Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2008

திருடிய பொருள் திருடனுக்கே!
கவிஞர் பல்லவன்

பனிமுகடுகள்
வான்பார்க்கும்
ரிஷிகேசம்!

அந்த
அழகுப் பிரதேசத்தை
ரசித்த படியே
நதிக்கரையை
வீரத்துறவி விவேகாநந்தர்!

ஞானி ஒருவர்
அங்கே
தியானம் செய்து
கொண்டிருந்தார்.

அந்த
ஆன்மிகப் பெரியவரோடு
ஆத்ம விசாரணை
நடத்த விரும்பினார்
விவேகாநந்தர்.

ஆன்மஞானத்தின்
அடியாழத்துக்கு
அழைத்துச் சென்றது
ஞானியின்
கலந்துரையாடல்!

பாரத தேசத்தின்
மகான்களைப்
பற்றிய பேச்சின் போது
பவகாரி பாபாவைத்
தாம் சந்தித்து
மெய்சிலிர்த்த
அனுபவத்தை விளக்கினார்
விவேகாநந்தர்.

ஆயிரம் சூரிய
பிரகாசத்தோடு
அந்த ஞானியின்
முகமண்டலம்
ஜொலித்தது!

அப்படியா?
அருள்ஞானி
பாபாவைத்
தரிசித்தீர்களா?
குதூகலத்தோடு
கேட்டார் ஞானி.

பாபா ஆசிரமத்தில்
நடந்த ஒரு
விநோதத் திருட்டைக்
கேள்விப்பட்டீர்களா?
வினவினார் ஞானி.

சுவைபட
அதனைச் சொல்லத்
தொடங்கினார்
விவேகாநந்தர்.

அமைதியில்
ஆழ்ந்திருந்தது
பாபாவின் ஆசிரமம்.

விடிவெள்ளி
கீழ்வானில்
விழித்துக்கொண்ட
நேரம்.

ஆசிரமத்தின்
நிசப்தத்தைக்
குலைக்கும் விதமாகப்
பொருள்களை உருட்டும்
சத்தம் அங்கே கேட்டது!

ஓசை வரும்
இடம் நோக்கி
நடந்தார்
பவகாரி பாபா.

ஆசிரமத்தின்
விலை உயர்ந்த
பொருள்களை
ஒருவன் மூட்டைக்
கட்டிக் கொண்டு
இருந்தான்.

பாபாவை
எதிரில் கண்டதும்
திகிலுற்ற திருடன்
பயந்து ஓடத்
தொடங்கினான்.

அவனை
விரட்டிக் கொண்டு
ஓடினார் பாபா.

சாமியார்
தன்னைத்
துரத்திக் கொண்டு
வருவதைக் கண்டு
கொண்ட திருடன்
பிடிபடாமல்
ஓடினான்!

பாபா விடுவதாக
இல்லை.
அவனைத் துரத்திப்
பிடித்து விட்டார்!

சாமி! என்னை
விட்டு விடுங்கள்
தவறு செய்து விட்டேன்
மன்னியுங்கள்!

பாபாவின்
திருவடிகளைத்
தொழுதான் திருடன்!

அப்பனே!
பயப்படாதே!
நீ விரும்பிய
பொருளை உன்னிடம்
சேர்த்து விடவே
இந்த மூட்டையைச்
சுமந்து கொண்டு
வந்திருக்கிறேன்.
மறுக்காமல்
ஏற்றுக் கொள்!
பாபா ஆசிரமம்
திரும்பினார்.

ஒன்றுமே புரியவில்லை
திருடனுக்கு.
திக்குமுக்காடினான்.
தண்டிக்க வேண்டியவர்
தம் பொருளை
என்னிடம் ஒப்படைக்கிறாரே!
இது உலகம்
காணாத
ஒன்றாக இருக்கிறதே!
திருடன் ஒரு
முடிவுக்கு
வந்து விட்டான்.

அவனது
கண்களை
பாபா
திறந்து விட்டார்!
விவேகாநந்தர்
சொல்லி முடித்தார்
அந்தத்
திருடனின் கதையை!

கதை கேட்ட
ஞானியோ
கண்ணீர் சொரிந்தார்!
ஒரு மாதிரி
ஆகி விட்டது
விவேகாநந்தருக்கு!

கலக்கம்
அடைந்தார் அவர்.
ஏன் சாமி
அழுகிறீர்கள்?
தவறாக ஏதேனும்
சொல்லி விட்டேனா?

இல்லையப்பா,
எனது
பழைய கதையைக்
கேட்டதும்
எனக்கு அழுகை
வந்து விட்டது!

பாபாவின்
ஆசிரமத்தில்
திருடிய பாவி
நான்தானப்பா!

களவாடிய பொருளை
என்னிடமே
ஒப்படைத்து
அன்றே பாபா
என்னைத்
தண்டித்து விட்டார்!
களவு செய்த
பொருளை மீண்டும்
ஆசிரமத்திலேயே
வைத்து விட்டு
பாபாவைப் போலவே
ஆத்மஞானம் தேட
இதோ இந்த
ஆற்றங்கரைக்கு
வந்துவிட்டேன்!

ஞானியின் கண்களில்
ஒளிவெள்ளம்
வழிந்தது!
ஒரு விடியலின்
வெளிச்சத்தை
அந்த விழிகளில்
தரிசித்து
மெய் சிலிர்த்தார்
விவேகாநந்தர்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com