Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
நவம்பர் 2007

சித்தரும் பெரியாரும்

ப.சரவணன்


கி.பி.6,7ஆம் நூற் றாண்டுகளில் பல்லவர் காலத்தில் பக்தி இயக்கம் என்ற ஒன்று தமிழ் மண்ணில் தொழிற்பட்டது. - `பக்தி இயக்கம்’ என்ற பெயர் தமது வசதிக்காக நாம் இட்டுக் கொண்டது - இந்நூற்றாண்டுகளுக்கு முன்பு பௌத்தர் சமணர்களது கட்டுப்பாட்டுக்குள் இருந்த தமிழகத்தை மீட்டெடுக்கும் முயற்சியை இந்தப் பக்தி இயக்கம் மேற்கொண்டது. இவ்வியக்கம் ஏறத்தாழ சோழர் காலத்தில் முடிந்து போனது. இதன்பின்பு இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் சமயத் துறை எந்த இயக்கமும் இல் லாமலிருந்தது. பாண்டியர்களுக்கிடையேயான உட்பூசல் காரணமாக இஸ்லாமியரின் ஆட்சி ஏறத்தாழ பதினான்காம் நூற்றாண்டிதன் இறுதிவரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து விஜய நகரப் பேரரசின் ஆட்சிக்குக் கீழ் தமிழகம் கொண்டு வரப்பட்டது.

விதேசிகளின் ஆட்சியை அகற்றிய பின்னர் சுதேசிகள் தங்களது சமயக் கொள்கை களைப் பிரசாரம் செய்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்று. இதைச் செய்தது தமிழ்நாட்டினரைவிட சமஸ்கிருத மயமாக்கப்பட்டிருந்த தெலுங்கு தேசத்தினர் என்பதால் தமிழகம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சடங்குவயப்பட்ட, சாதி ஆதிக்கம் மிகுந்த சமய நெறிக்கு ஆட்பட்டது. ‘மக்களுக்காகச் சமயம் என்றிருந்த நிலை மாறிச் சமயத்திற்காக மக்கள்’ என்றாகி விட்ட இச்சூழலில் மக்களை திசை திருப்ப வேண்டிய நிலையில் சித்தர்கள் என் போர் தேவையற்ற சடங்குகளுக்கு வழிநடத்துகிற சமயங்களுக்கும் - சமயங்களுக்கு வழிநடத்துகிற பக்திக்கும் எதிராகக் கிளம்பினர்.

சித்தர்கள் பெருவாரியாகத் தமிழ் மண்ணில் உலவிய காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பதினெண் சித்தர்களில் ஆகப்பெருங் கலகக்காரராகக் கருதப்படும் சிவவாக்கியர் வாழ்ந்ததாக மு.அருணாசலம் எழுதுகிறார். சித்தர்கள் பதினெண்மர் என்ற வரையறையே தவறானது. ஏனைய சித்தர்களும் இந்தக் காலத்தை ஒட்டியோ பின்னரோ வாழ்ந்தவர்கள். அப்படியானால் கி.பி.4-6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமூலர் சித்தர் இல்லையா என்றால் திருமூலரும் சித்தர்தான்.

ஆனால் நிறுவன மயமாக்கப்பட்ட சமயத்தை எதிர்த்த முற்காலச் சித்தர் அல்லர் அவர். காரணம், அவரது காலத்தில் - களப்பிரர் காலத்தில் - எதிர்க்கப்பட வேண்டிய அளவிற்குச் சமயம் சடங்குமயமாக இல்லை. மாறாக, சைவம்/வைணவம் முதலிய தமிழ்மண்ணிற்குச் சொந்தமான அகச் சமயங்களை மீட்டெடுக்கும் நிலையிலேயே இருந்தது. இதற்குத் தடைக்கற்களாக இருந்தவை வேற்று மொழி ஆதிக்கமும் வருண பேதங்களுமேயாகும். எனவேதான் திருமூலர், `என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே’ என்றும் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்றும் பாடினார். (இன்றைய இந்துத்துவவாதிகள் சொல்லக்கூடிய அர்த்தத்தில் திருமூலர் பாடவில்லை.) இவ்வாறு தமிழை - தமிழால் சைவத்தை மீட்டெடுப்பதற்கான வித்தைத் தமிழ்மண்ணில் விதைத்தவர் திருமூலர்.

மேலும் எதிரணி சமயங்கள் ஒரு கோட்பாட்டோடு களத்தில் நிற்கிற நிலையில் அதனை எதிர்கொள்ள வெறும் தத்துவநெறி மட்டும் போதாது என்பதால் ஒரு தத்துவக் கோட்பாட்டை மையமாக வைத்து அதனைச் சுற்றி அதற்கு ஆதாரமாகத் தத்துவநெறியைக் கட்டுகிறார் திருமூலர். இதில் பக்தியைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.

