்மட்டோ! இன்னும் எத்தனை விதமாகவோ மக்களை உண்மையானவர்களாக்க - ஒழுங்கானவர்களாக்க - தொழில் தேர்ச்சியுடையவர்களாக்க - ஒழுக்கமுடையவர்களாக்க முயன்றார்கள். மருத்துவமனைகளையும், கல்லூரிகளையும் பெருக்கிக் கட்டினார்கள். மக்களை மென்மேலும் சுகமுடையவர்களாக்கவும், நல்லவர்களாக்கவும் செய்வதற்குத் தங்களால் ஆனதையெல்லாம் செய்தார்கள். என்றாலும் அவர்கள் முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. விழலுக்கிறைத்த நீரேயாயின - ஏன்? இதற்கு நான் காட்டுகின்ற காரணமென்ன?

அறியாமையும், ஏழ்மையும் தீமையும் உலகத்தில் சூழ்ந்திருக்கின்றன. சாக்கடைகள், குழந்தைகள் வளருமிடமாக இருக்கின்றன. தங்களுக்கே ஆதரவற்று சாப்பாட்டிற்கில்லாத மக்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் வெளி இடங்களிலும் குழந்தைகளைப் பெற்று நிரப்புகின்றார்கள். அவர்கள் கடவுள் அருளையும் அதிர்ஷ்டவசத்தையும், தர்ம சிந்தனையையும் நம்புகிறார்கள். அவர்கள் செயல்களின் பலாபலன்களையும் தங்களது பொறுப்பையும் உணரத்தக்க புத்தியில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளை விரும்பவில்லை. ஏன்? பிள்ளை, அவர்களுக்கும் அந்தப் பிள்ளைகளுக்குமே ஒரு பெருத்த சனியனாக இருக்கிறது. அது ஒரு பெருத்த பாரமாகையால் அதை விரும்பவில்லை. இத்தகைய தேடுவாரற்ற குழந்தைகள், சிறைகளையும் வைத்தியசாலைகளையும் நிரப்புவதுடன் தூக்கிற்கும் தங்கள் கழுத்தைக் கொடுக்கின்றன. ஒரு சில அசம்பாவிதமாக அதிர்ஷ்டத்தினாலோ அன்றி பிறர் தயவாலோ காப்பாற்றப்படுகின்றன. அவைகள் தீயக் குணங்களையும் கொடுமையையும் கைக் கொள்ளுகின்றன. அவைகள் பொய்ப் புரட்டுக்களாலும் கொள்கைகளினாலும் உயிர் வாழ்கின்றன.

தங்கள் தீய குணங்களைத் தங்களுடன் மட்டுமே வைத்துக்கொள்ளாது தங்கள் வாரிசுகளுக்கும் அளிக்கின்றன. இதனால் விளையும் தீங்குகள் அளவிடற்கரியதாய் மிளிர்கின்றன. இத்தகைய தீமை வெள்ளப் பெருக்கெடுத்து வருங்கால் அதற்கெதிரான சீர்திருத்தத் துறைகள் எம்மட்டு? தாட்சண்யமுங்கூட தன்னையறியாது கொலை - களவு குற்றங்களை அதிகரிக்கும் ஒரு கருவியாய் விடுகிறது. தவறுகளைச் செய்வது இயற்கைக்கு ஓர் அறிகுறி போன்று தோன்றுகிறது. ஏன்? இயற்கைக்கு புத்தியேனும் முன்கூட்டி அடைந்த நோக்கமெனும் இல்லாமையே ஆகும். இயற்கை யாதொருவிதமான நோக்கமுமில்லாமல் படைக்கவும் கருத்தில்லாமல் படைத்தவற்றைக் காக்கவும் எண்ணமின்றி இவற்றை அழிக்கவும் செய்கின்றது. மனிதனுக்குச் சிறிது அறிவிருக்கிறது. அவன் அதை உபயோகப்படுத்த வேண்டும். மனிதனை உயர்த்தக்கூடிய சக்தி அறிவொன்றேயாகும்.

