Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2006

பெரியாறு உரிமைப் போர்

- ‘எழுகதிர்’ அருகோ

``தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளா வழியாக ஓடும் ஆறுகள் அரபிக்கடலில் விழுந்து வீணானாலும் வீணாகட்டும். தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர மாட்டோம்'' என்று இந்திய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் சொல்லும் கேரளா, கருநாடகம் காவிரிநீர் உரிமையில் நடுவணரசின் ஆணைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றைத் துச்சமாக எண்ணித் தூக்கி எறிந்து விட்டு, தமிழகத்தை வஞ்சித்து நெஞ்சுயர்த்தி நிற்கும் நிலையைக் கண்டு தானும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமையே இல்லை என்ற இறுமாப்பில் துள்ளுவதாகத் தெரிகிறது.

ஆம்; கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு அச்சுதானந்தன் அவர்கள், தற்போது தமிழகத்தை ஆளும் கூட்டணியில் தனது ஆட்சியும், கேரளத்தில் தனது பிரதான எதிர்க் கட்சியான காங்கிரசும் இடம் பெற்றிருக்கின்றன என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல், ``போக்கிரித்தனமான வாடகைதாரர் போல தமிழகம் நடந்து கொள்கிறது.'' என்று தடித்த சொல்கொண்டு தாக்கியிருக்கிறார். ஏகாதிபத்திய அமெரிக்க அதிபர் புஷ் போல தோழர் அச்சுதானந்தன் மிரட்டுவதும், அதை இங்குள்ள தோழர்கள் வேடிக்கை பார்ப்பதும் அடுக்கவே அடுக்காது.

திருவாங்கூர் உண்மை காவிரியில் கருநாடகத்தின் தடாலடிப்போக்கை, இந்தியச் சட்டத்தையும் அனைத்துலகச் சட்டத்தையும் அவமதிக்கும் போக்கை நடுவணரசு தடுத்து நிறுத்தாததாலும், முல்லைப் பெரியாறு அணைபற்றி ஆங்கிலேயரின் கீழிருந்த அன்றைய சென்னை மாகாண அரசு, அன்றிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம்போட்டு, அதனடிப் படையில் அந்த அணை கட்டப்பட்டு, அன்றைய மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டதாலும், பழைய வரலாற்று உண்மைகளை மறந்துவிட்டு, மலையாளிகள் இப்படி வம்படி வழக்கில் இறங்குகின்றனர்.

உள்ளபடி திருவாங்கூர் அரசு என்பது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டதே ஆகும். `திரு அதங்கோடு' என்பதே `திருவிதாங்கூர்' என மருவி, பின்னர் திருவாங்கூர் ஆனது என்பது சரித்திரம்.

கொச்சியும் திருவாங்கூரும் இன்றுள்ள தமிழ் நூல்களில் மிகவும் பழைமையானது தொல்காப்பியம். அத்தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்தவர் `அதங்கோட்டு ஆசான்' என்பவர் என அத்தொல் காப்பியப் பாயிரம் பகர்கிறது. `வேணாட்டு அரசு' என்று குறிக்கப்படும் அதன் பழைய ஆவணங்கள் - கல்வெட்டுகள், செப்பேடுகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கின்றன. கடைசிக்காலம் வரை அது புழக்கத்தில் விட்ட நாணயங்கள், அதன் தலைநகரம் பத்ம நாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பிறகும்கூட `ஒருசக்கரம்' இரண்டு சக்கரம்' எனத் தமிழில் தான் அமைந்திருக்கின்றன.

