Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2008

அப்காசியாவை ரஷ்யா அங்கீகரித்தது போல் தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்கட்டும்! இலங்கைச் சிக்கலுக்கு அதுவே ஒரே தீர்வு!
முனைவர் அருகோ


ஒரு நாட்டின் எல்லை வரையறை என்பதும், அதன் இறையாண்மை என்பதும், மக்களின் மொழி, இன, மத, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், உரிமைகளின் காரணமாக காலத்திற்குக் காலம் மாறிவந்திருப்பதை உலகம் நெடுகிலும் காணலாம். நேற்றிருந்த சோவியத் ஒன்றியம் இன்றில்லை. நேற்றில்லாத ஐரோப்பிய ஒன்றியம் இன்றுள்ளது. அதிலும் தேசிய உரிமைகள் என்பன வலுப்பட்டு ஒரு தேசியத்தின் மூவிசையாக மொழியும் அதன் அடிப்படையிலான பண்பாடு பழக்கவழக்கங்களும் மாந்த நிலத்தின் வரப்புகளாக சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்கிற அடிப்படையில் ஒப்புக் கொள்ளும் உலகக் கோட்பாடு உருவானபின், அத்தேசியங் களின் வழி இறையாண்மையும் நாட்டின் எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டாக வேண்டியது நிதர்சனமாகி விட்டது. புதிய தெற்கு ஒத்தேசியாவும், அப்காசியாவும் அதைத்தான் உணர்த்துகின்றன.

இந்தியாவும் எல்லைகளும் :

நம் இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். 1947க்கு முன்பு நமது ஒட்டு மொத்த இறையாண்மையும் பிரித்தானிய அரசிடமே நிலை கொண்டிருந்தது. அதனால்தான் அச்சு நாடுகளுக்கும் நேச நாடுகளுக்குமிடையே நடந்த உலகப் போரில் பிரித்தானியக் குடையின் கீழ் நின்று இந்தியா போரிட நேர்கிறது. வெள்ளையராட்சியிலிருந்து விடுதலை கோரிப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும் அண்ணல் காந்தியார் பிரித்தானியாவுக்கு ஆதரவாக இந்திய மக்களைத் திரட்ட வேண்டி வந்தது அதனால்தான். வெள்ளையர் வெளியேறுகிறபோது இந்தியாவின் மாகாண எல்லை வரையறைகள் கூட இப்போது இருப்பதுபோல் இல்லையே! மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின்புதானே இன்றைய மாநில எல்லை வரையறைகள் ஏற்பட்டன.

இன்னும் சொன்னால், பிரிட்டிஷ் இந்தியாவாக இருந்த போது ஒருகாலத்தில் பர்மா, மலேயா, இலங்கை என்பனவும் அதற்குள் அடங்கியனவாக இருந்தது. பாகிஸ்தானும் அதிலிருந்து பங்களாதேசமும் தனி எல்லை வரையறைகளையும் இறையாண்மையும் பெற்றது எப்போது? சிக்கிமும் இந்தியாவின் ஒரு மாநிலமானது எப்போது? ஆகவே, இலங்கையின் எல்லை வரையறைக்கும், இறையாண்மைக்கும் ஊறு நேராமல் அங்கு தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருப்பது உலக நடப்புக்கு ஒத்துவராததே ஆகும்.

இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு தான் இலங்கை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடுமாகும் என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டிருப்பது இலங்கைத் தமிழர்களைக் கைவிடுவதற்கே ஒப்பாகும். இலங்கை இந்தியாவின் நட்பு நாடா? ஏனென்றால் தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவில் ஒரு மாநிலமான மேற்கு வங்கம், பாகிஸ்தானின் ஒரு பாகமாக இருந்த வங்காளதேச மக்களின் உரிமைகளைக் காப்பதில் இந்திய மத்திய அரசைத் தங்கள் வழிக்குத் திருப்பிச் செயல்பட வைத்ததேயொழிய, அது இந்தியாவும் பாகிஸ்தானும் கூடி முடிவு செய்ய வேண்டிய விவகாரம் என்று, கண்ணீர்க் கடிதங்களை எழுதுவதோடும், கண்டனக் கூட்டங்களை நடத்துவதோடும் கோரிக்கைத் தீர்மானங்களை நிறை வேற்றுவதோடும் நிறுத்திக் கொள்ளவில்லை.

