Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
நவம்பர் 2007

பாசிசத்தின் பழைய ஒப்பனை

ஆனாரூனா

பண்பாடுள்ள மக்களைக் காட்டு மிராண்டிகள் வெற்றி கொள்வது இயல்புதான். திராவிடர்கள் ஆரியர்களிடம் வீழ்ந்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் நேருவும், ராகுல சாங்கிருத்தியாயனும். வெற்றிதான் முக்கியம்; வழிமுறைபற்றிக் கவலைப் படவேண்டாம் என்றுதான் சாணக்கியனிலிருந்து சோவானவர்கள் வரை - அக்கிரகாரத்து அறிவாளிகள் கூட்டம் - உபதேசிக்கின்றன.

ஆரிய இதிகாச, புராண, இலக்கியக் கொள்கை கூட தர்மயுத்தம் குறித்தோ, யுத்த தர்மம் குறித்தோ கரிசனம் கொள்வதில்லை. நாங்கள் போர் தொடுக்கப் போகிறோம்; ஆதலால் உங்கள் நாட்டிலுள்ள கால் நடைகள், (ஆவினங்கள்) அவற்றைப் போன்றே சாது வான (!) பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையோர், கர்ப்பிணிகள் போன்றவர்களைப் பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத் துங்கள் (புறம்) என்று பகை நாட்டரசுக்கு ஓலை அனுப்புவதும், பகைவரின் மரணத்தைக் கூட கண்ணீரால் கௌர விப்பதும் திராவிட - தமிழினப் பண்பாடாகும்.

மரண வேதனையில் துடிப்பவனிடம்கூட அவனுடைய பலவீனத்தைப் பயன்படுத்திப் பிச்சை கேட்கும் தோரணையில் அவனுடைய புண்ணியத்தின் பலனை அபகரித்து, கொன்று தீர்ப்பதும், அது தான் தர்மம் என்று உபதேசிப்பதும் ஆரியக் குணமாகும் (கீதை)

கலைஞரின் தலையை வெட்டிவந்தால் பரிசு தருவேன் என்று அறிவித்த வேதாந்தியோ, அதை மௌனமாய் ரசித்த குருமூர்த்தி, சோ, சுப்பிரமணியசாமி, கணேசன் அத்வானி, போன்ற ஆரியக் குஞ்சுகள் இறந்தால்கூட மனம் உடைந்து வருந்துவதுதான் பெரியார், அண்ணா கலைஞர் போன்ற திராவிட இனத் தலைவர்களின் இயல்பு.

இழவு வீட்டில்கூட பிடுங்கியவரை லாபம் என்று கருதுவதுதான் அவாள்குல வழக்கம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச் செல்வன் மறைவுக்குத் தமிழக முதல்வர் கலைஞர் செலுத்திய கவிதாஞ்சலி வேத புரத்தாரையும் வேதா இல்லத்தாரையும் வழக்கம்போல் அவர்களுடைய சிறுமையை வெளிப்பட வைத்திருக்கிறது.

"தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவருக்கு எப்படி அஞ்சலி செலுத்தலாம்? கருணாநிதி அரசைக் கலைக்கவேண்டும். ஆளுநரிடம் அறிக்கை தருவோம், பிரதமரிடம் வலியுறுத்துவோம்’’ என்று அக்கிரகாரத்து மனிதர்கள் தாவிக் குதிக்கிறார்கள்.

அரசதிகாரம் தங்கள் இனத்திடமே இருக்க வேண்டும் என்று அவர்கள் தவிப்பதும், தகிப்பதும், நமக்குப் புரிகிறது. அதற்காக நிர்வாண ஊர்வலம் நடத்தலாமா? காந்தியக் கொள்கையை, வர்ணாஸ்ரம தர்மத்தில் அவருக்குள்ள பிடிப்பை, கடுமையாக எதிர்த்தவர் தந்தை பெரியார்,

சனாதனிகளின் சாம்ராஜ்யத்தில் ஜனநாயகம் இருக்க முடியாது என்பதால் இந்திய சுதந்திர தினத்தையே துக்க தினம் என்று அறிவித்தவர் தந்தை பெரியார்.

ஆனால், அதே பெரியார் தான் காந்தியின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தார். காந்தியடிகளின் நினைவைப் போற்றும் விதமாய் இந்தியாவுக்குக் ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்டுமாறு பரிந்துரைத்தார்.

