Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

சிந்து நாகரிகம் - திராவிட நாகரிகம்


இந்தியாவின் தொன்மையான நாகரிக சமுதாயம் எனப்படும் சிந்து சமவெளியின் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் வாழ்ந்த பூர்வீக குடிகள் ஆரியர்களா, திராவிடர்களா என்ற சர்ச்சை இன்னும் முடிவு பெறாமல் நீண்டுகொண்டு இருக்கிறது. அதற்கு ஒரு முடிவுகட்டப் போகும் பொக்கிஷம்தான் இப்போது கிடைத்திருக்கிறது.

காவிரி கரைபுரண்டோடும் மயிலாடுதுறை நகருக்கு அருகிலுள்ள செம்பியம் கண்டியூரில் உள்ள தனது வீட்டுக் கொல்லையில், வாழைக் கன்று ஒன்றை நடுவதற்காக நிலத்தைத் தோண்டிய ஆசிரியர் சண்முகநாதனுக்குக் கறுப்பாக, பளபளப்பாக ஒரு கல் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு ஒருவித எதிர்பார்ப்புடன் தன்னுடைய நண்பர் முத்துசாமியைத் தேடி ஓடினார் அவர்.

ஆசிரியர் சண்முகநாதன், நாகை மாவட்டம் குத்தாலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். நண்பர் முத்துசாமி தமிழக தொல்பொருள் துறையில் பணியாற்றி வருபவர். அதனால் சண்முகநாதனுக்கும் தொல்பொருள் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. தனது வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த அந்தக் கல், கண்டிப்பாக சரித்திர முக்கியத்துவம் மிக்கதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் தனது நண்பரைத் தேடி ஓடினார் சண்முகநாதன்.

தரங்கம்பாடி, கோட்டை அருங்காட்சியகக் காப்பாளராக இருக்கும் முத்து சாமியும் அதைப் பார்த்து வியந்துபோய், உடனே அந்தக் கல்லைத் தனது உயரதிகாரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஸ்ரீதரனிடம் ஒப்படைக்க, அதன் பிறகு அந்தக் கல்லின் மகத்துவம் வெளியுலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.

ஆசிரியர் சண்முகநாதனுக்குக் கிடைத்த அந்தக் கல், புதிய கற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய கற் கோடரி! சுமார் 4000 வருடங்களுக்கு முந்தைய அந்தக் கற்கோடரியில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், சிந்து சமவெளி நாகரிக காலத்தில் உள்ள எழுத்துக்களை ஒத்து இருந்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகத்தை ஏற்படுத்தியவர்கள். வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் அல்ல, அது இங்கேயே தோன்றிய திராவிட நாகரிகமே என்பது நிரூபணமாக ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இது இந்த நூற்றாண்டில் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்கிறார் கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்தக் கல் கோடரியை ஆராய்ந்தவர்களில் ஒருவர், தொல்லியல் ஆய்வாளரான சென்னையைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவன். அவரைச் சந்தித்து இதுகுறித்து கேட்டோம் (இவர் தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தவர்).

``இதில் என் பங்கைவிட இது யாரிடமிருந்து கிடைத்ததோ அவருக்குத்தான் இந்தப் பெருமை எல்லாம் போய்ச் சேரவேண்டும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திராவிட மக்கள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய ஆயுதம்தான் இது. கைப்பிடியும் கூரான முனையும் உள்ளதாக இது இருக்கிறது. பழைய கற்கால கருவிகள் கரடுமுரடாக இருக்கும்.

ஆனால், இந்தக் கோடரி மெருகூட்டப்பட்டு பாலீஷ் செய்யப்பட்டு, கிரானைட் கல் போல இருக்கிறது! கிரானைட் கல் தென்னிந்தியாவில்தான் கிடைக்கும். அதுவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கொல்லிமலை போன்ற பகுதிகளில்தான் அதிகம் கிடைக்கிறது.

இதற்கு முன் தைமாபாத் என்கிற கோதாவரிக் கரையில் கிடைத்த சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களின் ஆவணத்துக்குப் பிறகு, அதே சிந்துவெளி சித்திர எழுத்துக்கள் உள்ள கோடரி தமிழகத்தில்தான் கிடைத்திருக்கிறது. இந்தக் கோடரியில் நான்கு எழுத்துக்கள் இடமிருந்து வலமாக உள்ளது.

