Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

குடியரசு வேந்தர்களில் ஒருவர்

மாக்சிம் கார்க்கி

ஏப்ரல் இதழ் தொடர்ச்சி...

Gorky இவ்வாறெல்லாம் கோடீஸ்வரர் என் கற்பனைக்குக் காட்சியளித்தார். ஆனால் அவரை நேரில் பார்க்கும் போது அவர் மற்ற மனிதர்களைப் போலச் சாதாரணமாகத்தான் இருந்தார். இதைக் கண்டு நான் எப்படிப் பிரமித்திருப்பேன் என்பதை நீங்களே கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

எனக்கு முன்பாக, ஒரு பெரிய நாற்காலியில் ஈரப்பசை இல்லாமல் காய்ந்துபோன ஒரு கிழவர் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய கைகள் பழுப்பு நிறமாக இருக்கின்றன; கைகளில் சுருக்கல் விழுந்திருக்கிறது. அவற்றின் நீளம் நிதானமாகத்தான் இருக்கிறது. வயிற்றுக்கு மேலாகக் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய கன்னங்கள் தொங்கித் தொள தொளக்கின்றன; அவற்றில் நன்கு க்ஷவரம் செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய கீழுதடும் தொங்கிக் கிடக்கிறது. அதனால் அவர் தங்கப் பல் கட்டியிருப்பது வெளியே தெரிகிறது. மேல் உதட்டின் பக்கம் சுத்தமாக க்ஷவரம் செய்து கொண்டிருக்கிறார்; அது ரத்தம் செத்தும், சிறிதாகவும் இருக்கிறது. பொய்ப் பற்களின் வரிசை மேல் உதட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கிழவர் பேசும்போது, மேல் உதடு பெரும்பாலும் அசைவதே கிடையாது. கண்களில் பிரகாசமே இல்லை; புருவங்களில் மயிர் கிடையாது, தலையும் வழுக்கை; ஒரு உரோமம் கூட அங்கு இல்லை, கிழவரின் முகத்திற்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சருமம் இருந்தால் நல்லது என்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அவருடைய முகம் சிவப்பாகவும், சலனமின்றியும், மிருதுவாகவும், இப்பொழுதுதான் பிறந்த ஒரு குழந்தையின் முகத்தைப் போலவும் இருக்கிறது. இந்தப் பிறவி இப்பொழுதுதான் இந்தப் பூலோகத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது கஷ்டமாக இருக்கிறது.

இவருடைய உடையும் சாதாரண மனிதன் தரிக்கும் உடைதான். இவர் அணிந்திருக்கும் மோதிரம், கடிகாரம், பற்கள் - ஆகியவற்றில்தான் தங்கக் கலப்பு இருந்ததே தவிர, உடம்பில் வேறு எந்தப் பகுதியிலும் தங்கத்தைக் காணவில்லை. எல்லாம் சேர்த்தாலும், அரைப் பவுண்டுக்குக் குறைவாகத்தான் தங்கம் இருக்கும், மொத்தத்தில் பார்க்கும்போது, ஐரோப்பாவில் உள்ள பிரபுக்களின் மாளிகையில் வேலை செய்யும் கிழட்டு வேலைக்காரனைப் போலவே, அந்தக் கிழவரின் தோற்றம் அமைந்திருந்தது.

என்னை வரவேற்கும்போது அவர் அமர்ந்திருந்த அறையானது, அப்படிப் பிரமாதமான சாதன வசதிகளுடனோ, அல்லது பிரமாதமான அழகுடனோ இல்லை. நாற்காலி மேஜைகள்தான் பெரிது பெரிதாக இருந்தன. அந்த அறையில் குறிப்பிடத்தக்க விஷயம் இது ஒன்றுதான். அம்மாதிரி நாற்காலி மேஜைகளைப் பார்த்ததும், ஒருவேளை இந்த வீட்டுக்கு யானைகள் வந்து போயிருக்கின்றனவோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, “நீங்கள்தானே... கோடீஸ்வரர்?’’ என்று கேட்டேன்.

“ஆம்’’ என்று அவர் அழுத்தம் திருத்தமாக தலையாட்டிக் கொண்டு சொன்னார். அவர் கூறியதை நம்பிவிட்டது போல் பாவனை பண்ணினேன். ஆனாலும், அவர் சொன்ன பொய்யை அவ்வப்போது உடைத்தெறிவதற்குத் தயாராக இருந்தேன்.

“காலைச் சாப்பாட்டின் போது உங்களால் எவ்வளவு மாமிசம் சாப்பிட முடியும்?’’ என்று கேட்டேன்.