பாகிஸ்தான் இந்தியாவின் பகைநாடு. அதனால் அதனிடமிருந்து பங்களாதேசம் பிரிய இந்தியா உதவியது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடானதால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுகின்றனர். ஆனால், இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. இந்திய - சீனப்போரின் போதும், இந்திய - பாகிஸ்தான் போரின்போதும் இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் மட்டுமே இந்தியாவுக்கு ஆதரவு காட்ட, சிங்கள அரசும் சரி, மக்களும் சரி, எதிர்த் தரப்புகளுக்கே ஆதரவும் அனுதாபமும் காட்டின.
எங்கும் தமிழே அது ஒருபுறமிருக்க இலங்கையின் இறையாண்மை என்பது ஐரோப்பியர் ஆக்கிரமிப்புக்கு முன்பு - ஆங்கிலேயர் வருகையின் போது எப்படி இருந்தது?

யாழ்ப்பாண இராச்சியம், கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம் என மூன்று இறையாண்மைகளைக் கொண்டிருந்தது. இவற்றில் யாழ்ப்பாண இராச்சியம் தொடர்ந்து தமிழர் ஆதிக்கத்தில் இருந்து வர, மற்ற இரண்டும் தமிழர் - சிங்களர் ஆதிக்கத்தில் மாறிமாறி இருந்து வந்திருக் கின்றன. என்றாலும் மூன்று இராச்சியங்களின் ஆட்சி மொழியாகத் தமிழ்தான் இருந்திருக்கிறது.

இதை இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் மூன்று பிரிவினருமே தாங்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர். கண்டி மன்னன் இன்றிருப்பது போல இலங்கையை ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயரே. அவர்கள் கடைசியாகக் கண்டி மன்னனிடமிருந்தே ஆட்சி உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அப்போது கண்டி மன்னனாக இருந்தவனும் ஒரு தமிழன். இலங்கையின் ஆட்சியுரிமையை ஆங்கிலேயருக்கு மாற்றி அவன் எழுதிக் கொடுத்த சாசனம் இன்றும் கண்டி தலதர் மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் அவன் கண்ணுச்சாமி என்று தமிழில்தான் கையொப்பமிட்டுள்ளான். அவனுடைய அமைச்சர்களாக இருந்த சிங்களவர்களும் தமிழில்தான் கையெழுத்திட்டுள்ளனர்.

உள்ளபடி தமிழர்களிடமிருந்து பெற்ற இறையாண்மையை ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து வெளியேறும் போது தமிழர்களிடம்தான் தந்திருக்க வேண்டும். ஆனால், அப்போது பெரும்பான்மையினராக இருந்தவர்கள் சிங்களர்கள் என்று சொல்லி சிங்களத் தலைவர்களிடம் ஆட்சியுரிமையைக் கையளித்துச் சென்று விட்டனர். தமிழரும் சிங்களரும் தமிழர் குடித்தொகை இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர் இலங்கையர் என்று பிரித்துக் கையாளப்பட்டதாலும், சிங்களர் அப்படியில்லாமல் பெரும்பாலும் பௌத்தர்கள். முற்றிலும் இலங்கையர் என்ற ஒட்டுமொத்தமாகக் கணக்கிடப்பட்டதால், அவர்களே தீவின் பெரும்பான்மை மக்களாக அன்று ஆங்கிலேயர் கண்களுக்குப்பட்டனர்.

நடைமுறையிலோ சுதந்திரத்திற்கு முன்பு இலங்கையில் தமிழ் பேசும் மக்களும், சிங்களம் பேசும் மக்களும் ஏறத்தாழ சம அளவிலேயே இருந்தனர். அத்துடன் சிங்களருடைய வரலாறு என்று சொல்லப்படும் பாலி மொழியில் உள்ள மகாவம்சம் என்ற நூல், ஆதிச் சிங்களவர்கள் வட இந்தியாவில் அப்போ திருந்த லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து இலங்கைத் தீவுக்கு வந்தவர்கள் என்றே குறிப்பிடுகிறது. அகதியாக வந்த விஜயன் விஜயன் என்பான் தலைமையில் கப்பலில் வந்து இலங்கையில் அடைக்கலம் புகுந்த அவர்களை, அப்போது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த குவெய்னி என்னும் தமிழரசி இயக்கர் குலமங்கை, அவர்களுக்குத் தஞ்சமளித்ததாயும் பின்னர் விஜயன் அவளைக் காதலிப்பதுபோல் நடித்து, சூழ்ச்சி மூலமே ஆட்சியைக் கைப்பற்றியதாகவும், ஆனால் அந்நாட்டு மக்கள் அவனை மன்னனாக ஏற்றுக் கொள்ளாததால், அவன் பாண்டிய அரசகுலத்திலிருந்து பெண்ணெடுத்து மணந்து கொண்ட பிறகே அவனை அரசனாக அங்கீகரித்ததாகவும் அந்த மகா வம்சம் அறைகிறது.