மிகமிகப் பிற்காலத்தில் தான் அந்த அரசபரம்பரை நம்பூதிரிப் பிராமணர்கள் செல்வாக்குக் காரணமாக மலையாள மரபிற்கு மாறியிருக்கிறது. அதுவும் கொச்சி சமஸ்தானத்துடன் 1949 ஜூலை 1ஆம் தேதி இணைந்து ``திருவாங்கூர்-கொச்சிராஜ்யம்'' என்று ஆனபிறகே அது மலையாளமயமாகியிருக்கிறது. திருவாங்கூர் பகுதியின் தமிழ்த்தன்மையை நீடிக்க விடக்கூடாது என்பதற்காகவே அனைத்து வகையிலும் சிறந்த நகராக `கொச்சி' இருந்தும் பொதுத் தலைநகரமாக திருவனந்தபுரம் ஆக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

இலங்கை போன்ற வெளிநாடுகளில் இன்றைய கேரளா உருவாவதற்கு முன்பு மலையாளிகள் மிகுதியாக வாழ்ந்த இடங்கள் `கொச்சிக்கடை' என்று அழைக்கப்பட்டதே யொழிய, `திருவாங்கூர் கடை' என்று வழங்கப்படவில்லை என்பதே இதனை மெய்ப்பிக்கும்.

திரு-கொச்சி தமிழர்கள் திருவாங்கூ ர் சமஸ்தானம் தனியாக இருந்தவரை அதன் நிர்வாகத் தலைவர்களாக பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே இருந்துள்ளனர். தங்கள் அரசபரம்பரை மலையாள மயமானதை எதிர்த்துத்தான் குடிமக்களில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள், ஏனைய (தமிழ்நாட்டு) தமிழ்ப் பகுதியோடு இணைய வேண்டும் என்று போராடத் தொடங்கினார்கள்.

அதனால்தான் 1920ஆம் ஆண்டு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய காங்கிரசின் மாகாணக் கமிட்டிகளின் பெயர்களைக் காந்தியார் மொழிவழியாக மாற்றியமைக்க முற்பட்டபோது அந்தத் தமிழர்கள் தமிழ்நாடு காங்கிரசோடு இணைய வேண்டும் என்று கோரினார்கள். அக்கோரிக்கையை அன்றிருந்த தமிழ்நாடு காங்கிரசே ஏற்க மறுத்தபோதுகூட அவர்கள் ``திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ்'' என்று தனியே செயல் பட்டார்களேயொழிய, கேரளப்பிரதேச காங்கிரஸ் வருந்தி வருந்தி அழைத்தும் அதனோடு சேரவில்லை.

அந்த 2000 சதுர மைல் பரப்பு உள்ளபடி `கேரளா' என்ற சொல்லாட்சியே 1920க்குப் பிறகுதான் வழக்காற்றில் வரத் தொடங்கியது. ஆனால் ``வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்'' என்றும், ``இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்'' என்றும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழக்காற்றில் இருந்து வருகிறது. அதனால்தான் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே

``நீலத் திரைகடல்
ஓரத்திலே - நின்று
நித்தம் தவம்செய்
குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு''

என்று, பாரதி போன்றோரால் பாட முடிந்தது. மேலும் அத்திருவாங்கூர். - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ் தாய்த் தமிழகத்துடன் சேரவேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடினார்களே அந்தக் கோரிக்கையில் அவர்கள் உரிமை கோரிய 2000 சதுரமைல் பரப்பளவில் இந்த முல்லைப் பெரியாறு அணைக் கட்டுப் பகுதியும் அடங்குவதாகும்.

அப்படியிருக்க, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் சென்னை மாகாண அரசு போட்ட ஒப்பந்தம் காரணமாக அது கேரளவுக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமை கொண்டாட முடியாது. அது மட்டுமல்ல, தமிழ்த் தேசிய நூலான சிலப்பதிகாரத்திலேயே

``நெடியொன் மார்பில் ஆரம்போல
பெருமலை விளங்கிய பேரியாறு''

என்று, எந்த ஆற்றில் `தமிழ்நாட்டுக்கு உரிமையில்லை' என்று இன்று கேரளா சொல்கிறதோ, அந்தப் பெரியாறு குறிக்கப்படுகிறது. அதுபோல மலையாளப் பழைய இலக்கியம் உண்டா? அதிலே இப்படிக் குறிக்கப்பட்டிருக்கிறதா? என்றால் கிடையாது.