அறிவீனர்களும், ஏழைகளும், கொடியவர்களும் குழந்தைகளைப் பெருக்கா வண்ணம் தடுக்க முடியுமா? என்பதே கேள்வி. அறியாமையும், கொடுமையும் ஆற்றுப் பெருக்கெடுத்து நாகரிகமெனும் ஊருணியைக் கெடுக்காம லிருக்கச் செய்ய முடியுமா? இவ்வுலகம் எப்பொழுதும் அறியாமைப் பேய்க்கு அடிமையாக இருக்க வேண்டுமா? பலா பலன்களை யாவரும் சிந்திக்கும்படி செய்யக்கூடிய அளவு நாகரிகம் உலகில் வளரும்படி செய்ய முடியுமா? பாரமாகவும் தொல்லையாகவும் கருதக்கூடிய தங்களால் பராமரிக்க முடியாத குழந்தைகளை ஏன் பெற வேண்டும்? அவர்களுக்குப் புத்தியையும் மனச்சாட்சியையும் நியாயத்தையும் விட பெண்ணாசை அதிகமாக இருப்பதினாலல்லவா? இவர்களைத் துண்டுப் பிரசுரங்களாலும் வீண் பேச்சுகளாலும் திருத்த முடியாது. இன்னும் உபதேசங்கள் மூலமாயும், கொள்கைகள் மூலமாயும் திருத்த முடியாது. ஆசை இப்பொழுதும், எப்பொழுதும் செவிடாகவே இருந்து வருகிறது.
இச்சீர்திருத்த வழிகள் பலன் தரா.

குற்றவாளிகள் நாடோடிகளும் பிச்சைக்காரர்களும் இன்னும் எண்ணற்ற குறைகளும் நாள்தோறும் பெருகிக் கொண்டே வருகின்றன. சிறைச்சாலைகளும் அன்னச் சந்திரங்களும் நிறைந்திருக்கின்றன. மதம் பயனற்றுத் தயங்கித் தவிக்கிறது. சட்டம் தண்டனை செய்யக்கூடுமே தவிர குற்றவாளிகளைச் சீர்திருத்தவாவது குற்றங்களைக் களையவாவது முடியாது. கொடுமையின் கடுமை உயிர்த்து வருகின்றது. இதற்கு விரோதமாகச் செய்கின்ற காரியங்கள், நள்ளிரவின் இருளைப் போக்க முயலும் மின்மினிப் பூச்சிகளின் செய்கைகளையே ஒத்திருக்கின்றன. ஆனால், நம்பிக்கை ஒன்றிருக்கிறது. அறியாமையும் ஏழ்மையும், தீமையும் உலகத்தை நிரப்புவது நின்றே தீர வேண்டும். ஒழுக்க ரீதியாய் போதிப்பதனால் இக் காரியம் கைகூடாது. மதத்தினாலாவது, சட்டத்தினாலாவது குருவினாலாவது மிருக பலம் அல்லது ஒழுக்க நியாயம் இவற்றின் வலிகொண்டாவது முடிக்க முடியாது. இதனைச் சாதிப்பதற்கு ஒரே ஒரு வழிதானுண்டு. கலைப் பெருக்கும், ஆராய்ச்சியும் வளர்ப்பதோடு மங்கையரை, தயை சுதந்திரமுடையவர்களாகவும் தமக்குத்தாமே அரசிகளாகவும் செய்ய வேண்டும்.

மனித குலத்தை கடைத்தேறச் செய்யக்கூடிய ஒரே பொருளான உண்மைகளை - மாதர்கள், தாய்களாக வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தாமே தீர்மானிக்கும் சக்தியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இதுவே சரியான வழி. இதுவே மாதர்களுக்கு விடுதலையளிக்கிறது. இவ்விதமாகப் பிறக்கிற குழந்தைகள் போற்றிப் பராமரிக்கப்படும். அவைகளை தாய்மார்கள் அள்ளி யெடுத்து மார்போடணைத்து உச்சி மோந்து வெள்ளமெனச் சுரக்கும் பால் தருவார்கள். அவைகள் வீட்டிலே மட்டற்ற மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டாக்கும்.

