Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2006

நீண்ட போர்ப் பயணம்
தணிகைச்செல்வன்

சீனப்புரட்சியின் ஈடேற்றம் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது.

1. 1920 முதல் 1935 வரை நிலப்பிரபுக்களை எதிர்த்த விவசாயிகள் புரட்சி.
2. 1935 முதல் 1944 வரை ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியும், கோமின்டாங் கட்சியும் இணைந்த ஐக்கிய முன்னணியின் தேசியப்புரட்சி.
3. 1944 முதல் 1949 வரை கோமின்டாங் அதிகாரத்தை அகற்றிப் பொதுவுடைமைக் கட்சியின் அரசை நிறுவிய புதிய ஜனநாயகப் புரட்சி.

சீனப் புரட்சியின் இந்த மூன்று கட்டங்களும் அனைத்துச் சீனத்தையும் தழுவிய முழுமை பெற்ற புரட்சி நடவடிக்கைகளாக நடைபெறவில்லை. தென் சீனத்தின் சில மாகாணங்கள், வடமேற்குச் சீனத்தின் சில பகுதிகள் அத்துடன் வடசீனப் பிரதேசங்கள் என்று பூகோளத்தால் இணைக்கப்படாத பல பகுதிகளில் இவை நடைபெற்றன. வட்டாரப் புரட்சியாளரின் வர்க்கப்போர்கள் (partisan wars) என்று இவை அழைக்கப்பட்டன; ‘பார்ட்டிசான்' என்ற சொல், பயிற்சி பெற்ற ராணுவீரனாக முழுமை பெறாத தீவிரப் போராளியைக் குறிக்கும். சீனப் புரட்சியின் அடித்தளமே பாமரர்களாக இருந்து பார்ட்டிசான்களாக வளர்ச்சியுற்ற பலகோடி விவசாயத் தொழிலாளர்களே என்பது வரலாறு.

சீனப் பார்ட்டிசான்களின் ஒரு பகுதியினர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள்; இன்னொரு பகுதி செஞ்சேனையில் சேர்ந்தார்கள்; மூன்றாவது பிரிவினர் உள்ளூர் சோவியத்துகளில் பொறுப்பேற்றுச் சாதனை செய்தார்கள். புரட்சியின் பாலப்பருவத்திலேயே சாதனை புரிந்த சரித்திர நாயகர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் செஞ்சேனையும் தாம்!

ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர் நீண்ட பயணத்தின் இடையில் செஞ்சேனையுடன் சேர்ந்து சில கிராமங்களைக் கடந்து சென்ற வேளையில், அங்கிருந்த விவசாயிகளைப் பேட்டி கண்டிருக்கிறார். அப்போது ஒரு விவசாயி அமெரிக்கரைப் பார்த்துக் கேட்ட கேள்வி:

“உங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சியும் செஞ்சேனையும் உள்ளனவா?''

பதில்: “கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது செஞ்சேனை கிடையாது'' அந்த விவசாயிகள் அனைவருக்கும் வியப்பு! அவர்கள் கேட்டார்கள்: “செஞ்சேனையில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியா? அதெப்படி இருக்க முடியும்?''

(ஆதாரம்: எட்கர்ஸ்நோவின் Red star over China)

புரட்சி நடத்தப் போவதாகக் கூறும் ஒரு கட்சிக்குப் புரட்சிப்படையே இன்றியமையாதது. வியட்நாம், கொரியா, கம்போடியா, கியூபா என்று புரட்சி வென்ற இடங்களின் பட்டியலைப் பார்த்தால் சிவப்புக் கட்சியும், சிவப்புப் படையும் சேர்ந்தே இயங்கியதைக் காணலாம். படைப் பிரிவு இல்லாமல் கட்சி அமைப்பு மட்டுமே வைத்து நாடாளுமன்ற அதிகாரத்தைப் பிடித்த சிலியின் அலெண்டேவுக்கு நேர்ந்த கதியை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் அறியும். நீண்ட பயணத்தில் சீன விவசாயிகளிடம் வரலாறு கற்ற ஒரு படிப்பினைதான் மேலே கூறிய அமெரிக்கரின் அனுபவம். செஞ்சேனையில்லாத செங்கொடியால் புரட்சி கிட்டும் என்பது வடிகட்டிய மூடநம்பிக்கை!