அதன் மூலம் அப்போது இலங்கை முழுதும் வாழ்ந்திருந்தவர்கள் தமிழ் மக்கள் என்பதை மகா வம்சமே ஒப்புக் கொண்டதாகிறது. ஆகவேதான் பாண்டிய நாட்டிலிருந்து பட்டமகிசி வந்ததும் அவனை மணந்து கொண்ட விஜயனை அந்த மக்கள் மன்னனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இணையற்ற தமிழரசன் எல்லாளன் அதுபோலவே இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட - நீதி தவறாத மன்னனாக மகா வம்சத்தால் போற்றப்படும் தமிழ் மன்னன் எல்லாளனை அது சோழ வம்சத்தவனாகச் சித்தரிக்கிறது.

இலங்கையின் பண்டையப் பெயர்களில் ஒன்று ‘சேரன் தீவு' என்பதாகும். ஆக தமிழ்ப் பாண்டிய - சோழ - சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டதாகவே சிங்களர் வருகைக்கு முன்பு இலங்கை இருந்து வந்துள்ளது. இன்றும் தென்பாண்டி நாட்டில் பாயும் ‘தாமிரபரணி' ஆற்றின் பெயரால் பண்டைய இலங்கை வழங்கப்பட்டதும் இதை உறுதிப்படுத்தும். விஜயனால் சதி செய்து கொல்லப்பட்ட மகாவம்சத்தால் குறிப்பிடப்படும் ‘குவெய்னி' என்ற பெயர் தூய தமிழ்ச் சொல் என்றும், குவி + எயினி அதாவது அழகெல்லாம் ஒருசேரக் குவிக்கப்பட்டவள் என்று சொல்லாய்வறிஞர் அருளி பொருள் சொல்வார்.

சிறீலங்கா ஆனது எப்படி?

மேலும் ஆற்றிடைக்குறை மற்றும் கடலிடைக் குறைப்பகுதிகளை இலங்கை என்றே தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. அந்த இலங்கை என்பதில் ‘இ'யை எடுத்துவிட்டு, வடமொழி ‘ஸ்ரீ'யைச் சேர்த்து ‘ஸ்ரீலங்கா' என்று பெயர் சூட்டியிருப்பதாலேயே அது தனிச் சிங்கள நாடாகி விடாது. உண்மையில் சிங்களவர்களாலும் தமிழ் முறைப்படி முன்பு அது இலங்கை என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இலங்கைக்கோன் என்பது போன்ற பெயர்களை இன்றும் சிங்களவர்கள் வைத்துக் கொள்வதே புலப்படுத்துவதாகும். ஆம்; கடல் கோளுக்கு முன்பு தமிழகத்துடன் ஒன்றியிருந்து துண்டுபட்ட பகுதியே அது என்பதை இலங்கை என்ற பெயர் இன்றும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது.

ஏழ்தெங்கமும் ஈழமும்

தவிரவும், ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் உரையெழுதுகையில், இன்று இந்துமாக் கடல் ஆகவுள்ள பகுதியில் ஏழ்தெங்க நாடு ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு என்றெல்லாம் 49 நாடுகள் இருந்து கடலால் விழுங்கப்பட்டதாக விரிவாக விளக்குகின்றார். அந்த ‘ஏழ்தெங்கம்' என்ற சொல் வழக்குத்தான் கடல்கோளுக்குப் பின் எஞ்சி நிற்கும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அது காலப்போக்கில், ஈழம் என்று குறுகியதாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.

திருகோணமலை

அத்துடன் இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் இலங்கையில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....
என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.

சிறீலங்கா வெளியிட்ட அஞ்சல் முத்திரை

ஆமாம், தேவாரப் பாடல் பெற்ற இரண்டு திருத்தலங்கள் இன்றும் இலங்கையில் உள்ளன. ஒன்று திருகோணமலை. அடுத்தது திருக்கேதீச்சரம் என்று வழங்கும் மாந்தை. இந்த மாந்தைத் துறைமுகத்தில் தான் விஜயன் வந்த கப்பல் தரை இறங்கியதாக மகாவம்சம் சொல்கிறது. அத்துடன் தமிழ்நாட்டில் இன்றும் இருபெரும் ஆதினங்களாக விளங்கும் சைவ மடாலயங்களான திருவாவடுதுறை, தருமபுரம் இரண்டுக்கும் தமிழ்நாடு முழுவதும் கிளைமடங்கள், சொத்துகள் இருப்பதைப் போலவே இன்று தமிழீழம் என்று வழங்கும் இலங்கையின் வடக்கு கிழக்கிலும் உள்ளன.