இதில் `முருகு’ என்ற சொல்லுக்கு முதுகு வளைந்து முழங்காலைத் தூக்கி அமர்ந்திருக்கும் ஒரு படமும் `அன்’ என்ற சொல் லுக்கு கைப்பிடி உள்ள ஜாடியின் படமும் இதில் உள்ளது. இந்த நூற்றாண்டில் கிடைத்திருக்கும் மிக மிக முக்கியமான திராவிட மொழிக்கான ஆவணம் இது.

புதிய கற்கால தமிழர்களும் சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்களும் பேசிய மொழி ஒன்றுதான் என்பதை இந்தக் கோடரி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் ஆதாரம் இது’’ என்று குஷிபொங்கச் சொன்னவர், மேலும் தொடர்ந்தார்...

``நான் இந்தக் கோடரி குறித்த விஷயங்களையும் அதில் உள்ள எழுத்துக்களையும் பின்லாந்தில் இருக்கிற உலகின் மிக முக்கியமான தொல்லியல் ஆய்வாளரான அஸ்கோபார் போலா என்பவருக்கு அனுப்பியிருக்கிறேன்.

உலக அளவில் சிந்து வெளி பற்றிய இவருடைய ஆய்வுகளை கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் இப்போது கிடைத்திருக்கும் இந்த அரிய ஆவணத்தை வைத்து சர்வதேச அளவில் பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. ஆய்வாளர்கள், தனிநபர்கள் இதில் காட்டுகிற ஆர்வத்தைவிட, தமிழக அரசு இதில் தனியான அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான், இப்போது கிடைத்திருக்கும் ஆதாரத்தைக் கொண்டு புதிய ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டும்.

உலக அளவில் ஒரு மாநாடு நடத்தி, அதில் அறிஞர்களை அழைத்து விவாதித்து, தமிழின் வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தேடியெடுக்க வேண்டும். அதற்கு இதுதான் தருணம்’’ என்றார் மகாதேவன்.

கண்டியூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள கோடரி ஆதாரம் குறித்து, உ.பி.யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உலகப் புகழ்பெற்ற பேராசிரியரான டாக்டர் இர்பான் ஹபீப்பிடம் பேசினோம்...

``சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது என முதன்முதலில் வரலாற்று ஆய்வாளரான ஹீராஸ் பாதிரியார்தான் கூறினார் (முன்னாள் தமிழக நிதி அமைச்சர் நெடுஞ்செழியனின் ஆசிரியர் இவர்).

ஆனால், அவரால் அதை முழுமையாக நிரூபணம் செய்ய முடியவில்லை. எனினும் இது திராவிட நாகரிகத்துடன் அதிகம் பொருந்துவதாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஏனெனில், ஆரியர்களின் ரிக் வேதத்தில் திராவிடர்களை `தசா’ அல்லது `தஸ் யூக்கள்’ எனக் குறிப்பிட்டு, இவர்கள் தங்கள் முன்னோடிகள் எனும் அர்த்தத்தில் கூறியுள்ளனர்.

இதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையதாக இருக்கலாமே தவிர, ஆரியர்களுடையதாக இருக்க வாய்ப்பே இல்லை.

தொடர்ந்து இதுபோன்ற அகழ்வராய்ச்சி ஆய்வுகள் தமிழகத்தில் செய்வதன் மூலம் இதைக் கண்டிப்பாக நிரூபிக்கலாம்’’ என்றார்.

இதே அலிகார் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய வரலாற்றைப் போதிக்கும் டாக்டர் எஸ்.சாந்தினி நம்மிடம் கூறுகையில், ``இந்தியாவின் பூர்வீக குடிகள் திராவிடர்களே என்ற கருத்தை ஆராய்ந்து தமிழகத்தில் தேவநேயப் பாவாணர், பி.டி.ஸ்ரீநிவாச ஐயங்கார் மற்றும் கனகசபை பிள்ளை உள்பட தமிழக அறிஞர்களும் கூறியுள்ளனர்.

