Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2006

குற்றக் கூண்டில் ஒரு வரலாற்றுப் புரட்டர்

- ஆய்வறிஞர் இரா. மணிவாணன்

சிலம்பின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கான சான்றுகள்

இலக்கியம் என்பது அக்காலத்தில் நிலவிய வரலாறு பண்பாடு. சமய நிலை ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடி என்பர். சிலப்பதிகாரக் காப்பியம் நாலடியாரைப் போன்று வெறும் அறங்களை மட்டும் கூறும் சமணப் பாங்கில் அமையவில்லை. மன்னவன் ஆட்சிச் சிறப்பு, கொடைச் சிறப்பு, படைச் சிறப்புகளைக் கூறும் புறநானூற்றுப் போக்கில் அமைந்துள்ளது. மங்கையரின் இல்லற மாட்சியையும், முல்லை சான்ற கற்பின் திறத்தையும் விளக்கும் அகப் பாடல்கள் நெறியில் நடையிட்டுள்ளது. பழந்தமிழர் வாழ்க்கை நெறிகளில் சமண பவுத்த வேத நெறிப்பாங்குகள் தம்முள் கலந்த நூற்றாண்டைச் சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது. சமண, பவுத்த, வேத நெறிகள் ஆகிய மூன்றில், வேதநெறி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலும் பவுத்தநெறி கி.மு. நான்காவது நூற்றாண்டிலும் சமண நெறி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் பரவின.

பவுத்தத்தில் மகாயானப் பிரிவும் சமணத்தில் வெள்ளாடை (சுவேதம்பர)ப் பிரிவும் கி.பி. முதல் நூற்றாண்டில்தான் பரவின. ஆதலால் மூன்றும் தழைத்த காலமும் மூவேந்தராட்சி சிறப்புற்றுத் திகழ்ந்த காலமும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டே ஆகும்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் காலம் தோன்றியதால் சிலப்பதிகாரக் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முடியாது.
பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தின் பதிகத்தில் சேரன் இளஞ்சேரலிரும் பொறை ஆந்திரப் பகுதியிலுள்ள அமராவதியிலிருந்து சதுக்க பூதங்களைக் கொண்டுவந்து வஞ்சியில் நிறுவினான் எனக் கூறப்பட்டுள்ளது.

அருந்திறன் மரபின்
பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறல் பூதனைத்
தந்திவண் நிறீஇ
(பதிற். 9ஆம் பதிகம்)

இதிலிருந்து சதுக்க பூத வழிபாடு சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்பே இளஞ் சேரல் இரும்பொறை காலத்திலேயே தமிழகத்துக்கு வந்துவிட்டது எனத் தெரிகிறது. இதைப் போன்றே இதே கால அளவில் காவிரிப் பூம்பட்டினத்து சதுக்க பூதங்களும் பவுத்த மதம் சிறந்து விளங்கிய அமராவதி பட்டணத்திலிருந்து கொண்டு வரப்பட்டனவாதல் வேண்டும். புத்தரே அமராவதி பவுத்த சங்கத்துக்கு ஒரு முறை வந்திருந்தார் எனக் கூறுகின்றனர். சதுக்க பூதங்களின் வரவு கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்பே நிகழ்ந்திருப்பதால் சிலம்பின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கான சான்று கிடைத்திருக்கிறது.

இந்த வகையில் கிடைத்துள்ள சான்றுகள் பதினொரு தலைப்புகளில் இவண் தரப்பட்டுள்ளன.

சிலம்பில் இடம்பெறும்
அஃறினைப் பொருள்களால்
அறியப்படும் காலவரம்பு

ஒவ்வொரு சொல்லுக்கும் வடமொழியில் மூலம் தேடுவதைப் போன்ற பேதமை வேறொன்றும் இல்லை. சமணர், பவுத்தர் போன்ற வடநாட்டாரும் தமிழ்நாட்டில் குடியேறிய பிறகு தமிழ்ச் சொற்களை ஒலிப்பு மாற்றிப் பேசிய சொல்லாட்சிகள் சில உள்ளன. இவை எம்மொழிச் சொற்கள் என மயங்க வைக்கும்.

வெள்ளைக்காரன், பையன் என்னும் சொல்லை Peon ஆக்கிக் கொண்டான். கொட்டை நீக்காத பருத்தியைத் தென்பாண்டி நாட்டார், கொட்டான் எனக் குறிப்பிடுவதை ஆங்கிலத்தில் Cotton ஆக்கிக் கொண்டனர். இதைப் போன்று சமண பவுத்தர்களால் உருமாறிய சொற்களை வேர்ச்சொல் ஆராய்ச்சி வல்லுநர்கள் விளக்கிச் சொல்வார்கள்.