நீண்ட பயணம் என்பது ‘பாபர் படையெடுப்பு' ‘பானிப் பட்டு யுத்தம்' என்பது போல வரலாற்று மேடையில் வந்து மறைந்து விட்ட வெளிச்சச் சிதறல் அல்ல. ஒரு வரலாற்றைப் பிரசவித்த வரலாறு அது. ஒரு வேளை நீண்டபயணம் நடைபெறாமல் போயிருந்தால் அல்லது அதை அக்டோபரிலிருந்து நவம்பருக்கு ஒரு மாதம் தள்ளி வைத்திருந்தால் கூடச் சீனப் புரட்சி நூறு ஆண்டு காலம் தள்ளிப் போயிருக்கும். இல்லையேல் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தைப் போல், அரசை விமர்சிப்பதோடு நின்று கொண்டு ஆட்டத்தில் பங்கெடுக்காத ஆட்ட வர்ணனையாளர் போல் ஆபத்தில்லாத பாத்திரத்தை அரங்கேற்றியிருக்கும்.

ராணுவ வரலாற்றில் நீண்ட பயணம் போன்ற ஒரு யுத்த வியூகம் இந்த நூற்றாண்டின் ஈடிணையற்ற சாதனை என்பதை இரு உலகப் போர்களில் பங்கேற்ற பல யுத்த தந்திரிகள் ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள். நீண்ட பயணம் தொடங்கிய நாள்: 1934 அக்டோபர் 16, முடிவுற்ற நாள்: 1935 அக்டோபர் 25.

ப்யூக்கின் என்ற தென் சீன நகரிலிருந்து 95,000 வீரர்களோடு தொடங்கிய இந்தப் போர்நடைப்பயணம் 368 நாட்கள் நடந்தது. அவற்றில் 235 நாட்கள் நடப்பதில் செலவாயின. நடைப்பயணம் நிறுத்தப்பட்ட நாட்கள் 100. அந்த 100 நாட்களில் பயணத்தை மறித்து அதன் நோக்கத்தை முறியடிக்க முயன்ற சியாங்கே ஷேக் அரசின் சேனையோடு செஞ்சேனை போர் புரியச் செலவிட்ட நாட்கள் 56.

நீண்ட பயணத்தின் மொத்த தூரம்-
- சீனக் கணக்கில் 180 88 வீ
- அன்றையக் கணக்கில் 6,000 மைல்கள்
- இன்றையக் கணக்கில் 10,000 கிலோ மீட்டர்கள்

அதாவது சென்னையிலிருந்து டெல்லிக்கு நான்கு முறை சென்று திரும்பும் தூரம்! நாள் ஒன்றுக்குச் சராசரி 42 கிலோ மீட்டர் நடந்திருக்கிறார்கள். நடைப்பயணம் என்பது நம்மில் பலர் நினைப்பது போல் சமவெளிப் பயணம் அல்ல; சாலை வழிப்பயணமும் அல்ல. நடந்த வழி நெடுகிலும் இருண்ட காடுகள், காடுகள் செறிந்த மலைகள், வெள்ளப் பெருக்கெடுத்த ஆறுகள், ‘கண்ட இடங்களில் கொல்லுவோம்' என்று சீனர்கள் மீது ஜென்மப்பகை கொண்ட ஆதிவாசிகள் அடங்கிய ஆறு மாவட்டங்கள், விமானம் மூலம் வேவு பார்த்து பாலங்களையும் பாதைகளையும் தகர்க்கும் அரசுப் படைகள் - இவ்வாறு எண்ணிலடங்கா இடையூறுகள்!இவ்வளவுக்கும் மத்தியில் நெடும் பயணம்!

