Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
நவம்பர் 2007

திருக்குறளும் மனுதர்மமும்

நாவலர் நெடுஞ்செழியன்


வள்ளுவர் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்துகள் சிலவற்றைப் பரிமேலழகர், தம் உரையில் புகுத்தியுள்ளார் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக் காட்ட இயலும்.

பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதத் துவங்கும்போதே, எடுத்த எடுப்பிலேயே, “அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழித்தலும் ஆம்.’’ என்றும், “ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப் பட்ட பிரமசாரியம் முதலிய நிலை களின்று அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.’’

என்றும், “அதுதான் (அவ்வொழுக்கம்) நால் வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறு பாடுடைமையின், சிறு பான்மையாகிய அச் சிறப்பு இயல்புகள் ஒழித்து, எல்லோர்க்கும் ஒத்தவின் பெரும்பான்மையாகிய பொது வியல்புபற்றி, இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியா ளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, மனுவின்படி மனிதகுலம் நான்கு வருணத் தாராகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்டவிதியின் கீழ் நீதிகளும் தன்மையதே ‘தருமம் ஆகும். ஆனால், வள்ளுவரின் கருத்துப்படி மனிதகுலம் அனைத்திற்கும் அன்புநெறி, அருள்நெறி, அறிவு நெறி, பண்பு நெறி, ஒழுக்க நெறி போன்றவற்றின் கீழ் விதிக்கப்பட்ட கடமையைக் கூறும் தன்மையதே ‘அறம்’ ஆகும்.

(1) எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. ``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “பிராமணன் முதல் வருணத் தான் ஆனதாலும், பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணாத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்’’ - (மனு த. சா.ஆ.1. சு.100) என்றும், “சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்.’’ (மனு த.சா. ஆ.8.சு. 270) என்றும், “பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்.’’ (மனு த.சா.அ.2 சு.31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

(2) கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட.... “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409) என்று கூறுவது வள்ளு வரின் அறம் ஆகும். ஆனால்,

``பிராமணர் இந்த மனுநூலைப் படிக்கலாம். மற்ற வருணத்தார்க்கு ஒது விக்கக்கூடாது.’’ (மனு த.சா.அ.1சு.103) என்றும், ``சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது, வேதம் ஓதக் கூடாது.’’ (மனு த.சா.அ.1 சு.99) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

“வேதத்தை கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கிவிட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத் தெறிய வேண்டும். பொருளை உணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்.’’ (வேதம்) என்பது மனு ஆதரிக்கின்ற பிற நூலாகிய வேதத்தின் தருமம் ஆகும்.

(3) ஒருவர்தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் நாம் மட்டும் தனியாக இருந்து, உண்ணுதல் என்பது வறுமையால் இரத்தலைக் காட்டிலும் கொடிது ஆகும் என்னும் கருத்துப்பட இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்’’ (குறள் 229) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையுங்கூட கொடுக்கலாகாது’’ (மனு த.சா.அ.4 சு.80) என்று கூறு வது மனுவின் தருமம் ஆகும்.

(4) பசுவின் நாவறட்சியைப் போக்க, நீர் தாரீர் என்று பிறரை நோக்கி இரந்து கேட்டாலும் அப்படி இரத்தலைவிட இழிவான செயல் வேறொன்றும் இல்லை என்னும் கருத்துப்பட “ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு, இரவின் இனி வந்தது இல்’’ (குறள் - 1066) என்பது வள்ளு வரின் அறம் ஆகும்.

ஆனால், “பிராமணர் நாள்தோறும் பிச்சைக்காக ஊருக்குள் புகுந்து சுற்றிவர வேண்டும்’’ (மனு. த.சா.அ.6 சு.43) என்பது மனுவின் தருமம் ஆகும். (5) உலகத்தார் பல தொழில்களைச் செய்து பார்த்து அலைந்து திரிந்து சுழன்று வந்தாலும் இறுதியில் ஏர்த் தொழிலின் பின்னே தான் நிற்க வேண்டியிருக்கிறது. அதனால் எவ்வளவு துன்பமுற்றாலும் உழவுத் தொழில்தான் தலைசிறந்த தொழிலாக திகழ்கின்றது என்னும் கருத்துப்பட ‘சுழன்றும் ஏற்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’’ (குறள் 1031) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்.’’ (மனு த.சா.அ.10 சு.84) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

(6) ஒருவன் எப்பொழுது பொய் சொல்லாமல் இருப்பானேயானால், அவன் வேறு அறங்களைக் கூட எப்பொழுதும் செய்யவேண்டியதில்லை. அதுவே, எல்லா அறங்களின் பயனையும் தரும் என்னும் கருத்துப்பட “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’’ (குறள் 297) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “பல மனைவிகளையுடையவன் அவர்களின் புணர்ச்சிக்காவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை’’ (மனு த.சா. அ.8, சு.112) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

(7) உயிர்களைக் கொன்றும் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்தும் ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒரு உயிரின் உயிரைப் போக்கி, அதன் ஊனை உண்ணாமல் இருத்தல் நல்லது ஆகும் என்னும் கருத்துப்பட ``அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், உயிர் செகுத்து உண்ணாமை நன்று’’ (குறள் 259) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.’’