மட்டுமின்றி, தத்துவநெறியின் உச்சிக்கு ஏற்றிவிடும் ஏணியில் பக்தி ஒரு படி என்று கருதினார். கருதப்பட்ட பக்தி பிற்காலத்தில் ஒரு முழுமையான நெறியாகவே வளர்த்தெடுக்கப்பட்ட போது அது சில சமாதானங்களையும் செய்து கொண்டது. இது சமுதாயக் கேடுகள் பலவற்றிற்கும் வழி வகுத்தது. இதனாலேயே அதனைப் பிற்காலச் சித்தர்கள் மறுத்தார்கள். எந்த ஒன்றையும் அதன் அளவையியல் வரம்புக்கு அப்பால் வளர்த்தெடுக்கும்போது அது எதிர் நிலையினதாகத் திரிந்து போய்விடும் என்பது ஒரு தத்துவப்பார்வை. ஒரே வரியில் சொல்வதானால் அளவிற்கு மீறினால் அமுதும் நஞ்சு.

எனவேதான் நிறுவன மயமாக்கப்பட்ட சமயத்தை, சடங்காசாரங்களை, பிற்காலச் சித்தர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த எதிர்நிலைப் போக்கை அடிப்படையாகக் கொண்டே இவர்களைக் `கிளர்ச்சியாளர்கள்’ என் பார் க.கைலாசபதி.

இவ்வாறு கிளர்ச்சி செய்த பிற்காலச் சித்தர்களில் முதன்மையானவர் சிவவாக்கியர். `சுரணை யற்றுப் போர் விட்ட சமுதாயத்தைச் சாடுவதற்கு வார்த்தைச் சவுக்கை வரமாகப் பெற்று வந்தவர் அவர்’ என் பார் கரு. ஆறுமுகம். சிவ வாக்கியரின் பாடல்களைப் பழமை விருப்பம் மிகுந்த சைவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் கையில் கிடைத்த பிரதிகளையெல்லாம் கிழித்துப் போட்டார்கள் என்றும் ஒரு குறிப்பு உண்டு. சித்தர்கள் பக்திநெறியைப் புறக்கணித்தவர்கள் என்றும் சாத்திரங்களைச் சுட்டெரித்தவர்கள் என்றும் சொல்லப்படுகின்ற வரையறைகள் எல்லாம் உண்மையில் சிவ வாக்கியருக்கே முழுமையாகப் பொருந்துகின்றன.

இன்னும் சொன்னால், சிவவாக்கியரையும் அவர்தம் புரட்சி வழியில் வந்த மேலும் சில பிற்காலச் சித்தர் களையும் கருத்தில் கொண்டும் அவர்களது பாடல்களை மையமாகக் கொண்டுமே இந்த வரையறை வகுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் உண்மையில் சித்தர்கள் என்போர் யார்? அவர்களுக்கெனத் தனிப்பட்ட வரையறை உண்டா என்றால் பொதுவான வரையறை ஏதும் இல்லை என்பதே பதிலாகும். சித்தர் என்பது இலக்கை எட்டியோர், உயர் இலக்கை அடைந்தவர்கள், இயற்கை தீதவலுவுடையோர், பூரணத்தத்துவமடைந்தோர் என்ற கருத்துக்களையுடையது என்பார் மொனியர் வில்லியம்ஸ்.

சித்தர்களைப் பற்றிய இச்சொற்றொடர்கள் எல்லாம் அவர்களைப் பற்றிய ஏதேனும் ஒரு கூறு பற்றிய குறிப்புகளாக இருக்கின்றவேயொழிய ஒரு கறாரான வரையறையாக அமையாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே இப்படிப்பட்ட தனித்தனியாக ஏதேனும் ஒரு கூறுக்குள் அடங்குபவர்களைச் சித்தர்கள் எனக் கொள்வதில் பிழையில்லை. அந்த வகையில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களையும் சித்தர் எனலாம்.