சமணர், மாணாக்கன், மாணாக்கி என ஆண்ட சொற்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகியவற்றில் காண முடியாது. வளர்ப்பு விலங்குகளின் இளமைப் பெயர்களை இளஞ் சிறுவர்களுக்கும் இட்டு வழங்குவது உண்டு.

`செள்ளை' என்பது பெண் ஆட்டுக் குட்டியைக் குறிக்கும் பெயர். இது `செள்ளை' எனச் சிறுமியையும், தங்கையையும் குறிக்கும் சொல்லாகக் கழகக் காலத்திலேயே வளர்ந்துவிட்டது.

தொல்காப்பியர் சுட்டிய `மூடு' என்னும் இளமைப் பெயரைக் கொங்கு வேளாளர் பெண் ஆட்டுக்குட்டியின் பெயராக வழங்குகின்றனர். குடகு மொழியில் மூடி எனும் சொல் சிறுமியைக் குறிக்கிறது. இப்பகுதியிலேயே சிலர் பிள்ளைகளை மணக்கு மணக்கன் என்கின்றனர்.

கருநாடகத்திலிருந்து கொங்கு நாட்டுக் குகைகளில் தங்கிக் கல்வி கற்பித்த சமண முனிவர்கள் மணக்கன் என்னும் சொல்லிலிருந்து மாணாக்கன் என்னும் சொல்லை உருவாக்கினர். பின்னர் கல்வி கற்கும் பருவத்தானைப் பிறரும் மாணி என வழங்கத் தொடங்கினர். இம்மாற்றம் பத்திரபாகு முனிவரும் சமுத்திர குப்த முனிவரும் கருநாடகம் வந்த காலத்தையடுத்துக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நடைபெற்றதாகும். இந்த வரலாற்றுப் பின்னணி தெரியாமல் விளையாடுவது தவறு.

குந்தவை, மாதவி: மலரின் பெயர் பெண்ணின் பெயர் மாதவி என்பது மலரின் பெயர். குந்தவை என்பதும் குண்டுமல்லிகையைக் குறித்த சொல். இவை இரண்டும் நாட்டுப்புற பிராகிருத மொழிச் சொற்கள். இடைக் காலத்தில் வாழ்ந்த சோழர்கள் கன்னட நாட்டுப் பெண்களை மணந்தபோது குந்தவை என்பது பெண்ணின் பெயராகத் தமிழ் மண்ணில் காலூன்றியது.

மாதவி என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அதாவது சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு 450 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் பெண்கள் பெயராக இடம் பெறத் தொடங்கி விட்டது.
சமண சமயத்தைச் சார்ந்த பெண்களின் பெயராக இருந்த இச்சொல் ஏனையவரும் வழங்கும் பெயராயிற்று.

இந்த அடிப்படை உண்மைகளை உணராமல் மகாதேவி தான் மாதவி ஆயிற்று என்பது அறியாமையைத்தான் வெளிப்படுத்தும். சிரிப்புக்கு இடமான சொல்லாராய்ச்சியாகத்தான் இது முடியும். மா என்பது `பெரிய' எனப் பொருள்படும் பழந்தமிழ்ச் சொல். பெரிய என்பதற்குக் கூடவா பிறமொழிச் சொல்லை நாடுவார்கள்?

கொற்றவையை `பாய் கலை மடந்தை' என இளங்கோவடிகள் குறிப்பிட்டிருக்கிறார் மானைக் கொற்றவையொடு தொடர்புபடுத்திப் பேசுவது கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பது தவறு.

கொற்றவை வழிபாட்டை வஞ்சித் துறையில் கொற்றவை நிலை எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார். கொற்றவையை அம்மை அப்பனாகவும் வழிபட்டிருக்கிறார். கொற்று என்பது மலையுச்சியைக் குறிக்கும். கொற்றன் மலை மேல் இருக்கும் சிவன். கொற்றனும் அவ்வையும் சேர்ந்தே கொற்றவை என்னும் கூட்டுச் சொல் உருவாயிற்று. குல்-குற்று என்பது போல் கொல் கொற்று (தாக்கு, கொல்) எனத் திரிந்த வினைச் சொல்லிலிருந்து பிறந்த கொற்றம் என்னும் சொல் வெற்றியைக் குறித்தது.