ஆனால், ``ஒரு பிராமணன், தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும் போதும், விதிப்படி சீரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்.’’ என்றும்,

``அஜீ கர்த்தர் என்னும் முனிவர் நூறு பசுக்களை வாங்கிக் கொன்று வேள்வி செய்து, தமது பசியைத் தீர்த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிடவில்லை.’’ (மனு த.சா.அ.10 சு.105) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும். (8) கொலையின் மூலம் நன்மையாக ஆகின்ற ஆக்கமானது பெரிதாக இருந்தாலும் சிறந்த சான்றோர்களால் அப்படிப்பட்ட ஆக்கமானது மிக இழிவானதாகவே கருதப்படும் என்னும் கருத்துப்பட “நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை’’ (குறள் 328) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும், பாவத்தை பிராமணன் அடையமாட்டான் பிரமனாலேயே உண்ணத்தக்க வையும், கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன.’’ (மனு த.சா.அ.5, சு.30) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

(9) எந்த ஒரு பொருளைப்பற்றி எவரெவர் என்ன சொல்லக் கேட்டாலும் கேட்டவாறு அப்படியே அதனை ஏற்றுக் கொண்டு விடாமல், அந்த பொருளினுடைய உண்மையான பொருளைக் கண்டறிவதே அறிவுடைமையாகும் என்னும் கருத்துப்பட ``எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’’ (குறள் 423) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், ``வேதத்தைக் கருதி என்றும் தரும சாத்திரத்தை சுமிருதி என்றும், அறியத்தக்கன அவ்விரண்டையும் ஆராய்ச்சி செய்து மறுப்பவன் நாத்திகன் ஆவான்’’ என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

(10) குற்றம் இன்னதென்று ஆராய்ந்து பார்த்து, யார் பக்கமும் சாயாமல், நடுவு நிலைமை பொருந்துமாறு நின்று யாரிடத்திலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து அதற்கு ஏற்றபடி நீதி வழங்குவதே அரசனது செங்கோல் முறையாகும் என்னும் கருத்துப்பட ``ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார் மட்டும் தேர்ந்து செய்வதே முறை’’ (குறள் - 541) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். ஆனால், ``பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதைச் செய்து கொல்லுக. ஆனால், பிராமணன் சூத்திரனுடைய பொருளை அவன் விருப்பப்படி கொள்ளையிடலாம்’’ (மனு த.சா.அ.9 சு.248) என்றும், ``பிராமணன் எத்தகைய குற்றங்களையும் செய்தாலும் அவனைத் தூக்குப் போட வேண்டிய நிபந்தனை ஏற்பட்டால் அவன் தலையை மட்டும் மொட்டை அடிக்க வேண்டும். அதுவே, அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாகும் மற்ற வருணத் தாருக்குக் கொலையே தண்டனை’’ (மனு த.சா.அ.8, சு.379) என்றும், ``அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனை கொல்ல நினைக்கக் கூடாது’’ (மனு த.சா.க.8 சு.381) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

இவை மட்டுமல்லாமல் ``பெண்போகம் புலால் உண்ணல், கள் குடித்தல் ஆகிய இவை மனிதர்களுக்கு இயற்கையான குணங்களா கையால், இவைகளைக் குறித்து விதிகள் அவசிய மில்லை’’ என்றும்,

``நான்கு வருணத்தாரின் பெண்களையும் பிராமணன் மட்டும் அவன் விரும்பியவாறு திருமணம் முடித்துக் கொள்ளலாம்’’ என்றும்.

``விவாகக் காலங்களில் பொய் சொல்லலாம்’’ என்றும் ``தனது நாயகன் இறந்து விட்டால், அல்லது புத்திரப் பேற்றை விரும்புகின்ற பெண்ணானவள், விருது காலத்தில் உடம்பில் நெய்யைப் பூசிக்கொண்டு, தன் கணவனது சகோதரரையோ அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம்’’ என்றும், ``பிராமணன் பெற்றதாய் ஒருத்தியைத் தவிர மற்ற பெண்களையெல்லாம் புணரலாம்.’’ என்றும், வடமொழியாளரின் சுருதிகளும், சுமிருகிகளும் கூறியிருக்கும் தருமங்கள் போன்றவைகள் அனைத்தும், வள்ளுவருக்கு அறவே உடன்பாடில்லாத கருத்தாகும்.