சித்தர்கள் தமது கையிலெடுத்த கோயில் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு சனாதன தர்ம எதிர்ப்பு என்பதையும் தாண்டி, பெரியார் `கடவுள் எதிர்ப்பு’ என்ற ஒன்றைக் கையிலெடுத்தார். ஏனெனில் இந்தக் கடவுள் என்ற ஒன்றால்தான் மற்ற அனைத்தும் உருவாகியிருக்கிறது என்பதைப் பெரியார் தமது இளமைக்காலம் முதற் கொண்டே நன்கு அறிந்திருந்தார். எனவேதான் அந்தக் கடவுளையே மறுக்க வேண்டிய கட்டாயம் பெரி யாருக்கு நேர்ந்தது. சித்தர்கள் கடவுள் என்ற மையப் புள்ளியை மட்டும் விட்டு விட்டு அதனைச் சுற்றியிருந்த அனைத்தையும் எதிர்த்தார்கள்.

ஆனால் பெரியார் அதனையும் அடித்து நொறுக்கினார். `கடவுள் இல்லை’ என்று கடைசிவரை பிரசாரம் செய்து வந்தார்.

சித்தர்கள் செய்யாத ஒரு வேலையைப் பெரியார் செய்ததற்குக் காரம் சமூகச்சூழல் மட்டுமன்று, அடிப்படையில் அவர் ஒரு மனித நேயவாதி என்பது தான். மனித நேயத்திற்கு எதிரான எல்லாவற்றையும் அவர் எதிர்த்தார், குறிப்பாக வருணாசிரமக் கோட்பாட்டை. வருணாசிரமக் கோட்பாட்டின் ஊற்றுக் கால் வைதீகம். வைதீக எதிர்ப்பே பெரியாரின் கொள்கை.

மனித சமத்துவத்துக்கு எதிராக உள்ள வருணாசிரம தர்மக் கோட்பாட்டின் பிறப்பிடமாகவும் மூலபலமாகவும் பாதுகாப்புக் கோட்டையாகவும் விளங்குவது மனுதர்ம சாத்திரமே என்பதைப் பெரியார் நன்கு உணர்ந்ததால்தான் அதனை எதிர்த்தார்.

மனுதர்ம சாஸ்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருக்கான - பார்ப்பனர்கள் - பாதுகாப்பு வளையமாகும்.

மனுநீதி முழுவதிலும் கண்டுள்ளபடி ஒருவன் வேத ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்ட கருமங்கள் அல்லது பணிகளையே செய்ய வேண்டுமெனவும் அப்பணிகள் அல்லது தொழில்கள் தத்தம் சாதிக்கும் குலத்துக்கும் விதிக்கப்பட்ட பணிகளாகவே இருத்தல் வேண்டும் எனவும் துன்பம் வந்த காலத்திலும் தன் சாதித் தொழிலை விட்டு இன்னொரு சாதித்தொழிலை ஒருவன் செய்யக்கூடாது எனவும் உள்ள மனுநீதி நெறியே தமிழரின் நெறியாக நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை நாம் அறிதல் வேண்டும். மனிதர்களுக்கிடையேயான இம்மாதிரியான ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமானால் வைதீகம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் அனைத்தையும் ஒழிக்க வேண்டும். பெரியார் அதைச் செய்தார்.

மனுதர்மத்தை யார் எழுதியது என்றால் மனு என்றார்கள். மனு எப்படி எழுதினார் என்றால் அவ ருக்குப் பிரம்மா சொன்னார் என்றார்கள்.

இப்படிப்பட்ட தொடர்ச்சியான கேள்விகளுக்கான பதில் இறுதியில் கடவுளிடம் சென்று முடிகிறது. அப்படியானால் நான் அந்தக் கடவுளையே எதிர்க்கிறேன் என்றார் பெரியார். சித்தர்கள் உட்பட ஏனைய சீர்திருத்தவாதிகள் எல்லாம் மையத்தை விட்டுவிட்டு அதனைச் சுற்றியிருந்ததை மட்டும் ஒழிக்க முயன்றார்கள். பெரியார் மையத்தை ஒழிக்க வேண்டிய மற்ற எல்லாவற்றையும் மறுத்தார். மறுப்பு உக்கிரமாகத் தொழிற் படும்போது மையங்கள் அழியும்; கட்டுகள் உடையும் என்பர். இது குறித்துப் பெரியாரே; தெளிவுபடுத்துகிறார்.

எப்படியாயினும், ஒரு கடவுளை சிருஷ்டிப்பதாயிருந்தால் அவர் நமது கண்களுக்குத் தெரியமாட்டார். அவரை வணங்கினால் பிரார்தித்தால் பயன் உண்டு என்றுதான் சொல்லியாக வேண்டும். எப்படிப்பட்ட மதத்தை சிருஷ்டித்தாலும் அதற்கு ஒரு உபதேச கர்த்தாவை சிருஷ்டித்தாக வேண்டும். அக்கர்த்தாவுக்குத் தெய்வீகத்தன்மை ஏற்படுத்தித் தான் ஆகவேண்டும்.