சேது அரசின் தீர்க்கதரிசனம் பெரியாற்றைக் கிழக்கு நோக்கித் திருப்பி, அதை வைகை ஆற்றுடன் இணைக்க வேண்டும் என்ற யோசனை வெள்ளைக்காரர்களுக்குத்தான் முதன்முதலில் உதித்தது என்று சொல்வதும் உண்மைக்குப் புறம்பானதாகும். ஏனென்றால், வைகையாற்றின் முடிவிடத்தில் இராமநாதபுரத்தில் அரசோச்சிய சேதுபதி மன்னர்களே இதை முதன்முதலாக முன்னெடுத்தனர். 1798ஆம் ஆண்டே சேதுபதி அரசில் அமைச்சராக இருந்த முத்திருளப்ப பிள்ளை என்பார் பெரியாற்று நீரைத் திருப்பி வைகையோடு இணைக்கவும் அதன்மூலம் ``வையை என்ற பொய்யாக் குலக் கொடி'' என்னும் சிலப்பதிகாரப் புகழை நிலைநிறுத்தவும் ஒரு அறிஞர் குழுவை அமைத்து, அக்குழுவை பெரியாறு, வைகை தோன்றுமிடங்களுக்கே, அனுப்பி வைத்தார். அக்குழுவினரும் சம்பந்தப்பட்ட இடங்களை யெல்லாம் நேரில் சென்று பார்வையிட்டு அத்திட்டம் நடைமுறைச் சாத்தியமானதுதான் என்று பரிந் துரைத்தது.

நிதியும் மதியும் ஆனால், அதுபோன்ற ஒரு பெரிய திட்டத்தை நிறைவேற்ற சேதுபதி அரசிடம் நிதிவசதி இல்லாததால், அன்றைக்கு வெள்ளையராதிக்கத்திலிருந்த சென்னை அரசிடம் உதவிகோர, சேது பதியரசுக்கு அப்பெருமை சேர்ந்து விடக்கூடாது என்று கருதி சென்னை அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டது. பின்னர் அதே திட்டம் 1850-ல் சென்னை அரசினால் மேற்கொள்ளப்பட்டு பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணியாளர்களிடையே பரவிய தொற்று நோய் காரணமாக நின்றுபோனது.

அடுத்து 1867-ல் மேஜர் ரைவ்ஸ் என்பார் 162அடி உயர மண் அணையை பெரியாற்றிலே ஏற்படுத்தி, மலையை வெட்டிக் கால்வாய் அமைத்துத் தண்ணீரைத் திருப்பலாம் என்று ஒரு திட்டத்தை ஆக்கியளித்தார். அத்திட்டம் போதிய விவரங்களோடு இல்லை என்று கூறி, அதுபற்றிச் சரியான திட்டத்தைத் தயாரித்தளிக்க 1868-ல் பென்னிகுய்க் நியமிக்கப்பட்டார். என்ன காரணத்தாலோ அவர் மாற்றப்பட்டு 1870-ல் ஸ்மித் என்பாரிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

தமிழரின் நீர் மேலாண்மை ஆயினும், ``175அடி உயரத்தில் இவ்வணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற போதிய பட்டறிவும் திறமையும் கொண்ட பொறியாளர்கள் இங்கு கிடையாது'' என அன்று சென்னை மாகாணத் தலைமைப் பொறியாளராக இருந்த ஜெனரல் வாக்கர் ஆட்சேபித்ததால், சென்னை அரசு அத்திட்டத்தை லண்டனுக்கு அனுப்பி வைத்தது.