காமராசர் தலைமையிலான காங்கிரசை எதிர்த்து அரசியல் இயக்கம் நடத்திய போதிலும் காமராசரின் அருங்குணங்களைப் பாராட்டத் தவறியதில்லை அறிஞர் அண்ணா.

காமராசர் வாழ்ந்த போதே, அவருக்கு எதிரான அரசியல் பேசிய காலத்தில்தான், திராவிட முன்னேற்றக் கழகம் அவருக்குச் சிலை எழுப்பி விழா எடுத்தது.

கலைஞர் இல்லாமல் இருந்திருந்தால் காமராசரின் மரணம் கூட மௌனத்தில் மூழ்கடிக்கப் பட்டிருக்கும். அன்றைய அரசியல் சூழ்நிலை அப்படித்தான் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கால கட்டத்தில் கலைஞர் அரசு கவிழ்க்கப் பட்டதற்குக் காமராசர்மீது கலைஞர் கொண்டிருந்த பற்றும் ஒரு காரணமாகும்.

அக்கிரகாரத்து பெரியவர் ராஜாஜியின் அரசியல், ஆன்மீகக் குலதர்மக் கொள்கைகளைத் திராவிட இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வந்த போதிலும், அவரது தனித் தன்மைகளை மதிக்கத் தவறியதே இல்லை. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று கருதுவது திராவிட இனத் தலைவர்களின் பண்பாடு.

ஆரியக் குஞ்சுகளை அளவுக்கு அதிகமாகவே கௌரவிக்கிறார் கலைஞர் என்று தமிழ்ச் சான்றோர் பேரவை மேடைகளிலும், கலைஞரிடம் நேரிலேயும் நாம் கூட வருத்தம் தெரிவித்ததுண்டு.

அண்ணா அறிவாலயத்தில், அக்கிரகாரத்துக் கவிஞர் வாலிக்கு, கலைஞர் விருது வழங்கிய விழாவில் முன் வரிசையில் என்னைப் பார்த்த கலைஞர், “வாலி போன்றவர்களுக்கெல்லாம் நான் விருது வழங்கலாமா என்று நண்பர் அருணாசலம் போன்றவர்கள் கேட்கலாம்... என்று தமது உரையைத் தொடங்கிய கலைஞர், வாலிபோன்றவர்களும் தமிழில்தானே எழுதுகிறார்கள். ஞானசம்பந்தரின் கருத்துக்கள் பிடிக்காமல் இருக்கலாம். அவர் பேசும் தமிழை எப்படி வெறுக்க முடியும் என்று என் போன்றவர்களைச் சமாதானப் படுத்தினார்.

நோயை எதிர்ப்பது நோயாளியைக் கொல்வதல்ல. எதிரியை வீழ்த்துவது என்பது அவரிடமுள்ள கசப் புணர்வைத் தகர்ப்பதில்தான் இருக்கிறதேயன்றி, தனி மனிதக் கொலையில் இல்லை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் - இதுதான் தமிழர் பண்பாடு.

மனுவாதிகளுக்கு இந்த மனித நாகரிகம் புரிவ தில்லை.

“அழுகிறவனிடம் அபகரி
புலம்புகிறவனிடம் பிடுங்கு
புகலற்றவனைத் தீர்த்துக்கட்டு...’’

இம்மாதிரியான வக்கிர உணர்வுகளின் உறைவிடம் தான் அக்கிரகாரம் என்று நமக்குத் தெரியும் என்பதால்.

‘கலைஞர் அரசை ‘டிஸ் மிஸ்’ செய் என்கிற அற்பத் தனங்கள் நமக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ தரவில்லை.

ஆனால், வேறுசில சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்துகின்றன. இருள்நீக்கி சுப்பிரமணிய சங்கராச்சாரியை அன்றைய முதல்வர் ஆணைப்படி கைது செய்யப்பட்டபோது வடஇந்தியப் பார்ப்பனர்கள் கூடத் துடித்தார்கள். அப்போதும் கூட கைது செய்தவர்மீது அவர்கள்தம் கோபத்தைக் காட்டவில்லை. இது சோனியா காந்தி சதி, போப்பாண்டவர் சதி என்று எங்கெங்கோ பாய்ந்தார்களே தவிர கைது நடவடிக்கையின் பின்னணிகளைப் புறந்தள்ளிவிட்டு, இன உணர்வை ஒன்று திரட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்.

அந்த இன உணர்வு தமிழர்களிடம் இருக்கிறதா?