சுதந்திரமுடையவர்களைக் காட்டிலும் அடிமைகளே உண்மையும் சுத்தமும் உடையவர்களென்று எண்ணுகிறவர்களும், கல்வியறிவைவிட பயமே நம்பிக்கையான வழி காட்டியென நம்புகிறவர்களும், பிறர் ஆணைகளைத் தலை மேற்கொள்ளுகிறவர்களே நல்லவர்களெனக் கருதுபவர்களும், அறியாமையெனும் படுகுழியிலிருந்து நற்குணமெனும் அழகிய வாசனையுடைய மலர் தோன்றுவதாக நினைப்பவர்களும் அவர்களது கலவரமும் குழப்பமும் அடைந்த முகங்களைத் தமது கைகளால் மூடிக்கொள்ளட்டும்.

இன்னும் ஒழுக்கமெனும் உயரிய பொருளைத் தேடுவதற்கு அறிவெனும் கருவி பகையென்பவர்களும், அந்தகார இருளில் பரிசுத்தம் வகிப்பதாகக் கருதுகிறவர்களும், மனிதர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ளுதல் தீமையெனக் கருதுகின்றவர்களும், ஆசையை அடக்கியாளும் ஒரு கருவியாக நாம் அறிவைக் குறிப்பதைக் கண்டு அலமலந்து பயப்படுவார்கள். ஆனால், நான் ஆண்களும் பெண்களும் தங்களுக்குள்ள பலாபலன்களை அறியும் சக்தியினாலும், அறிவினால் விளையும் ஒழுக்கத்தாலும் வியாதிகளையும் துக்கத்தையும் உலகத்தைவிட்டு ஓட்டக்கூடிய ஒரு காலத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்காலம் வரும்பொழுது சிறைச்சாலைகளின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுவிடும்; காவற்கூடங்களில் வெளிச்சம் நிறுவப்பட்டு, நிரம்பவும் மக்களைத் தூக்கிலிடும் தொல்லையும் ஒழியும். ஏழ்மையும் தீய குணங்களும் சந்ததியற்றுப் போகும். மக்கள் பசிப்பிணியால் நைந்த - மெலிந்த கைகளைப் பிச்சைக்காக நீட்ட மாட்டார்கள். உலகம் முழுமையும் சுதந்திரமும் உன்னதமுமடையும்.

மதம் ஒருக்காலமும் மக்களைச் சீர்திருத்தாது. அடிமைத்தனமே மதம். பயமெனும் மதில்களையும் கோட்டைகளையும் உடைத்து சுதந்திரத்தோடு வருங்காலத்தை நேர்முகமாக எதிர்ப்பது அதனினும் எத்தனையோ மடங்கு மேலானதாகும். இன்னும் சில வேளைகளில் கவலையற்றுத் தன்னை மறந்திருப்பதும், வந்தனவற்றை ஏற்று அதற்கேற்ப நடத்தலும், கண்மூடித்தனமான உலக சக்தியில் மிதப்பதும், நினைவிலும் கனவிலும் காலத்தைக் கழிப்பதும், உயிர்களின் கட்டுப்பாடுகளையும் சங்கிலிகளையும் அறுப்பதும், நமது நோக்கத்தையும் முடிவையும் மறப்பதும், மனம் கட்டுகின்ற காட்சி மாளிகையில் உறங்குவதும், அனுபவித்த சுகங்களை நினைந்து நினைந்து மகிழ்வதும், வாழ்க்கையின் ஆரம்பத்தைத் திரும்பக் கொண்டு வருதலும், இறந்தவர்தம் உருவங்களையும் முகங்களையும் திரும்பக் காணுதலும், வரும் வருஷங்களில் விளைவிப்பதற்காக அழகிய படக் காட்சிகளைப் போன்ற மனோராச்சியங்கள் செய்வதும், தெய்வங்களையெல்லாம் இன்னும் அவற்றினுடைய வாக்குத் தத்தங்களையும் பயமுறுத்தல்களையும் மறப்பதும், வாழ்க்கை இன்பமான இரத்த ஓட்டத்தை உங்கள் நரம்புகளில் கண்டு உற்சாகப்படுவதும், போர் முரசுக்கேற்ப உங்களது பயமற்ற இருதயநாடி அழகாக அடிப்பதும் - இவையெல்லாம் மதமெனும் அடிமைத்தனத்தை விட எத்துணை மேலானது!

