Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2006

ஆரூரில் காம்ரேட் கலைஞர்

- முத்தரசன்

தொழிலாளர்களில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் விவசாயத் தொழிலாளர்கள், தலித்துகள் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி மக்களே விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். ஆண்டாண்டு காலமாய் அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டு வரும் இவர்கள் சமூகத்தில் அடக்கப்பட்டவர்களாக, எடுக்கப்பட்டவர்களாக, சகலத் துறைகளிலும் பின் தங்கிய பகுதி மக்களாக உள்ளனர். வேலை உத்திரவாதம், ஊதிய உத்திரவாதம் ஏதுமற்ற, அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்குரிய சட்ட ரீதியான பாதுகாப்பு, சலுகைகள் ஏதுமற்ற அவல வாழ்க்கையில் அல்லல்படும் மக்கள் பகுதியாவர்.

வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவது என்று கடவுள் இட்ட வழியாகக் கருதி வந்த இம்மக்களை அமைப்பு ரீதியாக அணி திரட்டி அவர்களுக்கு சட்டரீதியான உரிமைகள், சலுகைகள் கிடைத்திட தொடர்ந்து போராடி வெற்றி கண்ட சங்கமே, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கமாகும். அதன் மாநில மாநாடு கடந்த 1997 ஆகஸ்ட் 26, 27, 28 நாட்களில் திருவாரூர் நகரில் நடைபெற்றது. மாநாட்டு நிறைவு நாளான ஆகஸ்ட் 28ல் லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர் ஆண்களும், பெண்களும் நிறைந்த பொது மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கலந்துக் கொண்டு மாநாட்டுக் கோரிக்கையினை ஏற்று, திரு.பெ.கோலப்பன் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் வேளாண் தொழிலாளர் தனிக்குழு ஒன்றை அமைத்து அறிவித்தார்.

அக்குழு விவசாயத் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நிலைமைகளை முழுமையாக ஆய்வு செய்து 43 பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அப்பரிந்துரைகளின் அடிப்படையில் 2001-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம் என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியது. இவ்வாரியத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் சிறு, சிறு விவசாயிகள் அனைவரும் ரூ.100 - நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.

அவ்வாறு உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை விபத்துகால உதவி, இயற்கை மரணத்திற்கான நிதி, ஈமச் சடங்கு நிதி என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சேர்ந்தனர், 7,35,000 விவசாயத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து அவ்வாரியத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் நிதியும் சேர்ந்த நிலையில் - 2001-ம் ஆண்டு சட்டப் பேரவைக்கான தேர்தல் வந்தது.

பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, செல்வி. ஜெ.ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். சங்கத் தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து, விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும், கோலப்பன் குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். முதல்வர் ஜெயலலிதா அவர்களும், நிச்சயமாக நிறைவேற்றுவேன், என்னை நம்புங்கள் என்று உறுதியளித்தார். ஆனால் அவர் ஆட்சி நடத்திய ஐந்தாண்டு காலத்தில் வாரியத்தை செயல்படுத்தாமல் முடங்கி வைத்தார். வாரியத்தை செயல்படுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதிக்கப் பெற்ற அனைத்து போராட்டங்களையும் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் நலவாரியம் மேற்கொண்டது.

அரசு அவைகள் அனைத்தையும் உதாசீனப்படுத்தியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம், அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நலவாரியம் கலைக்கப்பட்டதாக அரசாணை வெளியிட்டு நீதி மன்றத்திலிருந்து தப்பித்துக் கொண்டது. 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயத் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்திட்ட அ.தி.மு.க.வைத் தோற்கடிப்பது என்று சங்கம் முடிவு செய்து களம் கண்டது. அ.தி.மு.க. தோற்கடிக்கப் பெற்று தி.மு.க. தலைமையிலான ஆட்சி டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்தது.

கடந்த 4.7.2006 அன்று முதல்வர் கலைஞர் அவர்களை சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து, விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தை மீண்டும் அமைத்துச் செயல்படுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். ஆவன செய்வதாக உறுதியளித்த முதலமைச்சர் விண்ணப்பம் அளித்திட்ட மூன்றே நாளில் முடிவு கண்டார், குறிப்பாக 7.7.2006 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் நலவாரியம் மீண்டும் அமைக்கப்படும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

22.7.2006-ல் பேரவையில் அளிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் வாரியம் குறித்து அறிவித்ததுடன், நலத்திட்ட உதவிகள் குறித்தும் அறிவித்து, அதற்கான சட்டம் இக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 27.7.2006 அன்று தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம் குறித்தான சட்ட முன்வடிவை வருவாய்த்துறை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். 2.9.2006 அன்று சட்டம் நிறைவேறியது.

மிகக் குறுகிய காலத்தில் கோரிக்கை ஏற்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், குத்தகை சாகுபடியாளர்கள் என்று, ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் பயன் பெறும் வகையில் விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தை மீண்டும் அமைத்திட்ட முதல்வர் அவர்களைப் பாராட்டவும், நன்றி கூறவும் ஒரு மாபெரும் விழா நடத்திட முடிவு செய்தோம். விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தை கலைத்ததன் மூலம் முந்தைய அ.தி.மு.க. அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு இழைத்திட்ட துரோகத்தை, பெரும் அநீதியை தற்போதைய தி.மு.க. அரசு துடைத்தெறிந்து, நல்லதோர் முடிவை, ஏழை, எளிய மக்களுக்குப் பயன் அளித்திடும் முடிவை மேற்கொண்டதால், குறுகிய காலத்தில் இதனை நடைமுறைப்படுத்திட மேற்கொண்ட நல்ல முயற்சியை, செயலை, அதற்குக் காரணமான முதலமைச்சரைப் பாராட்ட விழா எடுக்கப்பட்டது.

திருவாரூர் நகரில் 12.9.2006 அன்று நடைபெற்ற மாபெரும் பாராட்டு விழாவில் விவசாயத் தொழிலாளர்கள் ஆண்களும்-பெண்களுமாய் லட்சக்கணக்கில் அணி திரண்டு முதலமைச்சர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் மாநிலச் செயலாளர் தோழர். தா.பாண்டியன் தலைமை வகித்தார். விழாக்குழுத் தலைவர் தோழர். எம்.செல்வராசு வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதல்வரைப் பாராட்டி தோழர் இரா.நல்லகண்ணு, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பேசினர்.

முதல்வர் கலைஞர் விழா நிறைவுப் பேருரை நிகழ்த்தினார். முதல்வர் தமது உரையில் –

“அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நான் சந்திக்காமல் இருந்திருந்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாய் உங்கள் தோழர்களில் ஒருவனாய் இந்த மேடையில் அமர்ந்திருப்பேன்'' என்று உணர்ச்சியுறப் பேசியபோது லட்சக் கணக்கில் கூடியிருந்த உழைக்கும் தோழர்கள் மகிழ்ச்சி பொங்கப் பெரும் ஆரவாரம் செய்தார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com