- பகையரசின் ஆளுகைக்குட்பட்ட 12 மாகாணங்கள் வழியாக உள் நுழைந்து வெளியேறி இருக்கிறது நடைபயணப் படை.
- செஞ்சேனை ஏறி இறங்கிய மலைகள் 18.
- நீந்தியோ, படகிலோ, கடந்த நதிகளின் எண்ணிக்கை 24. அவற்றில் யாங்ட்சீ, டாட்டு ஆகிய இரண்டு பேராறுகளை ஒரு லட்சம் வீரர்கள் கடந்த சாதனை செஞ்சேனை சாகசத்தின் சிகரம் என்று கூறலாம்.

சாதாரணமாக யுத்தத்தில் பின்வாங்கிச் செல்லும் படையினர் தாம் கடந்து செல்லும் வழிகளில் உள்ள குடியிருப்புகளைக் கொள்ளையடிப்பது, கொள்ளி வைப்பது, மக்களைக் கொல்வது, பெண்களைச் சிதைப்பது போன்ற வெறித்தனங்களில் ஈடுபட்டுத் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். கூலிப்படை அப்படித் தான் செய்யும். கொள்கைப் படை அப்படிச் செய்யுமா? செஞ்சேனை சென்ற வழிகளில் சாத்தியப்பட்ட இடமெல்லாம் நில மீட்சி, நிலப்பங்கீடு, நிலவரி ரத்து, கடன்கள் ரத்து, உழுபவனுக்கே மகசூல் - ஆகிய கோட்பாடுகளைச் செயல்பாடுகளாக்கிக் காட்டியதில் கூலி உழவர்களும், ஏழை உழவர்களும் ஊரின் எல்லையில் கூடி நின்று வரவேற்றார்கள். ஆர்வமும், தகுதியுமுடைய இளைஞர்கள் செஞ்சேனையின் பயணத்தில் சேர்ந்து வர அனுமதிக்கப்பட்டார்கள்.

நடைப்பயணம் படையினர்க்கு விதிக்கப்பட்டிருந்த ‘எட்டுக் கட்டளைகள்' பற்றிப் படிக்கும்போது, ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு' என்பவை செஞ்சேனையின் ‘மூளை - இதயம் - நுரையீரல் என மதிக்கப்பெற்றதாக அறிகிறோம். நடைப்பயண வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக ஒழித்துத் தரப்படும் ஏழை மக்களின் வீடுகளில் இரவைக் கழித்துவிட்டுக் காலையில் மீண்டும் போர்ப்பயணத்தைத் தொடங்கும்முன் ஒவ்வொரு வீரனும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள் எட்டு.

1928-இல் தோழர் மாவோ விவசாயப் புரட்சியாளர்களுக்காக உருவாக்கிய ‘எட்டுக் கட்டளைகளும் - மூன்று கடமைகளும் என்ற செஞ்சேனை விதிகளைச் சின்னச் சின்ன மாற்றங்களுடன் சீன விடுதலைக்காக உருவான மக்கள் விடுதலைப்படையும் தன் விதிகளாக்கிக் கொண்டது. செஞ்சேனை கடைப்பிடித்த அந்த மூன்று கடமைகள்:

1. இறக்கும் வரை எதிரியுடன் போராடு.
2. மக்களை ஆயுதபாணி ஆக்கு.
3. போர் நிதியை மக்களிடமிருந்தே திரட்டு.

எட்டுக் கட்டளைகள்:

1. மக்களிடம் கனிவோடு பேசு.
2. எதை மக்களிடம் பெற்றாலும் அப்பொருளுக்குரிய விலையைக் கொடுத்துவிடு.
3. இரவலாக மக்களிடம் பெறும் பொருட்களைத் திருப்பித் தந்து விடு.
4. உன்னால் சேதப்படுத்தப்பட்ட பொருளுக்கு நஷ்டஈடு கொடுத்துவிடு.
5. மக்களைத் தாக்காதே (மக்கள் வேறு; எதிரிகள் வேறு) மக்களை இழிவாகப் பேசாதே.
6. பயிர்களை அழிக்காதே.
7. பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்.
8. பிடிபட்ட கைதிகளைக் கௌரவமாக நடத்து.