பரிமேலழகர் எழுதிய உரை பல பொதுப்படையான குறள்களைப் பொறுத்துச் சிறப்பாக வரவேற்கத் தக்கதுவாக இருந்தபோதிலும் மனு முதலிய நூல்கள் விழித்தன செய்தலையும், விலக்கியவற்றை ஒழித்தலையும் வலியுறுத்தும் வகையிலும், சமய உணர்வோடும், சனாதன உணர்வோடும் அயலாரின் கொள்கைப்பற்றோடும் எழுதிய உரைப் பகுதிகள் அனைத்தும் புறக்கணித்து ஒதுக்கப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன. வள்ளுவர் நெறிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் உலகியல் நடை முறைக்கும் பகுத்து அறியும் ஆராய்ச்சி அறிவுக்கும் ஏற்றமுறையில் உண்மைப்பொருள் விளக்கம் காணும்பொருட்டு மேற்கொண்டுள்ள முயற்சிதான் இவ்வுரை விளக்கப்படைப்பாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
விடிவெள்ளி
2007-12-30 11:46:00
priyavadhanaa@gmail.com

நல்ல கட்டுரை. பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

KENAIYAN
2007-12-31 09:38:00
muzumuttaal@yahoo.co.in

அடேயப்பா! நாவலர் நெடுஞ்செழியன் என்றால், மறைந்த முன்னால் அமைச்சரா அல்லது வேறு யாராவதா என்று
தெரியவில்லை. மனு சாத்திரம் வட மொழியில் எழுதியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள்! ஆனால் நாவலர் நெடுஞ்செழியன் வட மொழியில் புலமை பெற்றவரா, அப்படி வட மொழியில் புலமை பெற்றாவரானால், வட மொழி வாக்கியங்களையே மேற்கோல் காட்டி எழுதியிருக்கலாமே? அப்போது அவர் தரப்பு வாதம் இன்னும் வலுவாக இருந்திருக்குமே! முதலில் மனு என்பவர் ஒரு அரசர் என்பதும், அவர் தன் நாட்டின் சட்ட திட்டங்களுக்காக எழுதியது தான் மனு நீதி என்பதும் புரிந்து கொள்ளப் பட வேண்டிய ஒன்று! அது இந்து மதத்தின் நூல் அல்ல! இந்து மத நூல்கள் மனிதன் அழியும் நிலையிலிருந்து, அழியா நிலைக்கு செல்ல, மயக்கத்தில் இருந்து தெளிவு நிலை அடையும் மிக முக்கிய உண்மைகள் பற்றீ சொல்கின்றன! பட்டினத்தார் பாடல்கள், தேவாரம், திரு வாசகம், பிரபந்தங்கள் எல்லாம் இந்து மதத்தின் முக்கிய நூல்கள்! அதை விட்டு விட்டு "ஜகந் மோகினி " திரைப் படத்தில் பல கவர்ச்சி ஆட்டங்கள் உள்ளன- எனவே எல்லோரும் அந்த காலத்தில் "உல்லாசமாக" வாழ்ந்தனர் என்று சொல்வது போல இருக்கிறது!
மனு நீதியை எல்லோரும் யெற்றுக் கொள்ள வேண்டும் என்றோ, கடைப் பிடிக்க வேண்டும் என்றோ
என்ன அவசியம்? மேலும் வள்ளூவர் யார் பிராமணராகக் கருதப்பட வேண்டும் என்று விளக்க
" அந்தணர் என்போர் அறவோர், மற்றேவ் உயிர்க்கும்,
செந்தண்மை பூண்டு ஒழுகலான்"என்று குறிப்பிட்டு உள்ளார். இதன் கருத்து பார்ப்பனர் என்பவர் மற்றவரின் நன்மையை கருதி வாழ்பவர், அப்படி வாழ்பவர் மட்டுமே பார்ப்பனர் என்பது ஆகும். அப்படிப்பட்ட பார்ப்பனர் இக்காலத்தில் யாராவது யிருக்கிராறா என்று தெரியாது! ஆனால் வள்ளுவர் காலத்தில் அவர்கள் அப்படி வாழ்ந்திருக்கக் கூடும்.எனவே மனு அந்தக் காலத்தில், பார்ப்பணாருக்கு அத்தனை சலுகைகள் வழங்கினார் என்றால், அந்தக் காலத்தில் பார்ப்பனர் அந்த அளவுக்கு நேர்மையும், ஒழுக்கமும், மற்ற மக்களின் நன்மைக்கு ஆகவும் வாழ்ந்து இருப்பார்கள் என்றே எண்ணம் உண்டாக்கிரது! இல்லை என்றால், வட இந்தியா அரசர் உருவாக்கிய நூலை பச்சை தமிழரான பரிமேலழகர் மேற்கோள் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
