Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2008

பண்பாடு பலி பீடமா?
- நெஞ்சின் அலைகள் -
ஆனாரூனா


தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு'
என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.

ஒரு தமிழன் என்கிற முறையில் அந்த வரிகள் மீது எனக்குப் பெருமிதம் எழுந்தாலும், ‘ஒவ்வொரு மனிதனும் தனது அறிவு பூரணத்துவம் வாய்ந்ததென்றும், தனது குழந்தை அழகானதென்றும் நம்புகிறான்' என்று பாரசீகக் கவிஞர் ஷாஅதி கூறியதும் நினைவுக்கு வருவதுண்டு.

தொடர்ந்து அறிஞர் பெர்னாட்ஷாவின் புகழ் பெற்ற சொற்றொடரும் பளிச்சிடும். ‘ஒருவன் ஒரு நாட்டிலே பிறந்து விட்டான் என்பதாலேயே, அந்த நாடு உலகின் மற்ற எந்த நாட்டையும் விட, உயர்வானது என்று நம்பும் முட்டாள்தனத்துக்குப் பெயர்தான் தேசபக்தி!'

இவ்வாறெல்லாம் யோசிக்கும் வேளையில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' எனும் நாமக்கல்லார் வரிகள் வெறும் சுயதம்பட்டம் என்றாகி விடுகிறது. ஷாஅதியும் பெர்னாட்ஷாவும் சுய தம்பட்டப் பேர்வழிகளின் போதையேறிய ஆர்ப்பாட்டங்களின் மீது வெறுப்புற்று, தமது கண்டனங்களைப் பொழிந்திருந்தால்?....

நாமக்கல் கவிஞரின் நெஞ்சுரம் மிகவும் பொருளுடையதாகிறது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பது சமூக விஞ்ஞானத்தின் ‘அகர'மாகும். நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும்; மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு என்று வள்ளுவரும், வாழ்நிலைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது என்று அறிஞர் கார்ல் மார்க்சும், சொன்னதெல்லாம் வேடிக்கைப் பேச்சுதானா?

இல்லை! சரி; தமிழர்க்கென்றொரு குணம், பண்பாடு உண்டு என்றால், ஆரியர்க்கென்றொரு பண்பாடும், ரோமானியர்க்கென்றொரு பண்பாடும், சீனர்க்கென்றொரு பண்பாடும் உண்டு அல்லவா? நிச்சயமாய் ஒவ்வொரு இனத்துக்கும் அதனதன் வாழ்நிலைக்கேற்ப குணமும் பண்பாடும் அமைந்து விடுகிறது. முதலில், தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்கிற கருத்தைப் பரிசீலிக்கலாம்.

தமிழர்கள் வரலாற்றுரீதியாக ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கென்று திட்டவட்டமான ஒரு நாடு, ஒரு மொழி சார்ந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பாதுகாப்பான, அச்சமற்ற வாழ்வாதாரத்தை இயற்கை வழங்கியிருக்கிறது. அதனால், பேராசைகளோ, போர் வெறிகளோ இல்லாத - ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்கிற விரிந்த பார்வையும் மனித நேயமும் தமிழனத்துக்கு இயல்பான பண்பாடாக அமைந்து விட்டது. தமிழர்கள் தாம் மாத்திரமே உயர்ந்த குலத்தார்; மற்றவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்று பிறப்புரிமை, தெய்வீக உரிமை கொண்டாடியதில்லை. அறம் சார்ந்து நின்றார்கள். ஈன்ற தாயே பசியின் கொடுமைக்கு ஆளானபோதிலும் சான்றோர் பழித்த காரியம் செய்யர் என்று குறள் ஒளியுறுத்துகிறது.

தமிழர்கள் போர் செய்ததுண்டு. அது, நாடு பிடிக்கும் வெறியால் நேர்ந்ததல்ல. அகந்தை கொண்டோரை அடக்குவதற்கு மட்டுமே தமிழன் களம் கண்டான். வென்ற நாடுகளைத் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர வேண்டும்; அடிமைகளின் கண்ணீரில் ஆனந்தம் கொள்ள வேண்டும் என்று எப்போதும் அவன் எண்ணியதில்லை. தமிழர்களின் சங்ககால வாழ்க்கை கூறும் சரித்திரச் சான்றுகள் இவை. பார்ப்பனர்களோ, தமிழினத்துக்கு நேரெதிரான பண்பாடு கொண்டவர்கள். அவர்களுக்கு நிலைத்த நாடு இல்லை; நிரந்தர மொழி இல்லை. ஆடு மாடு மேய்க்கும் நாடோடி வாழ்க்கை திட்டவட்டமான ஒரு தேசிய இனம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி இல்லை. இம்மாதிரியான வாழ்நிலை அவர்களைச் சாதுரியம் மிக்க மோசடிப் பேர்வழிகளாக மாற்றிவிட்டது. சூழ்ச்சி நடவடிக்கைகளை ராஜதந்திரம் - அர்த்தசாஸ்திரம் என்று பாராட்டுவது பழகிப்போன ஒன்று. தங்களை ஒரு தேசிய இனமாக - நாகரிக மாந்தராக நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியாத தாழ்வு மனப்பான்மையின் கொதிப்பேறிய வெளிப்பாடு அவர்களை அகம்பாவத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.