இந்தக் கட்டளைகளை மீறிய வீரர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டார்கள். செஞ்சேனையிலிருந்து விலக்கப்பட்டார்கள். (ஆதாரம்: Mao Tse Tung Selected Writings)

இந்தக் கட்டளைகளைப் படிக்கும்போது இன்று ஈழத்தில் இலங்கை ராணுவத்தின் கேவலமான நடத்தைகளும், காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் கீழ்மைகளும், கர்நாடகக் கிராமங்களில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சமூக ஒழுக்கத்துக்கும் தனிநபர் ஒழுக்கத்துக்கும் செஞ்சேனையை வழி நடத்திய சீனப் பொதுவுடைமை இயக்கமும் அதன் தலைவர் மாவோ அவர்களும் எத்தனை சிறப்பும் முக்கியத்துவமும் தந்தார்கள் என்பதை எட்டுக் கட்டளைகளால் அறிகிறோம்.

சன்யாட் சென் ஆரம்பித்து நடத்திய கோமின்டாங் கட்சியின் செல்வாக்கு அவரது மறைவுக்குப் பின்னும் சீன மக்களிடம் நீடித்தது. சன்யாட்சென் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சியாங்கே ஷேக் கோமின்டாங் கட்சியின் தலைவராகவும் சீனப் பிரதமராகவும் முப்படைத் தலைவராகவும் முடிசூட்டிக் கொண்டார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தன் முதல் எதிரியாகக் கருதிய சியாங்கே ஷேக்கின் அடக்குமுறைகளுக்கு மத்தியில்தான் சிவப்பியக்கமும் செஞ்சேனையும் வளர்ந்தாக வேண்டிய வரலாற்று நெருக்கடி நிலவியது. சீனக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு அதிகநெருக்கடிகளும் அடிக்கடித் தாக்குதல்களும் வரக் காரணமாயிருந்த அம்சங்களில், சியாங்கே ஷேக்கின் தலைநகரமாக இருந்த ‘நாங்கிங் நகரம் தென் சீன மாநிலத்தில் அமைந்திருந்தது ஓர் அம்சமாகும்.

புரட்சியும் எதிர்ப்புரட்சியும் கனன்று கொண்டிருந்த தென் மாநிலங்களிலிருந்து பல்லாயிரம் கல்தொலைவு தள்ளியிருந்தன செஞ்சேனையும் செங்கொடியும் வலுவோடிருந்த வடக்கு - வடமேற்கு மாநிலங்கள். எனவே வடக்குக்கும் தெற்குக்கும் அன்றாடத் தொடர்புக்கோ, அவசரத் தேவைக்கு ஆதரவுக்கரம் நீட்டவோ அன்றைய நிலையில் எந்த மார்க்கமும் இல்லை.

இந்தப் பின்னணியில் தான் - செஞ்சேனையிடமிருந்தும் சீன சோவியத் அமைப்புகளிடமிருந்தும் தென் மாநிலங்களைக் கைப்பற்றாவிட்டால் தென்சீனம் செஞ்சீனமாகிவிடும் என்றஞ்சிய சியாங்கே ஷேக் கோமின்டாங் படைகளைக் களமிறக்கினான். அதனால் தென்பகுதிச் செஞ்சேனை தொடர்பு துண்டிக்கப்பட்டு முற்றாகத் துடைத்தெறியப்படும் அபாயம் நெருங்கி வருவதை உணர்ந்து கொண்ட சிவப்பியக்கம் அவசரமாகக் கூட்டிய ராணுவ மாநாட்டில் எடுத்த மாவோவின் முடிவுதான் - நீண்ட பயணம்!

தென்பகுதிச் செஞ்சேனை உடனடியாக இடம் பெயர்ந்து ஏற்கெனவே ஐந்து மாநிலங்களில் வலுவோடிருக்கும் வடமேற்கு மாநிலங்களின் செஞ்சேனையோடு இணைத்தால்தான் தென்சேனையைக் காப்பாற்ற முடியும் என்றும், இருபகுதிச் சேனைகளும் இணைந்தபின், கூடுதல் பலத்தோடு செங்கொடி இயக்கத்தை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பரப்பும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் ஒரு சிக்கலான கட்டத்தில் எடுத்த தொலைநோக்கு முடிவுதான் - நீண்ட பயணம்!