அதனால்தான் வடக்கு கிழக்கு இலங்கையின் இதர பகுதியிலிருந்து வேறானதல்ல. முதல் சிங்களனே அங்குதான் தரையிறங்கினான் என்று காட்டுவதாக நினைத்துக் கொண்டு 1977ல் ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் விஜயனுக்கு குவெய்னி தஞ்சமளிக்கும் காட்சியை அஞ்சல் முத்திரையாக வெளியிட்டது சிறீலங்கா அரசு.

யார் வந்தேறிகள்?

ஆனால், அது இலங்கையில் வந்தேறிகள் சிங்களர் தானேயொழிய தமிழரல்லர் என்பதை ஒப்புக் கொள்ளும் அரச முத்திரை என்பதை ஏனோ அறியவில்லை. ஏனென்றால், இலங்கையில் புத்தமதம் பரவுவதற்கு முன்பு அது தெற்கில் தொண்டீச்சரம், கிழக்கில் கோனேச்சரம், மேற்கில் கேதீச்சரம், வடக்கில் நகுலீச்சரம் என ஐந்து ஈச்வரங்களாகவே இருந்தது என்று பாலி சிங்கள மொழி வரலாற்றாசிரியர்கள் பகர்கின்றனர்.

அதாவது அகண்ட தமிழகத்தின் ஒரு அடிக்கூறாகவே இலங்கை இருந்து வருகிறது என்பதையே பண்டைய வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை இயம்பிக் கொண்டிருக்கின்றன. தொன்மையான இலங்கை வரைபடங்களும் (எடுத்துக்காட்டு : பெரிப்பளூஸ்) இதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

சேனநாயகா செய்த சேட்டை

அதனாலேதான் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த ஆறாவது மாதமே தமிழ்பேசும் மக்களை மேலும் சிறுபான்மையாக்கும் நோக்குடன் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லப்பட்ட மலையகத் தமிழரில் 10 லட்சம் பேரின் குடியுரிமை வாக்குரிமைகளைப் பறித்து, அவர்களை நாடற்றோராக்கினார் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனா நாயக்கர்.

இத்தனைக்கும் அதற்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை, பண்டாரவளை, கொட்டகலை, தலவாக் கொல்லை, நுவரேலியா, மஸ்கெலியா போன்ற தொகுதிகளில் இம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் எம்.பி.க்களாக இருந்தனர். அத்துடன் அப்போதிருந்த இலங்கை செனட் சபையிலும் இரு மலையகத் தமிழர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் அவர்களின் வாக்குகளைப் பெற்றவர்களே அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் வெற்றிபெறமுடியும் என்ற நிலையாகும்.
அப்படி இலங்கையின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் அசைக்க முடியாதவர்களாக இருந்த ஒரு மக்கள் சமுதாயத்தைத்தான் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் நாடற்றோர் ஆக்கப்பட்டார்கள்.

ஒப்புக்குச் சப்பாணி

உலகத்திலேயே சட்டம் போட்டு ஒரு மக்கள் தொகுதியை நாடற்றோராக்கிய கொடுமை முதன்முதலாக இலங்கையில் தான் அரங்கேற்றப்பட்டது. அப்போதும் இந்திய அரசு ஒப்புக்கு அதனைக் கண்டித்ததே தவிர, அச்சட்டத்தைத் திரும்பப் பெற்றால்தான் இலங்கையோடு உறவு என்று எச்சரிக்க முன்வரவில்லை. ஏனென்றால், நாடற்றோர் ஆக்கப்பட்டோர் இந்திய வம்சாவளியோ, வங்க வம்சாவளியோ அல்லர். இந்திய வம்சாவளி என்று சொல்லப்பட்டாலும் அதற்குள்ளும் தமிழ் வம்சாவளியினரே.

நேரு குழு

இதற்கு இன்னும் ஒரு காரணம் இந்திய விடுதலைக்குமுன்பே வெளிநாட்டு இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க, காங்கிரசில் நேரு பண்டிதர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வெளிநாட்டு இந்தியர் என்போர் பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்த போதிலும் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து அங்கெல்லாம் பீஜி இந்தியர் காங்கிரஸ், குயானா இந்தியர் காங்கிரஸ் என்பது போன்ற பெயர்களில் இந்தியர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றிற்கு வடஇந்தியர்களையே தலைவர்களாக நியமித்து விட்டு வந்தது.

ஆனால், பர்மா, மலேயா, இலங்கை ஆகிய நாடுகளில் அங்கிருந்த இந்தியர் காங்கிரசின் தலைமையைத் தமிழர்கள் கைப்பற்றியதால், பின்னர் அதே நேருவின் தலைமையில் அமைந்த சுதந்திர இந்திய அரசு இம்மூன்று நாட்டு இந்தியர் விடயத்திலும் அவர்கள் எக்கேடு கெட்டால் எமக்கென்ன? என்று நடந்து கொள்ளத் தொடங்கி விட்டது. அதுவே தான் தி.மு.க. தயவில் ஆட்சி நடத்துகிற இன்றைக்கும்கூட இந்திய அரசில் தொடர்கிறது. ஒன்றாவது தமிழருக்கு உண்டா?

ஆம்; இன்று உலகத்தில் 11 இந்திய வம்சாவளிச் சுதந்திர நாடுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுகூடத் தமிழர்கள் ஆதிக்கத்தில் இல்லை என்பதுதான் வியப்பு. மலேசியாவிலே கூட திவி என்னும் வடஇந்தியர் தலைமையில் நேருவால் தொடங்கி வைக்கப்பட்ட ‘மஇகா'வை துன். சம்பந்தம் என்கிற தமிழர் கைப்பற்றியதாலும் இன்றும் சாமிவேலு என்கிற தமிழர் அதன் தலைவராக இருப்பதாலுமே அங்கு இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) இழைக்கப்படும் அநீதியை இந்தியா கண்டுகொள்ள மறுக்கிறது.

லால்பகதூர் ஒப்பந்தம்

அதுபோலவே இலங்கையில் மோத்தா என்னும் வடஇந்தியர் தலைமையில் நேருவால் உருவாக்கப்பட்ட சிலோன் இந்தியர் காங்கிரசின் தலைமையைப் பின்னர் தொண்டமான் என்னும் தமிழர் கைப்பற்றியதால் அங்குள்ள இந்தியர்களை (தமிழர்களை) உலகத்தில் எங்குமில்லாத கொடுமையாக இலங்கையரசு நாடற்றோராக்கிக் கொண்டுவந்த சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய முயலவில்லை. மாறாக, நேருவையடுத்துப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, நாடற்றோராக்கப்பட்ட அந்த 10 லட்சம் தமிழரில் 5 லட்சத்து 75 ஆயிரம் பேரை இந்தியா ஏற்கும் என திருமதி. சிறீமா பண்டார நாயகாவுடன் 1964ல் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இலங்கை தனிச் சிங்கள நாடு என்று சொல்லும் அவர்களின் இனவாதத்திற்கு அங்கீகாரமளித்தார்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்

அதனால்தான் இன்று இலங்கை இராணுவத் தளபதியாகவுள்ள சரத்பொன் சேகா, இது சிங்களவருடைய நாடு; வேண்டுமானால் தமிழர்கள் இங்கு மலேசியாவில் வாழ்வதைப் போல வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்று இளக்காரமாகப் பேசுகிறார். இப்படிப் பின்னால் வரும் சிங்களர்கள் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழர்களின் ஒரு பகுதியினரை நாடற்றோராக்கிய டி.எஸ். சேனநாயக்கா, இஸ்லாமியத் தமிழர்களை மூர்கள் என்ற பெயரில் அவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் தமிழரல்லர் என்று பட்டியல் போட்டார். அத்துடன் சிங்களர் வாழாத - தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து வந்த வடக்கு கிழக்குப் பகுதிகளில் திட்டமிட்டு சிங்களர்களைக் குடியேற்றி, தமிழ்ப்பகுதி என்பதாக இலங்கையில் எப்பகுதியும் இல்லை என்றாக்க டி.எஸ். சேனநாயக்கா முற்பட்டார்.

தந்தை செல்வா

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தந்தை செல்வா தலைமையில் இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி இலங்கை என்பது ஒரு தீவாக இருந்தாலும், தமிழர் சிங்களர் என்ற இரு தேசிய இனங்களைக் கொண்ட இருநாடுகள். அவை ஒன்றாக இருக்க வேண்டுமானால் இணைப்பாட்சி (சமஷ்டி) வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து காந்திய முறையில் அகிம்சை வழியில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

இங்கே இன்னொரு வரலாற்று உண்மையையும் சொல்லியாக வேண்டும். இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகிய இலங்கை தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்கள் தமிழர்களே. சர்.பொன். இராமநாதன், சர்.பொன். அருணாசலம் என்னும் யாழ்ப்பாணத்து இரட்டையர் தலைமையில் இயங்கிய அக்கட்சியில் அவர்களின் நிழலில் வளர்ந்தவர்களே பின்னர் பிரபல சிங்களத் தலைவர்களாக வந்த டி.எஸ். சேனநாயக்கா, ஜெயவர்த்தனா, பண்டார நாயகா, தகநாயகா, குணதிலகா முதலியோராவர். அக்கட்சிதான் இலங்கைக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலாவதாக முன்வைத்தது.