பிறக்கும்போதே ஒருவன் உயர்ந்த சாதி, அல்லது கீழ்சாதி என்று தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. பார்ப்பனன் சாதியால் உயர்ந்தவன். மற்றவர்கள் எல்லோரும் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களே என்று பார்ப்பனர் கர்வம் கொண்டு திரிவதற்குக் காரணம், தன் கர்வத்துக்குக் காரணமான எந்தத் தகுதியும் தனக்கு இல்லை என்கிற சுயகழிவிரக்கமே. அவமான உணர்ச்சி அகம்பாவத்தால் மார்தட்டிக் கொள்கிறது. அறம்சார்ந்த வாழ்க்கை அவர்கள் அறியாதது. மனுதர்ம நூலின் ஒவ்வொரு வரியிலும் கபடம் ஒளிந்திருப்பதைப் பாமரன் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

இந்திரனே மதமற்ற கறுப்பு மனிதர்கள் வர்ணபகவானைச் சிறையிலடைத்திருக்கிறார்கள். நீ அந்தச் சிறையைத் தகர்த்து அவனை விடுதலை செய் என்றெல்லாம் ரிக்வேதம் கூறுகிறது. இந்திய மண்ணின் மைந்தர்கள் விவசாயத்துக்காக அணைகட்டி நீரைத் தேக்கியிருக்கிறார்கள். அதைத்தான் வர்ணபகவானைக் கைது செய்திருப்பதாக எண்ணி, அணையை உடைக்குமாறு இந்திரனை வேண்டுகிறார்கள். அணையை உடைப்பது - பொதுச் சொத்தை அழிப்பது - பார்ப்பனர்கள் நோக்கில் குற்றமோ, பாவமோ அல்ல.

அலெக்சாந்தர் இன்டிகா (இந்தியா)வுக்குள் வந்து பல சிற்றரசர்களை வெல்கிறான். வென்ற பகுதிகளில் தனது கடவுளை (ஜீயஸ்) வணங்குவதற்காக வழிபாட்டுத் தலங்களை அமைக்கிறான். அதுவரை அப்படியெல்லாம் நேர்த்தியான வழிபாட்டுத் தலங்களைக் கண்டறியாத கௌடில்யன் (சாணக்கியன்) அலெக்சாந்தரின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து தன் ஆரியக் கடவுளர்களின் சின்னங்களை வைக்கிறான். ‘ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பதும், அழிப்பதும், தன்வயப்படுத்துவதும் நேர்மையானவர்கள் செய்கிற காரியமா?' என்று சந்திரகுப்தன் கேட்கிறான்.

கௌடில்யன் கொஞ்சமும் கூச்ச உணர்ச்சியில்லாமல் சொல்கிறான்: ‘சாதிக்க நினைப்பவன் சாத்திர தர்மங்களைப் பார்க்கக் கூடாது!'

அலெக்சாந்தர் வருகையின்போது சிந்து சமவெளி ‘சிந்தஸ்' என்றும் ‘இன்டஸ்' என்றும் அழைக்கப்பட்டது. இதுவே செல்யூகஸ், மெகஸ்தனிஸ் போன்றவர்களால் இண்டிகா என்று அழைக்கப்பட்டது. இண்டிகா தான் ‘இண்டியா' ‘இந்தியா' என்று மருவியது. இப்பகுதியில் வாழ்ந்த பூர்வீக மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்கள் உயர்ந்த நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று அரப்பா - மொகஞ்சாதாரோ அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. அந்த மக்கள் பயன்படுத்திய பாண்டங்களில், சிற்பங்களில் மதர்த்த மாடுகள் காணப்படுகின்றன. இப்போது அந்த வரலாற்று ஆவணங்கள் கணினி மூலம் மாற்றப்படுகின்றன. காளைகள் குதிரைகளாக மாற்றப்படுகின்றன. ஏன்? ஏன்?