இதில் பொதிந்திருந்த இன்னொரு ராஜதந்திர அம்சம் என்னவெனில் வட சீனத்தின் எல்லைப் பகுதியாயிருக்கும் சோவியத் ரஷ்யாவின் பெரும் பலம் செஞ்சேனைக்கும் கூப்பிடு தூரத்தில் இருக்குமாகையால், செஞ்சேனையில் புரட்சி மையத்தைத் தெற்கிலிருந்து வடக்குக்கு நகர்த்துவதே புதிய போர்த்தந்திரமாக அமையும் என்ற முடிவின் விளைவே நீண்ட பயணம்! ரஷ்யாவின் பின்னணிப் பலமும், செஞ்சேனைகளின் கூட்டு பலமும் சேர்ந்தால், புதிய ஆற்றலோடு புரட்சியை முன்னெடுக்க முடியும் என்ற ராஜதந்திரக் கணக்கு மிகச் சரியானது என நிரூபித்தது நீண்ட பயணம்!

செஞ்சேனையைத் தீர்த்துக் கட்டிவிட்டால் சிவப்பியக்கம் செத்துப்போய் விடும் என்று கணக்கிட்டிருந்த சியாங்கே ஷேக்கின் பிரம்மாண்டமான பிம்பம் சீன மக்கள் கண்முன்னாலேயே தூள்தூளாகச் சிதறியது. 10,000 கிலோ மீட்டர்கள் கடந்து 1935 அக்டோபர் 25 அன்று செஞ்சேனையின் நெடும்பயண இலக்காக சீனப் பெருஞ்சுவரை ஒட்டி இருந்த ஷென்சி நகரை அடைந்த முதல் படைப்பிரிவுக்கு தலைமையேற்று வெற்றியை எய்திய தலைவர்கள் தோழர் மாவோ, தோழர் சூ-என்-லாய், தோழர் வின்பி யாவோ, தோழர் பெங் டேஹுவாய் ஆகியோராவர். விடுதலை பெற்ற சீனத்தின் படைத்தளபதியாக இருந்த தோழர் சூட்டே போர்நடைப் பயணத்தில் மற்றொரு செஞ்சேனைப் பிரிவுக்குத் தலைமை ஏற்று ஷென்சிக்குள் நுழைந்தார்.

'Migration of a Nation' - ‘ஒரு தேசமே இடம் பெயர்வது போன்ற சரித்திர சாகசம்' என்று எழுதிய எட்கார் ஸ்நோவின் கூற்று மிகையல்ல; மிக உண்மை. 95,000 செஞ்சேனை மறவர்களோடு தொடங்கிய போர்ப் பயணம் ஷென்சியில் முடிவுற்ற போது 45,000 வீரர்களே எஞ்சி இருந்தனர். இந்தப் பெருந்தியாகம் - நாற்பதாயிரம் வீரர்களின் உயிர்த்தியாகம் - இல்லாமல் நெடும்பயணம் நிறைவேறியிருக்க முடியாது.

நெடும் பயணம் நிறைவேறாது போயிருந்தால் சீனப்புரட்சியும் நிறைவேறியிருக்காது திட்டமிட்டபடி. சீனப்புரட்சியின் திருப்புமுனையாக அமைந்த நெடும் பயணத்தின் நெடுகிலும் விதைக்கப்பட்ட நாற்பதாயிரம் மறவர்கள், 1946 அக்டோபர் முதல் தேதி விடுதலை பெற்ற சீன மக்கள் ஏந்திய கொடிகளில் நட்சத்திரங்களாக மலர்ந்தார்கள். விதைகள் மலர்களான காட்சியைக் கண்டு மேற்குச் சீமையின் மேதைகளிடம் அன்று தொடங்கிய பிரமிப்பு இன்றும் தொடர்கிறது. இனியும் தொடரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com