இந்திய தேசிய காங்கிரசும் இலங்கை தேசிய காங்கிரசும்

அக்கட்சியிலிருந்துதான் இலங்கையின் முதலாவது ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (மசட) பிறந்தது. அதிலிருந்து தான் பண்டாரநாயகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தோன்றியது. இன்று ஆட்சியிலிருக்கிற ராஜபக்சவின் மக்கள் முன்னணியின் பிரதான கட்சி அதுதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இங்கே இந்திய தேசிய காங்கிரசைப் போல அங்கே இலங்கை தேசிய காங்கிரஸ் தொடர்ந்து இயங்க முடியாமல் போன தற்கு சிங்கள இனவாதமே காரணமாகும்.

வேதனைதரும் வில்லங்கம்

ஆம்; வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்பதற்காகத் தமிழ்த் தலைவர்களின்கீழ் செயல்பட்ட சிங்களத் தலைவர்கள், விடுதலை வரப் போகிறது என்ற அறிகுறி தெரிந்ததுமே தமிழர்களைத் தூக்கியெறிந்து விட்டு, நாட்டின் லகானைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்பதிலிருந்தே சிங்கள இனவாதந்தான் இலங்கைப் பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணமான நோய் என்பது தெளிவாகும். அந்த நோய் புற்று நோய்க் கிருமி களைப் போல தமிழர்களை இற்று வீழச் செய்வதற்கு இந்தியாவும் துணைபோனது, இப்போதும் துணைபோய்க் கொண் டிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள வில்லங்கமாகும்.

அறவழியும் அடக்குமுறையும்

ஆமாம்; இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோரைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, தங்களின் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த சிங்கள அரசியல்வாதிகள் போடும் நாடகம் இந்தியா ஒத்துழைக்காவிட்டால் நிச்சயம் எடுபடாது. ஏனென்றால், 1948லிருந்து 1978 வரை இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் முற்றிலும் சனநாயக வழியில் அகிம்சை சார்ந்ததாகவே அமைந்திருந்தது. 1961ல் தந்தை செல்வா தலைமையில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தால் ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தமிழ்ப்பகுதிகளில் அரசே முற்றிலும் செயல்பட முடியாமல் போனது. அஞ்சல் விநியோகம் உட்பட அன்றாட அரசின் பணிகளைக் கூட சத்தியாக்கிரகத் தொண்டர்களே மேற்கொண்டனர். இலங்கை அரசு சனநாயகத்தை - சாத்வீக அறப்போரை மதிப்பதாக இருந்திருந்தால் அப்போதே தமிழர்க்கான உரிமைகளை வழங்கியிருக்க வேண்டும். மாறாக அடக்குமுறையையே கையாண்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

இருப்பினும் தமிழ்மக்கள் சார்பில் தந்தை செல்வா ஐக்கிய தேசியக்கட்சி அரசுடனும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, எவ்வளவோ விட்டுக் கொடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆனால், சேனநாயகாவும் பண்டார நாயகாவும் அந்த ஒப்பந்தங்களை ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்து தமிழர்களுக்கு ஒன்றும் வழங்க முன்வராத தாலேயே 1976ஆம் ஆண்டு, இலங்கைத் தமிழர் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வட்டுக்கோட்டை என்னுமிடத்தில் நடந்த மாநாட்டில் ‘இனி தமிழீழத் தனிநாடு பெறுவதைத் தவிர, இலங்கையில் தமிழினம் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு வேறுவழியில்லை’ என்று ‘ஈழத்துக்காந்தி' என்று அழைக்கப்பட்ட செல்வநாயகமே முடிவுகட்டிக் கூறினார்.

தேர்தல் தீர்ப்பு

அதையே தமிழ்மக்கள் தங்கள் பிரகடனமாக 1977ல் நடைபெற்ற தேர்தலின் மூலம் வெளிப்படுத்தினர். ஆம்; 32 தமிழ்த் தொகுதிகளில் 31ல் தமிழர் கூட்டணி உறுப்பினர்களையே வெற்றி பெறச் செய்தனர். அத்தேர்தல் தீர்ப்பைப் பிரகடனம் என்று ஏன் சொல்கிறோம் என்றால், அப்போது செல்வநாயகம் மறைந்து விட்ட நிலையிலும் அமிர்தலிங்கம் தலைமையிலிருந்த தமிழர் கூட்டணி இத்தேர்தலில் நீங்கள் செலுத்தும் வாக்கு ஒவ்வொன்றும் தமிழீழத்திற்குத் தரும் அனுமதிச் சீட்டாகும். நாங்கள் வெற்றி பெற்றால் தமிழீழ நாடாளுமன்றமாகச் செயல்பட்டு உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற் குப் பாடுபடுவோம் என்று தெளிவாகத் தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டுத் தான் போட்டியிட்டனர்.

ஆனால் அதே தேர்தலில் சிங்களப் பகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தனா, தமிழர் கூட்டணி சனநாயகரீதியில் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவிடாமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதால், தமிழ் இளைஞர்கள் இனி இலங்கையில் சனநாயக வழி பயன்படாது என்று அறிவித்து, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அதற்கு தம்பி பிரபாகரன் தலைமை வகித்து சாதனை படைத்தார்.

திட்டமிட்ட தமிழினப் படுகொலை

அதிலும், 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் என்ற பெயரால் ஜெயவர்த்தனா அரசாங்கமே திட்டமிட்டு தமிழினப் படுகொலையை நடத்தி, தமிழன் கறி இங்கே கிடைக்கும் என்று விளம்பரப் பலகை எழுதி வைத்து, தமிழர்களைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு சிங்கள இனவெறியர்கள் கடைபோட ஊக்குவித்ததையும் கண்டு பொறுக்க முடியாமலேயே அகிம்சை வழியை விட்டு, தமிழர்களை ஆயுதப் போராட்ட வழிக்குத் திருப்பியது. முதன்முதலாக ஈழத் தமிழர்களை உலகம் முழுவதிலும் அகதிகளாகப் புலம்பெயரச் செய்த கொடுமையும் அப்போதுதான் தொடங்கியது.

இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிக்கப்பட்ட போதுகூட பாராமுகமாக இருந்த இந்தியாவை இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி வைக்கும் அளவுக்குத் தூண்டியது. தமிழர்களின் பயங்கரவாதமா? இல்லை சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையே!

சிக்கல் தீர்ந்து போயிருக்கும்

அப்போதே வங்காள தேசத்தில் செய்ததுபோல் இலங்கையிலும் இந்தியா செய்திருக்குமானால், சிக்கல் அப்போதே தீர்ந்து போயிருக்கும். ஆனால், ராஜீவ் காந்தியுடன் ஜெயவர்த்தனா செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்று ஒப்புக்கொண்டதேயொழிய, தமிழீழத் தனிநாடு பற்றிக் குறிப்பிடவில்லை.

ராஜபக்சவின் ரத்த தாகம்

இருந்தபோதிலும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரே தமிழ் மாகாண சபை என்பதைக்கூட நீதிமன்றத் தீர்ப்பை சாக்காக வைத்து, இன்றைய அதிபர் ராஜபக்ச கலைத்ததன் மூலம் இந்தியாவின் முகத்தில் கறிபூசி விட்டார். அது மட்டுமின்றி, விக்கிரமசிங்கா பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய சமாதானப் பேச்சு வார்த்தையையும், போர் நிறுத்தத்தையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் ஒருதலைப் பட்சமாகக் கைவிட்டு முப்படைகளையும் ஏவி, தமிழ் மக்களைக் கொன்று முடிப்பதன் மூலம் இனப் பிரச்சினையே இல்லாமல் செய்து விடலாம் என்று உலக நாடுகள் எல்லாம் ஒருமிக்க எதிர்த்தும் போரை உக்கிரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

இஸ்ரேலிய இனக்கொலையாளர்கள்

அந்தப் போருக்காகப் பாகிஸ்தான் வாரந்தோறும் கப்பல்களில் ஆயுதங்களைக் கொண்டு வந்து இறக்கியபடி உள்ளது. பாலஸ்தீன அரபுகளைக் கொன்று குவித்துப் பழக்கப்பட்ட இஸ்ரேலிய இனக் கொலையாளிகள் தமிழர்களுக்கெதிராக விமானங்களையும் எலிக்காப்டர்களையும் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவியாக இந்திய நிபுணர்களே ராடர்களை இயக்குவதாகச் சொல்லப்படுகிறது. சிங்களப் படையினரோ, அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றுவிட்டு, புலிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இது என்ன இராச தந்திரம்?

