Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

இறுதிப் போருக்கு என்ன செய்யப் போகிறோம்?

இளவேனில்

தேர்தல் முடிந்து விட்டது. புதிய அரசு மலர்ந்து விட்டது. ஆனால், தேர்தல் களத்தில் எதிரொலித்த ஒரு குரல், ஓர் அபாய அறிவிப்பு. “இது பரம்பரை யுத்தம். இந்தத் தேர்தலுக்குப் பின் தி.மு.க. இருக்காது!’’

Karunanidhi தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறலாம், அல்லது தோல்வியுறலாம். அரசியல் கட்சிகளுக்கும் ஆளப்படும் மக்களுக்கும் ஜனநாயகம் வழங்கும் உரிமையும் உத்தரவாதமும் இது. இந்த உரிமையும் உத்தரவாதமும் நிரந்தரமானதல்ல என்பதுதான் ஜனநாயகத்துக்கு அழகும் பெருமையும் சேர்ப்பதாகும். ஆனால், நான்தான் வெல்வேன். அதன் பிறகு தி.மு.க.வை அழித்தே முடிப்பேன் என்று ஒரு கட்சித் தலைவர் பேசுவது அவர் எந்த அளவுக்கு ஜனநாயகத்தை மதிக்கிறார் அல்லது சர்வாதிகாரத்தை நேசிக்கிறார் என்பதை ஒளியுறுத்துகிறது.

சமூக - அறிவியல் பார்வையில் ஜனநாயகம் - சர்வாதிகாரம் என்பவை வெறு அசைச் சொற்களே! ஜனநாயகம் வழங்கும் அரசுரிமை - ஆட்சி அதிகாரம் என்பது சர்வாதிகாரம் எடுத்துக் கொண்ட அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் அப்பாற்பட்டதல்ல.

மக்கள் ஏற்படுத்தும் அரசு என்பதாலேயே அது மக்களின் அரசு என்றாகிவிட முடியாது. அரசு என்பது அடிப்படையில் ஒரு பலாத்கார நிறுவனமே! இணக்கம் காண முடியாத - ஒத்துப் போக முடியாத - வர்க்கப் பகைமை இருக்கிறது என்பதன் அதிகாரபூர்வ அறிவிப்புத் தான் அரசு. இதிலேயும் இதயமுள்ள சிலர் வருகிறார்கள் என்பது வரலாற்றில் தனி நபர் வகிக்கும் பாத்திரத்துக்கு அடையாளமாகிறது. உலகெங்கும் வர்க்கமோதல்களே சமூக இயக்கமாகவும், வளர்சிதை மாற்றங்களாகவும் அமைந்திருக்கின்றன.

இந்தியாவிலோ வர்க்கப் போராட்டங்கள் மங்கலாகி தேவ - அசுரப் போராட்டமாக, ஆரியர் - திராவிடப் போராட்டமாக - பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டங்களாகத் தொடர்கின்றன. ஆரியமாவது - திராவிடமாவது எல்லாம் அன்னியர் (!) விதைத்த அபத்தம் என்று தேன்குழைத்து வரலாற்றைப் புரட்டுகிறவர்களும் உண்டு. ஆனால், ஏடறிந்த இந்திய வரலாறு அனைத்தும் ஆரிய திராவிடப் போராட்டங்களின் வரலாறேயாகும். அதைத்தான் “இது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் யுத்தம். இந்தத் தேர்தலுக்குப் பின் தி.மு.க. இல்லாமற் போய்விடும்’’ என்கிற வன்மம் நிறைந்த ‘போர்ப்பிரகடனம்’ அறிவிக்கிறது. இந்திய வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் வந்தார்கள்; போனார்கள். பல கட்சிகள், இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன; மறைந்திருக்கின்றன. இவர்களை, இவற்றை இயக்கியதில் அதிகாரப் போட்டியைவிட ஆரிய திராவிடப் பகைமையே வலிமை பெற்றிருந்தது.

இன்றும் தி.மு.க.வை ஓர் அரசியல் கட்சி என்பதற்காக ஆதிக்க சக்திகள் அக்கிரகாரத்து ‘மாமுனிவர்கள்’ எதிர்க்கவில்லை. இது தி.மு.க.வின் எதிரிகளுக்குத் தெரியும். கலைஞருக்குத் தெரியும். தாக்கப்படும் கட்சிக்குத் தெரியுமா? புதிய அரசுக்குத் தலைமை தாங்கும் கலைஞரின் நிர்வாகத் திறமையும், அயரா உழைப்பும், ஆட்சிக்குப் பொலிவை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அந்தச் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்; துணை நிற்போம்!

ஆனால், ஆட்சியதிகாரத்தால் ஆரிய திராவிடப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட முடியாது. யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை இருக்காது என்று அறிவித்திருக்கிறார் கலைஞர். பழிவாங்குதல் ஒருபோதும் பரிகாரம் ஆகாது. நன்று. ஆனால், இது இறுதிப் போர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே அதை எவ்வாறு கலைஞர் எதிர்கொள்ளப் போகிறார்? ஆரியர்க்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எப்போதும் அவர்களுக்குச் ‘சதிகாரம்’ உண்டு.

திராவிடர்கள் - தமிழர்கள் - சதிச் செயல்களுக்குச் சம்மதியாதவர்கள். திராவிடரின் முழுப் பலவீனமும் அவர்களுடைய சுயதிருப்திதான்! புகலற்ற நிலையிலும் பழம் பெருமை போர்த்திச் செயலற்று உறங்குவதுதான். தமிழ் இனம் சவலைப் பிள்ளையாக இருப்பது அரசதிகாரம் இல்லாததால் அல்ல; ஆரிய மாயையை உணராததால்தான். ஆரிய - திhரவிடப் போராட்டம் என்பது ஏதோ இரு இனங்களுக்கிடையேயான பழங்காலத்திய, பயனற்ற விரோத மனப்பான்மை என்று ‘அறிவு ஜீவிகள்’ யாரும் விரிவுரைதர வேண்டாம். ஆரிய திராவிடப் போராட்டம் என்பது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம்.

பாசிசத்துக்கும் மனிதாபிமானத்துக்குமான போராட்டம். ஆம்; கலைஞர் சொன்னதுபோல் இரு தத்துவங்களுக்கிடையேயான போராட்டம். அவர்கள் இறுதிப் போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள். நாம்?

தேர்தலுக்குப்பின் மீண்டும் அதே இடத்தில் அதே நிலையில் கண்ணகி சிலை நிறுவப்படுவது, ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை அறிவுறுத்தவே! ‘அரசியல் பிழை’ என்பது அதிகார பீடங்களில் நடப்பது மாத்திரமல்ல. அரசியல் பிழை என்பது அரசதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல, அரசதிகாரத்தைப் பயன்படுத்தாமலே விடுவதும்தான். எதிலே இல்லை அரசியல்? அரசியலே எமக்கில்லை என்பதும் அரசியலே!

பாமரத்தனமும், பகட்டுப் புலமையும், ஒதுங்குவதும், பதுங்குவதும்கூட அரசியல் பிழையே! கலைஞரின் மகிழ்ச்சி தேர்தல் வெற்றியிலேயில்லை; இந்த தேசத்தின், தமிழினத்தின் வெற்றியே அவருக்கு மகிழ்ச்சி தரும். அந்த இறுதிப் போரில் ‘வெல்வதற்கு நாம் இன்று பெரியாராய், அண்ணாவாய் பல இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

கலைஞருக்கு இந்தப் புதிய சுமையை வெற்றி மாலையாய்ச் சூட்டுகிறோம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com