பிரித்தானிய அரசோ ``பாசனப் பணிகளில் இந்தியப் பொறியாளர்களுக்குள்ள பட்டறிவும் திறமையும் உலகில் வேறு எந்த நாட்டுப் பொறியாளர்களுக்கும் கிடையாது'' என்று கூறி, 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் கட்டப்பட்ட கல்லணையை உதாரணமாகவும் எடுத்துக் காட்டித் திருப்பியனுப்பியது. எனவே இத்திட்டத்தை மீண்டும் பென்னி குய்க் அவர்களிடம் ஒப்படைத்து 8-5-1882-ல் சென்னை அரசு ஆணை பிறப்பித்தது. இது வரை திருவாங்கூர் சமஸ்தானம் இச்சித்திரத்தில் இடம் பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பென்னி குய்க் இத்திட்டப் பணிகளை மும்முரமாக முடுக்கிவிட்ட பிறகே அணைகட்டுமிடம் தனக்குச் சொந்தமானது என்று திருவாங்கூர் அரசு ஆட்சேபித்தது.

1886 ஒப்பந்தம் அதனால் 1886 அக்டோபர் 29ஆம் நாள் 999ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 1) பெரியாறு அணைகட்டத் திட்டமிட்ட இடத்திலிருந்து அணைகட்டி நீர்தேங்கும் பகுதியில் 155அடி நிலமட்டம் வரை உள்ள 8000 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2) அணைகட்டியபின் இந்த 8000 ஏக்கர் நிலமருகே மற்ற கட்டுமானங்களுக்காக 100 ஏக்கர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3) இந்த 8100 ஏக்கரில் அணை கட்டுவதற்கும் அதன் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் உரிமை

4) இந்நிலப்பரப்பின் மீது விழும் மற்றும் ஓடும் தண்ணீர் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ள உரிமை.

5) இந்நிலப்பரப்பில் (அப்போது) உள்ள காடுகள் ஒப்பந்தகாலத்தில் புதிதாக வளர்க்கப்படும் மரங்கள் அனைத்திற்கும் உரிமை.

6) இந்த அணையிலும், குளம், குட்டைகளிலும் மீன்பிடிக்கும் உரிமை.

7) இப்பகுதிகளில் அணை கட்டும்போதும் அதன்பின்பும் ஆட்கள், வாகனங்கள் போக்குவரத்திற்காக சாலைகள் அமைக்கும் உரிமை. இதற்காக ஏக்கருக்கு ஆண்டிற்கு ரூ.5 குத்தகை செலுத்த வேண்டும்.

999 ஆண்டுகளுக்குப்பின் மற்றொரு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதும் அவ்வொப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டது. அதில் அப்போது திருவாங்கூர் சமஸ்தானம் சார்பில் கையெழுத்திட்ட அதன் திவான் வி.இராமையங்கார் என்பாரும் தமிழ்நாட்டுக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பென்னிகுய்க்கின் பேருள்ளம்

பென்னிகுய்க் அவர்கள், தலைமையில் எத்தனையோ தடைகள், முடைகளுக்கிடையே 1895 அக்டோபரில் 175 அடி உயரம் நீரைத் தேக்கும் வகையில் அணைகட்டி முடிக்கப்பட்டது. நிதித்தட்டுப்பாட்டினால் அன்றைய சென்னை அரசு இதைக் கிடப்பில் போட முயன்றபோது திரு.பென்னி குய்க், இங்கிலாந்து சென்று தன் சொந்தச் சொத்துக்களை விற்றுவந்து நிறைவேற்றி முடித்தார். என்றால், அதற்கு அதனால் பயன் பெறப்போகிற மக்களிடம் அவர் வைத்த மனிதாபிமானப் பற்றே காரணமாகும். அதுகூட சகோதர மலையாள ஆட்சியினருக்கு இல்லையே என்பதுதான் வருத்தமளிப்பதாகும்.