“நான் மாமிசமே சாப்பிடுவதில்லை; ஒரு ஆரஞ்சுத்துண்டு, ஒரு முட்டை, ஒரு சிறு கோப்பை நிறைய டீ - இவ்வளவுதான் நம் சாப்பாடு...’’ என்றார் அவர்.

குழந்தையைப்போல அப்பாவித்தனம் நிறைந்த அவருடைய கண்கள், ஒளியிழந்து, கன்னங்கரேல் என்றிருக்கும் நீர்த்துளிகளைப் போல இருந்தன. அதைப் பார்க்கும்போது அவர் சொல்லுவதில் கொஞ்சம் கூடப் பொய் கலந்திருக்கும் என்று தோன்றவில்லை.

நான் பேச ஆரம்பித்தேன்- “அது சரி, நீங்கள் பட்டவர்த்தனமாகச் சொல்லுங்கள், ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிடுகிறீர்கள்?’’

அவர் அமைதியாகப் பதில் சொன்னார்; “ஒரு நாளைக்கு இரண்டு தடவை சாப்பிடுகிறேன். காலைச் சாப்பாடு, பகல் சாப்பாடு - இதுவே எனக்குப் போதுமானது. பகல் சாப்பாட்டில் ஒரு கோப்பை சூப்பும், மசாலா போடாத மாமிசம் கொஞ்சமும் ஒரு தித்திப்புப் பண்டமும் இருக்கும். அப்புறம் ஒரு கோப்பைக் காப்பி, ஒரு சுருட்டு...’’

என் வியப்பு, இருக்க இருக்க அதிகமாகிக் கொண்டிருந்தது; அது பூசணிக்காய் மாதிரிப் பருத்தும் விட்டது. ஒரு முனிசிரேஷ்டரைப் போல் என்னை அவர் பார்த்தார். நான் மூச்சு விடுவதற்காகச் சற்று நிறுத்தினேன். பிறகு பழையபடியும் பேசத் தொடங்கினேன்.

“நீங்கள் சொல்லுவது உண்மையானால், உங்கள் பணத்தை எல்லாம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’’

இலேசாகத் தம் புஜங்களைக் குலுக்கிக்கொண்டு, கண்களைச் சுழற்றி விழித்துக் கொண்டும் அவர் பதில் சொன்னார்;

“இன்னும் அதிகமாகப் பணம் சம்பாதிப்பதற்காக என்னிடம் இருக்கும் பணத்தை உபயோகிக்கிறேன்...’’

“அதிகப் பணம் எதற்கு?’’

“மேற்கொண்டும் அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக...’’

“அந்த அதிகப் பணம் எதற்கு?’’ என்று திரும்பவும் கேட்டேன்.

அவர் முன்பக்கம் சாய்ந்து, நாற்காலியின்மேல் தம் முழங்கைகளை ஊன்றிக்கொண்டும், ஏதோ அதிசயத்தைப் பார்க்கப் போகிறவர் போலவும் கேட்டார்;

“உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?’’

“உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?’’ என்று நான் திருப்பிக் கேட்டேன். கிழவர் தலையைக் குனிந்து கொண்டு, தங்கப் பற்களின் ஊடாகச் சாவதானமாகப் பேசத் தொடங்கினார்:

“ஆசாமி ஒரு வேடிக்கையான ஆள்தான்... இப்படிப்பட்ட ஆளை நான் எந்தக் காலத்திலுமே பார்த்ததாக ஞாபகம் இல்லை...’’

அப்புறம் தலையை ஏறிட்டுப் பார்த்தார். காதுகளைத் தொடும்படியாக வாயை அகலத் திறந்து கொண்டு, ஒன்றும் சொல்லாமல் என்னை நன்றாகக் கவனித்துப் பார்த்துப் பரிசீலனை செய்து கொண்டிருந்தார். அவருடைய அமைதியான முகபாவத்தைப் பார்த்தால், அவர் தம்மை ஒரு இயல்பான மனிதனாக கருதுவதாகவே தோன்றியது. அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்க, நான் அவருடைய கழுத்து ‘டை’யில் சிறு வைரம்பதித்த ‘ஊக்கு’ ஒன்று குத்தப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த வைரம், ஒரு குதிங்கால் பருமனுக்கு இருந்திருக்கும் என்றால், நாம் எப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறோம் என்று எனக்கு விளங்கியிருக்கும்.

“நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’’ என்று கேட்டேன்.

தோளை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு, “பணம் பண்ணுகிறேன்’’ என்று ‘நறுக்’கென்று பதில் சொன்னார் கிழவர்.

“அப்படியானால் போலி நாணயம் உற்பத்தி பண்ணுகிறீர்களா?’’

எனக்கு ஒரே ஆனந்தம், புதிராக இருப்பதை அவிழ்க்க ஆரம்பித்து விட்டோம் என்ற நினைப்பு, ஆனால், நான் கூறியதைக் கேட்ட தும், அவருக்கு மூச்சு முட்டியது; ஒரு தடவை இருமினார்; ஏதோ சூக்ஷ்மமான கை ஒன்று ‘கிச்சுக் கிச்சு’ மூட்டியதுபோல அவருடைய உடம்பெல்லாம் ஆடியது. கண்கள் படபடவென்று மூடித் திறந்தன.
பிறகு தம் படபடப்பை அடக்கிக் கொண்டு, அமைதியாகப் பேசத் தொடங்கினார். அவருடைய கண்களில் ஈரம் படிந்திருந்தது; மனோ திருப்தியைக் காட்டும் பார்வை அதில் குடிக்கொண்டிருந்தது. அந்த நிலையில் என்னைக் கண்ணுற்றவாறே. “நீங்கள் சொல்லுவது கேலிக் கூத்தாக இருக்கிறது! தயவுசெய்து வேறு எதைப் பற்றியாவது கேளுங்கள்’’ என்று கூறினார். அப்பொழுது என்ன காரணத்தினாலோ, தம் கன்னங்களை ‘உப்’ பென்று புடைப்பாக வைத்துக்கொண்டிருந்தார்.

ஒரு நிமிஷம் யோசித்தேன். பிறகு அழுத்தம் திருத்தமாகக் கேட்கலானேன்:

“நீங்கள் எப்படிப் பணம் பண்ணுகிறீர்கள்?’’

“சரி! இதுவும் ஒரு கேலிக் கூத் தான கேள்விதான்!’’ என்று சொல்லி விட்டுத் தலையை ஆட்டினார். பிறகு சொன்னார்:

“சுலபமான வழியில்தான் பணம் பண்ணுகிறேன். எனக்கு ரயில்வேக் கம்பெனி இருக்கிறது. குடியானவர்கள் பண்டங்களை உற்பத்தி செய்கிறார்கள். நான் அவற்றை மார்க்கெட்டுகளுக்கு எடுத்துக்கொண்டு போய் விநியோகம் பண்ணுகிறேன். குடியானவனுக்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டுமோ அவ்வளவு பணம் கொடுத்துவிடுவேன். அதாவது அவன் பட்டினி கிடந்து சாகாமல் இருக்கவும், மேற்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும் அளவுக்கு வலுவோடிருக்கவும் எவ்வளவு பணம் தேவையோ அவ்வளவு கொடுப்பேன். மீதிப் பணத்தை, போக்குவரத்துக் கட்டணமாக எடுத்து என் பையில் போட்டுக் கொள்வேன்.’’
“நீங்கள் கொடுப்பதைக் கொண்டு குடியானவர்கள் திருப்தி அடை கிறார்களா?’’

“எல்லோரும் திருப்தியடைவதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், ஜனங்கள் எப்போதுமே திருப்தி அடைவதில்லை. இது ஊரறிந்த விஷயம். முணுமுணுக்கும் பைத்தியங்கள் எப்போதும் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்...’’ என்று, குழந்தை மாதிரிச் சூதுவாது இல்லாமல் பதில் சொன்னார்.

உடனே, சற்றுத் தயக்கத்துடனும் துணிவுடனும் நான் கேட்டேன்: “உங்கள் விஷயத்தில் அரசாங்கம் தலையிடுவதில்லையா?’’

“அரசாங்கமா?’’ என்று கூறி விட்டு, மிகுந்த சிந்தனையோடு விரல்களால் நெற்றியைத் தடவிக் கொண்டார். பிறகு, எதையோ ஞாபகப்படுத்திக் கொண்டதைப் போலத் தலையை ஆட்டினார். அப்புறம் சொன்னார்; “ஓ... நீங்கள் அந்த ஆசாமிகளையும்... வாஷிங்டனில் இருப்பவர்களையா... கேட்கிறீர்கள்? அவர்கள் எனக்குத் தொந்தரவு கொடுப்பதில்லை. அந்த வாலிபர்கள் நல்ல ஆட்கள்... அவர்களில் சிலர் என்னுடைய சங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களைப்பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ளவில்லை... அதனால்தான், அவர்களைப் பற்றிய விஷயங்களைச் சில சமயங்களில் நீங்கள் மறந்து விட ஏதுவாகிறது. ஊஹூம், அவர்கள் என் விஷயத்தில் தலையிடுவது கிடையாது’’ என்று திரும்பவும் ஒரு தடவை சொன்னார். பிறகு ஏதோ அதிசயத்தைக் காணப் போகிறவர் போல என்னைப் பார்த்துக் கொண்டு, “பணம் பண்ணுவதைத் தடுக்கக்கூடிய அரசாங்கங்களும் இருக்கின்றன என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

என்னுடைய அப்பாவித்தனத்தையும், அவருடைய ஞானதீக்ஷண்யத்தையும் காண எனக்குச் சங்கடமாக இருந்தது. அமைதியாகப் பதில் சொன்னேன்: “நான் அப்படி நினைத்துக் கேட்கவில்லை... ஆனால், அரசாங்கம் சில சமயங்களில் முழுக்க முழுக்கப் பகல் கொள்ளையடிப்பதைத் தடை செய்தாக வேண்டுமே என்று தான் நான் நினைத்தேன்.”

“சரி, சரி நீங்கள் லட்சியவாதம் பேசுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறபடி எதுவும் இங்கே நடப்பது கிடையாது. சொந்த விவகாரங்களில் தலையிட அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?...’’

இந்தக் குழந்தைப் புத்தியின் முன்னால், நான் இருக்க இருக்க அதிகமாகப் பணிந்துபோகத் தொடங்கினேன்.

“ஆனால் ஒரு மனிதன், பலரைப் பாழ்படுத்துவது சொந்த விஷயமா?’’ என்று நாசூக்காகக் கேட்டேன்.

அவர் கண்களை அகலமாகத் திறந்தார்; “என்ன, பாழ்படுத்துவதா? பாழ் என்ற சமாச்சாரமே வேலையாட்களின் சம்பளம் அதிகமாகும் போதுதானே? அல்லது வேலை நிறுத்தம் நடக்கும்போதுதானே? ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் நாங்கள் இங்கே அந்நிய நாடுகளிலிருந்து வந்து குடியேறி இருப்பவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம். எப்பொழுதும், சம்பள விகிதங்கள் குறைவது அவர்களால் தான்; வேலை நிறுத்தக்காரர்கள் வகித்த ஸ்தானத்தை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இந்த நாட்டில் குடியேறியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்; குறைந்த கூலிக்கு அவர்கள் வேலை செய்கிறார்கள்; ஏராளமான சரக்குகளை வாங்குகிறார்கள். இப்படியெல்லாம் இருப்பதால்தான் சகல காரியங்களும் செவ்வனே நடைபெறுகின்றன.’’

அவருக்கு உற்சாகம் கிளம்பி விட்டது. அப்போது அவரைப் பார்க்க, வயோதிகத்துக்கும் பாலியத்துக்கும் இடைப்பட்ட பிராயத்தினர் போலத் தோன்றியது. அவருடைய பழுப்பு நிறமான மெல்லிய விரல்களில் துருதுருப்பு ஏறிவிட்டது. அவருடைய வறண்ட குரல் என் காதில் சடசடக்க ஆரம்பித்தது. மேற்கொண்டும் அவர் பேசிக்கொண்டே போனார்:

“அரசாங்கமா? உண்மையில் இது ஒரு குஷியான கேள்விதான். நல்ல அரசாங்கம் ஒன்று இருக்கவேண்டியது முக்கியமான விஷயம்தான். அப்படிப்பட்ட அரசாங்கம், எனக்குத் தேவைப்படும் அளவுக்கு - நான் விற்க விரும்பும் சகலத்தையும் வாங்கக்கூடிய அளவுக்கு, எவ்வளவு ஜனங்கள் தேவையோ அவ்வளவு ஜனங்கள் இந்த நாட்டில் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ளும். அத்துடன், என் காரியங்களுக்குத் தட்டுப்பாடின்றி, அகப்படும் அளவுக்கு இங்கே தொழிலாளிகள் இருக்கும்படியாகவும் அது பார்த்துக்கொள்ளும், இந்த அளவுக்கு மேல் ஜனங்கள் இருக்காதபடியும், சோஷியலிஸ்டுகள் இருக்காதபடியும், வேலை நிறுத்தங்கள் நடக்காதபடியும் அந்த அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் மேலும், நல்ல அரசாங்கம் அதிக வரி விதிக்கக்கூடாது. மக்கள் கொடுக்க நேரும் எல்லாவற்றையும் நானே எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி இருக்கக்கூடிய அரசாங்கத்தையே நான் நல்ல அரசாங்கம் என்று சொல்லுகிறேன்.’’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com