காளை திராவிடர்களுடன் தொடர்புடைய சின்னம் என்றால், குதிரை ஆரியர்களுடன் தொடர்புடையது என்று ஒரு பொய்யான சான்றை உருவாக்கி, அதன் மூலம் ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆதியில் திராவிடர்கள் இந்தியாவில் இருந்ததில்லை, பிற்காலங்களில் அவர்கள் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருக்கலாம் என்று உரிமை கொண்டாடலாம் அல்லவா? ஆரியர்களைப் பொறுத்தமட்டில், தமக்கு நல்லது என்றால் எதையும் செய்யலாம்; எப்படியும் செய்யலாம் என்று திடமாக நம்புகிறவர்கள்.

அன்று அலெக்சாந்தரின் வழிபாட்டுத் தலங்களை மாற்றி அவற்றை ஆரியர்களின கோயிலாக மாற்றினான் கௌடில்யன் என்றால், இன்று முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துவிட்டு, அங்கே ராமர் கோயில் கட்டுவதில் தீவிரம் காட்டினார் அத்வானி.

தாய்நாடற்றவர்கள் என்கிற அவப்பெயரிலிருந்து விடுபடுவதற்காக, நாங்கள் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வம்சத்தார், இந்தியா ஆரியர் நாடே என்று ஒரு புதிய பட்டா உயில் ஆவணம் நிறைந்த வரலாறு படைக்க நினைக்கிறார்கள் ஆரியர்கள். தங்களது தொன்மை அடையாளங்களைக் கற்பனை வழியாகக் கண்டுபிடித்து அதுதான் வரலாறு என்று நிரூபிக்க வெறிகொண்டு திரிகிறார்கள். சிந்து சமவெளியில் மாத்திரமல்ல, கடல் கொண்ட குமரிக் கோட்டத்திலும் ஆரியர்களே நாகரிகச் சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்று நிரூபிக்கும் முயற்சியின் தொடர்ச்சிதான் இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே கடலுக்கடியில் ராமர் பாலம் இருக்கிறது என்று பொய்யுரைத்துப் போர்க் கொடி தூக்கும் நிகழ்ச்சிகள்.

ராமர் பாலம் இருந்ததற்கு என்ன ஆதாரம்? அது எங்கள் மத நம்பிக்கை! மத நம்பிக்கையைப் புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்! மதநம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதும், அறிவார்ந்த சான்றோர் ஆயம் என்று நம்பப்படுகிற நீதிமன்றம் புராணக் கதைகளை வரலாறாக்கும் இழிசெயலுக்குத் துணைபோவதும் எப்படிச் சாத்தியமாகிறது? கயமைத்தனங்களை ராஜதந்திரம் என்று புகழ்வதும், புராணப் புனைவுகளை சரித்திரச் சான்றுகளை மாற்றுவதும் அவர்களுக்குக் கைவந்த கலைதான். அதனால்தான் பார்ப்பனன் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்று தந்தை பெரியாரும் அறிவார்ந்த சான்றோரும் பகிரங்கமாகக் கூறினார்கள்.

இரண்டாம் உலகப் போர் எப்படித் தொடங்கியது? உலகத்தின் வரைபடத்தையே மாற்றி அமைக்க வேண்டும். விரிந்து பரந்த ஆரிய சாம்ராஜ்யம் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான் இட்லர். பக்கத்திலே நட்பு நாடு என்று கருதப்படும் போலந்து இருக்கிறது. போலந்து நட்பை மறந்து ஜெர்மனி மீது படையெடுத்து ஆக்கிரமித்து விட்டது. இந்தத் துரோகத்துக்குப் பதிலடி தரவேண்டும் என்று ஜெர்மன் மக்களையும், உலக நாடுகளையும் நம்ப வைப்பதற்காக, ஜெர்மன் வானொலி நிலையத்துக்குள் போலந்து ராணுவ உடை தரித்த நாஜிகள் திடீரென்று நுழைகிறார்கள். வானொலியில் துப்பாக்கிகள் முழங்கும் சத்தம் கேட்கிறது. போலந்து கொடியை ஏற்றுங்கள் என்று ஒருவன் கத்துகிறான். ஜெர்மனி வீழ்க! இட்லர் ஒழிக என்று சில போலந்துக் குரல்கள் ஒலிக்கின்றன.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கோயரிங் வேறொரு வானொலியில் பேசுகிறான். தாயகத்தை மீட்பதற்காக துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காக கனத்த இதயத்துடன் ஜெர்மனி போரில் ஈடுபடுகிறது. இப்படித்தான் ஒரு பொய்யான நாடக நிகழ்ச்சி போருக்கான அடிப்படை நியாயமாக்கப் படுகிறது ஆரியன் இட்லரால். இட்லர் பாணி நாடகங்களைத்தான் இங்குள்ள ஆரியர்களும் தொடர்ந்து நடத்தி அரசியல் ஆக்குகிறார்கள்.