ஆனால், இவை அந்தக் காலங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் தமிழிலேயே தங்கி விட்டதால், இதற்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் போனது. அதே போல், சென்னைப் பல் கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் குரு மூர்த்தி, `தென்னிந்தியாவில் கிடைத்த பழங்கால பானை ஓடுகளில் இருந்த கிறுக்கல்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்களோடு இணைந்து போகிறது.

மேலும் இவை வெறும் கிறுக்கல்கள் அல்ல. அது ஒரு மொழி’ என கண்டு பிடித்தார்.

இதற்கேற்றாற்போல `புலியை முறத்தர்ல் துரத்திய பெண்’ எனும் சங்கத் தமிழ்க் கூற்றுக்கு உதாரணமாக ஒரு காட்சி சிந்து சமவெளி சிற்பங்களில் பொறிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வையும் நம் முன்னோர்கள் தமிழில் எழுதிய ஆதாரங்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து அரசு வெளியிடுவதன் மூலம், உலக வரலாற்று அரங்கில் திராவிடர்கள்தான் நம் நாட்டில் முதல் நாகரிக பூர்வ குடிகள் எனப் பதிவு செய்யலாம்’’ என்றார்.

தமிழ் `செம்மொழி’ என்கிற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் இந்தக் கால கட்டத்தில், இந்தியாவுக்கே நாகரிகம் கற்றுக் கொடுத்தது திராவிட இனம்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க ஓர் அரிய பொக்கிஷம் கையில் கிடைத்திருக்கிறது.

ஆயிரமாயிரம் வாக்குறுதிகளை அள்ளிவிடும் அரசியல்வாதிகள், ஆட்சியில் அமர்ந்த பிறகு இந்த விஷயத்தைக் கொஞ்சம் கண்டுகொண்டால், மெள்ள தமிழ் இனி வளரும் என்பதில் சந்தேகமேயில்லை!

நன்றி: ஜூனியர் விகடன்

சித்திர எழுத்துக்கள்!

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களை இதுவரை யாரும் முழுமையாக படித்தறிந்ததில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், அந்த எழுத்துக்களை படிக்கமுடியும் என்று 1938-ல் ஹீராஸ் பாதிரியார் நிரூபித்திருக்கிறார். அதில் உள்ள வேல் போன்ற எழுத்தை வைத்து `அது வேலர்களைக் குறிக்கும் சொல். அதாவது வேல் வைத்திருப்பவர்களைக் குறிக்கும் சொல். இது தமிழ் எழுத்துதான்’ என்று அவர் கூறியுள்ளார்.

அவருக்கும் முன்பாக இந்த சித்திர எழுத்துக்களை ரஷ்யா, சீனா என்று பல்வேறு மொழி எழுத்துக்களோடு ஒப்பிட்டு பலரும் படித்துள்ளனர். அதை எல்லாம் மெய்ப்பிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால், முதன்முறையாக தமிழகத்தில் இந்த எழுத்துக்கள் கிடைத்திருப்பதால் ஹீராஸ் பாதிரியாரின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

இந்தச் சித்திர எழுத்துக்களை படிக்கமுடியும் என்று தற்போதைய காலகட்டத்தில் நிரூபித்திருப்பவர்களில் ஐராவதம் மகாதேவனும் ஒருவர், நீண்ட காலமாக இந்த எழுத்துக்களை படிக்கும் முயற்சியில் இறங்கிய அவர், அதில் முன்னேறிக் கொண்டிருக்கும் போதே பலருக்கும் இது குறித்து பயிற்சிகளை அளித்தார். அப்போது, `இது ஒரு நீண்ட கால முயற்சி. என் காலத்தில் நிறைவேறாவிட்டாலும் எதிர் காலத்தில் இந்த முயற்சி நிறைவேறும். நிச்சயம் சித்திர எழுத்துக்களில் பொதிந்திருக்கும் விஷயங்கள் உலகுக்கு தெரியவரும்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரே அந்தச் சித்திர எழுத்துக்களை படிக்க ஆரம்பித்துவிட்டதுதான் சுவாரஸ்யம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com