Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2008

கண்ணகி கோயில் - வழி கிடைக்குமா?

தேனி மாவட்டத்தில் தமிழக எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள கண்ணகி கோயில். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று மட்டும் பக்தர்கள் இங்கு வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு கண்ணகி கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.

கண்ணகி கோயில் அமைந்துள்ள இடம் அக்காலத்தில் திருச்செங்கோடு மலை என்றும் வென்வேலன் குன்று என்றும் அழைக்கப்பட்டதாகச் சிலப்பதிகாரச் செய்திகளிலிருந்து அறியலாம். அக்காலத்தில் சேர நாட்டு மன்னனாக விளங்கிய சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் அமைத்தான், விழா நடத்தினான். இவ்விழாவில் அண்டை நாட்டு மன்னர்களும் ஆரியர்களும் இலங்கை மன்னர் கயவாகுவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழக அரசியல்வாதிகளில் ஆத்திகர்களும் இருக்கிறார்கள். நாத்திகர்களும் இருக்கிறார்கள். ஆத்திகர்களாக இருந்தாலும், நாத்திகர்களாக இருந்தாலும் இவர்களிடையே மூடப்பழக்கம் ஒன்று உண்டு. ஆண்டுதோறும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டால் பதவி பறிபோகும் என்ற ஒரு மூட நம்பிக்கையால் நமது அரசியல்வாதிகள் யாரும் நீண்ட காலமாக அவ்விழாவில் பங்கு கொள்வதில்லை.

ஒரு வேளை இது போன்ற ஒரு மூடநம்பிக்கையால் கண்ணகி கோயில் வழிபட்டாலோ அல்லது கண்ணகி கோயிலை உருவாக்கி நல்ல நிலைக்குக் கொண்டு வந்தால் தமக்குத் தீது வந்துவிடுமோ என்று தவறாக எண்ணுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.

அண்மையில் நடந்து முடிந்த கண்ணகி கோயில் விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஆனால் அங்குள்ள கேரள மாநிலக் காவல்துறையினர் மற்றும் அலுவலர்களின் வன்கைப்பற்றல் அதிக அளவில் இருந்ததாகச் செய்திகள் வந்துள்ளன.

கோயில் வளாகத்தில் கேரள பக்தர்கள் வழிபடும் கோயில் உள்ள இடத்தில் தென்னங்கீற்றாலான தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கண்ணகி கோயில் அமைந்துள்ள இடத்தில் தோரணங்கள் கட்டுவதற்குக் கேரள மாநிலக் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கானகத்துறை அலுவலர்கள் இசைவளிக்க மறுத்து விட்டனர்.

கேரளக் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு அம்மாநிலப் பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலையாளத்தில் எழுதப்பட்ட தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த தட்டிகள் அனைத்தையும் கேரளக் காவல்துறையினர் அகற்றி விட்டனர். அது மட்டுமல்லாமல் தமிழகக் காவல்துறையினர் கோயில் வளாகத்துக்குள் நுழைந்தபோது அவர்கள் கேரளக் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் இரு மாநில அலுவலர்கள் பேசிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கக் கூடியதாகும்.

இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகியை வழிபடும் உரிமை பறிபோய்விடும் எனப் பக்தர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது. தமிழர்கள் ஏற்கெனவே முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாற்றுச் சிக்கலில் தங்கள் உரிமைகளை இழந்திருக்கும் இவ்வேளையில் கண்ணகி கோயில் வழிபாட்டு உரிமையையும் இழந்துவிடாமல் பாதுகாத்துத் தருவது அரசின் கடமையாகும்.

தமிழக இந்து அறநிலையத்துறைச் சார்பாகப் பல்வேறு பணிகள் நடந்து வருவதை மக்கள் அறிவர். ஆனால் தமிழர்களின் பண்பாடு சார்ந்த கோயில்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை அண்மையில் வந்துள்ள செய்திகள் வெளிப்படுத்துகின்றன. மதுரை திருமலைநாயக்கர் மகாலை மேம்படுத்த ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அரசு இசைவளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்குத் தங்கத்தேர் ரூ. 15 கோடி செலவில் செய்யப்பட்டு தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. அதில் சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது போன்று கண்ணகி கோயிலைப் பேணிக்காக்க அரசு எந்த ஒதுக்கீடும் செய்யாதது ஏன்? என்பது போன்ற வினா தமிழர்களிடையே எழுந்துள்ளது.

தமிழக - கேரள கானகத்துறைக்கு இடையே தமிழக எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது கண்ணகி கோயில். கேரள எல்லை வழியாகச் செல்லாமல் தமிழக எல்லைப் பகுதியான லோயர்கேம்ப் அருகிலுள்ள பழியன்குடிசை வழியாக நடந்து சென்ற பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருந்தது. இப்பாதை வழியாகச் சென்றால் கேரள அரசு தமிழகப் பக்தர்களைத் தடுத்து நிறுத்த உரிமையில்லை.

கோயில் அமைந்திருப்பதும், கோயிலுக்குச் செல்லும் வழியும் தமிழக எல்லைக்குள் இருப்பதால் பக்தர்கள் எப்போதும் சென்று அச்சமின்றி வழிபட்டு வர முடியும் இதற்குத் தமிழக அரசு பழியன் குடி வழிப்பாதையைச் சீரமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது. இந்து அறநிலையத்துறை பல்லாயிரம் கோடி செலவழித்துப் புதிய கோயில்களை உருவாக்குவதை விட நமது முன்னோர்கள் வழிபட்ட கோயில்களைப் புதுப்பிப்பதால் தமிழர்களின் பண்பாடு பாதுகாக்கப்படும்.

ஆதிக்கச் சக்திகளின் பேச்சைக் கேட்டு அப்படியே இந்து அறநிலையைத்துறை செயல்படுமானால் தமிழர்களின் பண்பாடு சார்ந்த கோயில்கள் அழிக்கப்பட்டுவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். இதுபோன்ற அறியாமைச் செயல்களினால் கடந்த காலத்தில் நால்வர் பாடல் பெற்ற திருத்தலங்களெல்லாம் வழிபாடு இன்றியும், பாழடைந்தும் இளைய தலைமுறையினர் அறிய முடியாத வகையிலும் சிதைந்து காணப்படுகின்றன.

கண்ணகி கோயிலை உயிர்ப்பித்துவிட்டால் அதை யாராலும் அகற்ற முடியாது. கோயிலை உயிர்ப்பிப்பதா? வேண்டாமா? என்பதைத் தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com