Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
நவம்பர் 2007

நிழல் சாயாக் கோபுரம்

நாமக்கல் கவிஞர்

தலைசிறந்த பொறியாளரும், தமிழறிஞருமான பா.வெ. மாணிக்க நாயக்கரிடம் நங்கவரம் பெரிய பண்ணை மிராசுதார் இராஜப்பையர் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகம் கேட்டார்.

நீங்கள் எஞ்சினியர் ஆனதால் உங்களுக்குத் தெரியுமே. தஞ்சாவூர்க் கோபுரம், நிழல் சாயாக் கோபுரம் என்று சொல்லப்படுகிறதே அதன் இரகசியம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு, மாணிக்க நாயகர், “அது வெறும் கட்டுக்கதைதான். நிழல் சாயாத பொருள் உலகத்தில் உண்டா? நானும் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். அதில் ஒன்றும் உண்மை இல்லை. பாமர மக்கள் பக்தியினால் சொல்லும் பேச்சு அது’’ என்றார். இந்தச் சமயத்தில் அங்கே இருந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, அதுபற்றி நான் சொல்கிறேன் என்றார்.

தஞ்சாவூர் கோபுரத்தில் நிழல் உச்சிக் காலங்களில் ஒரு நாளும் பூமியில் சாய்வதில்லை என்று நாமக்கல்லார் கூறியதும் அதைக் கேட்ட அனைவரும் கலகலவென்று கைதட்டிச் சிரித்தார்கள்.

உச்சிக் காலத்தில் எல்லாப் பொருள்களுக்கும்தான் நிழல் விழுவதில்லை. அது தஞ்சாவூர்க் கோபுரத்திற்கு மட்டும் என்ன சிறப்பு என்றார்கள் அங்கிருந்தோர்.

அது சரியல்ல. உச்சிவேளையில் எல்லாப் பொருள்களுக்கும் அவற்றின் நிழல் பூமியில் விழும். தஞ்சாவூர்க் கோபுரம் ஒன்றுக்குத் தான் அந்த நிழல் பூமியில் சாய்வதில்லை என்றார் நாமக்கல்லார். அது எப்படி? என்று சிரித்தார் நாயக்கர்.

கவிஞர் சொன்னார்!

உச்சி வேளை என்பது நடுப்பகலான பன்னிரண்டு மணியை மட்டும்தான் குறிக்கும். சூரியன் நம்முடைய உச்சிக்கு நேராக இருக்கிறான் என்பதை அல்ல. ஆண்டின் பெரும்பாலான நாள்களில் சூரியன் உச்சிக் காலத்தில் நம்முடைய உச்சிக்குச் சரியாக இருப்பதே இல்லை.

உச்சிக் கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது தான் பெரும்பாலான நாள்களில் உச்சி நேரங்களில் சூரியன் இருக்கிறான். உத்ராயணத்திலிருந்து தட்சிணாயத்துக்கும், தட்சிணாயத்திலிருந்து உத்திராயணத்திற்கும் மாறுகின்ற காலங்களில் மட்டும்தான் சூரியன் சரியான உச்சிக்கு வருகிறான்.

அப்போதும்கூட ஒரு கடிகையில் எத்தனையோ ஆயிரம் பங்கில் ஒரு பங்கு நேரம்தான் நேரான உச்சியில் இருக்கிறான். மற்றக் காலங்களிலெல்லாம் உச்சிக்கு வடக்கிலோ தெற்கிலோ ஒதுங்கித்தான் ஓடுகிறான்.

ஓர் ஆண்டில் இரண்டே இரண்டு நாள்களில்தான் சூரியன் ஓர் அணுப்பொழுது நேரம் உச்சியில் இருக்கிறான். இந்த இரண்டு நாள்களில் இருதுளி நேரங்களைத் தவிர, மற்ற உச்சி நேரங்களில் எல்லாப் பொருள்களுக்கும் நிழல் சாயும். சூரியன் தட்சிணாயத்தின் கோடியிலும் உத்தராயணத்தின் கோடியிலும் இருக்கிற காலங்களில் அந்த உச்சி நிழல் நீண்டதாக இருக்கும்.

அந்தக் கோடியிலிருந்து நிரட்ச ரேகைக்குச் சூரியன் நெருங்க நெருங்க நிழலின் நீளமும் குறையும். ஆகையால் குறுகலாகவோ நீளமாகவோ உச்சி வேளையில் எல்லாப் பொருள்களுக்கும். நிழல் சாயும்.

அந்த நிழல் தஞ்சாவூர்க் கோபுரத்திற்கும் உண்டல்லவா? என்று ஒருவர் கேட்டார்.

இல்லை, அதுதான். தஞ்சாவூர்க் கோபுரத்தில் அமைந்திருக்கிற தனிச் சிறப்பு என்றார் நாமக்கல்லார்.

தஞ்சாவூர்க் கோபுரத்தின் அடித்தளம் மிகவும் அகன்ற சதுரம். கோபுரம் சதுரமான அடுக்குகளாகவே உயர்ந்து உச்சியில் கூர்மை அடைகிறது. உச்சியில் உள்ள விமானமும் கோபுரத்தின் உச்சி சதுரத்துக்கு உள்ளடங்கினதாக இருக்கிறது. அதனால், அதன் உச்சிக் கால நிழல் அடித்தளத்துக்கு மேலேயே நின்று விடுகிறது. பூமியில் விழுவதில்லை. நிழல் சாயா கோபுரம் என்பதற்கு, ‘பூமியில் நிழல் விழாத கோபுரம்’ என்பது தான் பொருளே அல்லாமல், ‘நிழலே இல்லாத கோபுரம்’ என்பது பொருளன்று.

மற்ற எல்லாப் பொருள்களுக்கும் அவற்றின் உச்சி கால நிழல் பூமியில் சாயும். ஆனால், தஞ்சாவூர்க் கோபுரத்தின் உச்சிக்கால நிழல் பூமியில் சாயாது என்று அறிவியல் விளக்கம் அளித்தார் நாமக்கல் கவிஞர்.

இதனைச் சொல்லி முடித்ததும், மேட்டூர் அணையை வடிவமைத்த கட்டட வல்லுநரான பா.வே. மாணிக்க நாயக்கர் எழுந்து வந்து நாமக்கல்லாருடன் கைகுலுக்கி விட்டு இந்தக் காரணம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்றார்.

- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

நூல்: ‘தாயார் கொடுத்த தனம்’

- தரவு. கவிஞர் பல்லவன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com