Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2007

மலர்காணத் தோன்றல் மதி

முனைவர் இரா.மதிவாணன்

முத்தன்ன முழு வெண்ணிலா எத்திக்கும் ஒளி சிந்த, எழில் கொஞ்சும் குளிர் நிலவின் உலா. கருநீல வானக் கடலிடையே வெள்ளி மீன் கூட்டங்களைத் தள்ளி மிதந்து வரும் சுவைப்பலா. தேனூறும் இதழ்கொண்ட மான்விழி மங்கையரைக் காதல் நினைவூறும் கனவுலகில் கிறங்கச் செய்யும் மதுக்குடம் ஏந்திவரும் நிலவுப் பெண்ணை வாழ்த்தாதார் யார்? வரவேற்காதார் யார்? கண் குளிரக் கண்டு மனங்குளிராதார் யார்? யார் என்று வினவுகிறீர்களா? நிலவுப் பெண்ணைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தாலும் மனங் குளிர வாழ்த்தாதவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் திருவள்ளுவர்.

அவர் ஒரு கட்டுப்பாடு இடுகிறார். “நிலவே நீ அழகிய இளமங்கைக்கு ஒப்பாக வேண்டுமெனின் எல்லாருடைய முன்னிலையிலும் இப்படி உலவாதே. உலவினால் உன்னை வாழ்த்த மாட்டேன்’’ என்கிறார்.

“இன்னிசைக் குயிலே பாடாதே உன் மென்னியைத் திருகிவிடுவேன். புள்ளித் தோகையை மெல்ல விரித்துத் துள்ளியாடும் மயிலே! உன் ஆட்டத்தை நிறுத்திவிடு; உன் காலை ஒடித்து விடுவேன். கண்ணுக்கு அழகு விருந்தளிக்கும் புள்ளி மான் கூட்டங்களே! உங்கள் மருண்ட நோக்கையும் மாயத் தாவல்களையும் மறந்து விடுங்கள்; கொன்று விடுவேன். பேசுங்கிளியே! பேச்சை மற - பூனையிடம் கொடுத்து விடுவேன். வெண்பனித் துளி வீசி விரைந்திழியும் அருவியே! வறண்டு போய்விடு - அணையிட்டுத் தடுத்திடுவேன். அந்திநேர மேகங்களே! ஆயிரம் வண்ணக் கோலங்களை வாரியிறைத்துக் கண்ணை மயக்கும் கண்கட்டு மாயங்களை விட்டு விடுங்கள் - இல்லையென்றால் மாலை வரின் கண்களை இறுக மூடிக் கொள்வேன். ஊரிலுள்ள எல்லாரையும் கண் மூடிக் கொள்ளச் சொல்வேன்.’’

இப்படியெல்லாம் ஒருவர் ஆணையிட்டால் எப்படியிருக்கும்? அப்படித்தான் தோன்றுகிறது வள்ளுவப் பெருமானின் கூற்று.

“நிலவே! பலர் காணத் தோன்றாதே’’ என்று ஆணையிட வள்ளுவர் பித்தரல்லர்; பேரறிஞர்; முழுதுணர்ந்த மூதறிவாளர்; கற்றோர் அறியா அறிவினர்; கற்றோருக்குத் தான் வரம்பாகிய தலைமையர். இப் பெற்றியாரின் கருத்தைப் பற்றி மேலோட்டமாக மதித்தறிதல் பிணைபாடாகும்.

மானைப் பழிக்கும் விழியாள்; மன்மதன் கரும்பை இகழும் சொல்லாள்; மாம்பழக் கன்னம் மின்ன மலரடிக் கால்கள் பின்ன, துடியிடை துவள, பவள இதழ் சிவக்க மயிலென இயலிவரும் மங்கையைக் கண்டவர் மனத்தைப் பறிகொடுத்து மாலுற்று நிற்பது இயல்புதானே!

மலரை மொய்க்கும் வண்டுகள் போல் அழகான மங்கையை மொய்க்கும் கட்டிளங்காளையரின் கண்கள் ஆயிரம், ஆயிரம். அவளுடைய தோற்றம் கண்ணுக்கு விருந்தாவது அனுமதிக்கப்படுமானால். மற்ற நான்கு புலன்களும் தமக்கும் விருந்து கிட்டாதா என அடிமனத்தின் ஆசைகளைக் கிளறிவிடும். அவளைக் காண்பவர்களின் பொதுவான கண்ணோட்டம் மேலோட்டமாக காமப் பார்வையாக முற்றி விடுகிறது. கயமைத்தனம் முற்றுகையிட முனைப்புக் கொள்கிறது.