எது எப்படியாகிலும், மக்கள் எல்லோருக்கும் ஒரே நீதி என்பதே சரி. அதர்க்கு மாற்றாக எழுதியது மணுவோ வேறு யாரோ, அது தவறானாதே! ஆனால் வேதத்தின் எந்தப் பகுதியுலும், "வேதத்தை கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கிவிட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத் தெறிய வேண்டும். பொருளை உணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்" என்று கூறப்படவில்லை. ஏனெனில் மிகச் சிறந்த உலக அறிங்கரான விவேகானந்தரே, " வேதத்தின், எந்தப் பகுதியிலாவது பிராமணர்கள் மட்டுமே வேதம் படிக்கலாம் என்று
சொல்லியிருக்கிறது" என்று காட்ட முடியுமா?' என்று சவால் விட்டிருக்கிறார்! விவேகானந்தர் பிராமண வம்சா வழியினர் அல்ல, அதோடு அவர் தலித் மக்களின் சமூக, பொருளாதார, ஆன்மீக முன்னேற்ராத்தில் சிறப்பு கவனம் செலுத்தியவர் என்பது யாவரும் அறிந்ததே!
வள்ளுவர் எழுதியதை, நாவலர் பாதி எழுதி விட்டு விட்டார்!
"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கு சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்"
என்று எழுதுயுள்ளார் வள்ளுவர்! அதையே தான் தெய்வத்தின் கவிதை (பகவத் கீதை) இல், "குணத் தீர்க்கும், தொழிலிர்க்கும் ஏர்ப்ப நான்கு வகையான பிரிவுகள் உள்ளன" என்று ஸொல்லியிருக்கிறார்! ஒரு செருப்பு தைக்கும் சாதாரண தொலிலாளி கூட நன்றாக தைத்தால், செருப்பு நாள் உழைக்கும். மக்கள் அவனை பாராட்டி அவனைப் பற்றீ நல்ல எண்ணம் கொள்வார்! ஒரு பெரிய பொறியாளர், ஒரு பாலம் கட்டி இரண்டே மாதத்தில், பாலம் இடிந்து விழுந்தால்,யார் அவனைப் பாராட்டுவார்? எனவே செய்கிற தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும்- என்பது
ஒரு பொது அறிவு! இதையே தான் வள்ளுவரும், கண்ணனும் சொல்லயிருக்கிறார்கள்! எனவே பிறப்பு அடிப்படையில் எல்லோரும் ஓன்றுதான்! செயல் புரியும் போது நேர்மையாகவும்,திறமையாகவும் செயல் புரிவதன் அடிப்படையில் சிறப்பு
உண்டாகிறது! ஆனால், இந்தியாவில் சாதிக் கட்டமைப்பு, முதலில் செயல் அடிப்படையில் தான் இருந்தது! நேர்மை இல்லாத பார்ப்பனர், கீல் செல்வதும், நேர்மையுள்ள மர்ற பிரிவினர் மேலே உயர் சாதியாக்கப் பட்டும் இருந்தனர்! ஆனால் கி.மு.2000 பிறகு
பிறப்பு அடிப்படையில் சாதிக்கட்டமைப்பு, மற்றப் பட்டு, பிறப்பு அடிப்படை சாதிப் பாகு பாடு உறுதி ஆனது
எனவே வள்ளுவர் பிறப்பு அடிப்படையில் சாதி வேறுபாடு கூடாது என்பதை தெளிவாக ஸொல்லியிருக்கிறர்! ஆனால் அதைத் திரித்து பார்ப்பனர் பல பெண்களை புணர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டது போல "பிராமணன் பெற்றதாய் ஒருத்தியைத் தவிர மற்ற பெண்களையெல்லாம் புணரலாம்’’ என்று எழுதியுள்ளது
எந்த வேதத்தில் என்று சொல்ல முடியுமா? பெண் புணர்ச்சி விஷயத்தில், பிராமணர்கள் மிகவும் எக்சரிக்கையுடன் வாழ்ந்து வந்தனர். இப்போது கடந்த 10 வருடங்களில் கொன்ஜம் சீர்கெடு ஏர்ப்பட்டுள்ளது என்று சொல்லலாமே தவிர, விரும்பிய பெண்ணை புண்ர்வ தர்க்கு அனுமதி, என்பது மிகத் தவறான செய்தி!
எனவே வேதங்களை எல்லோரும் படிக்க உரிமை உண்டு, அதர்க்கு வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்பதுதான் நம் கருத்து! ஆனால் பார்ப்பணர்கள் , அவர்களைத் திட்டினால் எதிர்க்க தேவையான் எண்ணிக்கையோ, வன்முறைக் குணமோ இல்லாததால், அவர்களை வீரமாகத் திட்டி, தனக்கு வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள எழுதப் பட்ட கட்டுரையே
இது என்றே எண்ணம் உண்டாகிறது!





Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP