Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2008

வரலாறு மீனம் மேஷம் பார்ப்பதில்லை!
ஆனாரூனா

தமிழ்ப் புலவோர்களும், அறிஞர்களும் கூடிக் கலந்து, ஆய்வு செய்து தமிழ்ப்புத்தாண்டு தைத் திங்களில், திருவள்ளுவர் தினத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று வரையறை செய்து, இது தொடர்பாகத் தொடர்ந்து விளக்க அறிக்கைகள் தந்து, தமிழ்ச் சமூக வாழ்க்கையில் ஒரு புதிய ஒளியை ஏற்றுவித்தார்கள்.

இந்த தமிழ்ப் புலவோர்கள் நாத்திகர்களோ, பகுத்தறிவாளர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்களோ அல்லர். நாம் அறிந்தவரையில் இவர்களில் பெரும்பாலோர் சைவ சமயத்தில் தோய்ந்தவர்களே! ஆனால் அவர்களின் தமிழ்ப் பற்றும், அக்கறையும் எளிதில் புறந்தள்ளி விட முடியாதவை.

அவர்கள் முன்னெடுத்து, நிற்கும் தமிழ்ப் பற்றுக்கும் சமூக அக்கறைக்கும் மதிப்பளித்து தமிழக அரசின் சார்பில் கோடையில் தொடங்கும் சித்திரை அல்ல, தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

கலைஞரின் அறிவிப்பைக் கேட்டு தமிழ் உள்ளங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் பொங்கின. வழக்கம்போல தினமணி கூட்டத்துக்கு வயிற்றெரிச்சல் வந்துவிட்டது. பகுத்தறிவல்ல; பாசிசம் என்கிற தலைப்பில் தனது மனு தர்ம ஆவேசத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டது.

தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் பிறக்கும் என்று உத்தரவிடத்தான் ஆட்சியாளர்களுக்கு அதிகாரமே தவிர சர்வதாரி ஆண்டு வழக்கம்போல்ச் சித்திரையில் தொடங்கக் கூடாது என்று உத்தரவு போடும் அதிகாரம் இருக்கிறதா என்ன? என்று எதிர்ப்புக் குரல் எழுப்பும் தினமணி பகுத்தறிவுக்குப் புதிய பொழிப்புரையும் எழுதுகிறது. தனது வாதத்துக்கு வள்ளுவரையும் இழுத்துக் கொள்கிறது.

இறைமறுப்புக் கொள்கையைப் பகுத்தறிவு என்று கொள்வதே கூடத் தவறு. உலகில் மிகப் பெரிய விஞ்ஞானிகளும், உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 99 விழுக்காடு மக்களும், தலைமுறை தலைமுறையாக நம் மூதாதையரும், நம்புகிற விஷயத்தை மறுப்பது என்பது, வள்ளுவர் வழியில் கூறுவதாக இருந்தால் - பலகற்றும் கல்லாத அறிவிலாதவர்கள் செயல்.

தினமணி ஒரு விஷயத்தைப் புரிந்த கொள்ள முன்வர வேண்டும். விஞ்ஞானிகள் என்போர் இங்கே தொழில்முறைக் கூலி அடிமைகளே தவிர, சுதந்திரமானவர்களோ, பகுத்தறிவாளர்களோ அல்லர். அவர்கள் தங்களின் எஜமானர்களின் தேவைப் பூர்த்தி செய்யப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவ்வளவே. மற்றொன்று, 99 விழுக்காட்டு மக்கள் நம்புகிறார்கள் என்பதால். அந்த நம்பிக்கை பகுத்தறிவின் பாற்பட்ட உண்மையாகி விட முடியாது.

தலைமுறை தலைமுறையாய் நம் மூதாதையர் நம்புகிற விஷயத்தை மறுப்பது என்பது வள்ளுவர் வழியில் (மொழியில்) கூறுவதாக இருந்தால் பல கற்றும் கல்லாத அறிவிலாதவர்கள் செயலாம். தனது முரட்டுத் தனத்துக்கும் குருட்டுத் தனத்துக்கும் வள்ளுவரை இழுப்பது ஏன்?

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்... பல கற்றும் கல்லாதார் அறிவிலாதார் என்கிற குறளை தினமணி பயன்படுத்தலாமா? ஊரோடு ஒத்துப்போ... என்று பாமரத்தனமாகக் கூறுவதற்கும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று வள்ளுவர் கூறுவதற்கும் ஒரே பொருள்தானா? வள்ளுவர் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று கூறுவதில், உலகம் என்பது தினமணி கூட்டத்தார் சொல்கிற உலகம் அல்ல.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே... என்கிறது தமிழ். உயர்ந்தோர் என்போர் யார்? மனுதர்மத்தை மறுப்போர் உயர்ந்தோர். புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப் போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்று சங்கம் முழங்குவோர் உயர்ந்தோர். சனாதனக் கொள்கைகளிலிருந்து மக்களை விடுவிப்போர் உயர்ந்தோர். சாதி-சமயமற்ற சமூக அமைப்புக்காகப் போராடுவோர் உயர்ந்தோர்.

தனிச் சொத்துரிமைக் கொடுமைக்கு எதிராகப் போராடும் பொதுஉடைமைக் கருத்துடையோர் உயர்ந்தோர். புத்தரும், கார்ல் மார்க்சும், தந்த பெரியாரும் அவர் போன்ற புரட்சியாளர்களும்தான் உயர்ந்தோர். இந்தப் புரட்சியாளர்கள் கனவுகாணும் உலகத்தை உருவாக்கத் துணியாதவர்கள் பல கற்றாலும் அறிவில்லாதவர்களே என்பதுதான் குறள் கூறும் நீதி.

