Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2008

கச்சத்தீவை தாரை வார்த்ததில் தில்லி ஆட்சியாளரின் பங்கு
ம.மு. தமிழ்ச்செல்வன்

தில்லி ஆளுமையும், சிங்கள வல்லாண்மையும் சேர்ந்து செய்த சதி! அதுவே கச்சத்தீவின் விதி! இலைகளுக்கப் பின் காய் ஒளிந்து இருக்கும்! அது போல் சிங்களச் சதிகாரர்களுக்குப் பின், தில்லி ஆட்சியாளர்கள் மறைந்துள்ளனர். தீயைப் போன்றோரும், ஈயைப் போன்றோரும் இணைந்தனர். தேன் சுரக்கும் கச்சத்தீவையும், மீன் விளையும் தமிழன் கடலையும் பறித்தனர்.

தமிழ் ஈழ விடுதலைப் போருக்கான பின்புலமே தமிழ்நாடு, இது புது தில்லியின் கருத்து. எனவே கடலில் தடை எழுப்பித் தமிழ் ஈழ மீனவர்களையும் தமிழ் நாட்டு மீனவர்களையும் பிரித்தனர். அதற்கு முன்னோடியாய்க் கச்சத்தீவைப் பறித்தனர். சிங்கள அரசுக்குக் கொடுத்தனர். பிரித்து ஆள்வது இது, ஆங்கிலேயரின் அணுகுமுறை. பிரித்து அழி இது, தில்லி சிங்கள ஆட்சியரின் நடைமுறை. இதற்குச் சான்று இதோ!

எல்லைக் கோடு! தொல்லைக் கோடு!

இலங்கைக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையில் உள்ளது பாக் நீரிணை. இதன் நீளம் 270 கி.மீ. அகலம் 40 கி.மீ. சர்வதேச கடல் சட்டத்திற்கும், இருநாட்டு கடல் சட்ட வரம்புகளுக்கும் அப்பாற்பட்ட திறந்த, அகன்ற, இடைவெளிக் கடலான மன்னார் குடாக் கடலிலும், வாங்காள விரிகுடாக் கடலிலும் வரைந்தனர் புதிய எல்லைக் கோடு.

ஆதி சேது என்றழைக்கப்படும் ஆடம்ஸ் பாலம் தனுஷ்கோடி தீடைப்பகுதியிலிருந்து 9.06.வடக்கு படுக்கைக் கோட்டிலிருந்து பாக் நீரிணை 10.05.வடக்கு படுக்கைக் கோடு வரை, எல்லைக்கோடு தீட்டினர். நேராக தீட்டப்பட வேண்டிய எல்லைக் கோட்டினை கச்சத்தீவு அருகில் வளைத்தனர். கச்சத்தீவு இலங்கைக் கடல் எல்லைக்குள் அடங்குமாறு வரைபடம் வரைந்தனர். எனவே, கோட்டுக்கு மேல் பகுதியிலுள்ள கச்சத்தீவு இராமேசுவரம் கடற்பகுதியைச்சாரும். அதன்படி கச்சத்தீவு சேது நாட்டுக்கே உரித்தாகும்.

23.03.1976இல் இரு நாட்டு வெளியுறவுத் துறைச் செயலாளர்களும் முறை கேடான இந்த எல்லை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். கச்சத்தீவை தமிழ் இனத்திடமிருந்து ஒட்டு மொத்தமாகப் பறித்தனர். ஸ்வெல் எனும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமா? சிங்கள நாட்டுக்குச் சொந்தமா? என்பதை அறியேன் என்றார்.

மற்றொரு இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இக்பாலிரோஸ், கச்சத்தீவு தொடர்பான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் மூக்கையாதேவர் வெளி நடப்பு

அடுக்கடுக்காக இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்தாக வேண்டும் எனக் கருதினார். இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. மூக்கையாத் தேவர். இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர். இவர் 23.07.1974 அன்று தில்லி நாடாளுமன்றத்தில் கச்சத்தீவுச் சிக்கலையும் மீனவத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கினர். ஆனால் அவை நடுவரோ மூக்கையாதேவர் பேசுவதற்கு தடை விதித்தார். எனது தொகுதி சம்பதமாகப் பேச அனுமதிக்க வேண்டுமெனத் தேவர் வேண்டுகோள் விடுத்தார். அவை நடுவர் அனுமதி மறுத்தார். மூக்கையாதேவரும், பெரிய குளம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முகமதுசரீப் என்பவரும் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.