சிவனை மலையன், மலையப்பன் என்று சொல்வதல்லது வெற்றியாளன் என்று சொல்வதில்லை. மக்களுக்குத்தான் வெற்றி அரிய செயல். கடவுளுக்கு வெற்றி என்பது அரிய செயலாகாது.

கொற்றவையின் ஒரு காலில் சிலம்பும், மறுகாலில் ஆண்கள் அணியும் வீரக்கழலும் உள்ளதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இது அம்மையப்பன் வடிவமாகும். கொடு கொட்டி அல்லது சாக்கைக் கூத்து என்பது அம்மையப்பனாக ஆடும் கூத்தினைக் குறித்தது. கொடுகொட்டிக் கூத்தினைக் கலித் தொகையும் இதற்கு ஆரியர் தந்த பெயரான சாக்கைக் கூத்தினைச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுவதைக் காணலாம்.

சிவன், கையில் மானேந்தியவன். சிவன் மானேந்தினால் அது கொற்றவைக்கும் உரியதாகிவிடுகிறது. சிந்துவெளி முத்திரைகளிலும் புலியின் உடலோடு இணைந்த காளியின் உடலும் சிவனின் உடலும் கொண்ட முத்திரைகள் கிடைத்துள்ளன. பிற உயிர்களுடன் மானின் உருவமும் சிந்துவெளி முத்திரைகளில் உள்ளன. ஓக (யோக) நிலையில் அமர்ந்திருக்கும் சிவனது பீடத்தின் அடியில் உள்ள வடிவம் இரலை மான் குட்டியின் வடிவம் எனப்படுகிறது.

எனவே, கொற்றவையை முல்லை நிலத்துக்குரிய மானொடு சார்த்திப் பேசுவது சிலப்பதிகாரக் காலத்துக்கும் பல்லாயிரம் ஆண்டுகள் முந்தையது.

கொற்றவையை அரிமா மீது அமர்த்தியது ஆரியரின் சக்தி வழிபாட்டின் பின்னர் தோன்றிய மிகமிகப் பிற்கால வழக்கம். உச்சயினியிலுள்ள மாகாளி கோயிலிலும் புலியே கருவறையின் முன்னுள்ள ஊர்திச் சிலையாக வைக்கப்பட்டுள்ளது. இராசா வளி நூலில் கூறப்பட்ட பத்தினிவழிபாடு கண்ணகி வழிபாடு இல்லை என்பது சரியன்று.

கி.பி.5ஆம் நூற்றாண்டின தாகக் கருதப்படும் வெண்கலப் படிமம் இலண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும், அது பவுத்த மதத் தாரா தேவியினுடையது என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படிமத்தின் காது பெரிதாகத் துளையிடப்பட்டு வடிகாதாக அமைந்துள்ளது. வடிகாது வளர்த்துக் குண்டட்டி நகையணிந்து கொள்வது பழங்காலத் தமிழர் பண்பாடு. தமிழ் நாட்டில் பவுத்தசமயம் வளர்ந்தபோது புத்தருக்கும் வடிகாது அமைத்தனர். ஆனால் கீழைநாடுகளிலும் பிறநாடுகளிலும் உள்ள புத்தருக்கு வடிகாது அமைக்கப்படவில்லை.

ஆதலால் இலண்டனுக்கு இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட வெண்கலப் படிமம் கண்ணகி சிலையே என்பதில் ஐயமில்லை.

இளங்கோவடிகள் வாழ்ந்த காலவரம்பு

(கி.பி.120 கி.பி. 190) இளங்கோவடிகள் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, ஆகிய மேற்கணக்கு நூல்கள் பதினெட்டில் பதினொரு நூல்களிலிருந்து பாடல் வரிகளைச் சிலப்பதிகாரத்தில் எடுத்தாண்டிருக்கிறார். இதிலிருந்து புற நானூறு, அகநானூறு, திரு முருகாற்றுப்படை, பொரு நராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநெல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம், கலித்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களை நன்கு கற்றிருக்கிறார் எனத் தெரிகிறது. இந்நூல்களில் காலத்தால் பிந்தியதாகத் தெரிவது கலித்தொகை, இதனைத் தொகுத்தவர் நல்லந்துவன். பெரும்பாணாற்றுப்படை, பரிபாடல் ஆகியவற்றிலிருந்து எதனையும் இளங்கோவடிகள் எடுத்தாளவில்லை. எனவே நல்லந்து வனாருக்கும், தொண்டைமான் இளந்திரையனுக்கும் இடைப்பட்ட காலத்தில் இளங்கோவடிகள் வாழ்ந்திருக்க வேண்டும்.

பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்திலிருந்து ஒரு வரியை எடுத்தாண்டிருப்பதால் இளஞ்சேரல் இரும் பொறைக்கும் பின்னர் வாழ்ந்தவர் என்பது உறுதிப்படுகிறது. இம்மன்னனுக்குப் பிறகு சேரமரபில் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றும் வரை வலிமை வாய்ந்த மன்னர்கள் எவரும் காணப்படவில்லை. கலித்தொகை பாடல்கள் பாண்டியன் ஒருவனையே புகழ்ந்துபாடுகின்றன. பாரதம் பாடிய பெருந்தேவனார் புறநானூறு, அக நானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய ஐந்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். இவர் சங்ககால வரிசையில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகலாம்.

அகப்பாடல்கள் அனைத்தும் அன்பின் ஐந்திணையை மட்டும் பாடுவன. இதற்கு மாறாகக் கலித்தொகையில் பெருந்திணைப் பாடல்களும் சேர்த்துத் தொகுக்கப்பட்டுள்ளன. இது பழந்தமிழ் மரபு தடம் பிறழ்ந்த காலத்தைக் காட்டுகிறது.

கலித்தொகைக்குக் கடவுள் வாழ்த்து கலிப்பாவாகப் பாடப் பட்டிருக்கிறது. அது நல்லந்துவனார் பாடிய பாடலாக இருக்க முடியாது. தமிழிலக்கிய மரபின் வண்ணம் கலிப்பாட்டின் ஈற்றடி ஏ எனும் ஈற்றசையில் முடியாமல் இகர ஈற்றில் அமர்ந்தனை யாடி என முடிகிறது. இதுவும் தமிழ்க்கல்வி குன்றி வந்த நிலைமையைக் காட்டுகிறது.

கலித்தொகை காலத்திற்குப் பின்பு வாழ்ந்த இளங்கோவடிகள், தமிழ் மரபுகள் சிதையத் தொடங்கியது கண்டு வருந்தி அவற்றை மீண்டும் நிலை நிறுத்துவதற்காகவே சிலப்பதிகாரம் இயற்றியிருக்கிறார்.

இளங்கோவடிகள் பரிபாடலிலிருந்து எதையும் எடுத்தாளவில்லை. கலித்தொகை தொகுத்து முடித்த நல்லந்துவனாரின் பாடல்கள் பிற்காலத்தில் பரிபாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. 70 பரிபாடல்களில் 24 மட்டும் கிடைத்துள்ளன. இவற்றைப் பாடிய 13 புலவர்களில் யாரும் கடைக் கழகப் புலவர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

கலித்தொகையில் கிடைத்த பாடல்களை முதன்முதலில் தொகுத்தவர் பாண்டியன் நன்மாறன். சோழன் நல்லுருத்திரன் முல்லைக் கலியைப் பாடிக் கொடுத்தான். இந்த இரு மன்னர்களின் காலம் கா.சு. பிள்ளை கணித்த வண்ணம் கி.பி.42 முதல் கி.பி.100 என அறிய முடிகிறது. கி.பி.100 முதல் கி.பி.120 வரை பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும், அவனுக்குப்பின் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். ஆதலால் கி.பி.120 முதல் கி.பி.190 வரையிலுள்ள காலத்தில் இளங்கோவடிகள் வாழ்ந்திருக்க வேண்டும்.

பரிபாடலில் 13 பேர் 24 பாடல்களைப் பாடினர். 7 பேர் இசையமைத்தனர். பாடிய புலவர்களில் நல்லந்துவன் தவிர ஏனையோர் பதினெண் மேற்கணக்கு நூல்கள் பாடிய சங்க காலத்துப் புலவர்கள் வரிசையில் காணப்படவில்லை. அவர்களின் பெயர்.

கரும்பிள்ளை பூதனார்
குன்றம்பூதனார்
நப்பண்ணன்
நல்லழிசி
கேசவன்
கீரந்தை
இளம் பெருவழுதி
நல்லெழினியார்
நன்னாகன்
நல்லச்சுதன்
காக்கையன்
கடுவன் இளயெயினன்
பெட்டகன்
நாகன்
பித்தாமத்தர்

இவர்கள் இளங்கோவடிகள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர்கள் எனத் தெரிகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com