‘கிரிமினல்’ சங்கர் நேபாளத்தில் மன்னராட்சி நடந்த காலத்தில் - 1996இல் - அங்கே போய் “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு இந்து சாம்ராஜ்யத்துக்காகப் போராடுகிறார். ஒவ்வொரு இந்துவும் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்’’ என்று தான் பேசியதாகத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனிடம் சொல்லிப் பெருமிதம் கொண்டாராம். ’அவாள்’ பார்வையில் பிரபாகரன் ஒரு ‘இந்து’ இந்துக்களின் ஆதரவாளர்களான, இரட்சகர்களான, இந்து தர்ம சீலர்கள் தமிழீழ விடுதலையை எதிர்ப்பது ஏன்? புலிகளின் இயக்கம் தடை செய்யப்படவேண்டும் என்று குதிப்பது ஏன்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் மரணத் துக்காகக் கருணாநிதி கண்ணீர் விடுவது ஏன்? - என்று குதர்க்கம் பேசுவது ஏன்?

அவர்களுடைய நோக்கம் இந்துக்களின் நலன் அல்ல. மத நம்பிக்கையுள்ள சூத் திரர்களின் அடிமைப் புத்தியை ‘இந்து’ என்கிற பெயரில் ஆரிய தாசர்களாக மாற்றுவதுதான்.

இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதையோ, ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதையோ விடுதலைப் புலிகள் கூட ஆதரிப்பதில்லை. ராஜீவ் காந்தி படுகொலை பற்றிய புலன் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டு, உண்மையை மாத்திரமே தெரிவது என்று தொடர்ந்தால், சுப்பிரமணியம் சாமி, சந்திரா சாமி, நரசிம்மராவ், முதலாம் ‘புஷ்’ சி.ஐ.ஏ... என்று ஒரு பட்டியலே நீளக் கூடும்.

‘முதலாம் புஷ்’ நடத்திய ஈராக் போரின்போது அமெரிக்கப் போர்விமானங்களுக்கு இந்தியாவிலே ‘பெட்ரோல்’ நிரப்ப அனு மதித்திருந்தது அன்றைய சந்திரசேகர் அரசு.

“அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல்’ நிரப்ப அனுமதிப்பது, அமெரிக்காவின் போர் வெறியை இந்தியா ஆதரிப்பதாக அர்த்தப்படுத்தப்படும்.

இந்தியாவின் நடுநிலைக் கொள்கைக்கு அது எதிரானதாகும். எனவே அன்னியப் போர் விமானங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது’’ என்று ராஜீவ்காந்தி கண்டனம் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியின் கண்டனம் குறித்து முதலாம் புஷ்ஷிடம் அமெரிக்க செய்தியாளர்கள் கேட்ட போது, “அதை (ராஜீவ் காந்தியின் நடவடிக்கையை) நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்’’ என்று அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாதது ஏன்?

எதையும் ஆரிய நலனுக்கு ஆதரவாக மாற்றும் அக்கிரகாரத்து அறிவு ஜீவிகளின் அணை கடந்த ஆசைதான் தமிழ்ச் செல்வனின் மரணத்தின் போதும் வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நிலவும் போர்ச் சூழலில், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் வகிப்பவர் தமிழ்ச் செல்வன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்.

அங்கே ஏற்படும் அமைதி இந்திய நலனுக்கும் உகந்தது என்று நல்லிதயத்தோடு சிந்திக்கும் எவருக்கும் தமிழ்ச் செல்வனின் மறைவு பேரிழப்பாகவே தெரியும். அதிலும் தமிழ்ச் செல்வன் ஒரு தமிழன் என்கிற உணர்வு கொண்டால்?

போரழிவு நின்று சமாதானம் நிலவுவாதா என்கிற மனிதாபிமானமும், தமிழினம் வதைபடுகிறதே என்கிற பந்தபாசமும் கலைஞருக்கு இருக்கிறது எனவே அவர் அரசியல் சாசன விதிப்படி ஆட்சியில் இருக்கக் கூடாது என்று கூச்சலிடுகிறவர்கள் ‘யார்’ அவர்களின் நோக்கம் என்ன என் பதைத் தமிழர்கள் நன்றே அறிவார்கள்.

காந்தியைக் கொன்ற - அதை வரவேற்ற இன்றுவரை கோட்சே கும்பலைக் கண்டிக்காத ஒரு பாசிசக் கூட்டம், ஜனநாயக வேடமிட்டாலும், ‘இந்து’ வேடமிட்டாலும், எந்த ஒப்பனையில் வந்தாலும் கபடத்தனம் அறியப்படாமல் போகாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com