அப்பால் நல்லன யாவையும் நாடிச் செய்ய விரைதல், அறிவு பணித்த மனோரதத்தை எண்ணி துணிந்தியற்றுதல், அழகிய மனவெழுச்சிகளுக்கு இறக்கைகள் தந்து அவைகளைத் தேனீக்கள் போன்று கழிவுறு மலர்கள் என்னும் கடையான பொருள்களிடத்திருந்துங்கூட களிதரு அமிர்தம் போன்ற கலைகளைக் கொண்டுவரச் செய்தல், தைரியமான தேரிய கண்களால் உண்மைகளைக் காணுதல், முற்காலத்திற்கும் தற்காலத் திற்குமுள்ள நுண்ணிய தொடர்புகளைக் காணுதல், நொந்தார் சுமைகளை ஏற்றுத் தாங்குதல், அறிவை வளர்த்தல், நியாயத்தைப் பாதுகாத்தல், ஆன்மாவிற்கு ஒரு அழகிய அரண் கட்டுதல் ஆகிய இவையன்றோ உண்மை நெறி; இவற்றைச் செய்வதன்றோ உண்மையான வணக்கம்.


கேளுங்கள் தரப்படும்

அமெரிக்காவிலுள்ள புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகம் அறிஞர் அண்ணாவுக்கு கௌரவ (பெலோஷிப்) விருது வழங்க அழைப்பு விடுத்திருந்தது. அதுவரை அமெரிக்காவுக்கு அப்பாலுள்ள நாட்டவர் எவருக்கும் ‘பெலோஷிப்' விருது வழங்கியது இல்லை. முதல் முறையாக விதிகளைத் திருத்தி இந்தியாவின் தென்கோடியிலுள்ள ஒருவரை அழைத்துப் பெருமைப்படுத்த விரும்பியது யேல் பல்கலைக்கழகம்.

அறிஞர் அண்ணாவைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. யேல் பல்கலைக்கழகம் சென்று பெலோஷிப் பட்டம் பெற்றதும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் அண்ணாவைத் தனியே அழைத்துச் சென்றனர். சிறப்பு விருந்தினராக வருகை புரியும் அறிஞர்களிடம் அம்மாணவர்கள் கலந்துரையாடி ஒரு கேள்வியைக் கேட்டு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறுவதைக் கண்டு உள்ளூற மகிழ்வது வாடிக்கை.

அன்று அவர்களிடையே அறிஞர் அண்ணா சிக்கிக் கொண்டார். அவரது அறிவாழத்தைக் கண்டறிய மாணவர்கள் கேள்விக் கணையை விடுத்தனர். ஏறிய மேடைகளில் எல்லாம் எதிரிகள் கேட்ட எண்ணற்ற கேள்விகளுக்கு அண்ணா பதில் சொல்லி வாயடைக்கச் செய்வதில் வல்லவராயிற்றே. யேல் பல்கலைக்கழக மாணவர்களின் கேள்விகளா அண்ணாவைத் திணற வைக்கும்?

‘BECAUSE' என்கிற சொல் மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியத்தை உங்களால் சொல்ல முடியுமா?

இதுதான் மாணவர்கள் அண்ணாவின் முன்வைத்த கேள்வி. சிறிதும் தயங்கினார் இல்லை அணணா. மின்னல் வேகத்தில் பதில் வந்தது அண்ணாவிடமிருந்து, No sentence ends with BECAUSE, because because is a conjunction என்றார் அண்ணா. ஆச்சரியப்பட்டார்கள் மாணவர்கள். பலரைத் திக்குமுக்காட வைத்த மாணவச் செல்வங்களை அண்ணா திகைக்க வைத்தார்.

மாமனிதர் அண்ணா என்று மாணவர்கள் மனங்கள் கொண்டாடின. மேலும், வள்ளுவரின் குறளை அம்மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு விடைபெற்றார் அண்ணா.
தரல் : பல்லவன்