இதனால்தான் பருவப் பெண் பலருடைய பார்வையில் படலாகாது என்னும் கருத்து முகிழ்த்தது.

“சுவையான பழம், சொகுசான பெண், சேர்ந்த எழில் மலர்க்கொத்து ஆகியவை தனியே கண்ணில் படலாகாது. அப்படித் தனியாகக் காணப்படின் காண்பவர் கள்வராகி விடுவர்’’ என்று ஒரு கன்னடப் புலவன் எச்சரித்தான். அவனுக்கும் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவப் பெருந்தகை இந்த எச்சரிக்கையை,

மலரன்ன கண்ணாள் முகமொத்தியாயின்
பலர்காணத் தோன்றல் மதி

என்னும் குறள் வாயிலாக விடுக்கிறார்.

பெண்களைப் பிறர் காணலாகாது என்று முகமதியர் முகத்திரையிடும் வழக்கத்தைக் கொணர்ந்தனர். அதுபோல் மகளிர் முகத்திற்குத் திரையிட வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடவில்லை.

அரசனின் பட்டத்தரசி பலர் முன்னிலையில் அரசன் அருகில் அமர்ந்திருந்தார். ஒளவை போன்ற பெண்பாற் புலவரும், பாடினியரும் பலர் காணத் தம் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். நாள் மோர் மாறும் நன்மாமேனி ஆய்ச்சி முதல் நலங்கிளர் செல்வப் பெண்டிர் வரை பலரும் விழாக்களிலும் கோவில்களிலும் நீர்த் துறைகளிலும் விரிபூங் கானல் வியலிடச் சோலைகளிலும் பலர் காண உலவிக் குலவி வாழ்ந்திருக்கின்றனர். அத்தகு காட்சிகளைக் கண்டிருக்கிறாரா திருவள்ளுவர்?

திருவள்ளுவப் பெருமானின் கருத்து அதுவன்று. வளர்ந்து வரும் நாகரிக உலகத்தில் ஆணும் பெண்ணுமாய் உடன் பணியாற்றும் தொழில் துறைகள் பெருகும் என்பதையும் அவர் அறிவார்.

அவர் சொல்ல நினைத்த அரிய கருத்து, ஒரு பெண் தனிமையில் பிற ஆடவர் முன்னிலையில் தொடர்ந்து காட்சிப் பொருளாக நிற்கும் நிலை தவிர்த்துப்பட வேண்டுமென்பதே.

‘நிலவே!’ நீ தனித்துப் பலர் முன்னிலையில் தோன்றாதே! என்பதன் உட்பொருளும் இதுவே. நீல வானத்தில் நீந்திவரும் நிலவுப் பெண் இன்னும் பல நிலவுப் பெண்களை உடனழைத்து வந்திருந்தால் வள்ளுவர் தடை சொல்லியிருக்க மாட்டார்.

கும்பலில் கைவரிசை காட்டும் கள்ளன்கூட யாரும் தன்னைக் கவனியாத சூழ்நிலையை எதிர் பார்க்கிறான். பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள நினைப்பவனும் அத்தகு சூழலையே விரும்புகிறான். இஃதறிந்தும் பெண்ணாகப் பிறந்தவள் தனித்துக் காணப்படலாமா? என்று வினவுகிறார் வள்ளுவர்.

மலர்கள் கொத்தாகக் காணப்பட வேண்டும். பெண்களும் கூட்டமாகக் காணப்பட வேண்டும். அரும்பு மலர்ப் பூங்காவிற்கும் விரும்பு சுவை பழத்தோட்டத்திற்கும் காவல் கட்டுப்பாடுகள் இருப்பதைப் போல் பருவம் எய்திய பெண்டிர்க்கும் பாதுகாப்புத் தேவை.

மலர்ப் பூங்காவிற்கும் பழத்தோட்டத்திற்கும் உரியவர்கள் பாதுகாப்பளிக்கின்றனர். பெண்கள் தமக்கு உரியவர் பாதுகாப்புடன் தாமே எச்சரிக்கையான சூழலில் தம்மை இருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மீன் கரைக்கு வர நினைக்கலாமா? பெண் தனித்திருக்கத் துணியலாமா என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com