சிங்கள அரசு தமிழினத்தைக் கூண்டோடு அழிக்கச் செயல்படுவதற்கு இந்திய அரசு துணை, என்பதற்கு இதுவே சான்றாகும். சார்க் மாநாடுகளில் தில்லி அரசு கலந்து கொள்கிறது! சிங்கள அரசோடு கை குலுக்குகிறது! விருந்தினை ஏற்கிறது! விருந்தினைப் படைக்கிறது! உறவு கொண்டு உரசுகிறது! உள்ளம் உருகப் பேசுகிறது. ஆனால், அன்றாடம் சிங்கள அரசால் கொல்லப்படும் தமிழின மீனவர்களைப் பற்றி, மத்திய அமைச்சர்களோ, தலைமை அமைச்சரோ வாய் திறப்பதில்லை காரணம்? தில்லி அரசுக்குத் தமிழினம் மாற்றான் பிள்ளை.

மீனவத் தமிழர்களின் சிக்கலில் நடுவண் அரசு தலையிட தயக்கம்!

இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்து சுடுவது பற்றியும், தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வது பற்றியும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லி மாநிலங்கள் அவையில் (ராஜ்ய சபா) 14.08.1997இல் கேள்வி எழுப்பினர். குறுகிய கால பிரதமர் ஐ.கே. குஜ்ரால் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார். இனி இம்மாதிரி சம்பவம் நடக்காதிருக்க, நடைமுறைகளை உருவாக்க இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ஒவ்வொரு இந்து மீனவர் இறந்ததும் அது குறித்து விசாரணையும் நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.

இம்மாதிரி படுகொலைகளை அங்குள்ள போராளிகள் செய்தனரா, அல்லது இலங்கைக் கடற்படை செய்ததா, என்பது பற்றி நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே நமது கடற்பரப்பு எல்லையைத் தாண்ட வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் இங்கு கூறுவது கவலை தரும் விஷயம் தான். ஆனால் வரம்பைத் தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது.
- தினமணி 15.08.1991

தமிழக அரசுப் பணியாளர்களின் பங்கு

சென்னை மத்திய நில அளவு அலுவலகத்தின் ஹெச் 2, 38482/81, நாள் 29.09.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது ஹெச். 2. 38495/91, நாள் 11.09.1981 குறிப்பாணைகளின்படி, கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரை படத்தில் இருந்து நீக்குவதற்கு இராமநாதபுர மாவட்ட ஆட்சியர், இராமேசுவரம் கிராமப்புல எண். 1250, சர்கார் புறம்போக்கு, கச்சத்தீவு ஆர்.சி.எப். 23. 75/83, பி.ஏ.சி. 06.02.82 குறிப்பாணையின்படி உத்தரவிட்டார்.

இராமேசுவரம் வட்டாட்சியரும், 118/82, நாள் 19.02.82 மூலம், மாவட்ட வரைபடத்தில் இருந்து கச்சத் தீவினை நீக்க, டேரோடூனில் இருக்கும் இந்திய வரைபட அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினார். அதன்படி, இராமநாதபுர மாவட்டம் பட்டா சர்வே எண்: 1250 - லிருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டது. இக்கொடுஞ்செயல் நடைபெற்றபோது புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன், தமிழக முதல் அமைச்சராக இருந்தார். (1982) தமிழக அரசுப் பணியாளர்களின் பங்கு இதோடு நிற்கவில்லை.

1951, 1961, 1971 ஆகிய ஆண்டுகளின் மக்கட் தொகைக் கணக்கெடுப்புப் பேரேட்டில் கச்சத்தீவு நீக்கப்பட்டுள்ளது. நினைவுக்கு வராத சிற்றூர்கள் எல்லாம் மக்கட் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளபோது கச்சத்தீவு மட்டும் விடுபட்டுள்ளது. இதற்கு யார் உடந்தை? அரசு பணியாளர்கள்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் முழக்கம்

தமிழக மக்களே இந்தச் சுதந்தர நன்னாளில், 1974ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு அநீதியாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவோம். நமது தீவை நாம் மீட்போம், தேவைப்பட்டால், மத்திய அரசோடு, தமிழக அரசு நியாயமான கோரிக்கையை எடுத்து வைக்கும். மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை என்றால், நாம் போராடவும் தயாராவோம் எனச் சூளுரைத்தார்.

அதே ஆண்டில் நிதி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தமிழக அரசு வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் கொணர்ந்தார். அப்போது அவர் தமிழக மீனவர்களின் நலன் கருதிக் கச்சத்தீவைத் திரும்பப் பெற தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும் எனச் சட்டப் பேரவையிலும்ó தீர்மானம் நிறைவேற்றினார்.

முதல்வர் ஜெயலலிதா 05.09.1991இல் தி இந்து இதழின் நேர்காணலின் போது கச்சத் தீவைத் தாம் திரும்பப் பெற எடுத்துக் கொள்ளும் முயற்சி இனவெறியால் ஏற்பட்டதல்ல. தமிழினத்தின் உரிமையைக் காத்திடவும், மீனவத் தமிழர்களின் உயிரைக் காத்திடவுமே கச்சத்தீவைத் திரும்பக் கோருகிறோம் என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1993 ஏப்ரல் திங்களில், மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் பேரில் தருக்கம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, கச்சத்தீவை மீட்பது சம்பந்தமாக மாநில அரசு எல்லா முயற்சிகளையும் செய்துள்ளது. இதற்கு மேல் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவண் அரசுக்குள்ள அதிகாரம் மாநில அரசுக்கு இருக்குமேயானால், கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்து பறிமுதல் செய்வோம் என்று கூறித் தனது கச்சத்தீவுப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (சான்று 16.04.1993 நாளிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்)

1998இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவும் அதன் கூட்டணியும் 30 இடங்களை வென்றது. அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த நால்வர் மத்திய அமைச்சர்களாய் இருந்தனர். இந்திய நாடாளுமன்றம் செல்வி ஜெயலலிதா ஆட்டி வைக்கும் பொம்மையாய் இருந்தது. அப்படி ஒரு வல்லாண்மை பெற்றிருந்தும் செல்வி ஜெயலலிதா, கச்சத்தீவுச் சிக்கலை எழுப்பவில்லை. மீனவர் சிக்கலை முடிக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளைக் கலைப்பதில் காட்டிய ஆர்வத்தை - வேகத்தை கச்சத்தீவை மீட்பதிலோ - காவிரி சிக்கலைத் தீர்ப்பதிலோ காட்டவில்லை.

அகில இந்திய பேராயக் கட்சியினர் (காங்கிரசார்) இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தது தாங்களே எனக் கருதினர். பதவிகளை தங்களுக்குள் பகிர்ந்தனர். ச்தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள கச்சத்தீவுச் சிக்கல், காவிரி உள்ளிட்ட நதிநீர்ச் சிக்கல், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பயிற்று மொழி கொள்கையை அடுப்பில் போட்ட சிக்கல்: இவைகளில் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாது தமிழ்நாடு பேராயக் கட்சியினர் உறங்கினர். தில்லி காங்கிரசுத் தலைவர்களுக்குத் தெண்டனிட்டே உயர்ந்தனர். எனவே, 1967 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசு கவிழ்ந்தது; தமிழ் மண்ணில் அதன் வேர் அறுந்தது!

வண்ணத் தீவைத் தொலைத்தோம்!

சேது மன்னர்களாம், நெறியாளர்களின் கையிலிருந்து கச்சத்தீவு, வெறியாளர்களின் கைக்குமாறியது. வாணிபத் துறைமுகங்களாம் திருமறைக்காடு (வோரண்யம்) அதிராமப்பட்டினம், தொண்டி, மண்டபம், இராமேசுவரம், ஆகிய துறைமுகங்களுக்குத் தமிழீழத்தமிழர்கள் வருவதைத் தடுத்தனர். அது போன்றே, தமிழீழக் கடற்கரை நகரங்களாம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, யாழப்ப்பாணம், ஆகிய துறைமுகங்களுக்குத் தமிழ்நாட்டு வணிகர்கள் செல்வதையும் தடுத்தனர். இன்று அத்துறைமுகங்களை மூடினர்.

இன்று, இந்து மாக்கடலில் பூக்கள் உதிர்வதுபோல் தமிழனின் உடல்கள் உதிர்கின்றன.

கச்சத் தீவு பகுதியில் மீன் பிடி உரிமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: டி. ராஜா

புதுதில்லி ஏப். 29, ஒப்பந்தப்படி கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா வலியுறுத்தினார். கச்சத் தீவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பிரச்சினை எழுப்பினார். மாநிலங்களவையில் உறுப்பினர் டி. ராஜா இவ்விவகாரம் குறித்து பேசியது.

7,516 கி.மீ. நீளம் கொண்ட இந்திய கடற்கரைப் பகுதியில் 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன. கடற்கரையில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலையே பிரதானமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். உலகிலேயே மீன் பிடித் தொழிலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த நீண்ட நாள்களாக இந்தியாவின் தென்கோடி பகுதியில் உள்ள கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கைப் படையினர் மற்றும் அந்நாட்டு மீனவர்கள் அவர்களை தாக்குகின்றனர்.

1974-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் வலைகளை உலர்த்தவும், படகுகளை நிறுத்தவும் உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாளடைவில் இந்த ஒப்பந்தங்கள் இலங்கை அரசால் மீறப்பட்டன. 1983-க்குப் பிறகு இந்த விவகாரம் பெரிதாகியது. அங்கு நடந்துவரும் இனப் பிரச்னையால் இந்த விவகாரம் திசைமாறியது.

எனவே, கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு முந்தைய ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்களுக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com