ஆம்; 19ஆம் நூற்றாண்டில் அன்றைய மதுரை இராமநாதபுர மாவட்டங்களில் கடும்பஞ்சம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள்மாண்டதையும், பல்லாயிரக்கணக்கானோர் பஞ்சம் பிழைப்பதற்காக அப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்து சென்றதையும் அவர் அறிந்ததால், அம்மக்களைக் காப்பாற்றுவது தனது மனி தாபிமானக் கடமை என்று கருதி, தன் சொந்தச் சொத்துக்களை விற்றும் அக்கடமையை நிறைவேற்றினார். அதற்கு முன்பு 22000 ஏக்கர் மட்டுமே பாசனப்பகுதியைக் கொண்டிருந்த அன்றைய மதுரை இராமநாதபுரம் (இன்று தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம்) மாவட்டங்களில் இத்திட்டத்தினால் 2,00,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.

ஆனால், 1970-ல் கேரள அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் இத்திட்டத்திற்கு ஊறு நேரத்தொடங்கியது. ஆமாம்; மின் உற்பத்திக்காக இவ்வணையிலும் குளம் குட்டைகளிலும் மீன்பிடிக்கும் உரிமையை தமிழகம் கேரளத்திற்கு விட்டுக் கொடுத்தது. அதிலிருந்து கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

350 மில்லியன் யூனிட் வரை இவ்வணையிலிருந்து மின்உற்பத்தி செய்ய 1000 யூனிட்டிற்கு ஆண்டிற்கு ரூ.12ம், அதற்குமேல் யூனிட்டுக்கு ஆண்டிற்கு ரூ.18ம் கொடுக்க தமிழகம் சம்மதித்த இந்த ஒப்பந்தமானது 29-5-1970-ல் கையெழுத்தானாலும் 13-11-1954ல் இருந்தே நடைமுறைக்கு வருவதாகக் கொள்ளப்பட்டது.

மலையாள மனோரமா

`மலையாள மனோரமா' எனும் சக்திவாய்ந்த கேரள நாளேடு 1979ல் ``இந்த அணை உடையும் நிலையில் இருக்கிறது. அதனால் கேரளாவே நீரில் மூழ்கப் போகிறது'' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி, 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க முடியாத நெருக்கடியை உண்டுபண்ணியது. இதனால் தமிழகம் 13.5டி.எம்.சி. நீரிழப்புக்கு ஆட்பட்டு, 80,000 ஏக்கர் பரப்பளவு பாசனவசதியை இழந்தது.

நீதிமன்ற வழக்குகள், மத்திய நிபுணர்களின் ஆய்வுப் பரிந்துரைகள் ஆகியவற்றினால் 145 அடிவரை நீர்தேக்கலாம் என 2000-வது ஆண்டில் முடிவெடுக்கப்பட்டும் கேரள அரசு ஒரு தலைப்பட்சமாக அதை எதிர்க்கிறது. இது சம்பந்தமாகக் கேரள அரசின் சார்பில் முன் வைக்கப்பட்ட ஆட்சேபணைகளுக்கு, தமிழக அரசின் சார்பில் அல்ல, நடுவணரசு வல்லுநர் குழு சார்பில் உரிய பதில்கள் வழங்கப்பட்டு, 155 அடிவரை தாராளமாகத் தண்ணீரைத் தேக்கலாம் என்று தெளிவாக்கிய பிறகும் நிலநடுக்கத்தால் அணைக்கு ஆபத்து, கேரளாவுக்கு அபாயம் என்று அவர்கள் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

இதுபற்றி உச்ச நீதிமன்றம் 142 அடிவரை தண்ணீரைத் தேக்கலாம் என்று கூறி 27-2-2006-ல் அளித்த தீர்ப்பில்.

நிலநடுக்கம் உட்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டதில் நீர்தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.

மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனைகளின்படி சில பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. மீதமுள்ள பணிகளைச் செய்ய கேரள அரசுதான் சம்மதிக்கவில்லை.

அணையில் எல்லாப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்யவிடாமல் கேரளம் தடுப்பதற்கான எந்தக் காரணமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனைகளின்படி அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதியளிக்கிறோம். அதற்கு கேரளம் ஒத்துழைப்புத் தரும் என்று நம்புகிறோம் என்று எடுத்துக் கூறியுள்ளது.

தில்லியில் தடுமாற்றம்

ஆனால், கேரள அரசு, அத்தீர்ப்பை மதிக்காமல் கேரளச் சட்டமன்றத்தில் ஒரு தனி நாடுபோல அவசரச் சட்டமொன்றை நிறை வேற்றிவிட்டு தமிழக அரசுடன் பேசித் தீர்த்துக் கொள்ளத் தயார் என உச்சநீதிமன்றத்திடமும் மேல் முறையீடு செய்தது. அத்துடன் முதலமைச்சர் தலைமையில் குழுவாகச் சென்று பிரதமரிடமும் மனுக் கொடுத்தது.

தலைமையமைச்சரும் சரி, உச்சநீதிமன்றமும் சரி; என்ன செய்திருக்க வேண்டும்?

``முதலில் மத்திய அரசு வல்லுநர் குழுப் பரிந்துரைகளையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் நடைமுறைப் படுத்திவிட்டு வாருங்கள். கேரளச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை நீக்கிவிட்டு வாருங்கள்'' என்றல்லவோ சொல்லியிருக்க வேண்டும்!

மாறாக, அவர்கள் கொடுத்த மனுவைப் பெற்றுக் கொண்டு ``முடிந்ததைச் செய்கிறேன்'' என்கிறார் பிரதமர், ``கேரளத்துடன் திரும்பவும் பேசி முடிவு காணும்படி'' உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு அறிவுரை வழங்குகிறது.

அப்படியானால் ``கச்சத் தீவு தமிழகத்தைச் சேர்ந்தது. அதனால் `பாக்' நீரிணையில் இலங்கை கப்பல்கள் செல்லக்கூடாது'' என்று மத்திய அரசைப் பொருட்படுத்தாமல் தமிழகமும் அவசரச் சட்டம் இயற்றலாமா?

அப்புறம் இந்திய ஒன்றியம் என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கும்? இதை இந்திய அரசாங்கமும், உச்சநீதிமன்றமும் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் தென்னிந்தியாவின் அடிமாடல்ல என்பதை மனத்திற் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமை

கேரள அரசு இந்த அளவுக்கு நடந்து கொள்வதற்கு நாம் முன்பு சுட்டிக்காட்டிய வரலாற்று உண்மைகளை உணராததும், இன்றைய நிலையிலேகூட பெரியாற்றின் வடிமுகப்பரப்பில் 20 விழுக்காட்டுப் பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாததும் காரணமாகும்.

எனவே, குட்டக்குட்டக் குனிவதைவிட்டுவிட்டு, நமது தமிழக அரசு வரலாற்றுப்பூர்வமான நம் உரிமைகளை நிலைநாட்டவும், கேரள அரசின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாமும் அவர்களும்

முல்லைப் பெரியாறு அணை இதுவரை முற்றிலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏனென்றால் அது தமிழக அரசின் சொத்து. பிரிட்டிஷ் அரசு தவறாகச் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும்கூட தமிழக அரசின் உரிமைகள் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன.

இப்போது நேர்மையுணர்ச்சிக்கும் ஒப்பந்த விதிகளுக்கும் மாறாக கேரள அரசு அணைக்கட்டுப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தீவிர முயற்சியில் பகிரங்கமாக இறங்கி இருக்கிறது.

அணையின் அருகிலேயே கேரளப் போலீசார் தங்குவதற்கு அறைகள் கட்டவும், கண்காணிப்புக் கோபுரம் அமைக்கவும் கேரளப் போலீசார் விருப்பப்படி சென்றுவர படகுகள் வைத்துக் கொள்வதென்றும் முடிவு செய்திருப்பதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் அறிவித்திருக்கிறார்.

அணையைக் கண்காணிக்க இவர்கள் யார்? எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு என்கிறோமே அதே மாதிரியான அமெரிக்கப் பாணிப் போர்ப் பிரகடனம் இது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com