பற்றும் பற்றாததற்குத் தமிழ்நாட்டுக்காரர்கள் அனுதாபம் கூடக் காட்டக் கூடாது என்று சொல்லும் விதமாக தமிழக மீனவர்களைக் கொலை செய்தும், கொள்ளையடித்தும் சிங்களக் கடற்படையினர், தமிழக மீன்பிடித் தொழிலே சிதையும் வண்ணம் அன்றாடம் கொட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். என்றாலும், இந்தியா இலங்கைக்குப் பண உதவி செய்கிறது. படைக்கருவிகள் தருகிறது. சிங்களப் படையினருக்குப் பயிற்சியும் அளிக்கிறதே என்று கேட்டால், இலங்கை நம்மை விட்டு விலகி, நம் எதிரிகளான சீனா, பாகிஸ்தான் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்கான இராசதந்திர அணுகுமுறைதான் அது என்று பதில் சொல்லப்படுகிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் வம்சாவளிப் பற்றும்

ஆனால், சீனாவையும் பாகிஸ்தானையும் இலங்கை உபயோகித்துக் கொள்ளாமல் இல்லை என்பதே நாம் மேலே சொன்ன எடுத்துக்காட்டுகளால் விளக்கும். அதே நேரத்தில் இலங்கை சீனாவுக்கு பாகிஸ்தானுக்குப் பக்கத்தில் இல்லை. இந்தியாவிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. சரி; ரஷ்யாவும் இந்தியாவைப் போல ஒரு பெரிய நாடு. அதன் தலைமையில் முன்பிருந்த சோவியத் ஒன்றியத்தின் மாநிலங்களாக இருந்த ஜார்ஜியா, பைலோரஷ்யர், உக்ரைன், எஸ்தோனியா போன்ற 20க்கும் மேற்பட்டவை இன்று தனிநாடுகளாக உள்ளன. அவற்றில் ஜார்ஜியா, ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்திருப்பது. ஜார்ஜியாவின் தெற்கு ஒசேத்தியா, அப்காசியா நாடுகளில் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் இருப்பதைப் போல ரஷ்ய வம்சாவளியினர் கணிசமாக உள்ளனர்.

விடுதலைக்கு அங்கீகாரம்

மொழியாலும் பண்பாடு பழக்கவழக்கங்களாலும் அவ்விரு மாநிலங்களும் ஜார்ஜியாவிலிருந்து விடுதலை பெறப் போராடி வந்த நிலையில், ஜார்ஜிய அரசு, தமிழீழத்தை ஒடுக்க சிறீலங்கா அரசு சிங்களப் படைகளை அனுப்புவது போல ஜார்ஜியப் படைகளை அனுப்ப, அம்மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ரஷ்யா இந்தியாவைப் போல வெறுமனே வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கவில்லை. ரஷ்யப் படைகளை அங்கு அனுப்பி, ஜார்ஜியப் படைகளை விரட்டியடித்ததுடன் தெற்கு ஒசேத்தியா, அப்காசியா விடுதலையையும் அங்கீகரித்திருக்கிறது.
ஜார்ஜியா எதிரிகளிடம் போய்விடும் என்று சொல்லிக் கொண்டு, தன் வம்சாவளி மக்களை அழிக்கப் பணமும் படைக்கருவிகளும் மறைமுகமாகக்கூடப் பரிமாறவில்லை ரஷ்யா.

தமிழீழ அங்கீகாரமே தேவை

அதை ஏன் இந்தியா செய்யக் கூடாது? பங்களா தேசத்தை அங்கீகரித்த இந்தியா, சிங்களரால் பலிகொள்ளப்படும் தமிழீழத்தை அங்கீகரிக்கத் தயங்குவதேன்? ‘மேற்கு வங்க மாநிலத்திலிருக்கும் வங்காளிகள் இந்தியர்கள். அதனால் அவர்களின் உடன்பிறப்புகளாகிய கிழக்கு வங்க மக்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் பலி கொள்ளப்படாதிருக்க அவர்களைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டி வந்தது’ என்று விடையிறுக்கப்படுமானால், ‘தமிழ் நாட்டு மக்கள் இந்தியர்கள் இல்லையா? இலங்கையில் அவர்களின் உடன்பிறப்புகள் மட்டும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படலாமா?’ என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது.

ஆக, ‘இந்தியா தலையிட வேண்டும்’ என்பதையும் பார்க்க, தமிழீழத்தை உடனே அங்கீகரிக்க வேண்டும் என்பதே இன்று தமிழ்நாட்டின் குரலாக ஒலிக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com