அவர் மூலமாக ஒரு வேதத்தை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். அவ் வேதம் கடவுளால் அவருக்குச் சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். அதை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சொல்லித்தனமாக வேண்டும்.

பிறகு அந்தப்படி நடக் காதவனையோ அல்லது அந்தக் கர்த்தாவை ஒப்புக் கொள்ளாதவனையோ, வையவோ, கொலை செய்யவோ, முயற்சித்தாக வேண்டும். இவ்வளவும் மாத்திரம் அல்லாமல் அந்த வேதத்திற்குச் சுயநலக்காரர்கள், சோம்பேறிகள் ஆகியவர்கள் தங்கள் நலத்துக்கு ஏற்ற மாதிரியாகச் செய்து கொள்ளும் கருத்தை எவனாவது மாற்றிச் சொன்னால் அது எவ்வளவு உண்மையாய் இருந்தாலும் அவன்மீது பாய்ந்துதான் ஆக வேண்டும். இந்தப்படிதான் இது வரை நடந்து வந்திருக்கிறது.

ஆகவே, எந்த வழியில் - எந்த மாதிரியில் - எவ்வளவு நல்ல முறையில் கடவுளையும் மதத்தையும் வேதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டாலும் அது மனித சமூகப் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்தையும் கேட்டையும் பிரிவினையையும் முரட்டுத்தனத்தையும் குரோதத்தையும் அடிமைத்தனத்தையும் உண்டாக்கியே தீரும். இதுவே இன்றைய எல்லா மதத்தினுடைய அனுபவம் - பிரத்தியட்ச அனுபவம்.

ஆதலால் கடவுள், மதம், வேதம் என்கின்ற கற்பனைகளை ஒழிப்பதும் அழிப்பதுந்தான் மனிதனுக்கு உண்மையான விடுதலையே ஒழிய மனிதனை, கடவுள் உணர்ச்சி புகுத்தி - மத வெறியில் ஆழ்த்தி - வேதத்திற்கு அடிமையாக்கிக் கல்லில் முட்டிக்கொள்ள கோவிலுக்குள் தள்ளுவது மிகவும் மோசமும் - கெடுதியுமான காரியமாகும் (குடிஅரசு, 26.12.1933).

பெரியார் கடவுளை மறுத்ததற்கான காரணத்தை இந்த ஒரு பகுதியை மட்டும் வாசிக்கும்போது நமக்கு நன்கு புலனாகிறது. சித்தர்கள்கூட கடவுள் எதிர்ப்பாளர்கள்தான். அவர்களும் - இப்பணியை மேற்கொண்டார்கள் என்று கூறி, பின் வரும் சிவவாக்கியர் பாடலைச் சிலர் எடுத்துக் காட்டுவர்.

``நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

இப்பாடலிலுள்ள `நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்னும் வரி ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இறை வனுக்கு ஏதேனும் ஓர் உருவத்தைக் கற்பித்து அதனை வணங்கிக் கொண்டிராதே; கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார்.

அதாவது ஆன்மாவே கடவுள் என்பதுதான் இதன் பொருள். உருவவழிபாடு கல் லாலோ, உலோகத்தாலோ ஆன ஓர் உருவத்தை வழிபடுதல் என்பதே பொருள். அவ்வாறு மெய்யாக வழி படுவோர்க்கு அது உருவமன்று.’ அதுவே கடவுள்; சித்தர்கள் இந்த உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. எதிர்த்தார்கள்.

மாறாக `ஆன்மா’ என்ற கருத்துருவத்தில் கடவுளைக் கண்டார்கள். பெரியார் இந்த ஆன்மா என்ற கடவுளையும் எதிர்த்தார். `ஆன்மா என்கிற நம்பிக்கை இல்லாவிட்டால் சாதாரண மாகவே கடவுள் நம்பிக்கை எடுபட்டுப் போய்விடும்’’ (விடுதலை, 07.09.1950) என்பது பெரியாரியம்.

சித்தர்கள் எனப்படும் ஒரு குழுவினர் செய்ய விரும்பாத, செய்யத் துணியாத ஒரு செயலை - கடவுள் மறுப்பை - தனி ஒரு மனிதனாக நின்று செயல்படுத்தியவர் பெரியார். எனவே குறிப்பிட்டதைப்போலச் சமத்துவத்தைக் காண விரும்பிய அவரது மனித நேயம் இதனைச் செய்ய வைத்தது. இதற்காக இறுதிவரை தன்னை ஒரு போராளியாக நிறுத்திக்கொண்டு அவர் செயல்பட்டதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com