இந்திய முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். என்ன செய்யலாம்? ஒரு முஸ்லீம் இளைஞன் காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டான் என்று ஒரு விபரீதமான நிஜ நாடகத்தை நடத்த வேண்டும். ஆரிய வெறி கொண்ட சில இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுடைய பூணூல் களையப்படுகிறது. சுன்னத் செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நாதுராம் கோட்சே! திட்டமிட்டபடி காந்தியடிகளின் பிரார்த்தனைக் கூடத்துக்குள் கோட்சே நுழைகிறான். ராம நாமத்தை ஜபித்தபடி கோட்சே சுடுகிறான். ஹேராம்... என்றபடி காந்தியடிகள் உயிர் துறக்கிறார்.

அவ்வளவுதான். முஸ்லீம்கள் காந்தியடிகளைக் கொன்று விட்டார்கள் என்று கதை பரப்பப்படுகிறது. நாடெங்கும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள். (நடிகர் கமல்ஹாசன் தனது ‘ஹேராம்' எனும் திரைப்படத்திலும் இதைக் காட்டியிருந்தார்) ஒரு கொலை - அல்லது குற்றச் செயலை நிகழ்த்துவது. அதைத் தமது எதிரிகள் மீது சாற்றுவது. பொதுமக்கள் பார்வையில் பொய்யை உண்மையென்று நம்பும்படி செய்வது. பிறகு மத நம்பிக்கையின் ஆதரவோடும், சட்டத்தின் பாதுகாப்போடும் நினைத்ததை நடத்தி முடிப்பது. வெகு காலமாய் ஆரியர் நடத்தும் நிஜ நாடகம் இது.

ஒரிசாவிலே ஒரு இந்துமத சாமியார் கொல்லப்படுகிறார். பழி கிறிஸ்தவர்கள் மீது போடப்படுகிறது. தேவாலயங்கள் தகர்க்கப்படுகின்றன. கன்னிமாதர் கசக்கப்படுகிறார்கள். மாதக் கணக்கில் அப்பாவி மக்களின் கண்ணீரும் கதறலும் இதயமுற்றோரைத் துடிக்க வைக்கின்றன. அந்த நாடகம் - அந்தக் குரூரத் தீ - கன்னடத்துக்கும் பரவுகிறது. சங்கப் பரிவாரங்களின் புனிதப்போர் இப்படித்தான் நாடெங்கும் விரிந்து பரவுகிறது.

இஸ்லாமியர்களை ஒழிப்பது; கிறிஸ்தவர்களை ஒழிப்பது; முற்போக்கு இயக்கங்களை ஒழிப்பது. இந்துத்துவத்தை எந்த ரீதியிலும் வளர்ப்பது. இறுதியில் இந்துமத நம்பிக்கையுள்ளவர்களிலும் பார்ப்பனர் அல்லாதாரை ஒழிப்பது. இப்படியாக ஆரியர்களுக்கென்றொரு தாயகத்தை உருவாக்குவது. இதுதான் சங்கப் பரிவாரங்களின் போர்ப் பிரகடனம். மீண்டும் ஆரம்பத்திற்குச் செல்வோம்; தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்பது சரி. அந்தத் தனிக்குணம்; அந்தத் தனிப் பண்பாடு தமிழனின் இன்றைய வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா? பண்பாடு என்பது, ஏட்டில் இலக்கியத்தில் படிக்கும் போது ரசனைக்குரியதாக இருக்கலாம்; எதார்த்தத்தில்?

பண்பாடுள்ள மக்களைக் காட்டுமிராண்டிகள் வெற்றி கொண்டார்கள் என்பதுதான் வரலாறு. பண்பாடு என்பது கோழைகளின் முகமூடி என்று ஏளனம் செய்யப்படும் காலம் இது. தமிழன் இனியும் பழம்பெருமைகளில் பண்பாட்டுப் பழம்பாட்டில் மயங்கிக் கிடக்கப் போகிறானா? மங்கை உருவில் மகான் உருவில் வேத முழக்கங்களோடு வந்து புகுந்த வஞ்சத்தை வீழ்த்த வீறுகொண்டு எழப்போகிறானா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP