Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
நவம்பர் 2007

கூலிகளாகத்தான் தமிழ்குடிகள் தொடர வேண்டுமா?

முனைவர் அருகோ

இந்தியா விடுதலை பெற்ற பொன்விழாவை (1947-1997) இந்தியர்கள் மிக எழுச்சியுடன் கொண்டாடினார்கள். நாமும் இந்தியர்கள் என்று தமிழர்களும் போட்டி போட்டுக்கொண்டு அப்பொன்விழாவை அமர்க்களமாகக் கொண்டாடி அசத்தினார்கள்.

இன்றைய தமிழகம் எழுந்த நாள் பொன்விழா, 50வது தமிழகப்பெருவிழா (1956-2006) கன்னியாகுமரி மாவட்ட “உதயதினப் பொன்விழா’’ என்ற பெயரில் நாஞ்சில் நாட்டுத் தமிழர்களால் நல்லவண்ணம் கொண்டாடப்பட்டதே தவிர, மற்றப் பகுதித் தமிழர்களால் அந்த அளவுக்குக் கொண்டாடப்படவில்லை. இந்தியர்களாக எழுச்சிகாட்டிக்கொண்ட தமிழர்கள், தமிழர்களாக தடந்தோள் தட்ட அணியமாக இல்லை என்பதையே அது புலப்படுத்தியது.

அதே வேளை சென்னைத் தலைமாகாணத்தில் நம்மோடு ஒன்றாக இருந்து பிரிந்து சென்ற ஆந்திரரும், கன்னடரும், மலையாளிகளும் மொழி வழியே ஆந்திராவும் கருநாடகாவும், கேரளாவும் பிரிந்தமைந்த பொன்விழா ஆண்டை, ஐம்பதாவது “இராஜ்யோற்சவ’’ விழாவை அவரவர் மாநிலங்களில் தடபுடலாகக் கொண்டாடி சரித்திரம் படைத்தனர்.

அதாவது ஆந்திரா தெலுங்கர்க்கான தேசம், கருநாடகா கன்னடர்க்கான நாடு, கேரளா மலையாளிகளுக்கான மாத்ருபூமி என்பதை மார்தட்டி வெளிப்படுத்தினர். அதுபோல தமிழகம் தமிழர்க்கான நாடு என்பதைத் தரணியறியச் செய்யும் சந்தர்ப்பத்தை நாம் கோட்டைவிட்டோம்.

“இமிழ்கடல் வரம்பில் தமிழகம்’’
தண்டமிழ் வேலித்தமிழ்நாடு’’

என்றெல்லாம் உலகத்தில் வேறு தேசங்கள் உருவாகுமுன்பே “தமிழகம்’’ இலக்கியம் செய்து தலையெடுத்திருந்த போதும் தமிழர்களாகிய நாம் அதை வெளிப்படுத்திக் கொள்ளத் தவறியே வருகிறோம்.

ஆம்; வரையறுக்கப்பட்ட ஒருதாயக மண்ணின்றேல் மண்ணின் மைந்தர்கள் இல்லை. மொழி இல்லை அந்த மொழி வழிப்பட்ட பண்பாடு பழக்க வழக்கங்கள் தனி அடையாளங்கள், ஏன் முகவரியே இல்லை என்பதை உலக வரலாறு ஓங்கி முழக்கியும் நலங்கொளத் தமிழர்கள் அதை நாடுவதே இல்லை. பலம் நல்கும் பால்தான்; தன்னிலிருந்து தயிரும், மோரும், வெண்ணெயும், நெய்யும். அவை வழிப்பட்ட பண்டங்களும் ஆக்கித்தரும் பாங்குடையது தான் என்றாலும், அது ஒரு பாத்திரத்தில் இருக்கும் வரைதான் பால் பாத்திரம் தவறி விட்டாலோ, உடைந்து போனாலோ, பால் பாழாகிவிடும்.

சிந்திச் சிதறி ஒன்றுமில்லாமல் போய்விடும். அதுபோலத்தான் ஒருமொழியும், அதைப்பேசுகின்ற மக்களினமும், அவர்கள் வாழுகின்ற தாய்மண்ணும் இருக்கின்றவரைதான் இருக்க முடியும். சிறக்கமுடியும்.

மண்ணை இழந்த எத்தனையோ மொழிகள், அதைப் பேசிக்கொண்டிருந்த மக்களும் வேறுமொழியினராக மாறிவிட தன்னைச் செத்தமொழிப் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். எகுபதியம், சுமேரியம், பாபிலோனியம், பாலி, பிராகிருதம் எனப் பன்னூறு மொழிகள் அப்படித்தான் போய்விட்டன. இறந்த மொழிகளாக ஆகிவிட்டன.

தமிழகம் என்று ஒன்றில்லையானால் தமிழுக்கும் அக்கதிதான் நேரும். தமிழ் இல்லையானால் அப்புறம் தமிழர்கள் ஏது? ஆகவேதான், தமிழகப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்றியமையாமையைத் தமிழ்ச் சான்றோர் பேரவை தடத்தில் ஏற்றியது. நம் சகோதர மாநிலங்கள் ஆண்டுதோறும் இராஜ்யோற்சவ விழாவை, அரசு விழாவாக - மாநிலந்தழுவிய தேசியவிழாவாகக் கொண்டாடி வருவதைக் கண்கூடாகப் பார்த்தும் நம் தமிழகம் மட்டும் தமிழர்கள் மட்டும் “யாருக்கு வந்த விதியோ’’ என்று நடந்து கொண்டால் என்னசெய்வது?

இன்னொரு, பொன்விழா என்று இங்கு நாம் குறிப்பது விண்வெளி ஊழியின் பொன்விழாவை (1957-2007) ஆகும். 1957ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் அப்போது தன்னுடைய அங்கமாக இருந்த கஜகஸ்தானிலிருந்து 100டன் எடைகொண்ட ஏவுகணையைச் செலுத்தி, முன்னாள் சோவியத் ஒன்றியம் “மனிதனின் கோள்விட்டுக் கோள்புகும்’’ விண்வெளிப் பயணத்தைத் தொடங்கி வைத்தது.

மனிதனால் உண்டாக்கப்பட்ட முதல் செயற்கைக் கோளைச் சுமந்து சென்ற அந்த ஏவுகணையால் நம் நிலவுலகைச் சுற்றும் வகையில், தான் சுமந்து சென்ற செயற்கைக்கோளை, புவியில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது சந்திரன், செவ்வாய் முதலிய இயற்கைக் கோள்களைச் சென்றடைய இடைத்தங்கல் முகாம்களாக விளங்க முடியுமா என்பதைச் சோதிக்கவே இந்தச் செயற்கைக் கோள் நிறுவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதிலேகூட நம் இந்தியாவின் முயற்சி என்பது தொலைக்காட்சி மற்றும் தொலைப்பேசி (கைப்பேசி) ஒளிபரப்புக்கும் ஒலிபரப்புக்கும் உதவும் வகையில் செயற்கைக் கோள்களை அனுப்புவதாகவே உள்ளது.

ஆம்; இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவினால் கடைசியாக வெற்றிகரமாய் ஏவப்பட்ட ‘இன்சாட்’ செயற்கைக் கோள்கூடச் செயற்கைக் கோள்வழி ஒளிபரப்புக்கு உதவுவதாகத்தான் உள்ளது. சோவியத் ஒன்றியமோ, தான் அனுப்பிய ‘ஸ்புட்னிக்’ என்ற இரண்டாவது செயற்கைக் கோளில் ‘லைகா’ என்ற நாயைவைத்து அனுப்பியது. அந்த நாய் எதிர்பார்த்ததற்கு மாறாக இறந்து விட்டது என்றாலும், ‘உயிரிழக்காமல் விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளும் முறையைக் கண்டுபிடிக்க அது உதவியது.

பாட்டாளிவர்க்க வல்லரசான சோவியத் ஒன்றியமே இதைச்சாதித்த தென்றால், முதலாளி வர்க்க வல்லரசாகிய அமெரிக்கா சும்மா இருக்குமா? அது 1958இல் “எக்ஸ்புளோரம்1’’ செயற்கைக் கோளை முதன் முதலாக விண்வெளியில் ஏவியது. இப்படித் தொடங்கிய விண்வெளிப் போட்டியில் சோவியத் ஒன்றியம் அடுத்ததாக ‘யூரிக்காரின்’ என்ற ஆடவரையும், அடுத்து ‘வாலன்டினா தெரஸ்கோவா’ என்ற பெண்மணியையும் செயற்கைக் கோள் மூலம் விண்வெளிக்கு அனுப்பிச் சாதனை புரிந்தது.

இந்த விண்வெளிப் பந்தயத்தில் சோவியத் ஒன்றியத்தை முந்த நினைத்த அமெரிக்கா 1969ஆம் ஆண்டு, அதாவது சென்னை மாகாணம்’ என்று நம் அன்னை நாட்டிற்கு வெள்ளையாட்சி வைத்த பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று சட்டப்பூர்வமாக மாற்றிய சரித்திரம் நிகழ்ந்த ஆண்டு, சூலைத் திங்கள் 20ஆம் நாள் “நீல் ஆம்ஸ்டிராங்’’மனிதரை நிலவில் கால்பதிக்கவைத்து அதிசயிக்க வைத்தது.

இன்றைக்கு சோவியத் ஒன்றியம் இல்லை. இருப்பினும் அது தொடங்கி வைத்த போட்டியில் தொடர்ந்து செல்லும் அமெரிக்கா, 2020ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிவைக்கவும், 2037ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைக் கொண்டு சேர்க்கவும் ‘நாசா’ என்னும் தன் விண்வெளி ஆய்வுநிறுவனம் மூலம் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. சோவியத் ஒன்றியத்தில் பெரிய அண்ணனாக விளங்கிய ருசியாவும் அம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதியதாக எழுந்துள்ள ஐரோப்பிய ஒன்றியமும் அதில் சாதனை படைக்கத் தயாராகி வருகிறது.

“விண்வெளிப் பயணத்தின் தந்தை’’ என்று போற்றப்படும், ஏவுகணைப் போக்குவரத்துக்கான அடிப்படைக் கொள்கைகளை வெளிப்படுத்திய ருசியப் பள்ளி ஆசிரியரான ‘கான்ஸ்டாண்டின் வியோல்கோவ்ஸ்கி’ அவர்கள், 1911ஆம் ஆண்டு அதற்கான தேவை பற்றிக் குறிப்பிடுகையில் நாம் வாழும் இப்பூமியைப்பற்றி, “பூமி மனிதர்களின் தொட்டில். ஆனால் மனிதர்கள் இந்தத் தொட்டிலில் மட்டும் காலாகாலத்திற்கும் தங்கியிருக்கமுடியாது. வேறு தங்குமிடங்களைக் கண்டுபிடித்துத்தான் ஆகவேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

பூமியில் வெப்பம் அதிகரித்துத் துருவப் பனிப்பிரதேசங்கள் கூட உருகத் தொடங்கிக் கடல் மட்டம் உயரத் தொடங்கியிருப்பதும், பூமியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதும், காடுகள் குறைந்து பாலைவனம் கூடிக் கொண்டு வருவதும், மனித வாழ்விற்கு இன்றியமையாத எரிபொருள்கள், கனிமவளங்கள் குறைந்து கொண்டு வருவதும், சியோல்கோவ்ஸ்கியின் ஐயத்தை உறுதிப்படுத்திப் பிறகோள்களில் மனிதன் குடியேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கி வருகின்றன.

எனவே, இப்போது “திரைகடலோடியும் திரவியம் தேடு’’ என்று வழங்கும் பழமொழியைக் “கோள்களுக்குப் பறந்தும் செல்வத்தைக் கூட்டு’’ என மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எதை மறந்தாலும் முதல் பழமொழியை மறக்காத தமிழன் திரவியம் தேடுகிறானோ இல்லையோ திரைகடல் கடந்து கொண்டே இருக்கிறான், கூலியாக - கொத்தடிமையாக.

கோள்விட்டுக் கோள் சென்று குடியேறும் எதிர்காலத்திலேனும் தமிழன் கூலியாகச் செல்லாமல், கொத்தடிமையாக இல்லாமல் வாழும் செல்வனாக வடிவுகொள்ள வேண்டுமானால், அதற்கான விடிவுக்கு இப்போதே வித்திடவேண்டும். சக்திபெறவேண்டும். விண்வெளிப் பயணப் பொன்விழா உணர்த்தும் வித்தகம் இதுவாகும். தமிழகப் பொன்விழாவை மறந்ததுபோல் இந்த விண்வெளிப் பொன்விழாவையும் மறந்தால், அன்றைக்கும் புலம்புகின்ற கூட்டமாகத்தான் தமிழினம் இருக்கமுடியும். ஒப்பாரிதான் நமது தேசியகீதமாக முடியும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று சொன்ன கணியன் பூங்குன்றனார் என்ற சங்கப்புலவன், “தீதும் நன்றும் பிறர்தர வாரா’’ என்றும் செப்பியிருப்பதைத் தப்பாமல் தமிழர்கள் சிந்திக்கவேண்டும். செயல்படவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com