தலைமுறை தலைமுறையாய், வெகுகாலமாய் உலகம் தட்டை வடிவிலானது என்று ஏற்றுக் கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாய் உலகம் உருண்டை வடிவிலானது என்று கண்டானே அவன் பாசிஸ்ட்டா?

மத நம்பிக்கையாளர்களின் மனிதன் உருவான கதையைப் பொசுக்கும் விதத்தில் பரிணாம விதிப்படி, மனிதன் குரங்கினத்தின் வளர்ச்சி பெற்ற வடிவம் என்று சொன்னானே அவன் பாசிஸ்ட்டா? தலைமுறை தலைமுறையாய் ஓர் அறியாமை தொழப்படுகிறது என்பதற்காக மூட நம்பிக்கைகளுக்கு முடிசூட்டிக் கொண்டிருக்கலாமா? அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்க முடியுமா?

தினமணிக் கூட்டத்தாரோ - சிந்திக்காதே, முன்னோர் சொன்னதை நம்பு, அதுதான் ஜனநாயகத் தத்துவம் என்கிறார்கள். மக்கள் மடையர்களாக இருக்கும்வரைதான் மனுவாதிகள் சுகஜீவனம் நடத்த முடியும் என்பதற்காகவே தினமணி குதியாய்க் குதிக்கிறது. தினமணி கூறுவதில் நமக்கு வியப்பில்லை. ஆனால் நெல்லை சு. முத்து போன்றவர்களும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து குதிக்கலாமா?

தமிழ்ப் புத்தாண்டு என்பதும் தமிழர் புத்தாண்டு என்பதும் இன்று வெவ்வேறு மாதிரி என்றாகி விட்டது. இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும்தான் அணுகுகிறார்களே தவிர விஞ்ஞான ரீதியாக அணுகத் தயங்குகிறார்கள். பகுத்தறிவு பேசுகிறவர்களும், இந்த விஷயத்தில் அரசியல்தான் பேசுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை - என்று கண்ணீர் வடிக்கிறார் நெல்லை சு. முத்து.

பகுத்தறிவு, விஞ்ஞானம் என்று பேசுபவர்கள் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் முறையாக வான சாஸ்திரரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று வானசாஸ்திர அடிப்படையில் வாதாடும் முத்து, ஆண்டுத் தொடக்கம் மட்டுமல்ல, நாள்காட்டிகளும் நாள் கணக்குகளுமே காலந்தாரமாகத் திருத்தப்பட வேண்டியது அவசியம்...

இப்படி ஆண்டு மாதம் நாள் கணக்குகளை மாற்றுவது சரியா என்றால் வரலாற்றில் இத்தகைய செய்திகள் நடந்தேறி இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டி, கிரிகோரியன் காலண்டர் வரை சில நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டுகிறார். முத்து இவ்வாறு காட்டும் எடுத்துக்காட்டுகள் வான சாஸ்திர அடிப்படையில் நடந்தவை அல்ல என்பதைச் சொல்ல மறந்து விடுகிறார்.

உலகில் நடைபெறும் மாற்றங்களில் எதுவும் வான சாஸ்திர அடிப்படையில் நடந்ததே இல்லை. கருத்துக்களும் புரட்சிகளும் மீனம் மேஷம் பார்த்துக் காத்திருப்பதில்லை. பூமியின் சுழற்சி அச்சு தலையாட்டம் போடுவதால் அதன் துருவ நட்சத்திரமும் இடம் மாறி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 2000 ஆண்டுகளுக்கும் ஒரு முறை வீதம் மெல்ல வசந்த சமநோக்கு நாள் ஒவ்வொரு ராசியாக முன்னேறி வருகிறது.

4000 ஆண்டுகளுக்கு முன்னால் இடபம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மேஷம், இன்று மீனம்... என்று பூமியின் சுழற்சிப் பாதையில் தென்படும் உடுக்களை அடையாளம் காட்டுகிறார் சு. முத்து. பூமியின் இந்த சுழற்சிக்கும் சரித்திர மாற்றங்களுக்கும் என்ன சம்பந்தம்?

அட்சரேகை தீர்க்க ரேகை கடகராசி, மீனராசி என்பது புவியியல், வானவியல் கணக்குகளே தவிர வரலாற்றைத் தீர்மானிப்பவை அல்ல. வான சாஸ்திரம்தான் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கிறது என்று வாதிடுவது, சோதிடப் பள்ளத்தாக்கில் மனிதரைத் தள்ளும் முயற்சியாக மாறிவிடும்.

சூரிய-சந்திர-உடுக்களின் சுழற்சிப்படி இரவு வரலாம். பகல் வரலாம், கோடை வரலாம், வசந்தம் வரலாம். ஆனால் புரட்சிகளும் போர்களும், வேலைவாய்ப்பும், விலைவாசியும், வேலை நிறுத்தங்களும், துப்பாக்கிச் சூடுகளும் நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. கிராமியப் பழமொழிகூட நலிந்தோர்க்கில்லை, நாளும் கிழமையும் என்கிறது.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வான சாஸ்திரங்களின் வரலாறு அல்ல, வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும். இந்திய வரலாற்றில் வர்க்கப் போராட்டம் வர்ணப் போராட்டமாகவும் மாறிவிட்டது. அதாவது ஆரிய-திராவிடப் போராட்டமாகவும் மாறிவிட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. தினமணிக்கு இது புரியும். நெல்லை சு. முத்துவுக்கு இது புரிய வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com